Published : 08 Nov 2014 10:17 AM
Last Updated : 08 Nov 2014 10:17 AM

ஜெயகாந்தனோடு பல்லாண்டு - 7

ஆரம்பத்திலேயே ஜெயகாந்தனின் தன்னம்பிக்கையும் மனோதிடமும் எல்லாவற்றுக்கும் மேலே புருஷ லட்சணமான அந்தத் தைரியமும் எங்களுக்குப் புலப்பட்டுவிட்டன.

ஒருமுறை, திருப்பத்தூரில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தவர், ‘‘பணம் என்னய்யா பணம்!’’ என்று அதை அலட்சியப்படுத்திப் பேசி, ஒரு காலை நீட்டி இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் ஒதுக்குவது போல் காற்றில் உதைத்துக் காட்டி, ‘‘இது கார் வாங்க… இது பங்களா வாங்க… என்று இந்த மாதிரி ஒதுக்க என்னால் முடியும்!’’ என்றார்.

ஆனந்த விகடன் பத்திரிகையில் அவரை, சினிமாவுக்குக் கதை கொடுக் கிற எண்ணம் உண்டா… என்று கேட்ட தற்கு, ‘‘கொடுக்கிற உத்தேசம் இல்லை. சினிமாவே எடுக்கிற உத்தேசம் உண்டு’’ என்று பதில் அளித்தார். யாருமே இதைக் கொஞ்சம் மிகை என்று கருதிக் கொள்ளலாம். ஆனால், திருப்பத்தூரில் சொல்லி இரண்டு வருஷங்களில் கார் வாங்கிவிட்டார். ஆனந்த விகடனில் சொல்லி ஒரு வருஷத்துக்கெல்லாம் ‘‘உன்னை போல் ஒருவன்’’ சினிமா எடுத்துவிட்டார்.

பணமோ, சமூகத்தில் ஓர் உயர்ந்த இருக்கையோ, விருதோ, புகழோ… இவையெல்லாம் எட்ட முடியாத விஷயங்கள் இல்லை என்கிற தெளிவான உறுதியும், இவற்றுக்காக நான் அலைய மாட்டேன் என்கிற பெருமிதமும் அவரை அப்போதிருந்தே அணி செய்து வருகின்றன.

ஒரு முறை அவர் திருப்பத்தூருக்கு வந்து சென்ற பின்பு, நாங்கள் பல முறை சென்னைக்குச் சென்று அவரைச் சந்தித்து வரும் படலங்கள் ஆரம்பமாயின. அப்போதெல்லாம் நாங்கள் பெரும்பாலும் எழும்பூர் ஹைரோட்டுக்குச் சென்று, அங்கே ஜெயகாந்தனின் வீட்டுக்கு மூன்று நான்கு கட்டிடங்கள் முன் கூட்டியே இருந்த, கோவர்த்தன் சிமெண்ட் ஏஜென்ஸியில் அதிகாலையிலேயே போய் நின்று, தந்த சுத்தி ஸ்நானமாதிய காரியங்களைச் செய்து கொள்வோம். ஜெயகாந்தனை நன்கு அறிந்தவரும், அந்த சிமெண்ட் ஏஜென்ஸியின் மேனேஜருமான ஒய்.ஆர்.கே. சர்மா என்பவரால் எங்களுக்கு இத்தகைய பல சவுகரியங்கள் அமைந்தன. சர்மா, எங்கள் மீதெல்லாம் அபிமானம் மிகக் கொண்ட அற்புதமான மனிதராயிருந்தார்.

அதற்கப்புறம், ஜெயகாந்தனைப் பயபக்தியோடு சென்று பார்ப்போம். அவர் எங்களை வரவேற்று அந்த வீட்டின் முன் பகுதிக்கு அழைத்து வருவார். அங்கே மூன்றடி அகலத்துக்கு வராந்தா மாதிரி வழி இருக்கும். அதன் இருபுறமும் ஒன்றரை சாண் அகலம் உள்ள ஒட்டுத் திண்ணைகள் உண்டு. எதிர்த் திண்ணையில் எங்களை உட்கார வைத்துவிட்டு ஒரு திண்ணையில் தான் உட்கார்ந்து கொள்வார்.

