Last Updated : 30 Mar, 2020 10:50 AM

 

Published : 30 Mar 2020 10:50 AM
Last Updated : 30 Mar 2020 10:50 AM

மனமே நலமா 3.. சுமைதாங்கிகள் அல்ல தெய்வத்தாய்கள்.. தாயுமானவர்கள்

அவர்கள் யாருமே சுமைதாங்கிகள் அல்ல. அனைவருமே தெய்வத்தாய்கள், தாயுமானவர்கள். அப்படிச் சொல்வதே சரியானதாக இருக்கும் என நம்பவைத்தவர்கள் மீனாட்சி, எஸ்தர், சுப்பிரமணி, காளியம்மாள் இன்னும் சில பெற்றோர் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன).

கூந்தல் நீக்கப்பட்ட மொட்டைத் தலை, சீரற்ற பல் வரிசை, கட்டுக்கோப்பு இல்லாத உடல்வாகு, நம் அழைப்புக்கு நேரடியாக பார்வைத் தொடர்பை செலுத்தத் தெரியாமல் அங்குமிங்கும் திரும்பும் தலை என்ற தோற்றம் இருந்தாலும் எல்லா பக்கமும் புன்னகையை மட்டும் பஞ்சமில்லாமல் பாய்ச்சிக்கொண்டிருந்தார் அந்த 30 வயது குழந்தை. உடலளவில் 30 வயதும் மூளை வளர்ச்சியில் 5 வயதும் கொண்ட பெண்ணை குழந்தை என்றுதானே சொல்ல இயலும். நமக்கெல்லாம் வித்தியாசமாகத் தெரியும் அந்தக் குழந்தையை அத்தனை ஆதுரமாய் தோளில் சாய்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.

90%-க்கும் மேல் ஆட்டிச பாதிப்பு கொண்ட தனது குழந்தையை வளர்ப்பது எவ்வளவு சவாலானது என்ற தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார் மீனாட்சி. இன்னும் சிலரும் அனுபங்களைப் பகிர்ந்தனர். பெரும்பாலோனோர் சிங்கிள் பேரன்ட்.

அவர்களின் அனுபவப் பகிர்வை அறிந்து கொள்வதற்கு முன்னதாக சிறப்புக் குழந்தைகள் யார் என்பதை அறிந்துகொள்வோம். ஆட்டிசம் பாதிப்பு Autism or ASD (autism spectrum disorder) , மூளைமுடக்குவாதம் (Cerebral Palsy- செரிப்ரல் பால்ஸி), டவுன்ஸ் சிண்ட்ரோம் (Down's syndrome) எனப்படும் மரபணு பிறழ்வால் ஏற்படும் மனநலிவு ஆகியனவற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைத் தான் சிறப்புக் குழந்தைகள் என வகைப்படுத்துகிறோம். சில குழந்தைகள் பிறக்கும்போது எவ்விதக் குறைபாடும் இன்றி பிறந்தாலும் இடையில் மூளைக்காய்ச்சல் தாக்கத்தால் மனநலிவு பெறுகின்றனர். அவர்களும் சிறப்புக் குழந்தை வகைப்பாட்டுக்குள் வருகிறார்கள்.

தெய்வத்தாய்கள் மீனாட்சி, காளியம்மாள் சொல்லும் சாட்சி..

பத்து வருடங்களுக்குப் பின்னர் எங்களுக்கு மகள் பிறந்தாள். ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருந்தபோதுதான் குழந்தையிடம் வித்தியாசத்தை நான் உணரத் தொடங்கினேன். குழந்தை நான் அழைத்தால் என்னை நேரடியாக பார்க்கமாட்டாள். முகம் பார்த்து சிரிக்க மாட்டாள். கொஞ்சம் வளர்ந்த பின்னரும் கூட விளையாட்டு பொம்மைகளை ஆர்வமாகக் கேட்டதில்லை. தவழ்ந்தது, நடந்தது, ஓடியது என எல்லாமே காலம் தாழ்த்தியே செய்தாள். பேச்சும் சரியாக இல்லை. சந்தேகம் வலுத்ததால் மருத்துவரைச் சந்தித்தோம். எங்களின் குழந்தைக்கு ஆட்டிசம் என்பதை மருத்துவர் உறுதிப்படுத்தினார். என் குழந்தை சிறப்புக் குழந்தை என்பதை முதலில் நான் ஏற்றுக்கொண்டேன்.

