Published : 19 Oct 2019 11:02 am

Updated : 19 Oct 2019 11:39 am

 

Published : 19 Oct 2019 11:02 AM
Last Updated : 19 Oct 2019 11:39 AM

இடஒதுக்கீட்டை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணம் காந்திதான்: 'முகம்' விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேச்சு

jeyamohan-speech

மதுரை

"அமெரிக்காவில் கருப்பினத்தவருக்கு இப்போதும் கூட இடஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளை வழங்க முடியவில்லை. ஆனால், விடுதலை பெற்றவுடனேயே இடஒதுக்கீட்டை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ளக் காரணம் காந்திதான்" என்று 'முகம்' விருது வழங்கும் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசினார்.

'சுமையற்ற கற்றல்; சுவர்களற்ற கற்றல்' என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வரும் குக்கூ காட்டுப்பள்ளி சார்பில், 'முகம்' விருது வழங்கும் விழா திண்டுக்கல் காந்தி கிராம பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

வாடிப்பட்டியைச் சேர்ந்த மறைந்த காந்தியவாதியும், பொட்டுலுபட்டியில் இருந்த தன் வீட்டையே இடித்து காந்திஜி ஆரம்பப்பள்ளியை நிறுவியவருமான பொன்னுத்தாய் அம்மாவுக்கு வழங்கப்பட்ட இந்த விருதை அவரது சார்பில் அவரது மகனும், முன்னாள் தலைமை ஆசிரியருமான நாகேஸ்வரன் பெற்றுக்கொண்டார். விருதை புகழ்பெற்ற காந்தியவாதியான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் வழங்கினார். விழாவில் 'கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் வாழ்க்கை வரலாறு', 'இன்றைய காந்திகள்' போன்ற நூல்கள் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் பேசுகையில், "நாட்டில் நிலமற்ற ஏழைகள் வாழ்வாதாரமின்றி கொத்தடிமையாக நடத்தப்பட்ட காலத்தில், பெரு நில உரிமையாளர்களிடம் இருந்து தானமாக நிலத்தைப் பெற்று அதை இல்லாதவர்களுக்குப் பிரித்து வழங்குவதற்காக பூமிதான இயக்கத்தை வினோபா தொடங்கி வைத்தார்.

அந்தக் காலத்தில் ஆசிரியர் பயிற்சி பெற்றிருந்த நான், அவரது கொள்கையால் ஈர்க்கப்பட்டு எனது கல்விச் சான்றிதழ்களைக் குப்பையில் போட்டுவிட்டு, அவரது இயக்கத்தில் சேர்ந்தேன். அன்றைய இந்தியாவையும் இன்றைய இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பெரிதாக மாற்றமில்லை.

இன்னும் சொல்லப்போனால் இப்போது சொத்து குவிப்பது அதிகமாகிக்கொண்டே போகிறது. நிலமற்றவர்களுக்கும் அதிகரிக்கிறார்கள். இந்த நாட்டில் ஒருவன் பிறந்தான், ஏதோ வாழ்ந்தான், நிலமே இல்லாமல் இறந்தான் என்பதை இன்னும் எத்தனை காலத்திற்குத் தான் சகித்துக் கொண்டிருப்பது? செய் அல்லது செத்து மடி என்று காந்தியார் முழங்கினாரே, அந்த முழக்கத்தை ஏழைகளுக்கு இடம் கிடைக்கிற விஷயத்திலும் முன்னெடுக்க வேண்டும்" என்று பேசினார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பேசுகையில், "அமெரிக்காவில் இன்றும் கூட கருப்பின மக்களில் பெரும்பான்மையானோர் வீடற்றவர்களாக, குடும்ப உறவுகளற்றவர்களாக இருக்கிறார்கள். எல்லா மனிதர்களும் பிறப்பால் சரிநிகர் சமானமானவர்கள் என்று உலகிலேயே முதன் முதலில் அமெரிக்காவின் அரசியல் சாசனத்தை எழுதிய ஜெபர்சன் கூட, தன் வீட்டிலும், தோட்டத்திலும் நூற்றுக்கணக்கான கருப்பினத்தவர்களை அடிமைகளாக வைத்திருந்திருக்கிறார்.

மனிதர்கள் அனைவரும் சமம் என்றொரு அரசியல் சாசனத்தை எழுதியவருக்கே, கருப்பினத்தவர்களும் மனிதர்கள் தான் என்று தோன்றவில்லை. இன்றுவரையில் அவர்களுக்கு அமெரிக்காவில் இடஒதுக்கீட்டைக் கொண்டுவர முடியவில்லை.

அவர்களுக்கென மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை ஒபாமா கொண்டுவர நான்காண்டுகளாக முயன்றும், வெள்ளையர்கள் அதை எதிர்த்து முடக்கினார்கள். ஆனால், அமெரிக்காவைவிட பல ஆண்டுகள் பின்தங்கியிருந்த இந்தியா எப்படி, விடுதலை பெற்றவுடனே சமத்துவத்தை ஒரு அடிப்படைக் கொள்கையாக ஏற்றுக்கொண்டது? 18 சதம் பேருக்கு இடஒதுக்கீட்டு வழங்கியதை மற்ற 92 சதம் பேர் ஏற்றுக்கொண்டார்கள்? எப்படி இங்கே பரியேறும் பெருமாளும், அசுரன் போன்ற படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெறுகிறது?

சின்னச் சின்ன அநியாயங்களைச் செய்தாலும் எல்லா மனிதர்களும் சமம் என்ற நியாயம் நமக்குப் புரிகிறதே அதற்கு என்ன காரணம்? அந்த நியாய உணர்வு எப்படி இங்கே உருவானது? அந்த ஏற்பை உருவாக்கியதற்குப் பெயர்தான் காந்தியம். அது ஒரு புரட்சி. சிலர் காந்தியம் மிக மெதுவாகத்தான் வேலை செய்யும் என்கிறார்கள்.

1915-ல் இந்தியா வந்த காந்தி வெறும் 32 ஆண்டுகளில் இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத்தந்தார்.

சமூக விடுதலைக்கும் மக்களைத் தயார்படுத்திவிட்டுச் சென்றார். காந்தியத்தைவிட மிக வேகமாக வென்ற ஒரு ஆயுதப்போராட்டத்தின் பெயரைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இங்கே ஒரு காந்தி இல்லை. ஒவ்வொரு ஊரிலும் ஒரு காந்தியைப்போல ஒருவராவது இருக்கிறார்கள்.

அந்த காந்தியர்களில் பொன்னுத்தாய்க்கு, இன்னொரு காந்தியரான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் விருது வழங்குகிற நிகழ்வில் பங்கேற்றதற்காக மகிழ்கிறேன்"

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தமிழகம் முழுவதுதிலும் இருந்து காந்தியர்களும், கல்வியாளர்களும் கலந்துகொண்டனர். குக்கு பள்ளியைச் சேர்ந்த சிவராஜ், ஸ்டாலின் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

Jeyamohan speechஇடஒதுக்கீடுஜெயமோகன்முகம் விருதுஎழுத்தாளர் ஜெயமோகன்காந்தி

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author