Last Updated : 25 May, 2020 11:21 AM

Published : 25 May 2020 11:21 AM
Last Updated : 25 May 2020 11:21 AM

நக்கல் டைமிங், நையாண்டி ரைமிங்கில் கவுண்டமணி காமெடி ராஜா!  - கவுண்டமணி பிறந்தநாள் இன்று! 


திரையில் விரியும் காட்சியின் அழுத்தத்தால், ரசிகர்களை மிகச்சுலபமாக அழவைத்துவிடமுடியும். ஆனால், சிரிக்கவைப்பது அத்தனை சுலபமில்லை. சிரிக்க வைப்பது, வயிறு வலிக்க சிரிக்க வைப்பது, விழுந்து விழுந்து சிரிக்கவைப்பது, மனம் விட்டு சிரிக்கவைப்பது, வாய்விட்டுச் சிரிக்கவைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. இதை அசாதாரணமாகச் செய்பவர்களைத்தான் மிகச்சிறந்த காமெடி நடிகர்கள் என்று கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்த காமெடியில் எவரின் சாயலுமில்லாமல், சாதனைப் படைத்தவர்தான் கவுண்டமணி.


நடிக்கவேண்டும் என்கிற ஆசையில், கொங்கு தேசத்தில் இருந்து சென்னைக்கு வந்து சின்னச்சின்ன வேடங்களில் நாடகங்களிலும் பின்னர் சினிமாவிலும் நடித்தார் சுப்ரமணி. சிவாஜியின் ‘ராமன் எத்தனை ராமனடி’ உள்ளிட்ட படங்களில், ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்களில், தலைகாட்டிச் செல்லும் பாத்திரங்கள்தான் கிடைத்தன. ஆனாலும் சோர்ந்துபோகாமல், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார்.


தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ‘16 வயதினிலே’ ஏகப்பட்டபேரை அடையாளம் காட்டியது. முகவரி கொடுத்தது. பாரதிராஜா, பாக்யராஜ், பி.வி.பாலகுரு, நிவாஸ் முதலான கலைஞர்கள் நமக்குக் கிடைத்தார்கள். இளையராஜாவின் பாய்ச்சலும் கமலின் உன்னதமான நடிப்பும் ரஜினியின் அசுரத்தனமான வில்லத்தனமும் ஸ்ரீதேவியின் முதிர்ந்த நடிப்பும், காந்திமதியின் யதார்த்தமான நடிப்பும் என பலர் தெரிந்தார்கள்.


’பரட்டை’ ரஜினிக்கு பக்கத்தில், மரத்தடியில் உட்கார்ந்துகொண்டு, ’பத்தவச்சிட்டியே பரட்டை’ என்று சொன்னதும் அப்படியொரு கைதட்டல் கிடைத்தது. ‘இதெப்படி இருக்கு’ என்று ரஜினி கேட்க, ‘நல்லா இல்ல’ என்று சொன்ன டைமிங்கை ரசித்துச் சிரித்தது. அந்த டைமிங் ரைமிங் வசனம்தான், அநேகமாக அவரின் முதல் ’பஞ்ச்’சாக இருக்கவேண்டும். கவுண்டமணியின் ராஜாங்கத்துக்கான அஸ்திவாரம் அங்கேதான் போடப்பட்டது.


நாடகத்தில் அவரின் டயலாக் டெலிவரிக்கு, ஏகப்பட்ட பாராட்டுகள். அதனால் மணியை, ‘கவுண்ட்டர்’ மணி என்று அழைத்தார்கள். ’ஓ... இவர் பெயர் கவுண்டமணி போல’ என்று நினைத்த பாக்யராஜ், அப்போது ‘16 வயதினிலே’ படத்தில் உதவி இயக்குநர். டைட்டிலில் பெயர் போடுவதற்குப் பட்டியல் தயாரிக்கும் போது, கவுண்டமணி என்று எழுதிக் கொடுத்தார். அப்படித்தான் டைட்டிலில் வந்தது. பத்தோடு பதினொன்றாக கவுண்டமணி என்று அப்போது வந்த பெயர், அடுத்தடுத்த படங்களில் வரும்போதே, மிகப்பெரிய கரவொலி கிடைத்ததுதான் கவுண்டமணியின் ஆரம்பகால வெற்றி. வெற்றிக்கான ஆரம்பம்.


கவுண்டமணி குறித்து நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், ‘’’16 வயதினிலே’ படத்தில் பாலகுரு சார் மூலமாக, கவுண்டமணி நடித்தார். படம் முழுவதும் ரஜினியுடன் இருந்தபடி நடித்த அந்தக் கேரக்டரை நன்றாகவே செய்திருந்தார். அதற்கு அடுத்த படம்... ‘கிழக்கே போகும் ரயில்’. இந்தப் படத்தில் காந்திமதியின் கணவனாக, பாஞ்சாலி ராதிகாவை அடையத் துடிக்கும் மாமனாக கவுண்டமணியைப் போடலாம் என்று நானும் பாலகுரு சாரும் சொன்னோம்.

