Published : 25 Mar 2015 10:39 AM
Last Updated : 25 Mar 2015 10:39 AM

அடால்ஃப் எங்லர் 10

ஜெர்மனியை சேர்ந்த தாவரவியலாளர், ஆராய்ச்சியாளர் ஹென்ரிச் கஸ்டவ் அடால்ஃப் எங்லர் (Heinrich Gustav Adolf Engler) பிறந்த தினம் இன்று (மார்ச் 25). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

 ஜெர்மனியின் ஒரு பகுதியாக இருந்த ஸாகன் (தற்போது போலந்தில் உள்ளது) என்ற இடத்தில் (1844) பிறந்தார். இவரது தந்தை ஒரு வர்த்தகர். தொழில் பிரச்சினைகள் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்தார். தாய், 4 வயது குழந்தை எங்லருடன் பிரெசலூயா என்ற இடத்துக்கு குடிபெயர்ந்தார்.

 அரசுப் பள்ளியில் சில காலம் படித்தார். மாக்டேலம் ஜிம்னாசியம் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, இயற்கை அறிவியலில் ஆர்வம் பிறந்தது. தாவரங்கள், தனிமங்கள் ஆகியவற்றை சேகரிக்கத் தொடங்கினார். குறிப்பாகத் தாவர உலகம் இவரை அதிகம் ஈர்த்தது.

 பிரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில் 19-வயதில் சேர்ந்தார். அப்போது பல தாவரவியல் வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்த காலக்கட்டத்தில் தன் ஊரில் உள்ள அனைத்து வகையான தாவரங்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிந்தார்.

 பிரெஸ்லாவ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். கீல், பிரெஸ்லாவ், பெர்லின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பெர்லின்-தாலம் தாவரவியல் பூங்கா இயக்குநராகவும் பணியாற்றினார். இதை உலகின் மிகச் சிறந்த தாவரவியல் பூங்காவாக மாற்றினார்.

 தாவரங்கள் வளரும் சூழல், அவை செழித்து வளர்வதற்கு ஏற்ற இடங்கள் ஆகியவை பற்றி அறிய பல நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். தாவர வகைப்படுத்துதலில் (Plant Taxonomy) முக்கியப் பங்காற்றியதோடு இத்துறையில் மிகச் சிறந்த வல்லுநராகத் திகழ்ந்தார்.

 தாவர வகைப்படுத்துதல், அவற்றின் புவியியல் சூழல் தொடர்பாக தனித்தும் பிற தாவரவியலாளர்களுடன் சேர்ந்தும் நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். தி நேச்சுரல் பிளான்ட் ஃபேமிலீஸ், தி பிளான்ட் கிங்டம், சிலபஸ் ஆஃப் பிளான்ட் நேம்ஸ் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 1880 முதல் தன் வாழ்நாள் இறுதி வரை ‘பொட்டானிக்கல் இயர் புக்ஸ்’ என்ற இதழை வெளியிட்டு வந்தார்.

 தாவர வகைப்படுத்துதலில் இவரது வழிமுறைதான் இன்றும் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. இது ‘எங்லர் சிஸ்டம்’ எனப்படுகிறது. தாவரவியலாளர்கள், தாவரங்கள் குறித்த கையேடுகளை எழுதுபவர்களும் இந்த முறையையே பின்பற்றுகின்றனர்.

 பல்லுயிர் நில அமைப்பியல் (Geology on Biodiversity) காரணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியதோடு உயிர் புவியியல் பகுதிகளையும் (Biogeographical Regions) 1879-ல் வரையறுத்தார்.

 தனது புத்தகங்களில் தாவரங்களின் படங்களை வரைய திறமையான கலைஞர்களைப் பயன்படுத்தினார். லெனினியன் பதக்கம் உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகளைப் பெற்றுள்ளார்.

 தாவர வகைப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு இவரது பெயரில் பதக்கம் வழங்கிவருகிறது. தாவரவியல் உலகின் முன்னோடியாகக் கருதப்படும் அடால்ஃப் எங்லர் 86 வயதில் (1930) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x