Last Updated : 10 Apr, 2015 05:47 PM

 

Published : 10 Apr 2015 05:47 PM
Last Updated : 10 Apr 2015 05:47 PM

என்றும் விளம்பர ஒளிவெள்ளத்தில் கருணாநிதி!

மீண்டும் சத்தமின்றி சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி.

வழக்கம் போலவே இந்த முறையும் அவரே வந்துதான் சர்ச்சையில் விழுந்திருக்கிறார். நடிகர் வடிவேலுவுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி என்றால், கருணாநிதிக்கு தொடர்ந்து சர்ச்சைகளை வலியப் போய் கிளப்புவதும், தானே சர்ச்சைகளின் சூத்திரதாரியாய் விளங்குவதும், பாமரனின் மொழியில் சொன்னால் அல்வா சாப்பிடுவதுப் போன்றது.

வைணவர்களின் முக்கிய ஆன்மிக குருவான ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை தான் கதையாக எழுதி, கலைஞர் தொலைகாட்சிக்கு தொடராக எடுக்கப் போவதாக சில நாட்களுக்கு முன்பு கருணாநிதி கொடுத்த பேட்டிதான் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

அடிப்படையில் நாத்திகரான கருணாநிதி, எவ்வாறு வைணவர்களின் ஆன்மீக குரு வின் வாழ்க்கையை கதையாக எழுதலாம், படமாக எடுக்கலாம் என்று பிராமண சங்கங்களின் ஒரு தரப்பிடமிருந்து கண்டனம் கிளம்பியிருக்கிறது. 'வாழ்நாள் முழுவதும், பிராமணர்களை துவேஷிப்பதை வாழ்க்கை நெறியாகக் கொண்ட ஒருவர், தன்னை நாத்திகரென்றே பிரகடனப் படுத்திக் கொண்ட ஒருவர் ராமானுஜரின் வாழ்க்கையை கதையாக எழுதுவதை, சின்னத்திரை படமாக எடுப்பதை நாம் புறக்கணிக்க வேண்டும்' என்று ஏற்கெனவே அறிக்கை வெளியியிட்டு விட்டார், பிராமண இளைஞர் சங்கத்தைச் சேர்ந்த கே.ராமசுப்பிரமணியன்.

வெளிப்படையாக கருணாநிதியின் தொடருக்கு இதுவரை எவரும் தடை கேட்கவில்லை, வரும் நாட்களில் இந்த கோரிக்கை வரலாம். மற்றோர் புறம், நாத்திகரான கலைஞர், ராமானுஜரின் தொடரை எழுதுவது சரியல்ல என்றே ஒரு தரப்பு திராவிட இயக்கச் சிந்தனையாளர்களிடம் கருத்து நிலவுகிறது.

திராவிட இயக்க வரலாற்று அறிஞர்களில் முக்கியமானவரான க.திருநாவுக்கரசு இது தொடர்பாக கருணாநிதிக்கே தனது ஆட்சேபனையைத் தெரிவித்து கடிதம் எழுதி விட்டார். மார்க்சிய சிந்தனையாளரும், எழுத்தாளருமான அருணன், ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்றை கருணாநிதி யாரையோ திருப்திபடுத்தவே எழுதுகிறார் என்கிறார்.

இந்த சர்ச்சையைத் தான் கலைஞர் விரும்புகிறார். வாழ்த்தினாலும், வசவுகளையே தொடர்ந்து வீசினாலும், விவாதத்தின் மையப் புள்ளியாக என்றும் விளங்குவதே கலைஞரின் பேரவா. கிராமப்புறங்களில் ஒன்று சொல்லுவார்கள், தனக்குத் தானே அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கொள்ளும் ஒருவரைப் பற்றி; 'அவர் திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், துக்க வீட்டில் துக்கத்துக்கு காரணமாகவும் இருக்க விரும்புவாரென்று'.

திமுக தலைவரைப் போல தமிழக அரசியலில் விமர்சிக்கப்பட்டவர் வேறெவரும் இல்லையென்பது உண்மைதான். ஆனால் இதில் சரி பாதிக்கும் மேற்பட்ட சர்ச்சைகளுக்கு அவரே காரிய கர்த்தா என்பதுதான் உண்மை. சில வருடங்களுக்கு முன் இந்தக் கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட அனுபவம் சுவாரஸ்யமானது.

குமுதம் ரிப்போர்ட்டர் வார ஏட்டில் கலைஞரையும், குஷ்புவையும் இணைத்து வெளியிடப்பட்ட கட்டுரைக்காக திமுகவின் ஒவ்வொரு அணியினரும் அந்த அலுவலகம் முன்பாக ஒவ்வொரு நாளும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு குறிப்பிட்ட நாள் ஆர்பாட்டத்தில் ஈடுபடவிருந்த அணியின் தலைவருக்கு கருணாநிதியிடமிருந்து காலையிலேயே தொலைபேசி வந்தது. 'பார்த்து, ஆர்ப்பாட்டம் பண்ணுங்கள். நம்மைப் பற்றி எழுதுவதை நிறுத்தி விடப் போகிறார்கள்' என்பதுதான் அந்த தொலைபேசி தகவல். இதுதான் கருணாநிதி.

இதில் சரி, தவறு என்று ஏதும் இல்லை. இதில் வரும் விமர்சனங்களும் தன்னிலைப் படுத்தப் பட்டவைதான் (சப்ஜெக்டிவ்). 90 வயதை பூர்த்தி செய்து, வரும் ஜூனில் 91 வயதை தொடவிருக்கும் ஒருவர், அவர் மீது நமக்கு ஓராயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், பல விஷயங்களிலும் நாட்டம் செலுத்துவது ஆச்சரியமானதுதான்.

இந்த வயதிலும் புதியதாக ஒரு புத்தகத்தை, சின்னத் திரைக் காவியத்தை படைக்க முயலுவதென்பது, அசாத்திய ஆளுமையின் வெளிப்பாடுதான். இந்த 90 வயதிலும் கலைஞர் மு கருணாநிதி, விளம்பர ஒளி வெள்ளத்தில் நிற்கவே விரும்புகிறார் என்பது சப்ஜெக்டிவ்வாகவும் இருக்கலாம், அதை கடந்த உண்மையாகவும் இருக்கலாம்…

ஆனால் ராமானுஜரைப் பற்றி எழுத வந்து தானே இன்று கதாநாயகனாக, சர்ச்சை நாயகனாக நிற்கிறார் பாருங்கள், மு.கருணாநிதி… அதுதான் அவரது சூட்சுமம்..!

- ஆர்.மணி,பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x