அதேபோல், என் வீட்டிலும் சரி என் கணவர் வீட்டிலும் சரி எல்லோரும் அவள் சிறப்புக் குழந்தை என்பதைத் திறந்த மனதுடன் ஏற்றுக்கொண்டனர். அதனால் அவளை சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதில் எனக்கு எந்த சிக்கலும் இருந்தது இல்லை. நான் எங்கு சென்றாலும் அவளை என்னுடன் அழைத்துச் செல்வேன். இப்போது அவளுக்கு 30 வயது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் சமூகம் சிறப்புக் குழந்தைகளை சிறிதளவு கூட ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. என் மகள் போன்ற பிள்ளைகளை அழைக்கஅவர்களுக்கு 'பைத்தியம்' என்ற வார்த்தை மட்டும் தான் தெரிந்திருந்தது. இன்றைக்கு சமூகப்பார்வையில் ஓரளவு மாற்றம் இருக்கிறது. ஆனால், இது இன்னும் நிறையவே மாற வேண்டும்.

என்னையோ அல்லது என் மகளையோ நான் என்றும் தனிமைப்படுத்திக் கொண்டதில்லை. திருமண நிகழ்ச்சிகளுக்குத் தயங்காமல் செல்வேன். அங்கே என் மகளைப் பார்ப்பவர்களில் சிலர் ஏன் இப்படி இருக்கிறாள் என்று நாசுக்காகக் கேட்பார்கள், சிலர் என்ன பைத்தியமா என்று நேரடியாகவே கேட்பார்கள். எல்லோருக்கும் ஒரே பதில்தான் சொல்வேன். என் மகள் சிறப்புக் குழந்தை என்பேன். இதை நான் ஏன் உங்களிடம் வலியுறுத்திச் செல்கிறேன் என்றாள் 2020-ல் கூட நிறைய பேர் தங்களின் சிறப்புக் குழந்தைகளை சமூகத்தின் கண்களின் இருந்து மறைத்துவைக்க நினைக்கின்றனர். அப்படிச் செய்வது அத்தகைய குழந்தைகளின் வளர்ச்சியை மேலும் மட்டுப்படுத்தும்.

மதுரையில் 25 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற சிறப்புக் குழந்தைகளுக்கான பிரத்யேகப் பள்ளிகள் மிக மிகக் குறைவு. அப்போது டிவிஎஸ் குழுமம் நடத்திய பள்ளி ஒன்றில் தினமும் 2 மணி நேரம் சென்றுவரும்படி அவளை அனுப்பிவந்தேன். காலம் ஓடியது அவள் மட்டும் கடிகாரத்தின் முள்களைப் பிடித்திருக்கும் மையப்புள்ளி போல் அப்படியே நின்றுபோயிருந்தாள். பெண் குழந்தை அல்லவா, அவளுக்கும் மாதவிடாய் வரத்தொடங்கியது. சராசரி குழந்தையின் தாயைப் போல் நான் மகிழ்ச்சியடையவில்லை. பிரபல மகப்பேறு மருத்துவர்களைத் தேடி தேடி ஆலோசித்தேன். அவளது கர்பப்பையை அகற்றலாமா என்று விசாரணைகளுடன் அலைந்தேன். அப்படிச் செய்வது அவளின் எலும்புகளை வலுவிழக்கச் செய்து பலவீனப்படுத்தும். 40 வயதுக்கு மேல் செய்யலாம் என்று ஒருசேர அனைவரும் சொல்லிவிட்டனர். இன்றும் அந்த நாட்களில் அவளைப் பராமரிக்க நான் அளவு கடந்த மெனக்கிடலைக் கடைபிடிக்க வேண்டியுள்ளது. சில நேரங்களில் பேட், பேன்டியை அகற்றிவிடுவார். மருத்துவரிடம் கேட்டால் அட்டென்ஷன் சீக்கிங் என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிடுவார். ஆனால், என் மகளை கண்காணிக்க, பராமரிக்க அந்த நாட்களில் நான் மேற்கொள்ளும் மெனிக்கிடல்கள் என்று அவர் சொல்லி முடிக்க கண்ணீர் வார்த்தைகளாக வந்திறங்கியது.

