Published : 07 Jan 2015 12:02 PM
Last Updated : 07 Jan 2015 12:02 PM

குருதி ஆட்டம் 17 - ஏன் சிரிக்கிறே?

ஏன் சிரிக்கிறே?

வெள்ளையம்மா கிழவியின் தொண்டையில் முட்டி நிற் கும் வார்த்தை வெளியேற மாட்டேன் என்கிறது.

எதிரே அமர்ந்திருந்தவளைப் பார்த்து பேரன் கஜேந்திரன் கேட்டான், “சொல்லுங்க பாட்டி… எங்கே போறீங்க?”

“ஊருக்கு.”

“எந்த ஊருக்கு?”

“நம்ம ஊருக்கு.”

“நம்ம ஊருன்னா..?”

“பெருங்குடி.”

“அங்கே யாரு இருக்காங்க?”

வெள்ளையம்மா கிழவியால் பதில் சொல்ல முடியவில்லை.

“சொல்லுங்க பாட்டி… அங்கே யாரு இருக்காங்க?”

“உன்னோட…” விழுங்கினாள்.

“என்னோட…” புருவம் நெறியக் கேட்டான்.

“நம்மளோட சொந்த பந்தங்கள்.”

“இருபது வருஷமா… எந்த சொந்த பந்தத்தையும் என் கண்ணுல காட்டவே இல்லையே!”

வார்த்தைகளின்றி மவுனமாக அமர்ந்திருந்தாள்.

உற்றுப் பார்த்தவன், சிரித்துக் கொண்டே எழுந்தான். வெள்ளையம்மா கிழவியின் மட்டத்துக்கு குனிந்து, நேருக்கு நேராக கண்களைப் பார்த்து, “ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? நீங்க ஊருக்கு போக வேணாம்னு நான் சொன்னேனா? பத்திரமா போயிட்டு வாங்க…” என்று சொல்ல வந்ததை முடிக்காமல் இடையிலேயே நிறுத்தியவன், “அதென்ன பாட்டி எல்லோரும், ‘பத்திரமா போயிட்டு வா’, ‘பத்திரமா பார்த்துக்கோ’, ‘பத்திரமா இருக்கணும்’னு சொல் றாங்க? ‘பத்திரம்’னா சொத்து டாக்குமென்ட்தானே பாட்டி?” என்றான்.

பதில் தெரியாமல் வெள்ளையம்மா விழித்தாள்.

“அதாவது… சொத்துப் பத்திரம், நம்ம உயிருக்கு சமமாம். சொத்துக்கு அவ்வளவு மரியாதையா?” குழந்தை யாய் பேசியவன் திரும்பினான். எங்கோ பார்த்தவாறு, “நமக்கு ஏதும் சொத்து இருக்குதா பாட்டி?” என்றான்.

வாய் திறக்க முடியாத வேதனையுடன், ‘சொத்து இருக்குதாவா? ஆப்ப நாட்டுல பாதி சொத்துக்கு சொந்தக்காரன் நீ. ஆனா, அந்த சொத்து நீ அனுபவிக்க முடியாத சொத்து’ என உள்ளுக்குள் குமைந்தாள்.

வெள்ளையம்மாவின் கலங்கிய கண்களைக் கண்டு திடுக்கிட்டவன், “என்ன பாட்டி… எதற்கெடுத்தாலும் அழுகைதானா? கெளம்புங்க. நான் உங்களை ரயில் ஏத்திவிட்டு வர்றேன்” பின்புறமாக வந்து தோள்களைத் தொட்டான்.

படுக்கையில் விழித்தவாறு படுத்திருந்தான் துரைசிங்கம். அரியநாச்சி, குளியலறைக்குள் இருந்தாள்.

கப்பல் சிப்பந்திகள், அறைக் கதவை மெதுவாக தட்டினார்கள். பிறகு ஓங்கி ஓங்கி குத்தினார்கள்.

துரைசிங்கம் எழுந்து வந்து கதவைத் திறந்தான். வாசலில் நிற்கும் சிப்பந்திகளை ஏற இறங்க பார்த்தான். ஊமை மொழியில், ‘என்ன வேணும்?’ என்றான்.

சிப்பந்திகள், தமக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களில் ஒருவன். “அறையில் வேறு யார் இருப்பது?” என்றான்.