அப்படி ஓர் ஒட்டுத் திண்ணையில் உட்கார்ந்துகொண்டுதான் அவர் தமிழ் இலக்கிய உலகின் மிக உயரிய கோபுரங்களைக் கட்டி எழுப்பிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு எதிரே, அகலம் குறைந்த அந்தச் சாலையின் மறுபுறத்தே கூடையில் காய்கறி விற்கும் பெண்கள் இருப்பார்கள். அவர்களை எல்லாம் எங்களுக்குக் காட்டினார். அவர்களுக்கு இடையே சண்டை மூண்டுவிடும்போது அவர்களின் பாஷை அடைகிற உக்கிரத்தை எல்லாம் அவர் உற்று கவனிப்பாராம்.

‘அவர்களிடமிருந்தும் நான் பாஷையைக் கற்றுக்கொண்டேன்’ என்றார். அந்தக் காய்கறிக் கூடைப் பெண்கள் எல்லாம் கூட ஏதோ அதிசயம் போல் தோன்றுமளவுக்கு அவர் இந்த வாழ்க்கையை எங்களுக்கு விண்டு காட்டினார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, பங்கஜா லாட்ஜ் என்று பெயர் கொண்டு நிற்கிற ஒரு சிறு ஹோட்டலுக்குப் போய், அங்கே காபி சாப்பிடுவோம்.

ஒரு காலத்தில் சென்னையில் ஒரு ரூபாய் இருந்தால் என்னென்ன செய்யலாம் என்று பட்டியல் போட்டுச் சொல்லுவார். பிராட்வேயில் ஆரிய பவனில் ஒரு தோசை, வாசல் கடையிலேயே ஒரு பீடா, இரண்டு சிகரெட்டுகள், தீப்பெட்டி, ஏன் ஒரு வாழைப் பழமும் கூட என்று இப்படியெல்லாம் செலவழித்தும் காசு கொஞ்சம் எஞ்சி நிற்குமாம்.

மறுபடியும் வந்து திண்ணையிலேயே உட்காருவோம். அந்திவேளை என்றால் எக்மோர் ஹைரோடின் முனைக்குப் போய், இன்று உலகப் பல்கலைக்கழக நிறுவனமாக நிற்கும் கட்டிடங்களைக் கட்டுவதற்காகக் கொட்டி வைத்திருக்கும் சுகமான மணல் பீடத்தின் மீது அமர்ந்து பேசுவோம்.

இதற்கிடையில் 1961-ம் ஆண்டு நானும் நண்பர் வையவனும் அரசினர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்தோம். காட்பாடி ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக்குத் திடீரென்று ஜெயகாந்தனே ஒருநாள் வந்து நின்ற விந்தைகளெல்லாம் நிகழ்ந்த காலம் அது. அந்தப் பயிற்சிப் பள்ளியில் வையவனைத் தவிர்த்து இன்னொரு ஆத்மாவும் எங்களுக்காகக் காத்துக் கிடந்தது. அவர்தான், வெள்ளக் குட்டையைச் சேர்ந்த எங்கள் நண்பர் ஆறுமுகம்.

அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் காலையில் ஒரு செய்தித்தாளை ஆய்ந்து கண்டுபிடித்து, காஸினோ தியேட்டரில் காலைக் காட்சியாகத் திரையிடப்பட்ட சார்லி சாப்ளினின் ‘லைம் லைட்’ படத்துக்கு என்னை அழைத்துச் சென்றார். படத்தின் இடையே, சார்லி சாப்ளின் ஒரு ரோஜாப் பூவை எடுத்துப் பார்த்து, அதை இரக்கம் இல்லாமல் வாயில் போட்டு மென்று சாப்பிடுகிற காட்சியின்போது, என்புறம் மெல்லச் சாய்ந்து, ‘‘அந்த ரோஜாப் பூ கலையின் உருவகம்!’’ என்றார் ஜெயகாந்தன்.