சிறப்புக் குழந்தை பராமரிப்பு என்பது நாம் நினைப்பது போல் அவ்வளவு எளிதானது அல்ல. மீனாட்சி, எஸ்தர், சுப்பிரமணி ஆகியோருக்கு நிலையான வருமானம், குடும்பச் சொத்து என்று வசதி இருந்ததால் அவர்களுக்கு பணச்சுமை இல்லை. பராமரிப்பாளர்கள் வைக்கவும் மருந்து மாத்திரை ஸ்கேன் செலவுகளை சந்திக்கவும் அவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், காளியம்மாள் கதை அப்படி இல்லை . காளியம்மாள் கூலி வேலை செய்கிறார். தனது 20 வயது மகளை வைத்துக் கொண்டு வேலைக்குச் செல்வதே சிரமமாக இருப்பதாகக் கூறுகிறார்.

"என் பொண்ணு பிறக்கும்போது நல்லாத்தான் இருந்தா. மூளக் காச்சல் வந்துச்சு. அதுக்கப்புறம் அவளுக்கு மனநிலை பாதிச்சிருச்சி. 5 வயசுக்கு அப்புறம் அவ மூளை வளரவேயில்ல. நான் வேலைக்குச் செல்ல சிரமப்படுறேன். நிறைய நாள் அவள வீட்டுக்குள்ள வச்சு பூட்டிட்டுதான் வேலைக்கு வர்றேன். எங்கேயாவது கூட்டிப்போன பிடிவாதம் பிடிப்பா. ஒரு பலூனைப் பார்த்தா உடனே அந்தக் கடைக்கு ஓடுவா ரோட்டுல அவள சமாளிக்கவே ரொம்ப கஷ்டமா இருக்கும். சுத்தி இருக்கவங்க கிண்டல் செய்யுறப்ப ரொம்ப கோவமா வரும். சில நேரம் ரெண்டு அடி வைப்பேன். ஆனா வீட்டுக்கு வந்தப்புறம் என்னப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிப்பா அப்போ அப்படியே அவளைக் கட்டிக்குவேன். ஏண்டி இப்படி பிறந்தேன்னு அழுவேன். எப்படியிருந்தாலும் அவ என் மவ இல்லையா? என் வீட்டுக்காரரும் இறந்துட்டாரு. இதுல மாத்திரை, மருந்து எல்லாம் வாங்கணும். இவளப் பார்க்கவா? வேலையப் பார்க்கவா? எனக்கப்புறம் இவ என்ன ஆவாள்னு நெனச்சுட்டா தூக்கமே வராது. எனக்கு முன்னாடியே அவ போயிட்டா என் சாவுக்கு அப்புறமாவது நிம்மதியா இருப்பேன்" என்று சேலையை வாயில் வைத்துப் பொத்திக் கொண்டு அழுதார்.

சுபிட்சம் உருவான கதை..

மீனாட்சி, எஸ்தர் போன்ற தெய்வத்தாய்களையும், இன்னும் சில தாயுமானவர்களையும் ஒருங்கிணைத்து வைத்திருக்கிறது மதுரையில் உள்ள சுபிட்சம் மனநோயுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர் குடும்பக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பதிவு செய்யப்பட்ட அமைப்பாக இயங்கி வருகிறது. மனநலம் பாதிப்புற்றோரின் பெற்றோர், பாதுகாவலர்கள் இவ்வமைப்பில் உறுப்பினராகலாம். இப்போதைக்கு இந்த அமைப்பில் 900 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சிலர் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர். இந்த அமைப்புக்கு முதன்மை பங்களிப்பாளகர்ளாக மனநல சிறப்பு மருத்துவர் ராமசுப்பிரமணியன், அவரின் மனைவி ராஜகுமாரி ராமசுப்பிரமணியன் உள்ளனர்.

