Published : 09 Feb 2020 16:34 pm

Updated : 09 Feb 2020 16:34 pm

 

Published : 09 Feb 2020 04:34 PM
Last Updated : 09 Feb 2020 04:34 PM

அன்புக்குப் பஞ்சமில்லை - 12 - ’டேக் இட் ஈஸி’

anbukku-panjamillai-12


வி.ராம்ஜி


எல்லோருக்கும் எல்லாமும் எல்லாத் தருணங்களிலும் கிடைத்துவிடுவதில்லை. மிகப்பெரிய பணக்காரனாக, பரம்பரைச் சொத்துகள் எக்கச்சக்கம் கொண்டவனாக இருப்பார்கள். ஆனால், பெற்றோரிடம் இருந்து பாசமே கிடைக்காமல் இருக்கும். எப்போதும் சித்தப்பன் பெரியப்பன் சண்டையால், வீடு கத்திக் கூப்பாடு போட்டுக்கொண்டும், சாபங்கள் கொடுத்துக்கொண்டுமாகவே இருக்கும். ஏதோ ஒருவிஷயம் ஏதோவொரு தருணத்தில் கிடைக்காமல் போய், தவித்து மருகிக் கலங்குபவர்களால் நிறைந்திருக்கிற உலகம்தான் இது!


வருத்தமும் துக்கமும் யாருக்குத்தான் இல்லை. அவமானமும் வலியும் யாருக்குத்தான் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் அவமானத்தில் இருந்தும் வலியில் இருந்தும் வெளியில் வருவதும் வாழ்வதும்தான் முதல் வெற்றி. அளப்பரிய சந்தோஷம். ஆழமான அமைதி. அமைதியான ஆனந்தம்.


என் நண்பர் ஒருவர், ஏழு வயதிலேயே அப்பாவை இழந்துவிட்டார். அம்மாதான் எல்லாமே அவருக்கு. ஆனால் 12 வது வயதில், அம்மாவுக்கு இதயத்தில் சிக்கல். பிறகு, அவர் பத்தாம் வகுப்பு பரீட்சை எழுதச் சென்ற வேளையில், மாரடைப்பில் மரணம் அடைந்தார். பரிட்சை முடிந்த கையோடு, அவரை அழைத்து வந்தார்கள். இறந்து கிடக்கிற அம்மாவைக் கண்டதும் கதறிவிட்டார் அவர். மாலையில் ஈமச்சடங்குகள். இரவில் தூக்கமில்லை. விடிந்தால் பத்தாம் வகுப்பின் அடுத்த தேர்வு. ‘பரிட்சையை அப்புறம் பாத்துக்கலாம்டா’ என்று சித்தப்பா, அப்பாவின் தம்பி சொல்ல, ‘நான் நல்லாப் படிச்சிருக்கேன். நான் தான் நல்லாப் படிப்பேனே. எக்ஸாம் எழுதறேன் சித்தப்பா’ என்று சொல்லி அழ, ஒருவழியாய் பரிட்சை முழுவதும் எழுதி, பள்ளியில் இரண்டாவது மாணவனாக தேர்ச்சி பெற்றார்.


வாடகை வீட்டை காலி செய்து, சித்தப்பா தன் வீட்டுக்கு கூட்டி வந்தார்.


சித்தியின் வீட்டில் கூட இருந்துவிடலாம். அதாவது அம்மாவின் தங்கை வீட்டில் கூட இருந்துவிடலாம். ஆனால் சித்தப்பா வீட்டில், அதாவது அப்பாவின் தம்பி வீட்டில் இருப்பது அவ்வளவு சுலபமில்லை.


