Published : 08 May 2020 02:56 PM
Last Updated : 08 May 2020 02:56 PM

’இதைக் கேள்வி கேட்பாரே இல்லையா’- வனத்துறையினரால் பாதிக்கப்படும் பழங்குடிகள்?

கொடைக்கானல் மலையில் பெரியூர் குடியிருப்பு அருகில் வெட்டி சாய்க்கப்பட்ட வாழைகள்.

“தத்தெடுத்தோம் தத்தெடுத்தோம்னு பெருமையா பேசறீங்க... இதுதான் நீங்க எங்களைத் தத்து எடுக்கிற லட்சணமா? வாயக்கட்டி வயித்தக் கட்டி கொஞ்சமா இந்த வாழைகளைப் பார்த்துப் பார்த்து நட்டு வச்சோம். இதையெல்லாம் நீங்க காவு வாங்கவா ராப்பகலா காவக் காத்தோம்… இதைக் கேள்வி கேட்பாரே இல்லையா?”
- பழங்குடியினப் பெண்ணின் ஓலக் குரல், திண்டுக்கல் வனச்சரகத்துக்கு உட்பட்ட அந்தக் காட்டின் மூலைமுடுக்கெல்லாம் பட்டு எதிரொலிக்கிறது. அதையெல்லாம் துளியும் சட்டை செய்யாமல் அந்த வனத்தில் வளர்ந்துள்ள வாழை மரங்கள் எல்லாம் சிலரால் வெட்டிச் சாய்க்கப்படுகின்றன. காடெங்கும் பூத்தும், பூக்காததும் தண்டும், கன்றுமாய் வாழை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுக் கிடக்கின்றன.

இப்படி ஒரு காட்சி கடந்த தினங்களாக சமூக வலைதளங்களில் வலம் வரவே, அதைப் பற்றி விசாரித்தோம். இந்த வீடியோ எடுக்கப்பட்ட இடம் திண்டுக்கல் மாவட்டம் பெரியூர் குடியிருப்பை ஒட்டிய வாழைத்தோப்பு. அங்கு காலங்காலமாக வசிக்கும் பளியர் பழங்குடியினரான கண்ணன், ராஜா, முருகன், லெட்சுமணன், கார்த்திகேயன் உள்ளிட்ட 7 பேரின் பயன்பாட்டில் ஓரிரு ஏக்கர் நிலம் உள்ளது. அதில்தான் அவர்கள் காய்கறிகள், தானியங்கள் பயிரிட்டு வந்துள்ளனர். சமீபத்தில் இங்கே வாழை விளைவித்துள்ளனர்.

இப்படியான சூழலில் கடந்த மே முதல் நாளன்று அங்கே சென்ற வனத் துறையினர், ‘இது ஆக்கிரமிப்பு நிலம். இதில் எப்படிப் பயிர் செய்யலாம்?’ எனக் குடியிருப்புவாசிகளைக் கேட்டுள்ளனர். ‘வழக்குப் போடுவோம். கைது செய்வோம்!’ என மிரட்டியும் உள்ளனர். அதைத் தொடர்ந்து அந்தக் குடியிருப்புவாசிகளின் கையாலேயே வாழை மரங்களை வெட்டவும் வைத்துள்ளனர். இதைப் பார்த்து அங்குள்ள பெண்கள் அழுது கதறினர். அதை அங்குள்ள சில இளைஞர்களே தங்கள் செல்போன்களில் வீடியோ படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளனர்.