சபிட்சம் குடும்ப கூட்டமைப்பு,

*மனநோயுற்றோர், மூளை வளர்ச்சி குன்றியோர்களின் பெற்றோர் பாதுகாவலர்கள் மற்றும் அரவணைப்போர்களுக்கு ஆலோசனை வழங்குகிறது.

*சரியான சிகிச்சைக்கு வழிகாட்டுகிறது. சிகிச்சைக்கு மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளைப் பெறுவது எப்படி என வழிகாட்டுகிறது.

*அரசு சலுகைகள் கூட்டமைப்பில் உள்ளவர்களைச் சரியாகச் சென்றடைய உதவுகிறது.

*பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மறுவாழ்விற்கு வகை செய்கிறது.

*முக்கியமாக, மனநலப் பாதிப்பைக் கேவலமாகக் கருதி வெறுத்து ஒதுக்கும் சமூக நோக்கை மாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

*சர்வதேச அளவில் சிறப்புக் குழந்தைகளுக்கான சிகிச்சையில் ஏற்பட்டுவௌம் மாற்றங்கள், புதுமைகளைத் தெரிந்து அதை கூட்டமைப்பினருக்குத் தெரிவிக்கிறது.

இவை பொதுவான நோக்கங்களாக உள்ளன. இதுதவிர கூட்டமைப்பில் உள்ளவர்களில் ஏழை, எளிய குடும்பங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மருத்துவத் தேவைக்கான நிதியுதவி வழங்குவதையும் செய்து வருகிறது. ஹோம் விசிட் எனப்படும் வீட்டுக்கு நேரடியாகச் சென்று சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஆலோசனைகள் வழங்குவதையும் மேற்கொள்கிறது. சிறப்புக் குழந்தைகளின் பெற்றோருக்கு ஏற்படும் மன அழுத்தம் வெகுவாகக் குறைகிறது. நமக்கு மட்டும் ஏன் என்ற நினைப்பில் வாடிய தாய்கள் மத்தியில் நம்மைப் போன்றோர் நிறைய பேர் இருக்கிறார்கள் அவர்களை சந்தித்து ஆசுவாசப்படுத்திக் கொள்கிறார்கள் எதிர்காலத்தின் மீதொரு நம்பிக்கையை விதைக்கிறது. மதுரை செனாய் நகரில் ராமையா தெருவில் உள்ள இந்த கூட்டமைப்பில் இணைந்து சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் பயன்பெறலாம்.

இதேபோல் மதுரை ஒத்தக்கடை அடுத்த திருமோகூரில் உள்ள சிறப்புக் குழந்தைகளுக்கான இல்லத்துக்கு நேரடியாக சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அங்கிருந்தவர்கள் அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். பெரும்பாலும் அரசு மருத்துவமனைகளின் பரிந்துரையின்படி அந்த இல்லத்துக்கு அனுப்பிவைக்கப்படுகிறார்கள். அனைவருமே 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். தங்கும் வசதி கொண்ட அந்த இல்லத்தில் அடிப்படை பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. ஸ்பீச் தெரபி, குரூப் தெரபி ஆகியன கற்றுக்கொடுக்கப்படுகின்றன.

சந்தீப் நந்தூரிக்கு நன்றி..

மனவளர்ச்சி குன்றிய மற்றும் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான பூங்கா தமிழகத்திலேயே முதன் முறையாக மதுரையில் அமைக்கப்பட்டது. மதுரை - அழகர் கோவில் சாலையில் தமிழகத்திலேயே முதன்முறையாக மாநகராட்சி நவீன சிறப்பு பூங்கா அமைக்கப்பட்டது. இந்தப் பூங்கா, தற்போது திருநெல்வேலி ஆட்சி யராக இருக்கும் சந்தீப்நந்தூரி யின் முயற்சியால் தொடங்கப்பட்டது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றனர் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்.