‘’கவர்ன்மெண்ட் ஸ்கூல்லதான் படிப்பு. பெருசா செலவு இல்ல. ஆனா, வீட்ல ஒரு நபரா அதிகமாகியிருக்கேன்னு சித்திக்கு கோபம். சாயந்திரம் ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வந்து, படிக்க உக்கார்ந்தா, ‘அப்புறம் படிக்கலாம், கடைக்கு போயிட்டு வா’ன்னு அனுப்புவாங்க. ‘நைட்டுக்கு தோசைதான் டிபனு. ஆனா மாவு கம்மியா இருக்கு. காலைல வைச்ச சாதம் மிஞ்சிக்கிடக்கு. அதைச் சாப்பிட்டுக்கோ. உங்க சித்தப்பா வந்து கேட்டாருன்னா, தோசை சாப்பிட்டதாச் சொல்லிரு. இல்லேன்னா, என்னை அடிக்கப் பாய்வாரு’ன்னு சித்தி சொல்லுவாங்க. ‘நாலுவீடு தள்ளி இருக்கிற மாடு வைச்சிருக்கிற சிவகாமி பையன், டென்த்தோட நின்னுட்டான். இப்போ ஏதோவொரு கம்பெனிக்கு வேலைக்குப் போறானாம்’ என்று சத்தமாகச் சொல்லுவாள்.


‘எங்க அண்ணன் பையன் நல்ல மார்க் எடுத்திருக்கான். உங்களுக்கு எங்கேடா போவுது புத்தி. இருபது முப்பதுன்னு மார்க் எடுத்துட்டு வந்து மானத்தை வாங்கறீங்களேடா’ன்னு சித்தப்பா சொல்லிட்டார்னா, ஒரு பத்து நாளைக்காவது என்னை திட்டிக்கிட்டே இருப்பாங்க சித்தி. ‘உன் யூனிபார்மை துவைக்க மறந்துட்டேம்பா’ன்னு சொல்லிருவாங்க.


பல்லைக் கடிச்சிக்கிட்டு அத்தனையும் தாங்கிக்கிட்டேன். வேற என்ன செய்யமுடியும்? அப்பா இல்ல. அம்மாவும் போயாச்சு. சித்தப்பாவையும் சித்தியையும்தான் அண்டிக்கிடக்கணும். படிக்கிற வரைக்கும் அவங்க தயவு நமக்குத் தேவை. எல்லாத்தையும் பொறுத்துக்கிட்டேன்.


காலேஜ் முடிச்சு வேலை கிடைச்சிச்சு. சித்தப்பாவும் ரிடையர்டு ஆகற ஸ்டேஜ்ல இருந்தாரு. அதுக்குள்ளே ஒரு வீடு வாங்கணும்னு அவருக்கு ஒரு ஆசை. லோன் போட்டு, மூணு லட்சரூபாயை சித்தி கையில கொடுத்தேன். ‘என்னால முடிஞ்சது சித்தி’ன்னு சொன்னேன். பொசுக்குன்னு சித்தி என் கால்ல விழுந்துருச்சு. ‘உன்னை எவ்ளோ நாளு, எத்தினி தடவை கரிச்சுக்கொட்டிருப்பேன். அதை உன் சித்தப்பாகிட்ட கூட சொல்லாம, என்னைக் காப்பாத்தினியே’ன்னு அழுதாங்க.

சித்தப்பா பசங்களுக்கு படிப்பு வரல. நல்ல வேலைக்கும் போகமுடியல. ‘பிடிக்கிற எல்லா மண்ணுமா புள்ளையார் ஆயிடுது. அப்படி பிள்ளையார் ஆகணும்னு விதி இருக்கணும். எங்க பெரியவர் புள்ளைக்கு விதி இருந்துச்சு. நாங்க அடைக்கலம் கொடுக்காட்டியும் கூட, அந்தப் புள்ள பெரியாளாகியிருக்கும்’னு பெருமையா சொல்லிட்டிருக்காங்க, இன்னிக்கு வரைக்கும்!


