Published : 25 Feb 2015 11:04 AM
Last Updated : 25 Feb 2015 11:04 AM

குருதி ஆட்டம் 24 - வனலட்சுமி!

விடிய விடிய யாரும் தூங்கலே.

உச்சி ராத்திரி தாண்டவுமே, அவரவர் வீட்டு வாசலை குமரிப் பெண்கள் அலங்கரிக்கத் தொடங்கி விட்டார்கள். பசுஞ்சாணி நீர்த் தெளித்து, கூட்டிப் பெருக்கி, கோலமிட்டார்கள்.

பத்தாம் நாள் திருவிழா அன்று, வீட்டு வாசலில் என்ன கோலமிடுவது என்பதை இரண்டு மூன்று நாட்களாக மனதுக்குள் போட்டு உருட்டியும், எந்தத் தீர்மானத்துக்கும் வர முடியாத குமரிகள், அடுத்த வீட்டு கோலங்களில் ஓரக் கண் பதித்திருந்தார்கள். கோலப் பொடி ஓசி கேட்கிற சாக்கில் ஒவ்வொரு வீடாக ஊரெல்லாம் அலசி வந்தார்கள்.

ஊரைச் சுற்றி வரும் அத்தனை குமரிகளையும் நல்லாண்டி வீட்டு வாசல் கோலம் நறுக் எனப் பிடித்து நிறுத்தியது. வாய்ப் பிளந்து வேடிக்கை பார்த்தார்கள். குத்துக்கால் வைத்தமர்ந்து கோலமிடுபவளின் கைப்பொடி, நில ஓவியமாக உயிர் துள்ள, கண்ணைப் பறித்துக் கொண்டிருந்தது. ஊர்குமரிகளெல்லாம் தன்னைச் சுற்றி நிற்பதை அறியாதவளாக, இடமும் வலமும் கண்ணளந்து இளகிக் கொண் டிருந்தாள்.

நேற்று பொழுது சாய ஊருக்குள் வந்த வெள்ளையம்மா கிழவி, இருபது வருடங்கள் கழித்து தான் வந்திருப்பதை எவரும் அறியாத வகையில் நல்லாண்டியின் வீட்டுக்குள்ளேயே அடைபட்டிருந்தாள். பொட்டுத் தூக்கம் இன்றி உழன்று கொண்டிருந்தவள், எழுந்து நடுப் பத்திக்கு வந்தாள். வாசலில் குமரிக் கூட்டத்தைக் கண்டதும் முழுதாக முகம் காட்டாமல், கதவோரம் ஒதுங்கி நோட்டமிட்டாள்.

வாசலில் நிற்கும் எந்தப் பெண்ணும் வெள்ளையம்மாவுக்குப் பரிச்சயப்பட்ட வளாக இல்லை. எல்லோருமே தான் ஊரைவிட்டுப் போன பின்பு பிறந்த வர்களாக இருந்தார்கள். எல்லாக் கண் களும் கவிழ்ந்து மொய்க்கும் புள்ளி யைப் பார்த்தாள்.

கொடி மலரில் அமர்ந்து தேன் உறிஞ்சும் வண்டு போல், துறு துறுத்த குமரி ஒருத்தி, வண்ணக் கோல மிட்டுக் கொண்டிருந்தாள். விரல் அசைவுக்கு ஏற்ப, கரு விழி ஊர்ந்து கொண்டிருந்தது. பேரன் கஜேந்திரன் ஓவியம் வரையும்போதும் இப்படித்தான் விழிகளை ஓட்டுவான்.

‘இந்த ஊருக்குள் இவள் யார்? அதுவும் நல்லாண்டி வீட்டு வாசலில்!’

யார் என உடனடியாக தெரிந்து கொள்ள வேண்டும் போல் இருந்தது. திரும்பி உள் வீட்டுக்குள் பார்த்தாள். கண்ணாடியாகத் துலங்கும் வெண்கலப் பொங்கல் பானைக்கு கதம்ப பூச்சரத்தை சுற்றிக் கொண்டிருந்தாள் நல்லாண்டியின் மனைவி. அருகில் போனாள் வெள்ளையம்மா.

தன்னை நோக்கி வரும் வெள்ளை யம்மாவைக் கண்டதும் மரியாதை குழைய, “ராத்திரி முழுக்க தாயி தூங்கலே! எங்க வீட்டுச் சவுகரியம் உங்களுக்கு பத்தாது…” என்றாள் நல்லாண்டியின் மனைவி.

காதிலேயே வாங்கிக் கொள்ளாத வெள்ளையம்மா, நல்லாண்டி மனைவி யின் தோளைத் தொட்டு, “அந்தப் பொண்ணு யாரு?” என வாசலைக் கை காட்டினாள்.

பூச்சுற்றிய பொங்கல் பானையை இரண்டு கைகளாலும் தூக்கியவாறே, வாசலைப் பார்த்தாள் நல்லாண்டி யின் மனைவி. குமரிக் கூட்டத்துக்குள் யாரைக் கேட்கிறாள் எனப் புரியாதவ ளாக, “யாரைக் கேக்குறீக… தாயி” என்றாள்.

