Published : 06 Dec 2014 12:22 PM
Last Updated : 06 Dec 2014 12:22 PM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு 11

நான் நெய்வேலி போய்ச் சேர்ந்தபோது, புத்தகக் காட்சியின் கூட்டத்தில் பேசி முடித்துவிட்டு ஜெயகாந்தன் விருந்தினர் மாளிகைக்குப் போய்விட்டிருந்தார்.

‘கணையாழி’, ‘ஞானரதம்’ மற்றும் ‘தீபம்’ இதழ்களைத் தொகுத்தளித் தவரும், பரவலாக அறியப்பட்ட எழுத்தாளருமான, விருத்தாச்சலம் வே.சபாநாயகம் எனக்கு 50 ஆண்டுகால நண்பர். புத்தகக் காட்சியில் அவரைக் கண்டு, அவரோடும் நெய்வேலி பாரதிக்குமாரோடும் சேர்ந்து ஜெயகாந்தன் தங்கியிருக்கும் இடத்துக் குப் போனேன்.

அறைக்கு வெளியே தாழ்வாரத்தில் நடமாடியவாறிருந்த நண்பர் கே.எஸ்.சுப்பிரமணியம் என்னைப் பார்த்ததும் மகிழ்ச்சியோடு, ‘‘வாங்க… வாங்க…’’ என்று அழைத்துக் கொண்டு அறைக்குள் இட்டுச் சென்றார். ஜெயகாந்தனைக் கண்டு வணங்கினேன். அங்கே எல்லாரிடமும் ஒரு நம்பிக்கை பலித்துவிட்டதின் நல்ல உற்சாகம் காணப்பட்டது.

‘‘குப்புஸ்வாமி… நீங்க இன்னைக்கு வராம போயிருந்தா எங்களுக்கெல்லாம் பெருத்த ஏமாற்றமாயிருந்திருக்கும்’’ என்று கே.எஸ் சொன்னார்.

உடனே ஜெயகாந்தன், ‘‘உப்பு இல்லாம சாப்பாடாப்பா? குப்பன் இல்லாம சபையா?’’ என்றார்.

அதன்பின்பு பொழுது கலகலவெனப் போக ஆரம்பித்தது.

அவருக்குச் சொல்வதற்கு நான் ஒரு சேதி வைத்திருந்தேன். வந்தவுடனேயே அதைச் சொல்லக் கூடாது என்று முடிவெடுத்து ஒதுக்கி வைத்திருந்தேன். மறுநாள் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று தீர்மானித்திருந்தேன்.

எப்போதுமே காலை வேளைகளில் சபை மிகவும் ஜீவ களையோடு திகழும். அன்று மறுநாள் காலையும் அவ்விதமே! நான் மெதுவாக வாயைத் திறந்தேன்.

கோயம்புத்தூரில் ஒரு நண்ப ருக்கு ‘கோனான்’ என்று பெயர் வைத்திருந்தோம். அந்த ‘கோனான்’ காலமாகிவிட்ட சேதியை நான் ஜெய காந்தனிடத்தில் சொல்ல முற்பட்டு, ‘‘ஜே.கே… ‘கோனான்’…’’ என்று ஆரம்பித்தேன்.

நான் சொல்லி முடிக்கும் முன்பே ஜே.கே, ‘‘பாவம் ‘கோனான்’… செத்துப் போனான்…” என்றார். நான் சொல்வதற்கு முன்பே இந்த சேதி அவருக்குத் தெரிந்திருந்தது.

‘கோனான்… போனான்’ என்று அவர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டனர். எந்த மரணச் செய்தியையும் ஜெயகாந்தன் அதிர்ச்சியோடு எதிர்கொண்டது கிடையாது.

ராஜீவ் காந்தி மரணமும், திருச்சியைச் சேர்ந்த மிக நெருங்கியவரும் மேன்மை யானவருமான மோதி ராஜகோபாலின் மரணமும் அவரைப் பாதித்ததை நான் நேரடியாகவே பார்த்திருக்கிறேன். மற்றபடி, எல்லா மரணங்களின் மீதும் அவர் ஒரு ஞானியின் பார்வையையே செலுத்தினார்.

‘உன்னைப் போல ஒருவன்’ படத்தில் கிளி ஜோஸ்யராக நடித்த பிரபாகரன், அதன் பின் ஆழ்வார்ப்பேட்டை மடத்துக்கு அடிக்கடி வந்து போகிறவர் ஆனார். அவர் காலமானது கேட்டு ஜெயகாந்தன் அவர் வீட்டுக்கும் போனாராம். அவர் போவதற்குள் சடலம் மயானம் ஏகிவிட்டது. அதைத் தொடர்ந்து அங்கு போய்ப் பார்த்து விடலாம் என்று போனால், அங்கே தகனம் நிகழ்ந்து, மேலே எழுந்த புகையைப் பார்த்துவிட்டு, ‘‘பிரபாகரன் போறான்… பாருங்கப்பா!’’ என்றாராம் ஜெயகாந்தன். அவரை நான் கணித்த அளவில், அவர் மரணத்தை மிகவும் எளிதாக உள் வாங்குபவராகத் தெரிந்தார்.