அனாதையா நின்ன எனக்கு சித்தப்பாதான் பிடிகொம்பு. திட்டினாலும் சித்திதான் அவங்க கையால சாப்பாடு போட்டாங்க. அதை எப்படி மறக்கமுடியும். ஒருவேளை... அவங்க ஆதரிக்கலேன்னா, பசி என்னை வேற ரூட்டுக்கு மாத்திவிட்ருக்குமோ என்னவோ?’’ என்று அந்த நண்பர், நெகிழ்ந்து சொன்னார். தருணங்களை, தருணங்களாகவே எடுத்துக்கொள்கிற புத்தி விசாலமானது. அதுதான் ‘டேக் இட் ஈஸி’ மனசு.
என் நண்பனின் சகோதரி மகள். காதல் திருமணம். அந்தப் பையன் மகா முசுடு. எதற்கெடுத்தாலும் கோபத்தைக் கொட்டுவான். சுள்ளென்று மனசு வலிக்கச் சொல்லிவிடுவான். எந்த நல்லதுகெட்டதுக்கும் பிறந்தவீட்டுக்கு அனுப்பமாட்டான்.


அந்தப் பெண்ணை இரண்டு வருடங்களுக்கு முன்பு, ஒரு கல்யாண வீட்டில் சந்தித்தேன். ‘உம் புருஷன் ஏம்மா இப்படி இருக்கான்?’ என்று கேட்டேன். ‘இப்படி இருந்தா என்னங்க தப்பு. அது அவர் சுபாவம். அவரோட இயல்பு. அப்படியே அவர் இருந்துட்டுப் போகட்டுமே’ என்றார். அதிர்ந்து போய் அவரைப் பார்த்தேன்.


‘’ஆமாங்க. சின்ன வயசுலேருந்தே யாருமே இல்லாம வளர்ந்தவர் அவரு. தெரிஞ்சவங்க குடும்பத்துலதான் வளர்ந்தாரு. பத்துக்காசு செலவு பண்றதுக்கு பத்துநாளு யோசிப்பாரு. யார்கிட்ட என்ன பேசணும் எப்படிப் பேசணும்னு எதுவுமே தெரியாதுதான். ஆனா எல்லார்கிட்டயும் உண்மையா இருப்பார். நேர்மையா இருப்பார். ‘என்னை உண்மையா லவ் பண்றியா இல்லியா? சத்தியம் பண்ணு’ன்னு நாப்பது தடவை கேட்டிருக்கேன். ஆனா, அவர் என்னை சத்தியம் பண்ணச் சொன்னதே இல்ல. ‘நீ ஏன் சத்தியம் பண்ணச் சொல்லவே இல்ல’ன்னு கேட்டேன். ‘உனக்கு எம் மேல நம்பிக்கை இல்ல. சத்தியம் பண்ணச் சொல்றே. எனக்கு உம் மேல நம்பிக்கை இருக்கு. அதனால சத்தியம் பண்ணச் சொல்லல’ன்னு சொன்ன புருஷன், எனக்கு தெய்வம் மாதிரிங்க!


முசுடுதான். ஆனா எல்லாரையும் நேசிப்பாரு. சள்ளுபுள்ளுன்னு பேசிருவாருதான். ஆனா, அடுத்தவங்களுக்கு ஒண்ணுன்னா முத ஆளா ஓடிவந்து நிப்பாரு. நைட் 12 மணிக்கு கேக் வாங்கிட்டு வந்து, பிறந்தநாள் கொண்டாட வைக்கிறது பெரிய விஷயமில்ல. புது டிரஸ், வீட்டை டெகரேட் பண்றதுன்னு மனுஷன் அவ்வளவு மெனக்கெடுவாரு. கோபமோ சந்தோஷமோ எதுவா இருந்தாலும் கொஞ்சம் ஓவராக் காட்டுவார். அவ்ளோதான்.
அவரைப் புரியாதவங்க முசுடு, முன்கோபின்னெல்லாம் சொல்றாங்க. நான் புரிஞ்சிக்கிட்டேன்... அது அவரோட இயல்புன்னு சொல்றேன். நல்ல புருஷன் கிடைக்கறதுதான் இந்த ஒலகத்துலயே கஷ்டமான விஷயம். அப்படி ஒருத்தன் புருஷனாக் கிடைச்சிட்டா, அதைவிட பெருமை ஒரு பொம்பளைக்கு வேற எதுவுமே இல்ல’’ என்று சொல்லும்போதே குரல் உடைந்து அழுதுவிட்டார் அந்தப் பெண்.


