Last Updated : 09 Mar, 2020 03:51 PM

 

Published : 09 Mar 2020 03:51 PM
Last Updated : 09 Mar 2020 03:51 PM

நான் பெண்ணில்லையா?- கொண்டாட்டத்திற்கு உரியதல்ல மகளிர் தினம்

சோஜோர்னர் ட்ரூத்.

''நான் பெண்ணில்லையா...?'' அமெரிக்காவின் ஓஹியாவில் 1851 ஆம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாட்டில் ஆப்பிரிக்க அமெரிக்கரான சோஜோர்னர் ட்ரூத் ஆற்றிய உரையை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இம்மாதத்தில் மீண்டும் நினைவுபடுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

''அங்கிருக்கும் அந்த ஆண் கூறினார்.. பெண்களால் பிறரது உதவி இல்லாமல் கடினமான வேலைகள் எதையும் செய்ய இயலாது... அவர்களுக்கு எப்போதும் சிறந்த இடம் தரப்படுகிறது என்று... என்னைப் பாருங்கள் எனக்குக் கடின வேலைகளில் யாரும் உதவவில்லை. எனக்கான சிறந்த இடத்தை யாரும் தருவதில்லை. நான் பெண்ணில்லையா?

என்னைப் பாருங்கள்... என் கைகளைப் பாருங்கள்... நானே உழுது நானே நடவு செய்தேன். எந்த ஆணும் என்னை வழி நடத்தவில்லை. நான் பெண்ணில்லையா...?''

இசபெல்லா பௌம்ஃப்ரீ என்ற இயற்பெயர் கொண்ட சோஜோர்னர் ட்ரூத், அமெரிக்காவில் 1797 ஆம் ஆண்டு அடிமைக் குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் உள்ள பெரும் பணக்காரர்களில் வீடுகளில் வேலையாளாக விற்கப்பட்ட இசபெல்லா உடல் ரீதியகவும், மன ரீதியாகவும் பெரும் துன்பத்தை அனுபவித்தவர்.

அந்தக் கொடுமையிலும் பட்டாம்பூச்சியின் இருப்புப் போல, ஒரே மகிழ்ச்சியாக இசபெல்லாவுக்கு அங்கிருக்கும் மற்றொரு அடிமை மீது காதல் மலர்கிறது. ஆனால், அவரது முதலாளியோ இசபெல்லாவின் ஒரே நம்பிக்கையைக் கொன்று விடுகிறார்.

ஒருகட்டத்தில் இசபெல்லா தனது அடிமை விலங்கை உடைத்துக்கொண்டு, சோஜோர்னர் ட்ரூத்தாக உருமாறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, தொடர் செயல்பாடுகள் மூலம் அடிமைத்தனதுக்கு எதிராகவும், பெண்களின் உரிமைக்காகவும் முக்கியக் குரலாக சோஜோனர் ட்ரூத் அமெரிக்க வரலாற்றில் அறியப்படுபடுகிறார். இன்றுவரை அறியப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

சோஜோர்னர் ட்ரூத் மட்டுமல்ல, பெண்களின் சம உரிமைக்களுக்காகவும், பெண்களின் சமத்துவத்திற்காக டோரதி ஹைட், இடா.பி. வேல்ஸ், பட்சி மிங்க், வன்செட்டா போன்றோர்களும் குரல் கொடுத்தவர்களில் முக்கியமானவர்கள்.

ஆனால், இந்தக் குரல்களுக்கான மதிப்பு இதுவரை முழுமையாக கிடைத்திருக்கிறதா? இக்கேள்வியை இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் எழுப்பவேண்டிய முக்கியத் தேவை இருக்கிறது. ஏன் இன்னும் எத்தனை நூற்றாண்டுகளுக்கு இந்தக் கேள்வி தொடரப்போகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

சர்வதேச பெண்கள் தினத்தில் ,பெண்கள் சாதித்துவிட்டார்கள், பெண்களுக்காக அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று ஆஹா... ஒஹோ என்று புகழ்ந்து அவர்களது உண்மையான உரிமைகளை மறைப்பதில் என்ன பெருமிதம் இருக்கப்போகிறது என்ற கேள்வியை எழுத்தாளரான வ.கீதா முன்வைக்கிறார்.