இப்பூங்காவில் மற்ற இயல்பான குழந்தைகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த பூங்காவில் ஊஞ்சல்கள் ‘சீட்’ பெல்ட் போட்டு தனியாக ஆடவும், நடக்க முடியாத குழந்தைகள் வீல் சேருடன் அமர்ந்தும், பெற்றோருடன் அமர்ந்தும் ஆடுவதற்கேற்ப பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

சாதாரண குழந்தைகளைப் போல், இவர்களும் சறுக்கு விளையாடலாம். குழந்தைகள் மெதுவாக விழும் வகையில்,ரோலர் ப்ளேடு சறுக்கு விளையாட்டு உபகரணமும் உள்ளது. அவர்கள் நடப்பதற்கு ஏற்ப, புத்துணர்ச்சி அடையும் வகையிலான பிரத்தி யேக டைல்ஸ்களை கொண்டு பூங்காவின் தரைத்தளம் உள்ளது.

அரசு தரப்பில் இருந்து சிறப்புக் குழந்தைகளின் மீது அன்பும் அக்கறையும் மிகும் போது அது பொதுமக்களுக்கு பெரியளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என ஆணித்தரமாகக் கூறுகின்றனர் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்.

கர்மவினை இல்லை: மனநல மருத்துவரின் ஆலோசனை..

சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஆலோசனையும் சிகிச்சையும் வழங்கிவரும் மதுரையைச் சேர்ந்த மனநல மருத்துவர் கணேஷ்குமார் நிறைய விஷயங்களைத் தெளிவுபடுத்தினார்.

என்னிடம் வரும் நிறைய பெற்றோரின் முதல் குமுறல் எங்களுக்குப் பின் இவள்/இவன் நிலை என்னவாகும் என்பதாகத் தான் இருக்கிறது. பொதுவாக நான் பெற்றோரின் மனக்குமுறலை ஏக்கத்தை முழுமையாகக் காது கொடுத்து கேட்பேன். அது அவர்கள் எந்தவகை பெற்றோர் என்பதை எனக்கு உறுதி செய்யும்.

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் இருவகையாக உள்ளனர். சிலர் மிதமிஞ்சிய பாதுகாப்பு வளையத்துக்குள் தங்களின் பிள்ளைகளை வைத்துப் பராமரிக்கிறார்கள். பல் தேய்ப்பது தொடங்கி காலைக்கடன் கழிக்கவைத்து கால் கழுவுவது வரை செய்கின்றனர். தங்களின் அத்தகைய சிறப்புக் குழந்தைக்கு 40 வயதாகும் போது. எங்களுக்குப் பின்னர் இதெல்லாம் யார் செய்வார்கள்? ஏதாவது ஹோம் இருந்தால் சொல்லுங்கள் எனக் கேட்கிறார்கள்.

மருத்துவர் கணேஷ்குமார்.எஸ்.

இன்னொரு வகையான பெற்றோர், குழந்தையின் மீது வெறுப்பை கொட்டுகின்றனர். அவர்களை அடித்து வழிக்கு கொண்டு வர முயல்கின்றனர். இவ்விருவகை பெற்றோருமே தவறுதான் செய்கின்றனர்.

முதலில் சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு ஆக்டிவிட்டீஸ் ஆஃப் டெய்லி லிவிங் (activites of daily living) என்ற பழக்கவழக்கத்தை கற்றுக் கொடுக்க வேண்டும். பல் துலக்குதல், காலைக்கடன் கழித்துவிட்டு கழிவறையையும் தன்னையும் சுத்தமாக்கிக் கொள்ளுதல், குளித்தல், உணவு உண்ணுதல், சட்டை போடுதல், உடுப்பை களைதல் போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க வேண்டும். இது மிகச்சிறிய வயதில் இருந்தே ஆரம்பிக்க வேண்டும். இதை நாங்கள் ஏர்லி இன்டர்வென்ஷன் எனக் கூறுகிறோம்.

