Published : 14 Aug 2017 09:40 AM
Last Updated : 14 Aug 2017 09:40 AM

இப்படிக்கு இவர்கள்: கொசுக்களுக்குத் தீர்வு!

கொசுக்களுக்குத் தீர்வு!

மிழகத்தில் தீவிரமடைந்துவரும் டெங்கு காய்ச்சல் ‘8 நாட்களில் 600 பேர் பாதிப்பு’ கட்டுரையைப் (ஆக.11) படித்தேன். கவலையும் கவனமும் கொள்ள வேண்டிய செய்தி. உணவுப் பொருட்களிலிருந்து தின்பண்டங்கள் வரையிலும், ஒரு பொருளை உற்பத்திசெய்யும் இடத்திலிருந்து நம் வீட்டுக்குக் கொண்டுசேர்க்கும் கடத்தியாக 90% பாலிதீன் பைகளே பயன்படுகின்றன. ஆனால், பாலிதீன் பைகளை முறையாக அப்புறப்படுத்துவதில், நாம் இன்னும் 30% கூட விழிப்பும் தேர்ச்சியும் பெறவில்லை. அதேபோல, கொசு உருவாகாமல் ஆரம்பத்திலேயே தடுக்கும் உத்திகளைக் கையாள்வதில் கிராம மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லையென்பதே உண்மை. கொசு ஒழிப்பு நடவடிக்கைகளில் 100% பங்கேற்பை உறுதிசெய்ய கிராமப் பெண்களுடன் அரசு கைகோக்க வேண்டும். டயர், டியூப்புகள், பிளாஸ்டிக், பாலிதீன் பைகள் கழிவுகளை அப்புறப்படுத்தி, மறுசுழற்சித் தொழிலில் உள்ளவர்களுக்கு 18% ஆக உள்ள ஜிஎஸ்டி வரியை 0% ஆக குறைத்து அத்தொழிலில் உள்ளவர்களை ஊக்குவிக்கலாம். அதேபோல குப்பை, கழிவுநீர் அகற்றலிலும் கூடுதல் கவனம் செலுத்தினால், கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.

- க.துள்ளுக்குட்டி, நூர்சாகிபுரம்.

தமிழரின் தொன்மை

க.9-ல் வெளியான, ‘மீண்டும் தோண்டப்படுமா ஆதிச்சநல்லூர்?’ கட்டுரையில், ஒட்டுமொத்த தமிழரின் சார்பாக தம் எண்ணத்தைப் பதிவுசெய்திருக்கிறார் இரா.நாறும்பூநாதன். தமிழர் நலனில் அக்கறை காட்ட வேண்டிய மத்திய அரசு, அதற்குப் பாதகமாக நடந்துகொள்கிறது. இயல்பாக நடைபெற வேண்டிய, தொன்மையைத் தெரிந்துகொள்வதற்கான அகழ்வாய்வுப் பணிக்கு உயர்நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது. இதுவரை கொடுமணல், பொருந்தல், கீழடி முதலிய இடங்களில் கிடைத்த தொல்லியல் எச்சங்களைக் கார்பன் நுட்ப அடிப்படையில் ஆராய்ந்தபோது, சங்க காலம் என்பது கி.மு.3-லிருந்து கி.மு. 490 என்று தெரியவந்தது. ஆதிச்சநல்லூர் அகழாய்வை மீண்டும் தொடர்ந்தால்தான், தமிழரின் தொன்மை சார்ந்த பல புதிய கருத்துகளை உலகுக்கு வெளிச்சப்படுத்த முடியும்.

- யாழினி அறிவரசன், தஞ்சாவூர்.

நான்காவது தூண் நிமிருமா?

க.9-ல் வெளியான, ‘அரசுத்துவம் எனும் கொடிய மதம்’ கட்டுரையின், ‘அரசியல் தலைமைகள் ஊடகங்களுக்குப் பார்வையை வழங்கிய காலம் போய், ஊடகங்களின் பார்வையை அரசு தனதாக்கிக்கொள்கிற காலம்’ என்கிற வரிகள் மிக உண்மையானவை. 1990-களுக்கு முன்பு வரை, ஊடகங்களில் ஊடக அறம் இருந்தது. அதற்குப் பிறகு, அனைத்தும் வணிகமயமாகிப் போனது. ஊடகம் நடத்துபவர்களில் பெரும்பாலானோர் அரசியல் கட்சி சார்ந்தவர்களாக உள்ளனர். மேலும், அந்நிய நேரடி முதலீட்டை முழுமையாக அனுமதித்ததன் விளைவாக வெளிநாட்டு ஊடகங்கள், அரசின் கொள்கைகள் எப்படி வடிவமைக்கப்பட வேண்டும் என்பது உட்பட அனைத்தையும் அரசியலாக்கி தனதாக்கிக்கொண்டு லாபம் மட்டுமே பார்க்கிறது. மக்களின் நியாயமான உணர்வுகளை அரசுக்கும் அரசின் எதிர்பார்ப்புகளை மக்களுக்கும் கொண்டுசெல்கிற பாலமாக ஊடகங்கள் அமைகிறபோதுதான் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்கிற பெருமையை உறுதிப்படுத்த முடியும்.

-சே.செல்வராஜ், தஞ்சாவூர்.

ஆட்சியரின் உதவிக்கரம்

க.11 ‘இங்கே, இவர்கள், இப்படி’ பக்கத்தில் வெளியான, ‘மாணிக்கவாசகர் பிறந்த ஊரில் இன்னொரு மாணிக்கம்’ கட்டுரைப் படித்து மகிழ்ந்தேன். அண்டை மாநிலமான கேரளாவில் சிறப்பாகப் பணியாற்றி, கொச்சியின் மாவட்ட ஆட்சியராக உயர்வுபெற்றதோடு அல்லாமல் எர்ணாகுளத்தில் மக்களோடு மக்க ளாக நீர்நிலைகளில் இறங்கி தானும் தூர்வாரிப் பேர்வாங்கிய ராஜமாணிக்கம் பாராட்டுக்குரியவர். தன் அன்பில் கட்டுப்பட்ட, ‘அன்போடு கொச்சி’ அமைப்பை அழைத்து வந்து சென்னை பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உதவிக்கரம் நீட்டியது, தான் படித்த திருவாதவூர் பள்ளியைப் புனரமைப்பது போன்றவை மற்ற உயர் அதிகாரிகளும் பின்பற்ற வேண்டியவை. பணியிடத்தில் தான் சேவை செய்ய வேண்டும் என்றில்லாமல் தேவையான இடங்களில் எல்லாம் உதவிகரம் நீட்டுகிறவருக்கு ‘ராயல் சல்யூட்’ வைத்தது சரியே.

- சாமி குணசேகர், அம்மாசத்திரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x