Published : 16 Jul 2015 10:10 AM
Last Updated : 16 Jul 2015 10:10 AM

இணையகளம்: பேஸ்புக்கில் கொண்டாடப்படும் காமராஜர்

ஆர். முத்துக்குமார்

அன்புமணி தொடர்பான நாளிதழ் விளம்பரங்கள், சுவரொட்டிகளில் மஞ்சள், பச்சை என்ற இரண்டு நிறங்கள் பிரதானமாக இருப்பது ஏன் என்று இமயம் டிவி நண்பர் சுஃபியான் நேரலையில் சட்டென்று கேட்டுவிட்டார். என்றாலும், பதில் சரளமாக வந்துவிட்டது. மஞ்சள் என்பது வன்னியர் சங்கக் கொடியின் நிறம். பச்சை என்பது பசுமைத்தாயகத்தின் நிறம். அதுதான் காரணமாக இருக்கலாம். இந்த நிறங்களில் இன்னொரு சுவாரஸ்யமும் இருக்கிறது. மஞ்சள் கருணாநிதிக்குப் பிடித்த நிறம். பச்சை ஜெயலலிதாவுக்குப் பிடித்த நிறம் என்றேன்.

சி.பி.செந்தில்குமார்

ஷங்கர் ராஜமவுலியைப் பாராட்றாரு. விஷால் விஜயைப் பாராட்றாரு. சிம்பு தனுஷைப் பாராட்றாரு. ஆளாளுக்கு நடிகர் திலகமா மாறினா இந்தச் சமூகம் எப்படித்தான் தாங்கும்?

ஷாஜஹான்

பேஸ்புக்கில் காமராஜர் கொண்டாடப்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்தல் நேரத்தில், “ஆட்சியிலிருந்தப்ப செஞ்ச நம்ம சாதனைகளைச் சொல்ல வேணாமா” என்று கேட்டபோது, “அதை எதுக்குச் சொல்லணும்கிறேன், மக்களுக்குத் தெரியாதா?” என்று கேட்ட பெருந்தகை. அவரையே தோற்கடித்தவர்களின் வாரிசுகள்தான் நாம்.

கடந்த மாதம் தமிழகப் பயணத்தின்போது, திமுக அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா வீட்டுக்குப் போனேன். பக்கத்தில்தான் இருந்தது காமராஜர் நினைவகம். (சென்னை தி.நகரில், திருமலைப்பிள்ளை சாலையில் அமைந்துள்ளது.) சென்னையில் வசித்த காலத்தில் பார்க்காமல் விட்டதை பார்த்தேன். நாங்கள் போய் சுற்றிப்பார்த்த ஒரு மணிநேரத்தில் யாருமே வரவில்லை. ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் வாயிலில் இருந்தார். யாரோ ஒருவர் நினைவக நிர்வாகியாக இருக்கலாம் - உள்ளறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தார்.

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லக் கேட்க வியப்பாக இருந்தது. ஆனானப்பட்ட அருங்காட்சியகங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கும்போது எளிய மனிதர் காமராஜரின் நினைவகத்தில் புகைப்படம் எடுப்பதால் என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரியவில்லை. (அதுக்காக நாம விட்டுடப் போறோமா என்ன...)

ஓர் அறையில் முழுக்க புத்தகங்கள். உள்ளே அனுமதி இல்லை. கதவு வழியாகப் பார்க்க மட்டுமே முடியும். சுவர் முழுக்கப் புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவுகள். மாடி உள்பட இதர அறைகளில் காமராஜர் பயன்படுத்திய பொருட்கள், அவருக்குப் பரிசாகக் கிடைத்த பொருட்கள். அவர் பேனாவே வைத்துக்கொள்ள மாட்டார் என்று எங்கோ படித்தேன். ஆனால் எத்தனை பேனாக்கள்... பேனா சேகரிப்பது அவருடைய பொழுதுபோக்காக இருந்திருக்கலாம்.

அவருடைய ஆடைகளை, ஆடைகள் வைத்திருந்த சாதாரண பெட்டியை, படுக்கையை, நாற்காலிகளைப் பற்றி நிறைய சொல்ல வேண்டும். வாய்ப்பு கிடைக்கும்போது போய்ப் பாருங்கள். இப்படியொரு எளிமையான தலைவரும் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளவாவது முடியும்.

அ.ப. இராசா

உத்தரப் பிரதேசம் மாநிலம், பர்னாவாவில் இறங்கும்போது, மணி, ஆறரை. நாங்கள் தேடிப் போன குகை இருந்தது. வனவாசத்தின்போது பாண்டவர்கள் தப்பித்துச் செல்வதற்கு உதவியதாக நம்பப்படும் குகை. குகையை நெருங்கும்போதே, ஆறேழு சிறுவர்கள் எதையோ பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில், யாரும் வராத இடத்தில் இவர்கள் என்ன செய்கின்றனர் என யோசித்துக்கொண்டே நடந்தோம். ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனே முன் வந்து, உதவுவதாகச் சொன்னான். எங்களுக்கு உள்ளூர பயம் இருந்தது. ஆனால், எதையும் கண்டுகொள்ளாமல் இரண்டு பக்கங்களிலும் இருந்த குகையை அவன் சுற்றிக் காட்டினான். நெடுநாள் இதைப் பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த என் தோழிக்கு, அன்று பெரு மகிழ்ச்சி. அவனுக்கு, 500 ரூபாய் கொடுத்தாள். அவன் வாங்க மறுத்தான். வலுக்கட்டாயமாகப் பணத்தைத் திணித்தாள். “எனக்கு நேரமாச்சு; நான் போகணும்” என்றான். நாங்கள் புருவங்களை உயர்த்துவதற்குள், "இன்னக்கி நான் நோன்பு வச்சிருக்கேன்; தொழுகைக்கு நேரமாச்சு" என்றான். முஸ்லிம் சிறுவன், பாண்டவர்கள் குறித்தும், அவர்கள் தப்பித்துப் போனது பற்றியும் அறிந்திருந்ததும், அதற்கு அவனே முன் வந்து வழிகாட்டியதும் வியப்பாக இருந்தது. மீண்டும் மீரட்டுக்குச் செல்ல பேருந்து நிறுத்தம் வந்தோம். மீரட், முஸாஃபர் நகர் என்றாலே வகுப்புக் கலவரம்தான் நினைவுக்கு வரும். அப்போது வழிகாட்டிப் பலகையில் இருந்த வாசகம், கலவரங்கள் ஏற்படுவதில்லை. உருவாக்கப்படுவது என்பதை நினைவுபடுத்தியது. ‘இங்கிருந்து முஸாஃபர் நகர் 53 கி.மீ.’

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x