மூளைவளர்ச்சி குன்றியோரை மூன்றுவகையாகப் பிரிக்கிறோம். லேசான, மிதமான, தீவிரமான பாதிப்பு என வரையறுக்கிறோம். இதில் லேசானது முதல் மிதமானது வரையிலானதுவரை பாதிப்பு கொண்டோரை ஆக்டிவிட்டீஸ் ஆஃப் டெய்லி லிவிங்குக்கு பழக்கப்படுத்துவது பயிற்சிகள் மூலம் சாத்தியப்படும். இதை ஒழுங்காகப் பழக்கப்படுத்தினாலே பெற்றோருக்கு மன அழுத்தம், பின்னாளில் வரும் மனப்பதற்றத்தை தடுக்கலாம். பெற்றோரின் காலத்துக்குப் பின்னர் அவர்களின் சிறப்புக் குழந்தைகளை உறவினர்களோ அல்லது ஏதாவது இல்லங்களிலோ வைத்துப் பராமரிக்க எளிதாக இருக்கும்.

இரண்டாவது வகையில் வரும் கடுமை காட்டும் பெற்றோரிடமும் நாங்கள் அன்பின் மகத்துவத்தை விதைக்கிறோம். சிறப்புக் குழந்தைகள் பிடிவாதம் செய்யும்போது அடித்துத் துன்புறுத்தினால் அந்தக் குழந்தை வளர்ந்ததும் தானும் அதையே செய்யும். பெற்றோரைத் தாக்கும். அதனால், குழந்தையின் பிடிவாதத்தை அன்பால் வெல்லுங்கள் என ஆலோசனை கூறுகிறோம். இதையேத்தான் சிறப்பு குழந்தைகளைப் பராமரிக்கும் இல்லங்களில் பணிபுரிபவர்களுக்கும் ஆலோசனையாகக் கொடுக்கிறோம். சிறப்புக்குழந்தைகள் இல்லத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் அதேபோல் பிடிவாதம் பிடித்தால் அடிப்பதைத் தவிர வேறு வழியில்லை எனும் சொல்பவர்களிடம் அவ்வாறு கட்டுக்கடங்காமல் இருக்கும்போது குறிப்பிட்ட அந்த குழந்தையை ஒரு பாயில் சுற்றி (கழுத்துக்குக் கீழ்) படுக்கவைத்துவிடுங்கள். அரை மணி நேரத்தில் அந்தக் குழந்தை தனது அதீத வேகத்திலிருந்து விடுபட்டிருக்கும். அடுத்த முறை பிடிவாதம் பிடிக்கும்போதோ அல்லது கெட்ட வார்த்தை பேசினாலோ நீங்கள் பாயைக் கையில் எடுத்தாலே கட்டுக்குள் வந்துவிடும். மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் காயப்படுத்தாமல் அமைதிப்படுத்துவதற்கு இது உலகெங்கும் கடைபிடிக்கப்படும் முறையாக இருக்கிறது.

சிறப்புக் குழந்தைகளை வெளியில் அழைத்துச் செல்வதென்பது அவர்களின் சமூக ஈடுபாட்டை அதிகரிக்கும். அதனால் அவர்களை வீட்டினுள் முடக்காமல் வெளியில் அழைத்துச் செல்வது நல்லது. அதேபோல் சிறுவயதில் இத்தகைய குழந்தைகள் அழுதால், கத்திகூச்சலிட்டால் அடக்க முயலக்கூடாது. அழுகையும் கத்துவதும் கூட அவர்களுக்கு ஒரு தெரபிதான். அதை அனுமதித்தால் கையைக் கடிப்பது, தலையை முட்டுவது, இருந்திடத்திலேயே சிறுநீர் கழிப்பது போன்ற பிடிவாத குணங்களின் வெளிப்பாட்டை மட்டுப்படுத்தலாம்.

