Published : 12 Aug 2017 10:11 AM
Last Updated : 12 Aug 2017 10:11 AM

சென்னையில் ஆகஸ்ட் நாடக விழா: வாய்ப்பு கிடைத்தால்தான் கலைகள் செழிக்கும்- சித்ரா விஸ்வேஸ்வரன் கருத்து

பா

ரத் கலாச்சார், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் ஆகஸ்ட் நாடகத் திருவிழா சென்னையில் கடந்த வாரம் தொடங்கியது. பாரத் கலாச்சார் தலைவர் திருமதி ஒய்ஜிபி, இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் செயலர் சித்ரா விஸ்வேஸ்வரன் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர். ஒய்.ஜி.மகேந்திரன், காத்தாடி ராமமூர்த்தி, வரதராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விழாவில் சித்ரா விஸ்வேஸ்வரன் பேசியதாவது:

நாட்டிய நாடகம், புராண நாடகங்கள், புத்தகங்கள் பதிப்பிப்பது என கலைசார்ந்த பல பணிகளை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தொடர்ந்து செய்துவருகிறது. சமூகத்துக்கு நல்ல கருத்துகளை கொண்டுசேர்க்கும் சமூக நாடகங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் எனத் தோன்றியது.

இதற்காக அரசிடம் இருந்து ரூ.15 லட்சம் நிதியும் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, பல சபாக்களுடன் இணைந்து நாடக விழாக்களை நடத்திவருகிறோம். சென்னையில் பாரதிய வித்யா பவன், கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் மதுரை, பொள்ளாச்சி என பல இடங்களில் நாடக விழாக்களை நடத்திவருகிறோம். தற்போது பாரத் கலாச்சாரோடு இணைந்து நாடக விழாவை நடத்துவதில் பெருமை கொள்கிறோம்.

நாடகக் கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும்போதுதான், அந்தக் கலை ஆரோக்கியமாக இருக்கும். அடுத்த தலைமுறைக்கு நாடகக் கலையை கொண்டு சேர்ப்பவர்களும், நாடகத் துறைக்கு வரும் இளம் கலைஞர்களும் அவசியம் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

இன்னும் பலப் பல நாடக விழாக்கள் நடக்க வேண்டும். ரசிகர்கள் பெருவாரியாகத் திரண்டு வந்து நாடகக் கலைக்கும், கலைஞர்களுக்கும் ஆதரவு தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி இலவசம்

சென்னை தி.நகர் திருமலை பிள்ளை சாலையில் உள்ள ஒய்ஜிபி அரங்கத்தில் (பாரத் கலாச்சார்) 27-ம் தேதி வரை நாடகங்கள் நடக்கின்றன. மாலை 6.45 மணிக்கு நாடகம் தொடங்குகிறது. நாடக விழாவின் முதல் நாளில் காத்தாடி ராமமூர்த்தியின் ‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்’ நாடகம் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து மதுவந்தி அருண் குழுவினரின் ‘தில்லாலங்கடி மோகனாம்பாள்’, நாடகக் காவலர் கலைக்கூடத்தின் ‘ஸ்ரீராமானுஜர்’ ஆகிய நாடகங்கள் நடந்துள்ளன.

12-ம் தேதி (இன்று) ‘நாம் என்றும் ஒருவர்’, 13-ம் தேதி ‘சதுரங்கப் பார்வை’, 14-ம் தேதி ‘கிருஷ்ண விஜயம்’, 15-ம் தேதி ‘பிராயச்சித்தம்’, 19-ம் தேதி ‘மனிதன் என்பவன்’, 20-ம் தேதி ‘விவாஹமாலை.காம்’, 26-ம் தேதி ‘இறைவன் கொடுத்த வரம்’, 27-ம் தேதி ‘உறவோடு விளையாடு’ ஆகிய நாடகங்கள் நடக்க உள்ளன. அனுமதி இலவசம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x