Last Updated : 20 Jul, 2017 08:30 PM

 

Published : 20 Jul 2017 08:30 PM
Last Updated : 20 Jul 2017 08:30 PM

இவர்களுக்கு நாம் பொறுப்பில்லையா?

பரபரப்பாக வாகனங்கள் விரைந்துகொண்டிருக்கும் சாலையை ஒவ்வொரு முறை நாம் கடக்கும் போதும் நம் மனதில் எழும் அனைத்து உணர்வுகளையும் புறந்தள்ளிவிடும் சக்தி அதே சாலையை ஒரு மாற்றுத்திறனாளி கடக்கும் முயற்சியில் ஏற்படும் சிரமங்களுக்குண்டு.

நம்மில் பலர் அவர்களுக்கு உதவி செய்து நமது மனதை ஆற்றுப்படுத்திக் கொண்டாலும், அடுத்தகணம் அவர்கள் எம்மாதிரியான சிக்கலை சந்திக்கப்போகிறார்கள் என்றோ, அவர்களின் குடும்பச் சூழல், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் நமக்குக்கிட்டிய சமூகப் பொருளாதார சம வாய்ப்புகள் அவர்களுக்கும் சாத்தியப்படுகின்றனவா என்றோ எத்துனை முறை சிந்தித்துள்ளோம்? அவர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருவதற்கான வழிமுறைகள் என்னவென்று எத்துனை பேர் அறிந்திருக்கிறோம்? அனைத்திற்கும் ஒற்றைத் தீர்வாய் அரசை அடையாளங்காட்டிடுவதோடு நமது கடமை முடிந்துவிடுவதாய் எண்ணுகிறோம். இது சரியா? இவர்களுக்கு நாம் பொறுப்பில்லையா? சற்றே சிந்திப்போம்!

சிபிஎஸ்இ-ன் சுற்றறிக்கை

மத்திய இடைநிலைக்கல்வி வாரியம் (CBSE) ஜூன் 13, 2017 அன்று தனது கட்டுப்பாட்டிற்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், சிறப்புத் தேவையுடைய அல்லது மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான தரமான கல்வியை உறுதிசெய்தலை வலியுறுத்தும் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவி 3(c) மற்றும் 9(c)-ன்படி அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளிலும் சிறப்புக் கல்வியாளர்கள் (பி.எட். சிறப்பு கல்வி / இணையான பயிற்சியில் தகுதிபெற்றவர்கள்) கட்டாயம் நியமிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

எனினும், பல சிபிஎஸ்இ பள்ளிகள் இதை நடைமுறைப்படுத்தவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. சிறப்புக் கல்வியாளர்களை உடனடியாக நியமனம் செய்ய வேண்டும், மற்றும், இது குறித்த நடவடிக்கையை பள்ளி மேலாண்மைக் குழுவிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் அச்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கான தரமான கல்வியை உறுதி செய்யும் பல சட்டங்கள், திட்டங்கள், மற்றும் ஆய்வறிக்கைகள் அரசால் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், அவை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்ற ஐயப்பாடே நம் மனதில் தொக்கி நிற்கிறது. தற்போது இவற்றை ஆராய்ந்து ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்பதையே சிபிஎஸ்இ-ன் சுற்றறிக்கை நமக்குணர்த்துகிறது.

இந்த நிலையில், கல்வியாளர்கள், பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இது குறித்து சற்றே உரக்க சிந்திக்க வேண்டும். ஏனெனில், நமக்கான உலகமும், மாற்றுத்திறனாளிகளுக்கான உலகமும் புவியியல் ரீதியாக ஒன்றாக இருந்தாலும், உணர்வு மற்றும் செயல்பாட்டு அளவில் முற்றிலும் வெவேறானவையே.

சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான கல்வி

பாடப்பொருள் எதுவாக இருந்தாலும் அது யாருக்கு கற்றுத் தரப்பட வேண்டும் என்ற நிலையிலிருந்தே நாம் கல்வியை நோக்க வேண்டும். நமக்கு அதிகம் பரிட்சயமான பொதுப் பள்ளிகளில் ஒரு ஆசிரியர் ஒரு பாடக் கருத்தை ஒரே நேரத்தில் ஒரே முறையில் வகுப்பிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றுக் கொடுப்பார்கள். பிறகு ஒரே மாதிரியான தேர்வை அனைத்து மாணவர்களும் எதிர்கொள்வார்கள். தேர்வு முடிவுகளின் அடிப்படையில் நன்றாகப் படிப்பவர்கள், சுமாராகப் படிப்பவர்கள் மற்றும் நன்றாகப் படிக்காதவர்கள் என்று மாணவர்கள் வகைப்படுத்தப்படுவார்கள்.

பொதுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் வயது மற்றும் அறிதிறனில் ஒத்திருப்பார்கள் என்ற அளவீடே இந்த கல்வி முறைக்குக் காரணம். சற்றே கூர்ந்து கவனித்தால் ஒத்த வயதுடைய அனைத்து மாணவர்களும் அறிதிறனில் ஒத்திருப்பதில்லை என்பதையே இத்தேர்வு முறை நமக்குணர்த்தும் உண்மை. இவை ஒருபுறமிருக்க, உடல் அல்லது மூளை வளர்ச்சி குறைபாடுள்ள குழந்தைகள் பொதுப் பள்ளிகளில் ஆசிரியர்கள், சக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களால் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனரா என்பது இன்றும் விவாதப் பொருளாகவே உள்ளது. இவற்றுக்கெல்லாம் விடையாகவே நாம் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான கல்வியின் அவசியத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாடு (UNCRPD-2007) சட்டமே சர்வதேச அளவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளில் முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. இந்தியா மற்ற உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இச்சட்டத்தில் கையொப்பமிட்டது மிகவும் குறிப்பிடத்தக்க செயலாகும்.

இதன் பிறகே மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்வியல் ஏற்பாடுகள் சேவை மற்றும் அனுதாபம் என்ற பார்வையிலிருந்து உரிமை மற்றும் அதிகாரமளித்தல் என்ற நிலைக்கு மாற்றம் பெற்றது. பத்தாண்டுகள் நிறைவடையும் நிலையில் இச்சட்டம் எந்தளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது மற்றும் இதன் பயனாளிகள் எம்மாதிரியான வாழ்வியல் மேம்பாட்டை அடைந்துள்ளனர் என்பதை ஆய்வுக்குட்படுத்துவது அவசியமே. ஏழு குறைபாடுகள் மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகள் சட்டம்-1995 தற்போது திருத்தப்பட்டு கற்றலில் குறைபாடுகள் மற்றும் ஆட்டிஸம் உள்ளிட்ட 24 குறைபாடுகளை வரையறை செய்து மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம்-2016 என்று மாற்றப்பட்டுள்ளது நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.

சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சி

இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அனுமதி மற்றும் அதன் நேரடி கண்காணிப்பில் நம் நாட்டில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் சிறப்புக் கல்வி ஆசிரியர் பயிற்சிப் பட்டப் படிப்பான பி.எட். (சிறப்புக் கல்வி)-ஐ நேர்முக மற்றும் தொலைநிலை வழிகளில் வழங்கி வருகின்றன. தமிழ் நாட்டில் நேர்முக வழியில் சிறப்புக் கல்வியியல் கல்லூரிகள் மூலம் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும், அழகப்பா, அன்னை தெரசா, அவிநாசிலிங்கம் போன்ற பல்கலைக்கழகங்களும், தொலைநிலை வழியில் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகமும் வழங்கி வருகின்றன.

இவ்வாறு பட்டம் பெறும் மாணவர்கள் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் 'மத்திய மறுவாழ்வுப் பதிவேட்டில்' பதிவு செய்து கொள்வது அவசியமாகும். இந்த பதிவெண் இல்லாமல் சிறப்புக் கல்வி பயிற்றுநராக இருப்பது குற்றமாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் தற்போது பார்வைக் குறைபாடு, செவித்திறன் குறைபாடு, அறிதிறன் (மன வளர்ச்சி) குறைபாடு, ஒன்றுக்கு மேற்பட்ட குறைபாடுகள், தற்புனைவு ஆழ்வு (ஆட்டிஸம்) மற்றும் கற்றலில் குறைபாடுகள் ஆகிய பிரிவுகளில் சிறப்புக் கல்வி படிப்புகள் உள்ளன.

