Last Updated : 14 Jul, 2017 02:06 PM

 

Published : 14 Jul 2017 02:06 PM
Last Updated : 14 Jul 2017 02:06 PM

அஞ்சலி: மக்கள் கலைஞன் வீர சந்தானம்

வீர.சந்தானம் எனும் ஓவியப் புயல் கரையைக் கடந்துவிட்டது. கும்பகோணத்தில் ஓவியக்கல்லூரி மாணவராக தொடங்கிய கலைவாழ்க்கையிலிருந்தே தமிழ் நிலப்பரப்பில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியவர் அவர்.

சாதாரணமாக கவிதை புத்தகங்களைப் பார்த்தால் முதலில் கவனத்தை ஈர்க்கக்கூடியது ஓவியங்கள்தான். வழக்கமான புத்தகங்களிலிருந்து இது மாறுபட்டது என்பதைத் தெரிவிக்கும் வகையிலான இந்த ஓவியங்களை சில புத்தகங்களைக் காணும்போது அட வித்தியாசமாக உள்ளதே என்று புத்தகத்தைப் புரட்டிப் பார்க்க வைத்துவிடும்.

ஆனால் கலைநுட்பத்தோடு தீட்டக்கூடிய சிரத்தைமிகுந்த இந்தக் கோட்டோவியங்களுக்குச் சொந்தக்காரர்களை அவ்வளவாக நாம் ஏனோ கண்டுகொள்வதில்லை.

நான் பல நல்ல புத்தகங்களை உண்மையில் அதன் இலக்கிய அடர்த்திக்காக மட்டும் அல்லாமல் அந்த ஓவியங்களுக்காகவும் நேசித்தது உண்டு. இந்நாட்களில் அட்டைப்படங்கள் கிராபிக்ஸ் வடிவமைப்பில் வெளியாகும் புத்தகங்கள் பெருமளவில் ஈர்க்காமல் போனதற்கும் இதுவும் ஒருகாரணமாக இருக்கலாம். அப்படியே அந்த ஓவியங்களை நேசித்தாலும் அதை வரைந்தவர்கள் பற்றி அறியும் ஆர்வம் ஏதும் இல்லாமல் கடந்துவந்த அந்த நாட்களை சற்றே குற்ற உணர்ச்சியோடு நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.

உடனே நினைவுக்கு வரவில்லையென்றாலும் இலங்கை எழுத்தாளர் கே.டேனியலின் நூல்கள் அனைத்தும் மறுபிரசுரம் செய்யப்பட்டபோது அதற்கான ஓவியங்களை வீர.சந்தானம் வரைந்திருந்ததை ஒருசேர காணநேர்ந்தது. அழுத்தப்பட்ட மக்களின் கைகள் கூட்டத்திலிருந்து முஷ்டியை உயர்த்தும் வீறுகொண்ட எழுச்சியை அந்த புத்தகங்களில் வரைந்திருப்பார்.

அவரது ஓவிய ஆர்வம் கலைஈடுபாட்டுக்கெல்லாம் காரணம் என்னவென்று அறிய முயன்றபோது இரண்டு செய்திகள் கிடைத்தன. ஒன்று அவர் கும்பகோணம் உப்பிலியப்பன் கோவிலில் பிறந்தது. இரண்டாவது அவர் கூலித்தொழிலாளியின் மகனாக வளர்ந்தது.

குடந்தையின் அத்தனை கோயில்களும் சைவ, வைணவ தெய்வங்கள் வீற்றிருக்கும் கோயில்கள் மட்டுமல்ல. அவை அத்தனையும் கலைக்கோயில்கள். சாரங்கபாணி கோயிலில் உள்ள சுற்றுப்பிரகார 300 இராமாயண கதை. சுதை ஓவியங்களை எத்தனைமுறை வேண்டுமானாலும் சென்று ரசிக்கலாம்.

அதேபோல குடந்தையின் தாராசுரத்தின் ஐராவதீஸ்வர் கோயில் பிரகாரத்தில் நடந்துசெல்லும்போது மனம் சஞ்சலத்தில் திக்குமுக்காடும். இந்த அற்புத சிற்பங்களைச் செதுக்கிய கலைஞன் எங்கே யார் அவன் அவர் பெயரைத் தெரிந்துகொள்ளமுடியவில்லை என்றெல்லாம் நம் மனம் ஆர்ப்பரிக்கும். பொதுவாக தஞ்சை, அதிலும் குடந்தை ஒரு சிறந்த கலைஞனை ஈன்றெடுத்ததில் எந்தவித வியப்பும் இல்லை.

அதிலும் குடந்தை ஓவியக்கல்லூரி நல்ல ஓவியர்களைத் தந்த மிகச்சிறந்த கல்லூரி. அங்கிருந்து வந்த வீர.சந்தானத்தின் ஓவியங்கள் பெரும்பாலும் மையநீரோட்ட ஆன்மிக தாக்கம் இன்றி நாட்டார் கலைஅம்சங்களை அடிப்படையாகக் கொண்டே வெளிப்பட்டன.

இளவயதிலேயே மும்பையில் உள்ள நெசவாளர் பணி மையத்தில் வடிவமைப்பாளராக பணியில் சேர்ந்த வீரசந்தானம், தமிழினத்திற்கான போராட்டங்களில் தன்னை ஐக்கியப்படுத்தி கொள்வதற்காக விருப்ப ஒய்வு பெற்றார்.