வா.கீதா

வ.கீதா

”கூடங்குளம் போராட்டத்தில் சுமார் இரண்டாயிரம் பெண்கள் பங்கெடுத்தார்கள். பங்கெடுத்தார்கள் என்பதைவிட அங்கேயே வாழ்ந்தார்கள் என்று கூறலாம். ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கெடுத்த அப்போராட்டம் அவர்களின் வாழ்க்கையை போராட்டத்திற்கு முன், போராட்டத்திற்குப் பின் என்று மாற்றியது. அவர்களுக்கு வாழ்தல் என்பது தலைமுறைகளுக்கான போராட்டம். ஆனால் அப்போராட்டத்தை முன்னின்று நடத்திய பெண்கள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?

சமூகத்தைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்த அவர்களது தலைமைப் பண்பு இப்போது என்ன ஆனது? மீண்டும் குடும்ப வட்டத்திற்குள் சென்று விட்டார்களா? திரும்பவும் பீடி சுற்றச் சென்றுவிட்டார்களா? இல்லை கணவனுக்கு அடங்கிய மனைவி ஆகி விட்டார்களா? சமூகத்தைப் பற்றிய அவர்களது பராமரிப்புப் பணிகளுக்கு இங்கு ஏதேனும் வடிகால் உள்ளதா?

அவர்கள் என்னவாக வாழ ஆசைப்பட்டார்களோ அவ்வாறு அவர்களால் வாழ முடிந்ததா? என்ற பல கேள்விகளுடன் போராட்டம் முடிந்து விட்டது. மீண்டும் நாங்கள் அடுப்பறைகளுக்கு நுழைய வேண்டுமா என்று அப்பெண்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் இருக்கிறதா... இவற்றைப் பற்றி எல்லாம் நாம் கவலைப்படுதில்லை அல்லவா.

மேதா பட்கரின் சுற்றுச் சூழல் போராட்டத்தைத் தவிர்த்து எங்கயாவது பெண் தலைமையைத் தொடர்ந்து ஏற்றுக்கொண்டு இருக்கிறீர்களா? பெண்கள் வீட்டில் சோறாக்குவதை நிறுத்தினார்கள் என்றால் ஆண்களால் அவர்கள் போராட்டத்தைத் தொடர்கிறார்களா?

சரி இந்த சமூக அமைப்பில் ஒரு பெண்ணால்தான் வாழும் இல்லத்தை என் வீடுதான் என்று உறுதியாகச் சொல்ல இந்தச் சமூகம் அனுமதி அளித்திருக்கிறதா? அப்பா வீடு, அண்ணன் வீடு, கணவன் வீடு, மாமானார் வீடு இப்படித்தான கூறுகிறோம். அப்படிப் பார்த்தால் அப்பெண்கள் புரியும் பாராமரிப்புப் பணிகளுக்கான மதிப்பை நாமும் அளிப்பதில்லை. இந்தச் சமூகமும் வழங்குவதில்லை.

இவ்வாறு இருக்கையில் பெண்கள் தினத்தன்று மட்டும் பெண்கள் முன்னுக்கு வந்துவிட்டார்கள் என்று பாராட்டி அவர்களது அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எதிர்கொள்ளும் போராட்டத்தை வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதில் என்ன பயன்? பெண்களின் ஆளுமை, பெண்களுடைய பராமரிப்பு தனித்துவம் என்பதைத் தொடர்ந்து நாம் பண்பாட்டு விழுமியங்களாக தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து பெண்களின் அந்தப் பக்கத்தை பற்றியும் யோசிக்க ஆரம்பிக்க வேண்டும்.