இப்படிப்பில் பி.எட்.(பொது)-ன் பாடப்பொருள் மற்றும் பயிற்சியோடு அவற்றை மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்க எவ்வாறு பயன்படுத்துவது என்பதும் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழ்நாடு உட்பட பெரும்பாலான மாநில அரசுகள் பி.எட்.(சிறப்புக் கல்வி) படிப்பு பி.எட்.(பொது) படிப்பிற்கு இணையானது என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலும் ஆசிரியராக விரும்புவோர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் பி.எட். சிறப்புக் கல்வியில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.

சிறப்புக் கல்வியாளர்களின் அவசியம்

குறைந்தபட்ச சராசரியாக நாற்பது மாணவர்களைக் கொண்டிருக்கும் நமது பொதுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக்கவனம் செலுத்துவதென்பது பகற்கனவே. இதை ஆசிரியர்களின் இயலாமை என்று கூற அடிப்படை ஆதாரங்களில்லை. மேலும், பொதுப்பள்ளிகளுக்கான ஆசிரியர் பயிற்சியில் சிறப்புத் தேவை மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகளோ கையாளும் திறன்களோ கற்றுக் கொடுக்கப்படுவதில்லை. எனவே, குழந்தையின் குறைபாட்டின் தாக்கத்திற்கேற்ப ஒரு குறிப்பிட்ட வகுப்பை கடக்க முடியாமல் பள்ளியை விட்டு வெளியேறுகிறார் அல்லது வெளியேற்றப்படுகிறார். இந்த அவல நிலையைப் போக்கவே அனைத்துப் பள்ளிகளிலும் தகுதியான சிறப்புக் கல்வியாளர்கள் அவசியம் நியமிக்கப்பட வேண்டும்.

அனைவருக்கும் கல்வித்திட்டம் (SSA) நம் நாட்டில் நடைமுறையில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இத்திட்டத்தின் மூலம் பொதுப் பள்ளிகளில் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் அரும்பாடுபட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், அவர்களுக்கான சிறப்புக் கல்வியாளர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமிப்பதிலும் தனிக்கவனம் செலுத்தவேண்டியது கட்டாயம் என்பது பெருவாரியாக உணரப்பட்டுள்ளது. அவர்களின் பங்கும் உணர்வுகளும் மதிக்கப்படுமாயின் நமது நாட்டில் சிறப்புத் தேவையுடையவர்களுக்கான கல்வியில் அளப்பரிய சாதனைகளை புரியமுடியும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

தமிழகத்தில் மட்டும் ஏறத்தாழ 700 கல்வியியல் (பி.எட்.) கல்லூரிகள் இயங்கிவரும் அதே நேரத்தில் சிறப்புக் கல்வியியல் கல்லூரிகள் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையிலேயே இருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது. இதற்கு காரணம் என்னவென்று உற்றுநோக்கும் போது சிறப்புக் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு, சிறப்புக் கல்வி துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் பற்றிய சரியான தகவல்கள் மாணவர்கள், ஆசிரியர்கள், மற்றும் பொதுமக்களுக்கு சரியாகச் சென்றடையாததே ஆகும்.

மேலும், நமது பொதுப்புத்தியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுக்கான கல்வி பற்றிய இரண்டாம்தர எண்ணமே காரணமாகிறது. இவற்றை முறையாக அணுகி விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் கல்வித்துறையின் அனைத்து அங்கத்தினர்களும் ஈடுபட வேண்டும்.

அரசின் திட்டங்கள் வெற்றியடைவதைக் காட்டிலும் திட்டப் பயனாளிகள் பெறும் வெற்றியே உண்மையான வெற்றி என்ற நிதர்சனத்தை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம்!

-இரா.மு. தமிழ் செல்வன், சிறப்புக் கல்வி ஆய்வாளர்

தொடர்புக்கு: tamil.edn@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x