இதன் பின்னணி குறித்து நம்மிடம் விவரித்தார் பழங்குடியினர் செயல்பாட்டாளரான தன்ராஜ். ‘‘கொடைக்கானல், பழநி மலைகளில் பெரும்பான்மையாய் வாழ்பவர்கள் பளியர் பழங்குடிகள். அவர்களின் குடியிருப்புகள் எப்பொழுதுமே மலைக் கிராமங்களில் நெருக்கத்தில் இருக்காது. ஒரு பகுதியில் 7 முதல் 10 குடிசைகள் இருந்தாலே அதிசயம். இந்த இடைவெளியி்ல் இருக்கும் நிலங்கள் எல்லாம் இவர்களின் பயன்பாட்டில்தான் இருக்கும். அவற்றில் தங்களுக்குத் தேவையான உணவு தானியங்களைப் பயிரிட்டுக் கொள்வது அவர்களுடைய வழக்கம்.

இப்படியிருக்க, சமீப காலங்களில் இங்கே மன்னாடியார்கள் எனப்படும் கீழ்நாட்டுக்காரர்கள் வருகை அதிகமாகிவிட்டது. அவர்கள் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு ஹெக்டேர் கணக்கில் நிலங்களை வளைத்துப் பலன்களை அனுபவித்து வருகிறார்கள். மரம் வெட்டுவது, மூலிகைப்புல் வளர்ப்பது, இன்னபிற விவசாயம் செய்வது எல்லாம் தொடர்கிறது. அவர்களின் கைப்பாவையாகவே வனத் துறையினர் செயல்படுகிறார்கள். அவர்களுக்குப் பெரும் தலைவலியாக இருப்பது பளியர் பழங்குடிகள்தான்.

அதனால் அடிக்கடி இந்த இரு தரப்பிற்கும் மோதல் வருகிறது. இப்படியான சூழலில், அங்குள்ள இளைஞர்களைப் பொள்ளாச்சிக்கு வரவழைத்து அவ்வப்போது விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துகிறோம். வனத்தில் வாழ்வது அவர்களின் உரிமை என்பதைப் புரிய வைக்கிறோம். கல்வியின் அவசியத்தை விளங்க வைக்கிறோம். அப்படியான இளைஞர்கள் தம் பகுதியில் பிரச்சினை என்றால் விழித்துக்கொள்கிறார்கள். உடனே புகைப்படம், வீடியோ எடுத்து ஆவணப்படுத்துவது, அதை அரசின் கவனத்துக்குக் கொண்டுபோவது. மேலிடத்தில் புகார் செய்வது என அவர்களின் செயல்பாடுகள் தொடர்கின்றன. அதனால் இப்போது காடுகளுக்குள் பழங்குடிகளிடம் வனத் துறையினர் வம்பு செய்யாமல், அடக்கியே வாசிக்கின்றனர்.

இப்போது உலகமே கரோனா பிரச்சினையில் ஆழ்ந்திருப்பது வனத் துறையினருக்கு வசதியாகப் போய்விட்டது. மலை மக்களுக்கு வரும் நிவாரணப் பொருட்களைத் தடுப்பது. ‘எங்கள் அனுமதியில்லாமல் யாரும் உள்ளே வரக் கூடாது’ என்று அதிகாரம் செய்வது தொடர்கிறது. அதனாலேயே பழங்குடி மக்களுக்குப் போக வேண்டிய கரோனா நிவாரணப் பொருட்கள் போய்ச் சேரவில்லை.

உதாரணமாக, சில நாட்களுக்கு முன்பு வால்பாறை தாசில்தார் மூலமாகத் தனியார் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பொருட்களைப் பழங்குடி மக்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். தாசில்தாரும் பல இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கிவிட்டு கடைசியாக ஷேக்கல் முடி பகுதியில் வரும் ஒரு பழங்குடி கிராமத்திற்கு துணை தாசில்தார் மூலம் வழங்க ஏற்பாடு செய்திருந்தார். இங்கே 45 பழங்குடி குடும்பங்கள் உள்ளன.

