Published : 22 Feb 2020 21:13 pm

Updated : 24 Feb 2020 18:58 pm

 

Published : 22 Feb 2020 09:13 PM
Last Updated : 24 Feb 2020 06:58 PM

அன்புக்காக ஏங்கும் புறக்கணிக்கப்பட்ட இதயங்கள்: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தின் ஒருநாள் அனுபவங்கள்

kilpauk-mental-hospital

இருபுறங்களில் வளைவுகளாகச் செல்லும் குறுக்குச் சாலைகளுக்கு அருகில் உள்ள வார்டு அறைகளிலிருந்து சிரிப்பும் அழுகையும் கலந்த சத்தங்கள் காற்றில் ஒலிக்கின்றன.

பச்சை நிற ஆடை அணிந்து காருக்கு முன்னால் சென்று கொண்டிருந்த தனது நண்பரை, ''கார் வருதுல்லா... டேய் தள்ளி நட டா....'' என்று கோபமாக கையைப் பிடித்து இழுத்துச் சென்று கொண்டிருந்தார் முதியவர் ஒருவர்.


ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஆலமரத்தின் அடியில் தலையில் பூ வைத்தபடி நின்றிருந்த பாட்டி ஒருவர் ''வாங்க... வாங்க...'' என்று வணக்கம் வைத்து வரவேற்றுக் கொண்டிருந்தார்.

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பக்கத்தில் அரங்கேறிய காட்சிகள்தான் இவை...

வெளியுலகிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொண்டு நேசத்துக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அந்த மக்களின் ஒருநாள் எவ்வாறு கடக்கிறது என்பதைக் காண்பதற்காக ‘இந்து தமிழ்’ இணையதளம் சார்பாகச் செல்லும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

அங்கிருக்கும் நோயாளிகளால் விளைவித்த காய்கறிகளை வாங்கும் கூட்டத்திற்குப் பின்னால், துடைப்பத்தால் குப்பைகளை அகற்றிக் கொண்டிருந்த முருகனிடம் என்னை அழைத்துச் சென்றார் மறுவாழ்வு சிகிச்சை ஒருங்கிணைப்பாளர் ஜெசி.

''முருகா....'' என்று அழைத்ததும் அவரது முகத்தில் அவ்வளவு ஆனந்தம்... இங்கிருக்கும் நோயாளிகளை அவர்கள் பெயர் சொல்லிக் கூப்பிட்டால் அவர்கள் முகத்தில் இனம் புரியா மகிழ்ச்சி தெரியும்... அதனை அவர்கள் தங்களுக்கு அளிக்கும் அங்கீகாரமாகக் கருதுகிறார்கள் என்று ஜெசி என்னிடத்தில் கூறியதை முருகன் எனக்கு நினைவுபடுத்தினார்.

டிப்ளமோ மெக்கானிக்கலில் இரண்டாம் ஆண்டு படித்திருக்கும் முருகன், தனக்குச் சிகிச்சை முடிந்ததும் வீட்டுக்கு விரைவில் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

இங்கு சிகிச்சை பெறும் நோயாளிகளால் விளைவிக்கப்பட்ட காய்கறிகளையும், கீரைகளையும் அங்குள்ள ஊழியர்கள் பெருமிதத்துடன் காண்பிக்க அங்கிருந்து நகர்ந்து கேக், பிஸ்கட்கள் செய்யும் வார்டுக்கு என்னை அழைத்துச் செல்ல வழியில் சென்று கொண்டிருந்த கண்ணன் என்பவரை அழைத்தனர்.

தனது கையில் வைத்திருந்த பக்கெட்டை உடனே அங்கேயே வைத்துவிட்டு கண்ணன் என்னை அழைத்துச் சென்றார். நீங்க ''சந்தோஷமாக இருக்கீங்களா'' என்று கேட்டதற்கு, ''ரொம்ப'' என்று குழந்தைபோல் தலையசைத்துக் கூறினார்.

என்னை பேக்கரியில் பத்திரமாக விட்டுவிட்டு, ''நான் இங்கிருந்து போகலாமா'' என்று அனுமதி கேட்டுவிட்டு, அன்றாடம் தான் செய்யும் பணியைத் தொடங்க உற்சாகமாகச் சென்றுவிட்டார்.

பின்னர் பெண்கள் இருக்கும் வார்டுக்குச் செல்ல நேர்ந்தது. பெண்கள் இருந்த பகுதி ஆண்கள் பகுதியைக் காட்டிலும் சற்று சத்தமாகவே இருந்தது. பலர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள். சிலர் கூடைகளைப் பின்னிக் கொண்டிருந்தார்கள்.