தீவிர மூளைவளர்ச்சி குறைபாடுகள் கொண்ட குழந்தைகளைப் பராமரிப்பதில் தான் மிகப்பெரிய சவால் இருக்கிறது. அத்தகைய குழந்தைகளுக்கு எவ்வித பயிற்சியும் கொடுக்க இயலாது. பெற்றோர் தான் முழுக்க எல்லாம் செய்ய வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய சவால்.

மூளை வளர்ச்சி குறைப்பாட்டை சரி செய்ய சிகிச்சை இல்லை. இது கர்ம விணைப் பலனும் இல்லை. சிறப்புக் குழந்தைகளுக்கு திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடும் என்ற எண்ணமும் தவறானது. திருமணம் நிச்சயம் தீர்வாகாது. ஆனால் சிறப்புக் குழந்தைகளைப் பயிற்சிகளின் மூலம் இயல்புக்கு பக்கத்திலாவது கொண்டு வரலாம். ஸ்பீச் தெரபி, பிஸியோதெரபி, மியூசிக் தெரபி, டான்ஸ் தெரபி, குரூப் தெரபி, வொக்கேஷனல் தெரபி என சிறப்புக் குழந்தைகளுக்கென நிறைய தெரபிகள் உள்ளன.

இவ்வாறு தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

கனவு மெய்ப்படுமா?

சிறப்புக் குழந்தைகளுக்கென அரசாங்கம் மாதாந்திர நிதியுதவி, பஸ்பாஸ் திட்டம் என செயல்படுத்தி வந்தாலும் வசதியற்ற பெற்றோறின் நலன் கருதி ஹோம் கேர் திட்டத்தை அரசாங்கம் கொண்டு வர வேண்டும் எனப் பரிந்துரைக்கிறார் மருத்துவர் கணேசகுமாரன்.

அதாவது வீடுகளுக்கே தெரபிஸ்டுகள் சென்று பிஸியோதெரபி, ஸ்பீச் தெரபி போன்றவற்றை வாரம் ஒருமுறை செய்து கொடுக்க ஏற்பாடு செய்யலாம். அதேபோல் சிறப்பு குழந்தைகளுக்கென டேகேர் மையங்களையும் அரசு தொடங்கலாம். கிராமப்புறங்களில் ஏழை எளிய மக்கள் தங்களின் சிறப்புக் குழந்தைகளை இங்கே விட்டுச் செல்ல வசதியாக இருக்கும். அவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிப்பதன் மூலம் பெற்றோருக்கு நம்பிக்கை பிறக்கும். மருத்துவரின் இந்த கனவு மெய்ப்பட வாழ்த்துவோம்.

அரசு சலுகைகள் என்னென்ன?

சிறப்புக் குழந்தைகளுக்கென அரசாங்கம் சில சலுகைகளை வழங்கி வருகிறது. மாதந்ததோறும் ரூ.1500 பராமரிப்புத் தொகையாக வழங்கப்படுகிறது. புற உலக சிந்தனையற்றோர், பல்தரப்பட்ட ஊனம், ஆட்டிசம், மனவளர்ச்சி குறைபாடு, மூளை முடக்குவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளை அரசு மருத்துவமனை மருத்துவரிடம் காண்பித்து சான்றிதழ் பெற வேண்டும். அந்த சான்றிதழுடன் ஆதார், ரேஷன் அட்டை, வங்கிக்கணக்கு நகல் போன்ற ஆவணங்களை இணைத்து டிடிஆர்ஓ அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பின்னர் அந்த வங்கிக் கணக்கில் மாதந்தோறும் அரசாங்கம் ரூ.1500 பராமரிப்புத் தொகையை செலுத்தும்.


இதுதவிர செவித்திறன் சவால் கொண்ட குழந்தைகளுக்கு அசிஸ்டிவ் டிவைஸ், சிறப்புக் குழந்தைகளுக்கு வாக்கர் போன்ற உபகரணங்களை மத்திய அரசு வழங்குகிறது.

