Last Updated : 03 Apr, 2015 05:54 PM

 

Published : 03 Apr 2015 05:54 PM
Last Updated : 03 Apr 2015 05:54 PM

உங்களுக்குத் தெரியுமா உயிர்க் கொல்லி லாபி?

பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீப் காந்தி அற்புதமான தகவல் ஒன்றை உதிர்த்திருக்கிறார். 'புற்றுநோய் வருவதற்கு புகையிலைதான் காரணமென்று நிரூபிப்பதற்கு இந்தியாவில் எந்த ஆய்வும் நடத்தப்படவில்லை' என்பதுதான் அந்த அரிய தகவல்.

திலீப் காந்தியின் இந்த அசாத்தியக் கண்டுபிடிப்புக்கான காரணம் ஏப்ரல் 1-ம் தேதிதான். இந்த நாளில்தான் சிகரெட்டு பாகெட்டுகளின் மீதான அபாயகரமான படத்தை பாக்கெட் அளவில் 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற காலக்கெடு முடிகிறது.

திலீப் காந்தி ஒரு சாதாரணமான பாஜக எம்.பி.யாக இருந்தால் நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் இந்தக் கருத்தை எந்த பொறுப்பின் அடிப்படையில் அவர் சொன்னார் என்று பார்க்கும்போதுதான் நாம் அதிர்ச்சியில் உரைந்து போகிறோம். 'புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான துணைச் சட்டக் குழுவின் தலைவர் என்ற அதிகாரத்திலிருந்தே இக்கருத்தை அவர் கூறியிருக்கிறார்.

திலீப் காந்தியின் இக்கருத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது, குறிப்பாக புற்றுநோய்க்கு எதிராக தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து பல ஆண்டுகளாக போராடி வரும் மருத்துவர்களும், சுகாதார பணியாளர்களும் கோபத்தைத் தாண்டி வெறுப்புக்கே ஆளாகியுள்ளனர். திலிப் காந்தியின் இந்த முடிவால் சிகரெட் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை படத்தை 40 சதவீதத்தில் இருந்து 85 சதவீதமாக அதிகப்படுத்தும் முடிவு காலவரையின்றி தள்ளிப்போயுள்ளது.

இந்தியாவில் புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணமென்பதை நிரூபிக்க போதிய ஆராய்ச்சிகள் நடக்கவில்லை என்கிற திலீப் காந்தியின் கருத்து அப்பட்டமான அறியாமை மட்டுமல்ல, இது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதே மருத்துவ நிபுணர்களின் ஏகோபித்த கருத்தாகவும் உள்ளது. மேலும் புற்றுநோய்க்கு எதிரான யுத்தத்தில் தங்கள் வாழ்வையே அர்ப்பணித்து போராடி கொண்டிருப்பவர்களை இது சிறுமைபடுத்துகிறது என்கின்றனர் அவர்கள்.

'இது போன்ற கருத்துகள் மக்கள் மத்தியில் தவறான கருத்தை ஏற்படுத்தி விடுகின்றன. பல்லாண்டுகளாக நடத்தப்பட்டு கண்டறியப் பட்ட ஆராய்ச்சி முடிவுகளை இது போன்ற கருத்துகள் மதிப்பிழக்கச் செய்து வருகின்றன. புகையிலை தொழிலதிபர்களின் கருத்தை திலிப் காந்தி பிரதிபலிப்பது அபாயகரமானது' என்கிறார், புற்றுயோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிக்காக தன் வாழ்வையே அர்ப்பணித்து, 80 வயதை கடந்தும் மருத்துவ சேவையாற்றி வரும், அடையார் புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் வி.சாந்தா.

இந்த விவகாரத்தின் சூட்சுமமே இதுதான்...

ஆம்… இந்தியாவில் புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் தொழிலதிபர்கள் எவ்வாறு ஓர் அழுத்தம் தரும் குழுவாக, அதாவது 'லாபி'யாக செயற்படுகின்றனர் என்பதற்கு திலிப் காந்தியின் கருத்தே சரியான எடுத்துக்காட்டாகும். இதனைப் புரிந்து கொள்ள ஆண்டாண்டு காலமாகவே புகையிலை உற்பத்தியாளர்கள் எவ்வாறு விதவித மான விளம்பர யுக்திகளை கையாண்டு வந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளுவது அவசியமானதாகும்.



