Published : 31 Aug 2017 09:08 AM
Last Updated : 31 Aug 2017 09:08 AM

மே.வீ.வேணுகோபாலன் 10

பி

ரபல தமிழறிஞரும் பதிப்பாசிரியரும் படைப்பாளியுமான மே.வீ.வேணுகோபாலன் (M.V.Venugopalan) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 31). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பிறந்தார் (1896). சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அஞ்சலகத்தில் உதவியாளராகவும், ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பல்வேறு வேலைகளைச் செய்தார்.

* சிறுவயது முதலே தமிழின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் கா.ர.கோவிந்தராச முதலியார், கா.நமச்சிவாய முதலியார், எம்.தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். கலா நிலையம் கேசாச்சல ஐயர் நடத்திய இரவுப் பள்ளியில் ஆங்கிலம் கற்றார். வித்வான் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.

* 1920-ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும் புரசைவாக்கம் பெப்ரீசியஸ் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். புரசைவாக்கம் குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற பல ஜெர்மானியர்களுக்குத் தமிழ் போதித்தார்.

* அவர்களுள் டாக்டர் கிராபே, ஹில்டகார்ட் உள்ளிட்டோர் குறிப்பிடத்தக்கவர்கள். செக் நாட்டு திராவிட ஆராய்ச்சியாளர், கமில் சுவலபிலும் இவரது மாணவரே. அவர், தான் எழுதிய தமிழகச் சித்தர்களைப் பற்றிய ‘தி பொயட்ஸ் ஆஃப் தி பயர்ஸ்’ என்ற நூலில் இவரது புகைப்படத்தை வெளியிட்டு, எனது குரு என குறிப்பிட்டுள்ளார்.

* உடல்நலக் குறைவு காரணமாகப் பணியை விட்டு விலகினார். பின்னர், தென்னிந்திய தமிழ்க் கல்விச் சங்கத்தின் துணைத் தலைவராக, வித்வான் தேர்வுக்குத் தனி வகுப்புகள் நடத்தியுள்ளார்.

* அரசாங்க இலக்கண, இலக்கியப் பாடநூல் குழுவிலும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி திருத்தக் குழுவிலும் தலைமைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். திருவாய்மொழி நூலின் 10 தொகுதிகளுக்கும் பதிப்பாசிரியராகவும் அண்ணாமலைப் பல்கலைக்கழக கம்பராமாயணப் பதிப்புக் குழுவின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

* பண்டைய ஏட்டுச் சுவடிகளைப் படித்தறிந்து நூல்களாகப் பதிப்பித்தார். நூல்கள் பிழையின்றி, திருத்தமான முறையில், கண்கவர் வனப்புடன் வெளிவர வேண்டும் என்பதே என் வாழ்வின் குறிக்கோள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

* ‘இறையனார் அகப்பொருள்’, ‘தொல்சொல்’, ‘வீரசோழியம்’, ‘தஞ்சைவாணன் கோவை’, ‘யசோதர காவியம்’, ‘அஷ்ட பிரபந்தம்’, ‘நளவெண்பா’ உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார். 1945-ல் காஞ்சிபுரத்தில் குடியேறிய இவர், அங்கு ‘கச்சித் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ் உணர்வைப் பரப்பினார்.

* இவரது சீவகசிந்தாமணி சொற்பொழிவு மிகவும் பிரசித்தம். இதனால் இவருக்கு ‘சிந்தாமணிச் செல்வர்’ எனப் பட்டமளித்துப் பாராட்டினர் திரு.வி.க. கவியரசு கண்ணதாசன் உள்ளிட்ட பல கவிஞர்கள். ‘பாவலர் போற்றும் மகாவித்வான் மே.வீ.வே’ என்ற இவரைக் குறித்த தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. ‘பத்திராயு’, ‘அற்புத விளக்கு’, ‘அரிச்சந்திர புராணச் சுருக்கம்’, ‘அராபிக் கதைகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் ‘அம்பலவாணன்’, ‘இளங்கோவன்’ என்ற இரண்டு நாவல்களையும் படைத்துள்ளார்.

* செந்தமிழ்க் களஞ்சியம் கலைமாமணி, தமிழ்ப் பேரவைச் செம்மல் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ‘இலக்கணத் தாத்தா’ என்றும் ‘மகாவித்வான்’ எனவும் போற்றப்பட்ட மே.வீ. வேணுகோபாலன்1985-ம் ஆண்டு தமது 89வது வயதில் மறைந்தார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x