ஆனால், இதற்கான எந்த முகாந்திரமும் தற்போதைய சூழலில் நிச்சயமாக இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து கொண்டே இருக்கின்றன. பொள்ளாச்சி வழக்கு ஏன் இன்னும் முடியாமல் இருக்கிறது? ஏனென்றால் பெண்கள் பேசத் தயங்குகிறார்கள். பேசினால் இந்தச் சமூகம் என்ன நினைக்கும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கிறது. ஏனென்றால் தொடர்ந்து அவர்களை அச்சுறுத்தும் அந்த சமுதாயத்தில் அவர்கள் வாழ வேண்டும் அல்லவா?

இத்தனைக் காலம்வரை பெண்களுக்கான சமூக அடையாளம் என்பது வழங்கப்படவே இல்லை. அவர்களாகவே கையில் எடுத்துக் கொண்டு வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தற்போது எல்லா வேலைகளிலும் பங்கெடுக்கிறார்கள் ஆனால் அதில் அவர்களின் ஊதிய நிலை என்னவாக இருக்கிறது. பெண்களின் வேலைக்குரிய வெகுமதியை நாம் எவ்வாறு மதிக்கிறோம். பொதுவெளியில் இயங்கும் பெண்களைப் பற்றி நாம் என்ன யோசனை வைத்திருக்கிறோம்.

பெண்களின் உழைப்பு இச்சமூகத்துக்கு எவ்வாறு அடித்தளமாகி உள்ளது என்பது பற்றி நாம் பேசுவதே இல்லை. உழைப்புக்கேற்ற மதிப்பைத் தருவதில்லை. உழைக்கும் பெண்ணை உழைக்கும் பெண்ணாகப் பார்ப்பதில்லை. இவை எல்லாம் நாம் சிறப்பான சமுதாயமாக மாறவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த நிலை மாற வேண்டும்”.

இவ்வாறு வ.கீதா தெரிவித்தார்.

பெண்களுக்கான அதிகார உரிமையும், அவர்களின் உழைப்புக்கேற்ற ஊதியமும் அமெரிக்கா, ரஷ்யா போன்ற வளர்ந்த நாடுகளிலே விவாதப் பொருளாக மட்டுமே உள்ளபோது இந்திய போன்ற நாடுகளில் மோசமாக இருக்கிறது என்கிறார் பத்திரிகையாளர் கவிதா முரளிதரன்.

''சம ஊதியம் என்பது பெண்களின் நூற்றாண்டுப் போராட்டம். இன்னும் அது நிறைவேறவில்லை என்பது நாம் பாலினச் சமத்துவம் என்பதில் எந்த நிலையில் இருக்கிறோம் என்று சுட்டுகிறது. எந்தவொரு நாடும் பாலினச் சமத்துவத்தை எட்டவில்லை என்கிறது சமீபத்திய ஆய்வு.

கவிதா முரளிதரன்

கவிதா முரளிதரன்

இந்தியாவில் குடும்பம், சாதி போன்ற பின்னணியின் பலம் இருந்தால்தான் பெரும்பாலும் பெண்கள் தலைமைப் பதவிகளுக்கு வர முடிகிறது என்பது நிதர்சனம்.

ஊடகத்துறை தொடங்கி பெரும்பாலான துறைகளில் இதுதான் நிலை. இந்தச் சமூகம் 'social capital' இல்லாத பெண்கள் சந்திக்கும் போராட்டம் கடுமையானது. எல்லா மட்டங்களிலும் ஆதிக்கம் நிலவும் ஒரு சமூகத்தை எதிர்த்துதான் அவர்களது போராட்டம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.

மகளிருக்கு வழங்கக் கூடிய அங்கீகாரங்களை வழங்காமல் வெறும் போலியான கொண்டாட்டங்களால் அவர்களின் நட்சத்திரங்களில் தற்காலிகமாக ஒளி ஏற்றுவதை நிறுத்திவிட்டு அவர்களுக்கான நியாயங்களை சேர்க்க முயற்சிப்போம்.

தொடர்புக்கு: தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x