1940 மற்றும் 1950களில் வந்த திரைப்படங்களில், குறிப்பாக அன்றைய ஹிந்திப் படங்களில் வரும் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பார்கள். விளம்பர யுக்திகள் பெரியளவில் வளராத அந்தக் காலகட்டத்தில் அது மிகப் பெரிய பலனை சிகரெட் உற்பத்தியாளர்களுக்குத் தந்த்து. இன்னமும் மக்களிடம் பெரும் செல்வாக்குள்ள ஒரு ஹீரோ ஓரு காட்சியில் சிகரெட் பிடித்தால், அது சிகரெட் விற்பனையை பல ஆயிரங்களுக்கு கூட்டி விடுகிறதென்பது சந்தை நிலவரம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவெ தெரியும்.

உலக சுகாதார நிறுவனம் தொடர்ச்சியாக இது குறித்து எடுத்த முயற்சிகளின் பலனாகவே சினிமாவில் ஹீரோக்கள் சிகரெட் பிடிப்பதை முற்றிலும் ஒழிக்கும் காரியங்களில் பல நாடுகள் ஈடுபட்டன. இந்தியாவில் இன்று நாம் இதில் முற்றிலும் வெற்றியும் பெற்றுள்ளோம்.

ஆனால், புகையிலை லாபி என்பது வெட்ட வெட்ட தலை புதிது புதிதாக முளைக்கும் அசுரனைப் போன்றது (ஆங்கிலத்தில் இதனை ஹைட்ரா ஹெட்டட் மான்ஸ்டர் என்பார்கள்). கேன்சர் என்ற லத்தீன் சொல்லுக்கு லத்தீன் மொழியில் பொருள் நண்டு. நண்டு எப்படி மணலில் ஓரிடத்தில் உள்ளே மறைந்தால் மற்றோர் இடத்திலிருந்து வெளியே வருகிறதோ அது போல உடலில் ஒரு முறை புற்றுநோய் வந்தால் அது மீண்டும், ஒரு பாகத்தை குணப்படுத்தினாலும் மற்றோர் பாகத்தில் வரலாம் என்றே புற்றுநோய்க்கு கேன்சர் என பெயரிடப்பட்டது. அது போலவே, புற்றுநோய் வருவதற்கான முக்கிய காரணியாக விளங்கும் புகையிலை உற்பத்தியாளர்களும். நீங்கள் அவர்களை ஓரிடத்தில் களைந்து எறிந்தால் அவர்கள் வேறோர் ரூபத்தில், முன்னிலும் வலுவுடன் முளைத்து வருவார்கள். என்னே ஒரு முரண் நகை பாருங்கள்.

புதிய யுக்திகள்...

புதிய, புதிய விளம்பர யுக்திகளை வகுப்பதற்காகவே புகையிலை நிறுவனங்கள் - ஏனெனில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளுமே இன்றைக்கு புகையிலைக்கு எதிராக ஏதாவது ஒரு ரூபத்தில் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுக் கொண்டுதான் உள்ளன – புதிய ஆராய்ச்சிகளுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டுக் கொண்டுள்ளன.

இன்று உலகில் வளர்ந்த நாடுகளில் சிகரெட் மீதான மோகம் குறைய ஆரம்பித்துள்ளது. காரணம் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு வளர்ந்தோங்கி யிருப்பதுதான். அதனால் பகாசுர புகையிலை நிறுவனங்களின் கவனம் இந்தியா போன்ற வளரும் நாடுகள் பக்கம் திரும்பியிருக்கிறது.

பல கலை நிகழ்ச்சிகளுக்கு புகையிலை நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்வதுகூட இன்று இடர்பாடு மிக்கதாக மாறிக் கொண்டிருக்கிறது. காரணம் விழிப்புணர்வு கூடியிருப்பதுதான். இதன் காரணமாக பிரதானமாக சிகரெட் தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் சிறியளவில் தயாரிக்கும் மற்ற பொருட்களுக்கு விளம்பரம் செய்வதென்ற போர்வையில் சந்தையைத் தாக்குகின்றனர். ஆனால் அவர்களது பெயரை கேட்டாலே மக்களுக்கு சிகரெட் ஞாபகம்தான் வரும். இது ஒரு விளம்பர யுக்தி.