‘அடப்போய்யா. அந்த ஆளு வேணாம். வழுக்கைத்தலையா இருக்காரு. அவர் போய், பாஞ்சாலி மேல ஆசைப்படுறார்னு காட்டினா நல்லாருக்காது’ன்னு உறுதியாச் சொன்னார். ‘கிராமத்துக்காரங்ககிட்ட போய் என்ன எதிர்பார்க்கமுடியும்? தவிர, அந்த காமெடி கேரக்டருக்கு கவுண்டமணிதான் செட்டாவார்னு எவ்வளவோ எடுத்துச் சொன்னோம்.

அப்புறம் அந்தக் கேரக்டர்ல நீ நடின்னு என்னைச் சொன்னார் பாரதிராஜா சார். அது சரியா வராது சார். கொஞ்சம் ஆர்டிபீசிஷியலா இருக்கும்னு மறுத்துட்டேன். அதுக்குப் பிறகு, நிறைய பேரை டெஸ்ட் ஷூட் வைச்சார் டைரக்டர். அதுல கவுண்டமணியையும் கூட்டிட்டு வந்து நிக்கவைச்சோம். கவுண்டமணி நடிச்சுக் காட்டும் போதெல்லாம், நானும் பாலகுரு சாரும் எல்லாருமா சேர்ந்து, ஹாஹாஹாஹானு சிரிச்சோம். டைரக்டர் பாரதிராஜா சார் திரும்பி எங்களைப் பாத்தார். ‘இவனைத்தான் நடிக்கவைக்கணும்னு எல்லாரும் சேர்ந்து முடிவு பண்ணிட்டீங்க’ன்னு சொல்லி, ஒத்துக்கிட்டார். கவுண்டமணி நடிச்சார்.

அப்போ, எல்டாம்ஸ் ரோடு 92சில தான் குடியிருந்தேன். பக்கத்துல கவுண்டமணி வீடு. தினமும் வந்துருவாரு. ஓகேயா ஓகேயானு கேட்டுக்கிட்டே இருந்தாரு. அந்தக் கேரக்டருக்கு அவர் ஓகேன்னு முடிவான அன்னிக்கி, அவரைப் பாக்கவே முடியல. ‘ராஜன் (பாக்யராஜ்) வந்தா, எல்டாம்ஸ் ஹோட்டலுக்குப் பக்கத்துலதான் பேசிட்டிருப்பேன்’னு சொல்லிட்டுப் போயிருந்தார். நைட் 12 மணிக்கு கவுண்டமணியைப் பாத்தேன். ‘என்னாச்சு, நான் நடிக்கிறேனா’னு கேட்டார். நான் ஒண்ணுமே சொல்லல. ‘கொஞ்சம் வாங்க போயிட்டு வரலாம்’னு அவரைக் கூட்டிட்டு, தேனாம்பேட்டை ஆலையம்மன் கோயிலுக்குப் போனேன். ஏற்கெனவே சூடம் வாங்கிவைச்சிருந்தேன்.

கோயில் வாசல்ல, சூடத்தைக் கொடுத்து, ஏத்தச் சொன்னேன். ‘இந்தப் படத்துல நீங்க நடிக்கிறீங்க. நல்லா வேண்டிக்கோங்க’ன்னு சொன்னேன். சூடம் ஏத்தி, அம்மனைக் கும்புட்டுட்டு, அழ ஆரம்பிச்சிட்டாரு கவுண்டமணி. ‘ரொம்ப நன்றி ரொம்ப நன்றி’ன்னு சொல்லிக்கிட்டே இருந்தார்.

’கிழக்கே போகும் ரயில்’ படத்துல நடிச்ச அந்தக் கேரக்டர், கவுண்டமணியை எங்கேயோ கொண்டுபோச்சு’’ என்று தெரிவித்தார்.


‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் ‘கிளிகிளிகிளிகிளி... அங்கே ஒரு கிளி இங்கே ஒரு கிளி. அங்கே இருக்கறது பச்சைக்கிளி. இங்கே இருக்கறது பாஞ்சாலிக்கிளி’, ‘புதியவார்ப்புகள்’ படத்தின் ‘உள்ளதைச் சொல்றேங்க’, ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்தின் ‘சரோசா... குப்பை கொட்றியா கொட்டு கொட்டு’ என்பதெல்லாம் கவுண்டமணியின் காமெடிப் பேட்டைக்கு ‘டேக் ஆஃப்’ கொடுத்தன.

