Published : 28 May 2020 02:13 PM
Last Updated : 28 May 2020 02:13 PM

லாக்டவுன் அனுபவங்கள்: நட்பே துணை 

மே மாத வெய்யிலுக்கு வெளியே போகாமல் இருப்பதே போன ஜென்ம புண்ணியம் போல் இருக்கிறது. வெயிலால் கூட கரோனாவைத் துரத்த முடியவில்லை என்பது வேதனையே. கரோனா என்ற வார்த்தையைக் கடந்த டிசம்பரில் உலகம் உச்சரிக்கத் தொடங்கியது. என் செவிகளை அது ஜனவரியில் எட்டியது. ஆரம்ப நாட்களில் அது பெரிய அளவில் தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்தவில்லை.கரோனாவின் பரவல் வெகு வேகமாக அதிகரிக்கும்போது கூட நான் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மார்ச் 22 ஆம் தேதி லாக்டவுன் தொடங்கியது, அன்று அந்த அறிவிப்பைக் கேட்கும்போது கூட அரசாங்கமே பார்த்து விடுப்பு கொடுக்கிறது என்று எண்ணியே மகிழ்ந்தேன். இதனால், ஊரடங்கு 2.0, 3.0 அறிவிக்கும்போது மக்கள் அடைந்த சலிப்பு எனக்கு வியப்பையே ஏற்படுத்தியது. வீட்டிலிருந்து வேலை செய்ய இவர்களுக்கு என்ன கஷ்டம் என்று நினைத்துக்கொண்டேன்.

அம்மாவுடன் உரையாடல்

எனக்கு இந்த லாக்டவுன் மிகவும் பிடித்திருந்தது. குடும்பத்தோடு இணக்கமாக நிறைய நேரம் செலவிட முடிந்தது. என்னுடைய அம்மா ஓர் எழுத்தாளர் என்பதால், அவருடன் உரையாடவும், அவர் எழுத்துகளை வாசிக்கவும் இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. அரசாங்கம் கூறிய 'ஒலி', 'ஒளி' வேலைகள் எல்லாம் கூட ஒழுங்காகச் செய்தேன். வெளியே சென்று வந்தால் கை, கால் கழுவிய பிறகுதான் உள்ளே வருவது, காய் பழம் கறி வாங்கி வந்தால் சூடு நீர், மஞ்சள் தூள் கொண்டு சுத்தம் செய்வது, கடைக்குச் சென்றால் இடைவெளி விட்டு நிற்பது எல்லாம் இப்போது மிகவும் அவசியம் என்றாலும், எனக்கு அவை சலிப்பு தரும் விஷயங்கள்.

அடித்தட்டு மக்களின் துயரம்

கோடைக் காலங்களில் மட்டுமே கிடைக்கும் மாம்பழத்தையும் தெரு ஓரங்களில் கிடைக்கும் நுங்கு, முலாம் பழ ஜூஸ் கடைகளையும் இந்த வருடம் கிடைக்காமல் செய்து விட்டது இந்தக் கரோனா. இவர்கள் எல்லாம் என்ன ஆனார்களோ என்று தோன்றுகிறது. அடித்தட்டு மக்கள் இந்த லாக்டவுனை எப்படி எதிர்கொள்வார்களோ என்பதை நினைக்கும்போதே என்னுடைய மனம் சோகத்தில் ஆழ்ந்துவிடும். புலம்பெயர் தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வதைத் தொலைக்காட்சியில் பார்க்கும்போது என்னுள் பரவும் இயலாமை கோபத்தையும் எரிச்சலையும் ஒருங்கே ஏற்படுத்தியது.

கைகொடுத்த நட்பு

நண்பர்கள் இல்லையென்றால், நான் இந்த லாக்டவுனை எப்படி எதிர்கொண்டிருப்பேன் என்று தெரியவில்லை. பழைய நண்பர்களைத் தேடிப் பிடித்து அவர்களோடு புது தொடர்பு ஏற்படுத்திக் கொண்டேன். சில புதிய நட்புகளும் எனக்குக் கிடைத்தன. வாழ்க்கையை மாற்றியமைக்கும் விதமாகக் கிடைத்த புதிய நட்பு என்னுடைய சலிப்புக்கு வடிகாலாக அமைந்தது. இணையத் தொழில்நுட்பத்துக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மனத்துக்குப் பிடித்த விஷயத்தில் ஆர்வம் காட்டி, அவற்றை கற்றுக் கொண்டது போன்ற சில உருப்படியான விஷயங்களைச் செய்ததும் மனத்துக்கு ஆறுதலை அளித்தது.

இதுவும் கடந்து போகும்

ஊரடங்கு முடிந்த பின்னர், இயல்பு நிலை என்பது எப்படி இருக்கும்? உணவகத்துக்குச் சென்றால் பயம் இல்லாமல் உண்போமா? காய் கோயம்பேட்டிலிருந்து வந்தது என்றால் நெருடல் இல்லாமல் வாங்குவோமா? இதுபோன்று ஒவ்வொரு விஷயத்திலும் இனி பயம் நீடிக்கத்தான் செய்யும் அதுவரை முகக்கவசம், சானிடைசர் எல்லாம் உடன்பிறப்புகளாக இருப்பார்கள் அல்லது எப்போதுமே அப்படியே தொடரவும் கூடும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதால் அடுத்த பொழுது இனிய பொழுதாக விடியும் என்று நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை...

-ஷன்மதி. கோ

தொடர்புக்கு: shanugovi1995@gmail.com

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x