Published : 20 Feb 2015 09:46 AM
Last Updated : 20 Feb 2015 09:46 AM
மார்கழி மாதம் வந்தால் போதும் முகமூடிக் கொள்ளையர்களைப் போல், ‘குரங்கு குல்லா’ மாட்டிக்கொண்டு, கழுத்தில் மலைப்பாம்பு போல் மப்ளரைச் சுற்றிக்கொண்டு நம்மவர்கள் நடமாடத் தொடங்கி விடுவார்கள். மைனஸ் 90 டிகிரி குளிர் அடிக்கும் அண்டார்க் டிகாவுக்குச் செல்கிறீர்களா என்று கேட்டாலே அந்தக் குளிர் நிஜமாகவே தாக்கியதுபோல் நடுங்கிவிடுவார்கள். ஆனால், 80 ஆண்டுகளுக்கு முன், இதே நாளில் அந்தக் குளிர்ப் பிரதேசத்தில் துணிச்சலுடன் கால்வைத்தார் நார்வேயைச் சேர்ந்த கரோலின் மிக்கெல்சன். அண்டார்க்டிகாவுக்குச் சென்ற முதல் பெண் அவர்தான்! அதற்கு முன்னர், அண்டார்க்டிகாவில் வாழும் பெங்குவின்கள் கண்களில் ஆண்கள் மட்டும்தான் தென்பட்டனர். கரோலினின் வெற்றிப் பயணத்துக்கு உறுதுணையாக இருந்தவர் அவரது கணவர் க்ளேரியஸ் மிக்கல்சன்.
எம்.எஸ். தார்ஷாவ்ன் எனும் திமிங்கில வேட்டைக் கப்பலில் மிக்கல்சன் தம்பதி பயணம் செய்தனர். அந்தக் கப்பலின் உரிமையாளரான லார்ஸ் கிறிஸ்டென்ஸன், திமிங்கில வேட்டையிலும் அண்டார்க்டிகா பயணத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்ட சாகசப் பிரியர். கப்பல் அண்டார்க்டிகாவை நெருங்கியதும், மிக்கல்சன் தம்பதியும் கப்பல் பணியாளர்கள் 7 பேரும் சிறு படகில் பயணித்து, அண்டார்க்டிகாவின் உறைபனி நிலத்தில், அதன் கிழக்குக் கடற்கரையில் இறங்கினார்கள். அந்தப் பயணம், 770 அடி உயரம் கொண்ட ஒரு மலையைக் கண்டுபிடிப்பதற்கும் காரணமாக அமைந்தது. பின்னாளில், அந்த மலைக்கு கரோலின் மிக்கெல்சனின் பெயரே வைக்கப்பட்டது. அத்துடன், நார்வே கொடியையும் அந்தக் குழுவினர் அங்கே ஏற்றிவைத்துப் பரவசப்பட்டார்கள்.
அண்டார்க்டிகாவில் வாழும் பெங்குவின்கள் தங்கள் உடலின் மேலிருக்கும் இறகுகளை உதிர்க்கும் பருவத்தில் அவர்கள் அங்கு போய்ச் சேர்ந்தார்கள். உதிர்க்கப்பட்ட இறகுகள் பல அடி உயரத்துக்கு மலைபோல் குவிக்கப் பட்டிருந்ததாக அந்தக் குழுவினர் குறிப்பிட்டார்கள்.
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், லார்ஸ் கிறிஸ்டென்ஸனின் மனைவி இங்க்ரிட் கிறிஸ்டென்ஸன் தனது கணவருடன் அண்டார்க்டிகா சென்றுவந்தார். அவரது பெயரும் அங்கிருக்கும் ஒரு பகுதிக்குச் சூட்டப்பட்டிருக்கிறது.
அதன் பின்னர், 1947-ல் அமெரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் (எடித் ரோன் மற்றும் ஜென்னி டார்லிங்டன்) அண்டார்க்டிகாவில் ஆய்வுகள் நடத்திவந்த தங்கள் கணவர்களுடன் அங்கு சென்றுவந்தனர். தனது பயண அனுபவங்களை ‘மை அண்டார்ட்டிக் ஹனிமூன்’ எனும் புத்தகத்தில் பதிவுசெய்த ஜென்னி டார்லிங்டன், “பெண்கள் வசிப்பதற்கு ஒத்துவராத பிரதேசம் அண்டார்க்டிகா” என்று குறிப்பிட்டார். ஆண்கள் பலருக்கும் அப்படியான அபிப்பிராயம்தான் இருந்தது. ஆனால், துணிச்சல் கொண்ட பெண்கள் பலர் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல், அண்டார்க்டிகாவுக்கு சாகசப் பயணம் செய்வதுடன், அங்கேயே தங்கி ஆய்வுகளையும் மேற்கொள்கிறார்கள். அவர்களின் சாதனைகளுக்கு அச்சாரமாக இருப்பது கரோலின் மிக்கெல்சனின் துணிச்சல்தான்!