Last Updated : 27 Apr, 2020 01:53 PM

 

Published : 27 Apr 2020 01:53 PM
Last Updated : 27 Apr 2020 01:53 PM

மனநலன் பாதிக்கப்பட்டவரை 23 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் இணைத்த கரோனா

தூத்துக்குடி

தூத்துக்குடியில் கடந்த 23 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலன் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே சுற்றித் திரிந்த தொழிலாளி கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் போது சமூக அமைப்பினர் மேற்கொண்ட உதவியால் குடும்பத்துடன் இணைய வாய்ப்பு அளித்துள்ளது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரப் பகுதியில் சுற்றித் திரிந்த 60 பேரை மீட்டு மாநகராட்சிக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் வைத்து உணவு அளிக்கும் பணியில் சில சமூக சேவை அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.

மனிதம் விதைப்போம் அறக்கட்டளை, ஆர்.சோயா அறக்கட்டளை, ஹெல்பிங் ஹேன்ட்ஸ் அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து சாலையில் சுற்றித் திருந்த மனநலன் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர், ஊனமுற்றோரை சுத்தம் செய்து புத்தாடை வழங்கி மண்டபத்தில் வைத்து பாதுகாத்து மூன்று நேரமும் உணவு வழங்கி வருகின்றனர்.

இவர்களில் மனநலன் பாதிக்கப்பட்ட 60 மதிக்கத்தக்க ஒருவரை சுத்தம் செய்யும் புகைப்படம் கட்செவி அஞ்சல் மூலம் பரவியது. இதையெடுத்து, அந்த நபர் தூத்துக்குடி இரண்டாம் கேட் பகுதியை சேர்ந்த வேல்முருகன் என்றும் வெல்டிங் தொழில் செய்து வந்த அவர் தனது மனைவி இறப்புக்குப் பிறகு மனநலன் பாதிக்கப்பட்டு வீட்டுக்குச் செல்லாமல் இருந்து வருவதாகவும் சமூக சேவை அமைப்பினருக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, சமூக சேவை அமைப்பினர் மேற்கொண்ட விசாரணையில் வேல்முருகனுக்கு இரண்டு மகன்கள் இருப்பதும் ஒரு மகன் பழக்கடை நடத்தி வருவதும், ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் கோயிலில் சேவை செய்து வருவதும் தெரியவந்தது.

தொடர்ந்து, வேல்முருகனிடமும், அவரது மூத்த மகனான ராமச்சந்திரனிடமும் தனித்தனியே பேச்சுக் கொடுத்து உறுதி செய்துக் கொண்ட சமூக சேவை அமைப்பினர் இருவரையும் சந்திக்க வைத்தனர். இந்த சந்திப்பின் போது நெகிழ்ச்சியடைந்த வேல்முருகன் கண்ணீர் விட்டு கதறி அழத் தொடங்கிவிட்டாராம்.

மகன் ராமச்சந்திரன் தன்னோடு தந்தை வேல்முருகனை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்ட போதிலும் அவருக்கு மனநலன் பாதிப்பு முழுமையாகக் குணமடையாத நிலை இருப்பதால் உரிய சிகிச்சைக்குப் பிறகே வீட்டுக்கு அனுப்ப முடியும் என சமூக சேவை அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நெகிழ்ச்சியான சந்திப்பு குறித்து மனிதம் விதைப்போம் அறக்கட்டளை நிறுவனர் கார்த்திக் கூறியது:

நாங்கள் 60 பேரை கவனித்து வந்தாலும் வேல்முருகனுக்கு லேசான அளவே மனநலன் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவரை சுத்தம் செய்யும்போது எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். அவ்வப்போது தனது மனைவி இறந்துவிட்டதாக தனிமையில் அவர் புலம்பிக் கொண்டிருந்தார்.

தொடர்ந்து அவரது மகன் ராமச்சந்திரன், மருமகள் தமிழ்ச்செல்வி மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகளை வேல்முருகனுடன் சந்திக்க வைத்தோம். அவர்களோடு நல்ல முறையில் பேசத் தொடங்கினார். வீட்டுக்கு வரும்படி அவர்கள் அழைத்தபோது கண்ணீர் மல்க ஏதும் பேசாமல் இருந்துவிட்டார்.

வெல்டிங் தொழில் செய்து வந்த வேல்முருகனின் மனைவி பிச்சம்மாள் கடந்த 1997 ஆம் ஆண்டு உடல்நலம் குன்றி இறந்துள்ளார். அதில் இருந்து சில மாதங்களுக்குப் பிறகு வீட்டுக்குச் செல்வதை வேல்முருகன் தவிர்த்துள்ளார்.

திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய அவர் தூத்துக்குடியில் பல இடங்களில் சாலையோரங்களில் சுற்றித் திரிந்து பசி எடுக்கும்போது தேநீர், குளிர்பானம், கிடைக்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்ந்துள்ளார்.

ராமச்சந்திரன் தனது குடும்பத்தோடு தூத்துக்குடியில் வசித்து வந்த போதிலும் அவரால் வேல்முருகனை சரியாக கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முடி வளர்ந்து, கந்தல் துணிகளை அணிந்து காணப்பட்டுள்ளார். தற்போது இந்த குடும்பத்தை இணைத்தது எங்களுக்கு முழு திருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், வேல்முருகனுக்கு இன்னும் மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. மேலும், அவரை வீட்டில் வைத்து பராமரிக்கும் அளவுக்கு அவரது மகன் ராமச்சந்திரனுக்கு அரசிடம் இருந்து ஏதேனும் உதவியை பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார் அவர்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பாதிப்புகள் அதிகம் என தகவல் பரவிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தூத்துக்குடியில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு குடும்பம் இணைவதற்கும் கரோனா ஒரு காரணமாக அமைந்துள்ளது என்பது அனைவரது மனதிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x