மற்றொரு தாக்குதல், கடந்த மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்களுக்கான, அவர்களது லாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூக நல காரியங்களுக்கு செலவிடுவதென்ற, கார்ப்பொரேட் சோஷியல் ரெஸ்பான்சிபிளிட்டி எனப்படும் சிஎஸஆர் திட்டத்தை பகாசுர சிகரெட் நிறுவனங்கள் கையில் எடுத்திருப்பது.

சிகரெட் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தடுக்க கோரி புகையிலை தடுப்புக்கான தமிழக மக்கள் அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. 'நாங்கள் போட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிகரெட் நிறுவனங்கள் என்ன மாதிரியான சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்பதை முடிவு செய்யுமாறு மத்திய சுகாதாரம் மற்றும் கார்ப்பரேட் அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டது. அதற்கான குழுவும் அமைக்க உத்தரவிடப்பட்டது.

தற்போது அக்குழு தனது வழிகாட்டு நெறிகளை உருவாக்கியிருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் பல சர்வதேச அமைப்புகள் சிகரெட் நிறுவனங்கள் சிஎஸ்ஆர் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாதென்றே வழிகாட்டு நெறிகளை உருவாக்கியுள்ளதால் நாங்கள் நீதிமன்றத்துக்கு போனோம். ஏனெனில் சிஎஸ்ஆர் மூலம் சிகரெட் நிறுவனங்களின் வியாபாரம் மறைமுகமாகப் பெருகி விடக்கூடாது என்பதே எங்கள் கோரிக்கை' என்கிறார் வழக்கின் மனுதாரான சிரில் அலெக்சாண்டர்.

புகையிலை லாபி எத்தகையது?

திலிப் காந்தியின் கருத்து நிராகரிக்கப் பட்டு சிகரெட் பாக்கெட்டின் மீதான மண்டை ஓட்டுப் புகைப்படம் 85 சதவீதமாக விரிந்திருந்தாலும் புகைப் பிடிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருக்குமா என்பது வேறு விவகாரம். உலகின் பல நாடுகளிலும் இது போன்ற அபாய எச்சரிக்கைகள் சிகரெட் பாக்கெட்டுகளில் உள்ளன. 2005-ம் ஆண்டில் புகையிலை பழக்கத்தை மட்டுபடுத்தும் ஐக்கிய நாடுகள் மன்ற தீர்மானத்தில் மையெழுத்திட்டுள்ள இந்தியா புகையிலை பழக்கத்தை ஊக்குவிக்கும் எந்த காரியத்திலும் ஈடுபட முடியாது. ஆனால் தற்போது ஏப்ரல் 1-ம் தேதி கெடுவை இந்தியா மீறியிருப்பது, ஐக்கிய நாடுகள் மன்றத்துக்கு எழுத்துபூர்வமாக கொடுத்த வாக்குறுதியை கேலிக்கூத்தாக்கிய செயலாகவே சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படுகிறது.

இதில் வேடிக்கையான மற்றோர் விஷயம்... இந்த ஏப்ரல் 1-ம் தேதி காலக்கெடுவை உருவாக்கியதே 2014 அக்டோபரில் பாஜகவின் அப்போதய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷவர்தன்தான். 'இதன் காரணமாகவே ஹர்ஷ்வர்தன் மாற்றப்பட்டு நட்டா சுகாதாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். புகையிலை லாபி எந்தளவு சக்தி வாய்ந்த்து என்பதை இதிலிருந்தே புரிந்துக் கொள்ளலாம்' என்கிறார் சிரில் அலெக்சாண்டர்.

இதில் இன்னும் முக்கியமானது, இந்திய அரசில் இருக்கும் முரண்பாடான சில விஷயங்கள். 1975-ம் ஆண்டு புகையிலை மேம்பாட்டு வாரியம் ஒன்றை இந்திய அரசு உருவாக்கியது. இதன் நோக்கம் புகையிலை விவசாயிகளின் நலனை மேம்படுத்துவது மற்றும் புகையிலை தொழிலின் வளர்ச்சிக்கான காரியங்களை செய்வதாகும். 2005-ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தில் இந்தியா மையெழுத்திட்டதின்படி பார்த்தால் புகையிலை வாரியத்தை இந்திய அரசு கலைத்திருக்க வேண்டும். ஆனால் புகையிலை வாரியம் இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் உள்ளது. மற்றொன்று இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான அரசுக்குச் சொந்தமான எல்ஐசி புகையிலை வாரியத்தில் சில ஆயிரம் கோடிகளுக்கு முதலீடு செய்திருப்பது.