அப்படி ஒரு பக்குவம் எங்களுக் குக் கிட்டாதிருந்தது. எனவே, நான் சொன்னேன்: ‘‘ஜே.கே உங் களைப் பார்த்து நாங்கள் சில நல்ல மனப்பான்மைகளுக்குப் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால், மரணத்தைப் பற்றிய உங்கள் தெளிவும் ஞானமும்தான் இன்னமும் எங்களுக்கு சித்திக்கவில்லை. நாங்கள் குழம்புகிறோம்…” என்று சொல்லிவிட்டு, அதற்குப் பின் என்ன தொடர்ச்சியிலோ, ‘‘நீங்கள் அதை சிந்திப்பதில்லை போல…’’ என்று சரியாகவோ, தவறாகவோ சொல்லி முடித்தேன்.

‘‘என்ன சொன்னாய்… சிந்திப்பதில் லையா?’’ என்று நிமிர்ந்தார் ஜே.கே. ‘‘அதைத் தவிர வேறு எதை சிந்தித்தோம்? நினைவு தெரிந்த நாள் முதல் அந்த ஒரே சிந்தனைதானே?’’ என்று சொன்ன ஜெயகாந்தன், சிறிது இடைவெளிவிட்டு, ‘‘கலைகள் பிறப்பதற்கும், காவியங்கள் தோன்றுவதற்கும், கவிதை உதிப்பதற்கும் காரணமாகப் பின்னணியில் நிற்பது எது? நமது குழந்தைகளின் மீது நம்மை பாசம் கொள்ள வைப்பது எது? சாதனை என்று எதையாவது செய்துவிட நம்மைத் தூண்டிக்கொண்டே இருப்பது எது? இந்த மரணமே அல்லவா..?’’ என்றார்.

அவர் அன்று பேசிய வாசகங்களை, இங்கே காகிதத்திலும் மையிலும் சில வரிகளில் குறிக்கிறபோது, அவை தாம் பிறந்த நேரத்தின் களையை இழந்து காய்ந்து கிடப்பன போல் தோன்றுகின்றன. ஆனால், அவை பிறந்தபோது பெரும் வசீகரத்தோடு பிறந்தன. ஜெயகாந்தனின் கண்களும் முகமும் ஜொலிக்க ஆரம்பித்துவிட்டன.

தொடர்ந்து சில நிமிஷங்கள் அவரேதான் பேசிக் கொண்டிருந்தார். அதன் சாரத்தை மேலே தந்துவிட்டேன். ஆனால், அந்த வாசகங்களின் ரூப செளந்தர்யக் கோலம் பூராவும் குறிப்பிடப்பட முடியாமல் காற்றிலே போய் ஒளிந்துகொண்டுவிட்டன. எத்தனையோ நாட்களாக எங்கள் கண்களுக்குப் புலப்பட்டு வந்த மரணம், அன்று ஒரு மரியாதை பொருந்திய கோலத்தோடு எங்கள் முன் நின்றது.

மரணம் தனக்கான வாழ்த்துக்களைப் பெற்றுக்கொண்ட நாள் அது!

அதற்குப் பிறகு நான் யோசித்தேன். பால்யத்தில் இருந்தே இந்த மரணம் ஜெயகாந்தனுக்கு சம்மதமில்லாதது. இதை எவ்வாறு வெல்வதென மிகமிக இளைய பிராயத்திலேயே சிந்தித்துத் திட்டமிட்டுத்தான் அவர் தன் எழுதுகோலைக் கையில் எடுத்திருக்கிறார். இவ்வாறுதான் எல்லாக் கலைஞர்களும் தங்கள் கருவிகளைக் கையில் எடுக்கிறார்கள்.

எங்கேயோ, எப்போதோ படித்திருந்தேன். மனோ தத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்த விஷயம் அது! சரியாகத்தான் கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

படைப்பாற்றல் குறைந்தவர்கள் மரணத்துக்கு மிக மிக அஞ்சுகிறார்கள். செத்த பிறகு, மீண்டும் உயிரோடு திரும்பி வந்து பார்க்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டால், அவர்கள் வெகு விரைவில் திரும்பி வந்து பார்க்க விரும்பினர். ஆனால், படைத்துப் படைத்துக் குவித்தவர்கள் எல்லாம், வெகுகாலம் கழித்துத் திரும்பி வந்து பார்க்கவே விரும்புகின்றனர். அதிலும் ஓர் எழுத்தாளர், ‘நான் ஏன் திரும்பி வந்து பார்க்க வேண்டும்? எல்லாம் மாறிப் போயிருக்கும். அதிலே மாட்டிக் கொண்டு நான் ஏன் குழம்ப வேண்டும்?’ என்றாராம்.

படைப்பாளிக்கு மரண பயம் மட்டுமன்று; மரணமே கூடக் கிடையாதுதான்!

- வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: pisakuppusamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x