Published : 22 Feb 2015 11:46 am

Updated : 23 Feb 2015 11:45 am

 

Published : 22 Feb 2015 11:46 AM
Last Updated : 23 Feb 2015 11:45 AM

ஜார்ஜ் வாஷிங்டன் 10

10

அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் (George Washington) பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

# அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் பிறந்தவர் (1732). ஆரம்பக் கல்வியை வீட்டிலேயே கற்றார். பிறகு கணிதம், புவியியல், லத்தீன், ஆங்கிலம் கற்றார். புகையிலை வளர்ப்பு, நில அளவை உட்பட பல விஷயங்களை தந்தையின் பண்ணையில் கற்றுக் கொண்டார்.

# 1753-ல் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது நடந்த பிரெஞ்சுப் போர், சிவப்பிந்தியப் போரில் பங்கேற்றார். இது அவருக்கு ராணுவ அனுபவத்தோடு புகழையும் பெற்றுத் தந்தது. அடுத்த 15 ஆண்டுகள் பண்ணையை நிர்வகித்தார். செல்வத்தைப் பல மடங்கு பெருக்கினார்.

# ஆறடி உயரம், கட்டான உடலமைப்பு, வசீகரத் தோற்றம் கொண்டவர். எதற்கும் அஞ்சாதவர். நிர்வாகத் திறன், மன உறுதி படைத்தவர். ஒழுக்க சீலர். 1775-ல் அமெரிக்கப் புரட்சி ராணுவத்தின் தலைமைத் தளபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# ஏறக்குறைய 8 ஆண்டுகள் பிரிட்டனுடன் நடைபெற்ற அமெரிக்க சுதந்திரப் போர் 1783-ல் முடிந்தது. அமெரிக்க சுதந்திரத்தை பிரிட்டன் அங்கீகரித்தது. தன்னிகரில்லாத அர்ப்பணிப்பு உணர்வுடன் போரை நடத்தி வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார் ஜார்ஜ் வாஷிங்டன்.

# அமெரிக்க சுதந்திரப் போரில் தலைமைப் பொறுப்பு ஏற்ற 1775 முதல், சுதந்திர அமெரிக்காவின் அதிபராக 2 முறை பதவி வகித்த காலகட்டம் வரை இவரது சாதனைகள் மகத்தானவை. விடுதலைப் போர் முடிந்த பிறகு, அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் குழுவுக்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

# நவீன அமெரிக்காவின் சிற்பிகளில் ஒருவராகப் போற்றப்படுபவர். அரசியலமைப்புச் சட்டத்தை மாநில அரசுகள் ஏற்குமாறு செய்ததில் இவரது பங்கு முக்கியமானது. 1789-ல் அமெரிக்காவின் முதல் அதிபராகப் பதவி ஏற்றார்.

# 100 சதவீதம் வாக்குகள் பெற்ற ஒரே அதிபர் இவர்தான். அமெரிக்காவின் ஒற்றுமை குலையாமல் கட்டிக்காத்த உறுதிமிக்க தலைவராகத் திகழ்ந்தார். பல துறைகளிலும் அசாதாரண நிர்வாகத் திறனுடன் அமெரிக்காவைக் கட்டமைத்தார்.

# அமெரிக்க வரலாறே இவரிடம் இருந்துதான் தொடங்குவதாகவும் கருதப்படுகிறது. போர், அமைதி என 2 காலகட்டங்களிலும் சிறப்பான நிர்வாகத் திறனைக் கொண்டிருந்ததால், காலங்கள் கடந்தும் புகழ்பெற்று விளங்குகிறார்.

# ஆதரவு, செல்வாக்கு இருந்தாலும் 3-வது முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து சிறந்த முன்னுதாரணமாக விளங்கினார். இவரது சிலைகள் அமெரிக்காவில் பல இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. டாலர் நோட்டுகள், நாணயங்களில் இவரது உருவம் பொறிக்கப்பட்டது.

# அவரது நினைவாகத் தபால் தலைகள் வெளியிடப்பட்டன. இவரது பிறந்தநாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டது. பல கல்வி நிறுவனங்கள், பொது இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. ஜார்ஜ் வாஷிங்டன் 67 வயதில் (1799) காலமானார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

முத்துக்கள் பத்துஅமெரிக்காவின் தந்தைஜார்ஜ் வாஷிங்டன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author