குழி தோண்டி புதைக்கப்பட்ட விதிகள்

இது தவிர அரசியல் கட்சிகளுக்கு புகையிலை நிறுவனங்கள் தாராளமாக நன்கொடைகளை வாரி வழங்குவது. மிகவும் முக்கியமான மற்றோர் விஷயம் திலீப் காந்தி புகையிலை சட்டம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளில் அச்சிடப்பட வேண்டிய புகைப்படம் பற்றி சம்மந்தப்பட்ட துறையினரிடமே விவாதித்த்து. இது 2005-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின்படி முற்றிலும் தடை செய்யப்பட்டது.

புகையிலை சம்பந்தமான எந்த கொள்கை வகுப்பிலும் புகையிலை நிறுவனங்களுடன் அரசுகள் பேசக் கூடாதென்பது முக்கிய க்ஷரத்தாகும். இந்த விதியும் மத்திய பாஜக அரசால் காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது. வேறோர் முக்கிய விஷயம், திலீப் காந்தி தலைமையிலான இந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கும் மற்றோர் முக்கிய பாஜக எம்.பி மிகப் பெரிய பீடி தொழிலதிபர். தங்கள் நலன்கள் மோதும் விவகாரத்தில் (கான்ஃபிளிக்ட் ஆஃ இண்ட்ரெஸட்) ஒருவர் முடிவு செய்யும் இடத்தில் இருக்க கூடாதென்ற அடிப்படை இயற்கை நீதியையும் பாஜக அரசு ஆழக் குழி தோண்டி புதைத்து விட்டதற்கு வேறு சான்று ஏதாவது தேவையா என்ன?

புகையிலை பற்றிய கொள்கை வகுப்பில் இடதுசாரிகளைத் தவிர்த்து அனேகமாக அனைத்து கட்சிகளிலும் உள்ள எம்பிக்களிடம் தங்களது அழுத்தத்தை புகையிலை நிறுவனங்கள் செலுத்திக் கொண்டுதான் உள்ளன. இந்த அழுத்தம் கணிசமான அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது உடைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு கடந்த ஆறாண்டுகளாக நிலைமை பழைய மோசமான நிலைமைக்கே சென்று கொண்டிருப்பதற்கு தற்போதய விஷயம் சரியான சான்றாகும்.

ஆண்டுதோறும் புகையிலை பழக்கத்தால் இந்தியாவில் பத்து லட்சம் பேர் இறக்கின்றனர் என்பது அரசின் புள்ளி விவரம். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது மிகவும் செலவு பிடிக்கக்கூடியது. லட்சக்கணக்கான சாமானிய மற்றும் நடுத்தர குடும்பங்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட புற்றுநோயால், அவர்களுக்கான மருத்துவ சிகிச்சையால் நடுத்தெருவுக்கே வந்திருக்கின்றன.

புற்றுநோய்க்கு புகையிலைதான் காரணமென்றே இந்தியாவிலிலேயே ஏராளமான ஆராய்ச்சிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள சூழலில் திலீப் காந்தியின் கருத்து எவ்வளவு ஆபத்தானது என்பதை சாமானியனும் புரிந்து கொள்ளலாம்.

இறுதியாக, சொந்த அனுவத்திலிருந்து ஒரு வார்த்தை:இந்தக் கட்டுரையாளன் சுமார் பதினைந்து ஆண்டுகள் புகை பிடித்தான். பின்னர், மூச்சுவிடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக சிகரெட் பழக்கத்தை நிறுத்தினான். ஆனால் அதன் பின்னர் மூன்றாண்டுகள் சுவாசப் பிரச்சனையால் அவதிப்பட்டான். பல நாட்கள் மூன்று முதல் நான்கு மணி நேரம் மூச்சு விட சிரமபட்டிருக்கிறான். அந்தக் காலங்களில் அவன் பட்ட வலியும், அடைந்த அச்சமும் எழுத்தில் வடிக்க முடியாதது. கேன்சர் வந்து விட்டதோ அல்லது வரப்போகிறதோ என்ற அச்சம் தினமும் வதைத்த நாட்கள் அவை. இந்தப் பிரச்சனைப் பற்றி இவ்வளவு எழுதுவதற்கு சொந்த அனுபவமும் முக்கிய காரணம்தான்.

ஆர்.மணி -பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x