Published : 10 Aug 2017 10:40 AM
Last Updated : 10 Aug 2017 10:40 AM

ஆர்னி டிஸிலியஸ் 10

ஸ்

வீடனைச் சேர்ந்த உயிரி வேதியியலாளரும் வேதியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான ஆர்னி டிஸிலியஸ் (Arne Tiselius)பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 10). அவரைப் பற்றிய அரிய

முத்துக்கள் பத்து:

ஸ்வீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் பிறந்தார் (1902). இவரது முழுப் பெயர், ஆர்னி வில்ஹெம் கவுரின் டிஸிலியஸ். நான்கு வயதில் தந்தையை இழந்தார். குடும்பம் காட்டன்பர்கில் குடியேறியது. அங்கு ஆரம்பப் பள்ளிக்கல்வி பயின்றார்.

உபாசலா பல்கலைக்கழகத்தில் வேதியியல், இயற்பியல் மற்றும் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். தியோடர் ஸ்வெட்பெர்க் சோதனைக் கூடத்தில் ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்து, 1930-ல் புரோட்டீன்களின் மின்பிரிகை (electrophoresis) குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டார்.

அங்கேயே வேதியியலுக்கான இணைப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். புரதங்களை அவற்றின் மின்னேற்றத்தின் அடிப்படையில் பிரிக்கும் நுட்பமான பணிக்காக மின்பிரிகையைப் பயன்படுத்தும் முறையை மேம்படுத்தினார். இயல்பாக நிகழும் அடிப்படைப் பரிமாற்ற சியோலிட்டுகளின் பரவுதல் மற்றும் பரப்புக் கவர்ச்சி நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்து கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

பின்னர் ராக்ஃபெர்ரல் அறக்கட்டளையின் ஃபெலோஷிப் பெற்று அமெரிக்கா சென்றார். அங்கு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மீண்டும் உபாசலா திரும்பிய இவர், புரோட்டீன்கள் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். இங்கு இவருக்கென்றே பிரத்யேகமாக உயிரிவேதியியல் துறை உருவாக்கப்பட்டு, அந்தத் துறையின் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

வேதியியல் சிக்கல்களுக்கு இயற்பியல் முறைகளைப் பயன்படுத்தினார். இவரது தலைமையில் உயிரிவேதியியல் துறை ஆராய்ச்சிகள் வளர்ச்சியடைந்தன. இத்துறையில் மின்னாற்பகுப்பு, கிரோமோடோகிராஃபி, இடைவெளிப் பகிர்வு ஜெல் ஃபில்டேஷன் உள்ளிட்ட ஏராளமான முறைகளைக் கண்டறிந்து மேம்படுத்தினார்.

இவர் கண்டறிந்த வழிமுறைகள், புரோட்டீன்கள் மற்றும் என்சைம்களை மட்டுமல்லாமல் டெக்ஸ்ரான் மற்றும் நியுக்ளிக் அமிலங்களை ஆராய்வதற்கும் பயன்பட்டன. ஸ்வீடனில் வீழ்ச்சி அடைந்திருந்த அறிவியல் ஆராய்ச்சிகளை மறுசீரமைக்கும் பணிகளில் முக்கிய பங்களிப்பை வழங்கினார்.

ஸ்வீடன் இயற்கை அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவராக நியமிக்கப்பட்டார். மின் பிரிகைப் பரப்புக் கவர்ச்சி பகுப்பாய்வு (adsorption analysis) மற்றும் சீரம் (serum) புரதங்களின் சிக்கலான இயல்பு குறித்த ஆய்வுகளை மேற்கொண்டார். இதற்காக 1948-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். மேலும் ரத்த சீரத்தில் உள்ள ஒரே மாதிரியான புரோடீன்களை வேதியியல் அடிப்படையில் பிரிப்பதற்கும் மின்பிரிகை முறையைப் பயன்படுத்தினார்.

ஸ்வீடன் புற்றுநோய் சங்கம் ஆராய்ச்சிக் குழுவின் தலைவராகவும், பியூர் அன்ட் அப்ளைட் கெமிஸ்ட்ரியின் சர்வதேச யூனியனின் தலைவராகவும், நோபல் அறக்கட்டளையில் துணைத் தலைவராகவும் பின்னர் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.

உலகம் முழுவதிலும் உள்ள 12 பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் அகாடமி மற்றும் லண்டன் ராயல் சொசைட்டி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட அறிவியல் கழகங்களில் கவுரவ உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அறிவியல் கண்டுபிடிப்புகள் மற்றும் வளர்ச்சியில் ஆர்வம் கொண்டிருந்தாலும் அறிவியல் வளர்ச்சி, மனிதகுலத்துக்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டிருந்தார். உயிரிவேதியியல் துறைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய ஆர்னி டிஸிலியஸ், 1971-ம் ஆண்டு தமது 69-வது வயதில் மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x