அங்கிருந்த தேவியுடன் பேச்சுக் கொடுத்தபோது, தான் செய்த அலங்காரப் பொருளை உற்சாகமாக என்னிடம் காட்டினார். தேவியின் பேச்சிலும், அவரது உடல் மொழியிலும் மன நோய்க்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. தேவியின் வீட்டிலிருந்து யாராவது வந்து பார்ப்பார்களா என்று கேட்டதற்கு, ''என் குடும்பத்தினரும் இங்கு வருவதில்லை. எனக்கு அவர்களிடம் செல்ல விருப்பமில்லை'' என்று சற்று கிறங்கிய குரலில் கூறினார்.

பக்கத்தில் அமர்ந்திருந்த ஜாஸ்மினோ, தன்னை அழைத்துச் செல்ல வீட்டார் யாரும் வரவில்லை என்று அழத் தொடங்கிவிட்டார்.

கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனை அன்புக்காக, ஆறுதல் தெரிவிக்கும் கரங்களுக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கிறது என்பதை நேரடியாக உணர முடிந்தது.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனை இயக்குனர் பூர்ண சந்திரிகா அங்குள்ள நோயாளிகளுக்கு எத்தகைய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன என்பது குறித்து நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

''ஒருநாள் என்பது, இங்குள்ள நோயாளிகள் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் அவர்களுக்கு உணவு அளிக்கபட்ட பின் மாத்திரை வழங்கப்படுவதிலிருந்து தொடங்குகிறது.

இதனைத் தொடர்ந்து அவர்கள் வார்டுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். ஓய்வுக்குப் பிறகு இங்குள்ள தோட்டக் கலைஞர் ஒருவர் விருப்பம் உள்ளவர்களுக்கு தோட்டக் கலைப் பயிற்சியில் ஈடுபடுத்துவார்.

தோட்டக் கலைப் பயிற்சி பெரும்பாலும் எதிர்மறையான சிந்தனை உள்ளவர்களுக்கு குறிப்பாக, எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நோயாளிகளுக்கு உற்சாகம் அளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் அவர்கள் தங்களது பழைய நினைவுகளை ஒருங்கிணைத்துக் கொள்ள முடிகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் பிறருடன் பேச ஆரம்பிப்பார்கள்.

தொழில் அடிப்படையிலான சிகிச்சையில் தோட்டக் கலை மட்டுமல்லாது பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி தொழில்களும் நோயாளிகளுக்குக் கற்றுத் தரப்படுகின்றன.

மேலும் இங்கு சமைப்பதற்குத் தேவையான மசாலாக்களை அரைப்பதற்கான மாவு மில்லும் உள்ளது. குறைந்த விலையில் இங்கு மிளகாய் அரைத்துத் தரப்படும் என்று விளம்பரம் செய்து வெளியே உள்ளவர்களையும் உள்ளே வந்து அரைத்துச் செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

கூடை பின்னுவது, மொபைல் கவர், பர்ஸ், பொம்மைகள் செய்வது போன்ற கைத்தொழில்கள் பெண்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. அவர்களும் ஆர்வமாக அதனைக் கற்றுக் கொண்டு செய்கிறார்கள். மேலும், பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உதவியால் சோப் செய்வது, பினாயில் செய்வது போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இதுமட்டுமில்லாது அரசுப் பள்ளிகளில் விநியோகிக்கும் சானிடரி நாப்கின்களை இங்கு சிகிச்சையில் இருப்பவர்களே தயாரிக்கின்றனர்.

இதுவெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிருந்த சிறந்த மருத்துவர்களால் தொடங்கப்பட்டது. கீழ்ப்பாக்கத்தில கிட்டத்தட்ட 2,000க்கும் அதிகமான நோயாளிகள் உள்ளனர். அவர்கள் எல்லாம் வெறும் சாப்பிட்டு, தூங்கினால் மட்டும் இருந்தால் எப்படி? அதனால் அவர்கள் ஆரம்பித்ததை நாங்கள் பின் தொடர்கிறோம்.