வாழ்வில், எத்தனையெத்தனை மனிதர்கள். எப்படிப்பட்ட குணாதிசயங்கள். எவ்வளவு விதமான சோகங்கள். ஆனால் அத்தனையும் கடந்து, முகமும் மனமும் சிரிக்க வாழ்கிறவர்கள், வாழத் தெரிந்தவர்கள். வாழ்ந்துகொண்டிருப்பார்கள்.


கடந்த வாரத்தில், பெரியகோயில் கும்பாபிஷேக விழா கவரேஜுக்காக தஞ்சாவூருக்குச் சென்றிருந்தேன்.


அங்கே தங்குமிடத்திலிருந்து பெரியகோயிலுக்கு ஆட்டோவில் பயணித்தேன். டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர் விவரங்கள் சொல்லச்சொல்ல, அதிர்ந்து வியந்து பிரமித்துப் போனேன்.


அவர் டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருப்பதே கொஞ்சம் வினோதமாகத்தான் இருந்தது. இருந்தாலும் பட்டென்று கேட்கமுடியாதே.
ஆனால் அந்த டிரைவர் சொல்லத் தொடங்கினார்...


’’சார், எங்க அப்பா விவசாயம்தான் சார். ஆனா நான் நல்லாப் படிக்கறதைப் பாத்துட்டு, ‘இன்னும் படிடா இன்னும் படிடா’ன்னு சொல்லி செலவு பண்ணினார். ஒருவருஷம் மழை தப்பினா, மூணு வருஷத்துக்கு எந்திரிக்கமுடியாது சார். தஞ்சாவூர்ல வல்லம் பக்கம் எங்க ஊரு. அப்பா அப்படி இப்படின்னு என்னைப் படிக்க வைச்சாரு. ஆனா நம்ம வாழ்க்கை இப்படி ஆகிப்போச்சு சார்’ என்று காலை நீட்டிக் காட்டினார். முழங்காலில் இருந்து பாதம் வரைக்கும் தழும்பு.


காலேஜ் போயிட்டு பைக்ல வந்துட்டிருக்கும் போது, எதிர்ல வந்த லாரி ஒண்ணு வேகமா வந்துச்சு. அதான் தெரியும் எனக்கு. அப்புறம் என்ன நடந்துச்சு ஏது நடந்துச்சு... எதுவும் தெரியாது. நாலாம் நாள்தான் கண்ணு முழிச்சுப் பாத்தேன். என் வலதுகாலை அசைக்கவே முடியல. எலும்பு உடைஞ்சிருச்சுன்னாங்க. பிளேட் வைக்கணும்னாங்க. பிளேட், போல்ட்டுன்னு என்னெல்லாமோ வைச்சு, நடக்கவைச்சாங்க. ஆனா, அத்தோட என் நடையும் மாறுச்சு; வாழ்க்கையும் மாறுச்சு.


வீட்டையே எனக்காக மாத்துனாரு அப்பா. வெஸ்டர்ன் டாய்லெட், படிகள் இல்லாம வாசல்னு செஞ்சாரு. இதனால என் படிப்பு போச்சு. பாதிலயே நின்னுருச்சு. அப்ப நான் என்ன படிச்சிட்டிருந்தேன் தெரியுமா சார்...’’ என்று சொல்லி நிறுத்தியவர், திரும்பிப்பார்த்து சிரித்துக்கொண்டே சொன்னார்... ‘’எம்.பி.ஏ.’’என்று!