அந்த ஏரியா கட்டுப்பாட்டில் வரும் வனத் துறை அலுவலருக்கு அதிகாரிகள் போன் செய்திருக்கிறார்கள். அவர் எடுக்கவில்லை. அதனால் பழங்குடி மக்களை ஷேக்கல் முடிக்கு வரச் சொல்லி பழங்குடியினத் தலைவரிடம் தகவல் சொல்லிவிட்டு அதிகாரிகள் வேன் மூலம் அங்கு சென்று காத்திருந்தனர். அதில் நானும் இருந்தேன். ஷேக்கல் முடிக்கு குறிப்பிட்ட பழங்குடிகளும் 3 கிலோ மீட்டர் நடந்தே வந்துவிட்டனர். ஆனால், அந்த நேரத்தில் அங்கு வந்த வனத் துறை அலுவலர், அவர்களைப் பொருட்கள் வாங்கத் தடுத்ததோடு, துணை தாசில்தாரிடமும், எங்களுடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

‘இவங்க எல்லாம் எங்க கட்டுப்பாட்டில் இருப்பவங்க. இவங்களுக்கு ஒரு பொருளைக்கூட எங்களை மீறி நீங்க கொடுக்கக் கூடாது. எங்களுக்குத் தகவல் சொல்லாமல் இவங்களை இங்கே வரவழைச்சதே தப்பு!’ என்றெல்லாம் பேசியதோடு, அந்த பழங்குடி மக்களையும் பார்த்து, ‘உங்களை யார் எங்க அனுமதி இல்லாம இங்கே வரச்சொன்னாங்க... எல்லாரும் கிராமத்துக்குப் போங்க’ன்னு விரட்டவும் ஆரம்பிச்சுட்டார்.

இதை எங்களுடன் வந்த சிலர் வீடியோ படம் எடுத்துவிட, அதைப் பார்த்து உஷாரான அந்த வனத் துறை அலுவலர் சற்று சாந்தமானார். இந்த விஷயத்தை சப் கலெக்டர், கலெக்டர் வரைக்கும் கொண்டு போகப்போவதாகச் சொன்னவுடன்தான் கொஞ்சம் இறங்கிவந்தார். அப்புறம்தான் நிவாரணப் பொருட்களை அந்த மக்களுக்குக் கொடுக்க அனுமதித்தார். இப்படிப்பட்ட சம்பவங்கள் காட்டுக்குள் நிறைய நடக்கின்றன. அப்படி ஒன்றுதான் இந்த வாழை மரங்களை வெட்டியது.

அந்தப் பழங்குடிகளிடம் இந்த இடம் ஆக்கிரமிப்பு, அதனால் நாங்களே வாழைகளை அகற்றுகிறோம் என எழுதிக் கைரேகை வாங்கி விட்டுத்தான் வெட்டியிருக்கின்றனர். தேவதானப்பட்டி வனச்சரகத்திற்குள் வருவதுதான் பெரியூர். அந்தப் பகுதியின் மாவட்ட வனத் துறை அலுவலரிடம் பேசினேன். அவர் சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்” என்று சொன்னார்.

தொடர்ந்து பேசிய தன்ராஜ், “கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொள்ளாச்சி - வேட்டைக்காரன் புதூர் அருகே இரண்டு புலிகள் விஷம் வைத்துக் கொல்லப்பட்டன. அது புலிக்கு வைக்கப்பட்ட விஷம் அல்ல என்றாலும் வேறு எதற்கோ வைக்கப்பட்ட விஷத்தைப் புலிகள் சாப்பிட்டு இறந்திருக்கின்றன என்று தெரியவந்தது. இதுதொடர்பாக அந்தத் தோட்டத்தில் வேலை பார்த்த 4 கூலித் தொழிலாளர்களையே கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் நால்வரும் பழங்குடி மற்றும் பட்டியலினச் சமூகத்தவர்கள். ஆனால், சம்பந்தப்பட்ட தோட்டத்துக்காரரை மட்டும் கைது செய்யவில்லை. இப்படித்தான் இருக்கிறது இவர்களின் தொடர் நடவடிக்கைகள்” என்றார்.தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x