“கோலம் போட்டுக்கிட்டு இருக் காளே… அந்தப் பொண்ணு” என்றாள்.

“என் மகள்தான் தாயி. பேரு… வனலட்சுமி. பட்டணத்திலே காலேஜில படிக்கிறாள். திருவிழாவுக்காக வந்தி ருக்கா. கொஞ்சம் வாயாடி, ‘வாயாடி வனலட்சுமி’ன்னுதான் ஊரு சொல் லும்” என்றவள் பதறிப் போய், “ஏன் தாயீ… உங்களை இன்னாருன்னு தெரி யாமல் ஏதும் பேசிட்டாளா?” என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணுமில்ல. சும்மா கேட்டேன்...” என்றவள், “சொந்தத்திலே யாரும் மாப்பிள்ளை இருக்கானா?” என்றாள்.

“மாப்பிள்ளைக்கா… பஞ்சம். இப்போ கல்யாணத்துக்கு என்ன அவசரம் தாயீ, படிப்பு முடியணுமில்லே?” என்றபடி வாசலைப் பார்த்தாள்.

கோலம் போட்டு முடித்து எழுந்து நின்ற வனலட்சுமி, தன்னைச் சுற்றி ஊர்க் குமரிகள் எல்லாம் நிற்பதை இப்போது தான் பார்ப்பவளாய், “ஏய்… என்னடீ எல்லாரும் இங்கே வந்து நிக்கிறீக?” என்றாள்.

எழுந்து நின்ற வனலட்சுமியையும் காலடியில் விழுந்து கிடந்த வண்ணக் கோலத்தையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருந்த குமரிகளில் ஒருத்தி, “ஏன்டீ… வாயாடி வனலட்சுமி… உன் கையி பொடி மட்டும் எப்படில இப்பிடி கோலமாவுது?” என்றவள் சொல்லி வாய் மூடவில்லை.

“ம்… என் கையி கோலப்பொடி, இப்பிடியும் ஆகும்” என்றபடி, தன் கையி லிருந்த கோலப் பொடியைச் சுற்றி நின்ற எல்லோர் மீதும் சிதறவிட்டாள் வன லட்சுமி.

தலை, முகமெல்லாம் கோலப்பொடி யில் குளித்த குமரிகள், கண் விழிக்க முடியாமல், தலையை உதறினார்கள்.

‘கெக்கே… கெக்கே…’ எனக் கைகொட் டிச் சிரித்த வனலட்சுமி, “இப்பிடியே வாங்கடி பிசாசுகளா! ஊரணியிலே விழுந்து ஒரு ஆட்டம் போடு வோம்” என்றாள்.

வீட்டுக்குள்ளிருந்து பார்த்துக் கொண்டிருந்த வெள்ளையம்மா கிழவியும் நல்லாண்டி மனைவியும் திகைத்துப் போய் நின்றார்கள்.

“இப்பிடிதான் தாயி… சின்னப் பிள்ளை மாதிரி சேட்டை பண்ணுவா.”

“இதில் ஒண்ணும் தப்பில்லையே. களங்கமில்லாத பொண்ணு!” என்றாள் வெள்ளையம்மா.

உறக்கமில்லாமல் அலைந்தார் கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம். மொத்தக் காரியங்களும் தன் தலை மேல் விழுந்ததாகக் கருதினார். ‘இந்தத் திருவிழாவை ஒரு குறையும் இல்லாமல் நல்லபடியா நடத்தி முடிச்சுட்டு, அரண்மனையில் இருந்து உத்தரவு வாங்கிக் கொள்ள வேண்டி யதுதான்’ என்கிற முடிவில் இருந்தார்.

‘அரண்மனை உடையப்பன் நடவடிக்கை ஆண்டவனுக்கே பொறுக் காது. கோயில் திருவிழா சாட்டிட்டு, சகல கெட்ட காரியங்களும் அரண்மனைக் குள்ளே நடக்குது. சாமி கோபம் யாரு மேலே சாடப் போவுதோ. உடன் இருந்த பாவத்துக்கு, நம்மளும் பழி சுமக்கணும். வேண்டாம்.’

கோயில் வாசலில் நின்றவாறு தவசியாண்டியை எதிர்பார்த்திருந்தார். ‘வருவானா… மாட்டானா?’என யோசனை யில் இருந்தபோதே, தவசியாண்டி கோயிலை நோக்கி வந்து கொண்டி ருந்தான்.

“அப்பாடி… வந்துட்டான்டா!” கணக் குப்பிள்ளை எதிர்கொண்டு ஓடினார்.

இருளப்பசாமியின் கை அரிவாள், ஒளி வெள்ளத்தில் மின்னியது.

- குருதி பெருகும்…

எண்ணங்களைத் தெரிவிக்க: irulappasamy21@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x