இன்னும் கொஞ்சம் பொறுத்து, படத்தை அவர் எப்படிப் பார்க்கிறார் என்று பார்க்கும் ஆவலில் நான் அவர் முகத்தைத் திரும்பிப் பார்த்தபோது ஒருமுறை, அந்தத் திரையரங்கின் மெல்லிய இருளில் அவர் கண்களின் ஈரம் மட்டும் பளபளப்பாய்த் தெரிந்தது. அப்போது திரையில், மாபெரும் கலைஞனாகிய சார்லி சாப்ளினின் பாத்திரம், தன் புகழையெல்லாம் இழந்து, பிழைக்கவும் வழியின்றி, பிச்சைக்காரர் தடுப்புச் சட்டத்தை ஏமாற்றியவாறு, ரகசியமான முறையில் ஒரு ரெஸ்டாரெண்டில் தொப்பியைக் கழற்றிக் கழற்றி அணிந்து பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார்!

ஒருமுறை பிராட்வே பக்கம் போனபோது, தாம்பத்யம் கதையின் களனாக அமைந்த அந்த லோன்ஸ்குயர் பார்க்கைக் காட்டினார்.

நான் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்ந்த ஓரிரு மாதங்களிலேயே கல்கியில் என்னுடைய ‘பேசாத உறவு’ என்கிற ஒரு கதை பிரசுரமானது. அதன் பிறகு ஒருமுறை நான் ஜெயகாந்தனைப் பார்க்கச் சென்றபோது, திரைக்குப் பின்னால் படுத்திருந்த அவர் அப்படியே என்னைக் கூப்பிட்டு அருகில் உட்கார வைத்துக்கொண்டார். அவ்வளவு செளஜன்யமாகிவிட்டது எங்கள் நட்பு.

படுத்திருந்தவாறே அவர். ‘‘உங்க ‘பேசாத உறவு’ கதை நல்லா இருந்தது!’’ என்று சொன்னார்.

நான் என்னமோ உடம்பு கூசுவது போல் நெளிந்தேன். ‘‘ஆனா, உங்கக்கிட்டே தாகூரின் பாதிப்பு அதிகமா இருக்குது. யார் பாதிப்பும் நம்மகிட்டே இருக்கக் கூடாது. நம்மோடது தனியா இருக்கணும்!’’ என்றும் அவர் சொன்னார். அவர் சொன்னதை நன்றாகப் புரிந்துகொண்டேன். உண்மையில் நான் பாரதிக்கு முன்பாகத் தாகூரில்தான் அதிகம் தோய்ந்திருந்தேன்.

பாரதியிடம் வராமலேயே தாகூரிடம் போவது என்பது ஒரு தமிழ் இலக்கிய மாணாக்கன் செய்யும் பெரும் பிழையல்லவா? எப்படியோ, வெகு சீக்கிரமாகவே பாரதியின் சொரூபம் எனக்குத் தெரிந்து விட்டது.

அந்த அகண்ட ஜோதியில் ஐக்கியமானபோது, தாகூரை ரசிக்கிற பழக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மங்கிப் போயிற்று. ஆனால், பாரதியார் மொழி பெயர்த்த தாகூர் சிறுகதைகளைப் படித் தால் இருவரையுமே பிடித்துப் போகும்.

1961-63 ஆகிய இரண்டு ஆண்டுகள் எனக்கு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கழிந்தன. நாங்கள் சந்திப்பதற்கு மாதக் கணக்கில் இடைவெளி விழும் காலமாக இருந்தது அது.

ஜெயகாந்தன் ஒவ்வொரு கதையாய் எழுதிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு பத்திரிகையும் அவரிடம் விரும்பிக் கதை கேட்டு வாங்கிப் பிரசுரித்தன. தமிழ் இலக்கியக் கடற்கரையில் ஒவ்வொரு கதையும் ஒரு பெரிய அலை போல் வந்து மோதியது.

நாங்கள் எங்கள் ஆசிரியர் பயிற்சிக் காலத்தை முடித்துவிட்டு, உத்தியோகம் பார்க்கும் காலத்துக்குள் புகுந்தோம்.

வாழ்வோம்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள:pisakuppysamy1943@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x