தோட்டக் கலைகளை நாம் அந்தக் காலத்திலிருந்தே மனரீதியிலான சிகிச்சைக்குப் பயன்படுத்தி வந்திருக்கிறோம். நாங்கள் இங்கு விளைவிக்கும் காய்கறிகளை அவ்வப்போது சமைப்பதற்காகவே பயன்படுத்துகிறோம். மீதமுள்ள காய்கறிகளை விற்கவும் பயன்படுத்துகிறோம்.

வெண்டைக்காய், சுரைக்காய், அவரைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், மரவள்ளிக் கிழக்கு, கீரை வகைகள் எனப் பலவற்றை இங்கு சிகிச்சை பெறுபவர்கள்தான் விளைவிக்கிறார்கள். இதற்கு உற்ற துணையாய் உதவுவது 'நிழல்' தொண்டு நிறுவன அமைப்பினர்தான்.

காய்கறிகளுக்குத் தேவையான இயற்கை விதைகள் மற்றும் உரங்களை அவர்கள்தான் வழங்குகிறார்கள். மேலும் இங்குள்ள மக்களுக்கு தோட்டக் கலை குறித்த பயிற்சியை அவர்களுக்கு ஏற்ற புரிதலுடன் கற்றுத் தருகிறார்கள்.

பூர்ண சந்திரிக்கா
பூர்ண சந்திரிகா

அதுமட்டுமல்லாது பயிற்சி செவிலியர்களும் அவ்வப்போது எங்கள் நோயாளிகளை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக நாடகம், ஓவியம், கலை நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிப்பார்கள். இதில் சில நோயாளிகள் எவ்வளவு அழகாகப் பாடுவார்கள் தெரியுமா? அதைப் பார்ப்பதற்குகே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும்.

இம்மாதிரியான பயிற்சிகள் அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தக் கூடியவை. இதன் காரணமாக எதிர்மறை செயல்பாடுகளான யார் கிட்டேயும் பேசாமல் ஒதுங்கி இருப்பது, தனித்து இருப்பது போன்ற நடவடிக்கைகள் குறையும். அவர்களும் வழக்கமான அன்றாடப் பணிகளில் ஈடுபடுவார்கள்.

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால் இந்த நோயாளிகள் குணமடைந்தாலும் அவர்களை மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவர்கள் குடும்பத்தினர் விரும்புவதில்லை. நோயாளிகள் சிகிச்சைக்கு முன் அவர்கள் குடும்பத்தினரிடம் எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதையே நினைத்து, குடும்பத்தினர் பயப்படுகின்றனர்.

திரும்பவும் அவர்கள் மூர்க்கமாக நடந்து கொள்வார்களோ என்று அஞ்சுகின்றனர். இதற்குத் தீர்வு காணும் முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். நோயாளிகள் குணமாகிவிட்டால், அவர்களது சொந்த ஊரில் உள்ள காப்பகங்களுக்கு அனுப்பி விடுவோம். ஒரு கட்டத்தில் அவர்கள் குடும்பத்தினர் மனம் மாறி அவர்கள் ஏற்றுக் கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது அல்லவா? சிலர் சிகிச்சை முடிந்த பிறகும், நாங்கள் இங்கேயே இருந்து விடுகிறோம் என்று வீட்டுக்குச் செல்ல மறுத்து விடுவார்கள்.

குடும்பத்தினரைத் தவிர்த்து நோயாளிகளுக்காக உதவ வெளியுலகில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் தரும் நம்பிக்கைதான் இவர்களைக் குணமாக்கிக் கொண்டிருக்கிறது".

இவ்வாறு பூர்ண சந்திரிகா தெரிவித்தார்.

மனநோய் என்பது மனிதர்களுக்கு ஏற்படும் நோய்களைப் போன்று ஒரு காலகட்டத்தில் கடக்கக்கூடியதே. இந்த எண்ணம் சமூகத்தில் பரவலாகச் சென்றடைய வேண்டும். அன்பிற்காக ஏங்கும் அந்த முகங்களின் கடந்த காலத்தை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி, தொடர்ந்து அவர்களைக் காயப்படுத்தும் வெளியுலக மனிதர்கள் மாறுவார்கள் எனக் காத்திருக்கும் அவர்களின் நம்பிக்கை வெகு விரைவில் நனவாகட்டும்.

தொடர்புக்கு : indumathy.g@hindutamil.co.in

தவறவிடாதீர்!கீழ்பாக்கம்கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைமனநல சிகிச்சைதோட்ட கலைநோயாளிகளுக்கான மறுவாழ்வுநோயாளிகளுக்கு சிகிச்சைபூர்ண சந்திரிகா

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x