‘பயணங்கள் முடிவதில்லை’படத்தில் ‘இந்த சென்னை மாநகரத்திலே’, ‘நான் பாடும் பாடல்’ படத்தில் ‘கிடா வெட்டுவீங்களா?’, ‘உதயகீதம்’ திருடன், ‘இதயக்கோயில்’ பாடகர், ‘வைதேகி காத்திருந்தாள்’ சைக்கிள் கடைக்காரர், ‘கன்னிராசி’யின் பிரபுவின் அக்காள் கணவர், ‘சின்னதம்பி’யில் குஷ்பு வீட்டு வேலையாள், ‘சிங்காரவேல’னில் கமலின் நண்பர்களில் ஒருவர், ‘மன்னனி’ல் ரஜினியுடன் தொழிற்சாலை ஊழியர், ‘சூரியனி’ல் அரசியல்வாதி, ‘ஜென்டில்மேனி’ல் அர்ஜுனுடன் சேர்ந்து கொள்ளையடிப்பவர், ‘இந்தியனி’ல் ஆர்டிஓ ஆபீஸ் புரோக்கர், பார்த்திபனுடன் ‘டாட்டா பிர்லா’, கார்த்திக்குடன் ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘உனக்காக எல்லாம் உனக்காக’, ‘மேட்டுக்குடி’, சத்யராஜுடன் கணக்கிலடங்கா படங்கள், இந்தப் பக்கம் விஜயகாந்த், அந்தப் பக்கம் பிரபு, நடுவே ஜெயராமுடன் கூட்டணி, திடீரென்று அஜித்துடன், அப்புறம் விஜய்யுடன்... ஆனால், எப்போதும் செந்திலுடன் என்று மிகப்பெரிய ரவுண்டு, நம்மை ரவுண்டுகட்டி சிரிக்க வைப்பதில் வில்லாதிவில்லன் கவுண்டமணி. ‘நடிகன்’, ’ஜெய்ஹிந்த்’, ’சின்னதம்பி’,’மன்னன்’ கவுண்டமணியின் காமெடிக்காகவே இன்னும் ஐம்பதுநாள் சேர்த்து ஓடிய கதைகளெல்லாம் உண்டு.


எல்லா ஹீரோக்களும் பொருந்தக்கூடிய ஜோடியாக கவுண்டமணி காமெடியில் பண்ணியதெல்லாம் அதகளம். இவரின் டயலாக் டெலிவரி புதுசு. இவரின் மேனரிஸமும் பாடி லாங்வேஜும் புது தினுசு. எண்பதுகளில், இவரின் கால்ஷீட்டை வாங்கிவிட்டுத்தான், காமெடியையே ரெடிபண்ணுவார்கள். அன்றைக்கு இருந்த ஹீரோக்களும், ‘கவுண்டமணி அண்ணனைப் போட்டாச்சுல்ல’ என்று கேட்டுவிட்டுத்தான் கால்ஷீட்டைக் கொடுத்தார்கள். ஆர்.சுந்தர்ராஜன், மணிவண்ணன், கே.ரங்கராஜ், குருதனபால், சுந்தர்.சி, ஷங்கர் என இன்னும் ஏகப்பட்ட இயக்குநர்கள் கவுண்டமணியின் அசுரத்தனமான காமெடி வெடிகளை கொளுத்திப் போட்டுக்கொண்டே இருந்தார்கள்.
கங்கை அமரனின் ‘கரகாட்டக்காரன்’ படத்தையும் கவுண்டமணியையும் சொப்பனசுந்தரியையும் முக்கியமாக, வாழைப்பழத்தையும் மறக்கவே மாட்டார்கள். ‘சூரியன்’ படத்தின் அரசியல்வாதி கேரக்டரில் அசத்திவிடுவார். ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா’ என்பதும் ‘ஏய் இங்கே பூசு... அங்கே பூசு, பேக்ல பூசு’ என்பதும் ‘நான் ரொம்ப பிஸி’ என்பதும் இன்றைய டிரெண்டிங் உலகில் ஃப்ரஷ்ஷாகவே டிரெண்டடித்துக்கொண்டிருக்கின்றன.


எவரின் சாயலும் இல்லாமல், சாதனைப் படைத்த காமெடி ராஜா கவுண்டமணியும் சரி, அவரின் காமெடிகளும் சரி... புதுசு, புது தினுசு. அதனால்தான் அவர் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருக்கிற இந்தவேளையில் கூட, அவருக்கென இருக்கிறது தனி மவுசு!


நக்கல் டைமிங்கும் நையாண்டி ரைமிங்கும் பண்ணி, தனி ராஜாங்கம் நடத்திய கவுண்டமணிக்கு இன்று (மே 25) பிறந்தநாள்.


கவுண்டமணி அண்ணனை மனதார வாழ்த்துவோம்!

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x