ஓவியங்கள் பதிந்த அளவுக்கு அவரது பெயர் பதியாத நாட்களுக்கு அப்புறம் சில காலம் கடந்து அவரைக் காணநேர்ந்தது. சில பத்தாண்டு காலமாகவே காவிரி நீர், இலங்கைத் தமிழர் பிரச்சனை, மீனவர் பிரச்சனை, கனிம வள சுரண்டல்களினால் தமிழகம் பெரும்பாலும் தார்மீக எழுச்சியின் களமாகவே இருந்து வந்துள்ளது.

அப்படியான ஒரு சிந்தனையாளர் அரங்கத்தில் ஒரு சிங்கம் கர்ஜித்துக்கொண்டிருந்ததைக் காண நேர்ந்தது. சக நண்பர் பின்னாளில் பாடலாசிரியராக பரிணமித்த கவிஞர் யுகபாரதியோடு கூட்டத்திற்கு வெளியே நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவர் வந்தார். அவர் உண்மையில் யாரென்று தெரியாதநிலையில் அவரது உணர்ச்சிவசப்பட்ட பேச்சை விமர்சன ரீதியாக அல்லாமல் விவாதமாக அவரிடம் நானும் அதே உணர்ச்சிவேகத்தில் உரையாட நேர்ந்தது.

சட்டென்று தம்பி யார் என்று கவிஞராகிய நண்பரிடம் அவரும் என்னைப்பற்றி கேட்க நானும் அவரைத் தெரிந்துகொள்ளவிரும்ப, ஒரே நேரத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது தெரியவந்தது அவர்தான் நான் தொடர்ந்து ஆர்வத்தோடு கவனித்துவந்த எனது ஆதர்ச ஓவியர் வீர.சந்தானம் என்று. மனம் ஒருகணம் துள்ளியது. ஆனால் அந்த நேரத்தில் அவரது ஓவியங்களைப் பற்றி பேசமுடியாமல் விவாதமாகவே அந்த சந்திப்பு வளர்ந்தது.

பின்னர் பலகாலம் அவரைக் காணும்போதெல்லாம் சிக்கலாகிவிடக்கூடாது என்கிற ரீதியில் அவரது நிலைப்பாடுகளைத் தெளிந்து, கவனத்தோடு உரையாடுவேன். ஆனால் ஏனோ அவரது ஓவியங்களைப் பற்றி அவருடன் பேச சந்தர்ப்பமே வாய்க்காமல் போய்விட்டது.

ஏற்கெனவே ''சந்தியா ராகத்''தில் அவர் ஓவியராகவே நடித்திருந்தாலும் பின்னர் பரவலாக பல்வேறு கதாபாத்திரங்களில் திரையில் வெளிப்பட ஆரம்பித்தார். ''அவள் பெயர் தமிழரசி''யில் என்றென்றும் மறக்கமுடியாத பாத்திரத்தை வீர.சந்தானத்திற்காக செதுக்கித் தந்திருப்பார் இயக்குநர் மீரா.கதிரவன்.

பாவைக்கூத்து எனும் பாரம்பரிய கலையை பசியிலும் வறுமையிலும் வளர்த்தெடுக்கும் ஒரு மனிதராக அப்படத்தில் வருவார். காலமாற்றம் அக்கலையை மறந்து வேகமாக செல்லும்போது அதை நம்பியிருந்த கலைஞர்களும் வாழ்க்கையிலிருந்து தூக்கியெறிப்படும்விதமான அமைந்த அவரது பாத்திரம் மனதைவிட்டு அகலாதது. அதில் கலைவாழ்வின் உண்மைத்தன்மையை உணர்ந்த அவரது பங்களிப்பு நினைக்கும்போதெல்லாம் நெஞ்சை கனக்கச் செய்யக்கூடியது.

உடைந்து கிடக்கும் சமூகங்களை ஒன்றாக இணைக்கும் முயற்சியின் அரசியல் இணைப்புப் பாலமாக அவர் திகழ்ந்ததை தமிழகம் மறக்காது. ஆனால் அதன்பிறகு நேர்ந்த காதல் மறுப்பு எனும் சாதிஆதிக்கப் போக்குகள் அந்த இயக்கங்களை என்றென்றும் ஒன்றாகிவிடாமல் ஆக்கிவிட்டன. இதையெல்லாம் கண்டு எப்படி அவரது மனம் கொந்தளிக்காமல் இருக்கமுடியும்.

பிற ஓவியர்களைப் போல கலையை வெறும் தொழில்சார்ந்த கைவினைப்பேறாக அவர் கருதவில்லை. மக்கள் சமூகத்துக்கு அப்பால் இருந்துகொண்டு உப்பரிகையில் அமர்ந்தும் தூரிகையை எடுத்தவரில்லை அவர். வாழ்வின் நெரிசலில் புழங்கியவாறே அவர் தனக்கான நண்பர்களைக் கண்டடைந்தார்.

அதன்வழியேதான் சமூக இயக்கங்கள், அரசியல் வெளி வட்டங்கள், திரைத்துறைப் பயணங்கள் யாவும் அவருக்கு பாதை அமைத்துத் தந்தன. அப்படியாகத்தான், இன்று விழிப்படைந்துள்ள இளைய சமுதாயமே கண்ணீர் விட்டு அவரை வழியனுப்பிவைக்கும் அவரது இந்த இறுதிப் பயணமும் கூட.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x