அப்புறம்தான் ஆட்டோ ஓட்றதுன்னு முடிவு பண்ணினேன். எட்டு வருஷமா ஓட்டிக்கிட்டிருக்கேன் சார். ஏதோ வாழ்க்கை ஓடிக்கிட்டிருக்கு. ஒருகுறையுமில்லாம போயிட்டிருக்கு’’ என்றவரிடம் ’கல்யாணம்...’ என்று கேட்டேன்.


‘’கண்டிப்பாச் சொல்லியாகணும் சார். சொந்தத்துல பொண்ணு இல்ல. ஒருகட்டத்துல வயசாகிட்டிருக்கேன்னு அப்பாவும் அம்மாவும் பொண்ணு தேடினாங்க. நிறைய பேரு, கால் இப்படி இருக்கேன்னு ஒதுக்கிட்டாங்க. அந்த சமயத்துலதான் இந்தப் பொண்ணு ஓகே சொன்னாங்க.
சும்மா சொல்லக்கூடாது சார்... என்னை எங்க அப்பாவும் அம்மாவும் எப்படிப் பாத்துக்கிட்டாங்களோ அதுமாதிரி என் மனைவி என்னைப் பாத்துக்கறா. என்னை மட்டுமில்ல, என் மொத்த குடும்பத்தையே அப்படித்தான் தாங்குதாங்குன்னு தாங்குறா.


ஒரு கதவு சாத்துனா ஒரு கதவு தொறக்கும்னு சொல்லுவாங்க. எனக்கு கால் இப்படி ஆகிட்டாலும் மனைவி எனக்கு பக்கபலமா இருக்கா. அதான் சார் கடவுள் கொடுத்த வரம். ஒருநாள் கூட முகம் சுளிச்சதே இல்ல. கணவன் இப்படி இருக்கானேன்னு முகம் சுருங்கினதே இல்ல.


‘கொஞ்சம் கூட வருத்தமே இல்லியா உனக்கு?’ன்னு ஒருநாள் கேட்டேன். அதுக்கு என் மனைவி, ‘கல்யாணமாகி, இம்புட்டு வருசமாச்சு. பையன் ஒண்ணு, பொண்ணு ஒண்ணுன்னு ரெண்டு பெத்து இறக்கியாச்சு. அதுங்களும் ஸ்கூலுக்குப் போயிக்கிட்டிருக்கு. இத்தனை வருஷத்துக்குப் பொறவு, இப்படியொரு கேள்வி எதுக்குய்யா?’ன்னு கேட்டா.


அதுமட்டுமில்ல... ‘அதுசரி... அப்படியேதும் வருத்தமா இருக்கற மாதிரி, இந்த மூஞ்சியைப் பாத்தா தெரியுதா உனக்கு?’ன்னு சிரிச்சிக்கிட்டே கேட்டு என் மூக்கை உடைச்சா. அவ என் மனைவி இல்ல சார்... எங்க வல்லத்துல குடியிருக்கிற, கோயில்ல இருக்கிற ஏகெளரியம்மன், புன்னைநல்லூர்ல இருக்கிற மாரியம்மன் சார்’’ என சொல்லிவிட்டுச் சிரித்தார்.


மனித வாழ்க்கையில், மனிதத்துடன் இருப்பவர்களை நாம் தெய்வமாகத்தான் பார்க்கிறோம். இப்படியான மனித தெய்வங்கள் இருக்கிற இந்தப் பூவுலகில்... அன்புக்கு எப்போதுமே பஞ்சமில்லை!


- வளரும்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அன்புக்குப் பஞ்சமில்லை - 12 - ’டேக் இட் ஈஸி’வாழ்வியல் தொடர்வாழ்க்கைத் தொடர்வி.ராம்ஜிஅன்புக்குப் பஞ்சமில்லை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author