துரைசிங்கம், சைகையில் சொன் னான். புரியாமல் விழித்தார்கள். வாசலில் நின்றவர்கள், அறைக்குள் நுழைந்தார்கள்.

“இந்தியாவுக்குப் போறீங்களா?”

‘ஆமாம்,’ என தலையை ஆட்டினான்.

“இந்தியாவிலே எங்கே?”

துரைசிங்கத்தின் கைகள் ஆடிய நாட்டியத்தில் குழம்பினார்கள். குளியல் அறைக் கதவை திறந்து அரியநாச்சி ஈரத் தலையை வெளியே நீட்டியதும் துணுக்குற்றவர்கள், “மன்னிக்கணும் மேடம்,” என்றவாறு, அறையை விட்டு வெளியேறி வாசலில் நின்றார்கள்.

“சொல்லுங்க, என்ன வேணும்?” என்றாள்.

சிப்பந்திகளில் ஒருவன், “மேடம்… இவரு யாரு?” என துரைசிங்கத்தைக் காட்டி கேட்டான்.

“என் மருமகன். ஏன் கேக்கிறீங்க?”

“ஊமையா?”

“ஆமாம். அதோடு கொஞ்சம்… புத்தி சுவாதீனம் இல்லாதவன். வைத்தியம் பார்க்கத்தான் இந்தியாவுக்கு அழைச் சிட்டுப் போறேன். வயசு இருபத்தஞ்சு ஆவுது. ஆனா, குழந்தை மாதிரி. சின்னச் சின்ன விசயத்துக்கெல்லாம் அடம்பிடிப்பான். நேத்து ராத்திரி கூட, ‘கடலை பார்த்துக்கிட்டே மேல் தளத்திலதான் தூங்குவேன்’ன்னு பிடிவாதம் புடிச்சான். சமாதானம் பண்ணி கீழே அழைச்சுட்டு வர பெரும் பாடாயிடுச்சி. அது சரி… ஏன் இந்த விசாரணை?” ஈரக் கூந்தலைத் துண்டால் துவட்டிக் கொண்டே கேட்டாள்.

“நம்ம கப்பல் பயணி ஒருவரை நேற்று இரவிலிருந்து காணோம்.”

“அப்படியா?” கூந்தலை துவட்டுவதை நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் கேட்டாள்.

“பெரிய போலீஸ் அதிகாரி. பெயர், ஸ்காட்!”

“வெள்ளைக்காரரா?”

“ஆமாம். நேற்று இரவு, மிச்சமான போதையில் இருந்திருக்கிறார். கப்பல் மேல் தளத்தில் காற்று வாங்கி கொண்டிருந்த ஒரு கருப்பினப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றிருக்கிறார். அவள் பாவம்… சொல்லிச் சொல்லி அழுகிறாள்.”

“அவருக்கு வயது என்ன இருக்கும்?”

“ஐம்பத்து ஐந்து.”

“ஒருவேளை… போதையில் தடுமாறி…” இழுத்தாள்.

“அப்படித்தான் இருக்கும்” என்றவன், சக சிப்பந்தியை பார்த்து, “கால் இடறிக் கடலில் விழுந்திருக்கலாம்” என்றான்.

“அய்யோ.. பாவம்!” என்றாள் அரியநாச்சி.

“தொந்தரவுக்கு மன்னிக்கணும் மேடம்” என்றபடி இரண்டு சிப்பந்திகளும் நகன்றார்கள்.

துரைசிங்கத்தின் கையை பிடித்து உள்ளே இழுத்த அரியநாச்சி, அறைக் கதவை பூட்டினாள். இமைகளை அகல விரித்து, அத்தை அரியநாச்சியை வியந்து

பார்த்த துரைசிங்கம், மெல்ல மெல்ல சிரிக்கத் தொடங்கினான். இரண்டு கைகளாலும் அடி வயிற்றைப் பிடித்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தான்.

துரைசிங்கத்தை அடிக்க கை ஓங்கிய அரியநாச்சி, “ஏய்… ஏன் சிரிக்கிறே? ஏன் சிரிக்கிறே…?” என்று சொல்லிக் கொண்டே கண்ணீர் வர சிரித்தாள்.

- குருதி பெருகும்…

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:

irulappasamy21@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x