Published : 13 Aug 2017 09:19 AM
Last Updated : 13 Aug 2017 09:19 AM

ஃபிரெட்ரிக் சேங்கர் 10

ங்கிலாந்து நாட்டு உயிரிவேதியியல் அறிஞரும் வேதியியலில் இரண்டு முறை நோபல் பரிசு பெற்றவருமான ஃபிரெட்ரிக் சேங்கர் (Frederick Sanger) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 13). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

இங்கிலாந்தில் க்ளூஷெஸ்டெர்ஷேரில் உள்ள ரெண்ட்காம்ப் என்ற கிராமத்தில் பிறந்தார் (1918). ஆரம்பத்தில் வீட்டிலேயே ஆசிரியர்களை வைத்து பாடம் கற்பிக்கப்பட்டார். பின்னர் டவுன் ஸ்கூலிலும் பிரையன்ஸ் டன் பள்ளியிலும் பயின்றார்.

பள்ளியிலேயே தனது வேதியியல் ஆசிரியரோடு இணைந்து சோதனைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. இதனால் மேல்படிப்புக்காக அறிவியலையே தேர்ந்தெடுத்தார். 1936-ல் கேம்பிரிட்ஜில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் இயற்கை அறிவியல் பாடங்களைக் கற்றார். இயற்பியல், வேதியியல், உயிரி வேதியியல் மற்றும் கணிதம் கற்றார்.

கல்லூரியில் இவருக்கு இயற்பியலும் கணிதமும் கடினமாக இருந்தன. இதனால் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் இயற்பியலுக்குப் பதிலாக உடலியல் பாடம் எடுத்தார்.

பின்னர் புதிதாக உருவான உயிரி வேதியியல் துறையால் வசீகரிக்கப்பட்டார். இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜில் 1940-ல் முனைவர் பட்டப் படிப்புக்காக சமையலுக்கான புரதம், புட்களிலிருந்து பெற முடியுமா என்று ஆராய்ந்தார்.

பின்னர் அதற்குப் பதிலாக லைசின் (lysine) வளர்ச்சிதை மாற்றம் குறித்து ஆராய்ந்து, ‘அமினோ ஆசிட் லைசின் இன் தி அனிமல் பாடி’ என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார். இன்சுலின் மூலக்கூறு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

போவின் இன்சுலினின் இரண்டு பாலிபெப்டைட் சங்கிலிகளின் முழுமையான அமினோ அமில வரிசைகளை மேப்பிங் செய்தார். இன்சுலினின் முழுமையான அமினோ அமில வரிசைகளைக் கண்டறிந்தார். அனைத்துப் புரதங்களும் தனியான வரிசை மற்றும் திட்டவட்டமான ரசாயன கலவைகளைக் கொண்டுள்ளன என்ற முடிவுக்கு வர இது உதவியது.

புரதங்களின் கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புக்காக 1958-ம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். நியூக்ளிக் அமிலங்கள் குறித்து ஆராய்ந்தார். ஆர்.என்.ஏ.வின் நியூக்ளியோட்டைட் தொடர் வரிசையை இவரும் இவரது சகாக்களும் இணைந்து வரிசைப்படுத்தினர். இது ஆர்.என்.ஏ. மூலக்கூறு குறித்த சிறப்பான புரிதலுக்கு வழிகோலியது.

தனது பேக்ட்ரியோபேஜ் ஆய்வுகளுக்கு டி.என்.ஏ. மூலக்கூறுகளை வரிசைப்படுத்துதல் முறையை மேம்படுத்தினார். இது டி.என்.ஏ. வரிசைப்படுத்துதலுக்கான ‘சேங்கர் முறை’ என்று குறிப்பிடப்படுகிறது.

நியுக்ளிக் அமிலத்தின் சங்கிலித் தொடர் தொடர்பான உண்மைகளைக் கண்டுபிடித்ததற்காக 1980-ம் ஆண்டு இரண்டாம் முறையாக வேதியியலுக்கான நோபல் பரிசை வால்டர் கில்பெர்க் என்பவருடன் இணைந்து வென்றார். இதன்மூலம் 2 முறை நோபல் பரிசை வென்ற 4-வது நபராகவும், வேதியலுக்காக 2 முறை நோபல் பரிசை வென்ற ஒரே விஞ்ஞானி என்ற பெருமையையும் பெற்றார். ஒற்றை இழை வார்ப்புருக்களிலிருந்து புதிய டிஎன்ஏ போக்குகளை (strands) உருவாக்க கதிரியக்க நியூக்ளியோடைட்களை அறிமுகம் செய்தார்.

1977-ல் காப்ளே பதக்கம் பெற்றார். ராயல் சொசைட்டி, கிங்ஸ் காலேஜ் உள்ளிட்டவற்றில் ஃபெலோவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆர்டர் ஆஃப் மெரிட் என்ற கவுரவமும் பெற்றார். உயிரி வேதியியல் களத்தில் மகத்தான பங்களிப்பை வழங்கிய ஃபிரெட்ரிக் சேங்கர் 2013-ம் ஆண்டு தனது 95-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x