பேருந்து, ரயில்களில் பயணம் செய்ய சிறப்புக் குழந்தைகளுக்கும் அவர்களின் பராமரிப்பாளர் ஒருவருக்கும் பாஸ் வழங்கப்படுகிறது.
தேசிய அறக்கட்டளை வாயிலாக நிராமயா ஹெல்த் இன்சூரன்ஸ் (Niramaya scheme) திட்டத்தின் பயனை சிறப்புக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. காப்பீட்டுத் தொகை ரூ.1 லட்சம். இதற்காக ஆண்டுக்கு ரூ.250 ப்ரீமியம் தொகை செலுத்தினால் போதுமானது. இதன் மூலம் அரசு மருத்துவமனைகள், அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று காப்பீட்டு பலன்களைப் பெறலாம்.

தேசிய மாற்றுத்திறனாளிகள் நிதி மேம்பாட்டுக் கழகம் (National Handicapped Finance and Development Corporation) மூலம் 40% மேல் ஊனம் கொண்ட சிறப்புக் குழந்தைகளுக்கு சுய தொழில் தொடங்க வங்கிக்கடன் வழங்கப்படுகிறது. அத்தகைய குழந்தைகளின் பெற்றோர் இந்த கடனுதவியைக் கொண்டு தொழில் தொடங்கலாம்.

சமூகம் என்ன செய்ய வேண்டும்?

சிறப்புக் குழந்தைகளின் பெற்றோரிடம் பேசியபோது பெரும்பாலானோர் முன்வைத்த குமுறல் எங்கள் குழந்தைகளை சமூகம் ஏளனம் செய்கிறது என்பதுதான். ஏளனங்களையும் பரிதாபங்களையும் தவிர்த்து அன்பும் மரியாதையும் காட்டினாலே போதும் நாங்கள் மன அழுத்தத்தில் இருந்து மீண்டு விடுவோம் என்கின்றனர். காளியம்மாள் போன்ற ஏழை பெற்றோர் எங்களுக்கு யாரும் வீடு தருவதில்லை என்று வருந்தினார்.
பெண் பிள்ளை வைத்திருக்கும் ஏழை தாய்மார்கள் சிலர், அரசாங்கம் அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகளுக்கு இலவச நாப்கின் தரும் திட்டத்தை மனவளர்ச்சி குன்றிய பெண் குழந்தைகளுக்கும் நீட்டிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் அந்தந்த பகுதியில் உள்ள சிறப்புக் குழந்தைகள் (பெண் குழந்தைகளுக்கு) இத்திட்டத்தை செயல்படுத்தலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

சிறப்புக் குழந்தைகள் ஆபத்தானவர்கள் அல்ல அரவணைக்கப்பட வேண்டியவர்கள் என்பதை உணர்ந்து அவர்களை சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்காமல் இருக்க வேண்டும். சமூகப் புறக்கணிப்பால் தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த குவாடன் என்ற சிறுவன்.. எனக்கொரு தூக்குக் கயிறு கொடுங்கள் என்று கண்ணீர் விட்டான். குள்ளமாக இருந்த ஒரே காரணத்துக்காக அந்தக் குழந்தை அவமானங்களைச் சந்திக்க நேர்ந்தது. அந்தக் குழந்தைக்கு தன் வேதனையைச் சொல்லிப் புரிய வைக்க முடிந்தது. ஆனால், அப்படி ஒரு சாட்டையைக் கூட மனநலன் குன்றிய குழந்தைகளால் சுழற்ற இயலாது. அதனால் சமூகம் புரிந்துகொண்டு அரவணைத்துச் செல்ல வேண்டும். உங்களின் அன்பை அவர்களால் உணர முடியும் என்பது எவ்வளவு உண்மையானதோ அதேபோல் உங்களின் வெறுப்புணர்வும் அவர்களின் ஆழ்மனதில் விதையாகப் பதியும் என்பது உண்மை. வார்த்தைகளால், ஏளனப் பார்வைகளால் அவர்களைப் புறக்கணிக்காதீர்கள். அரவணைத்து செல்லுங்கள்.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x