Published : 29 Jul 2016 10:25 AM
Last Updated : 29 Jul 2016 10:25 AM

பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி 10

தமிழறிஞர், மொழிபெயர்ப்பு முன்னோடி

சென்னை பல்கலைக்கழகத்தின் முதலாவது முனைவர் பட்டம் பெற்ற ஆய்வறிஞரும் தமிழ் மொழிபெயர்ப்பு முன்னோடியுமான பி.சா.சுப்பிரமணிய சாஸ்திரி (P.S.Subramaniya Shastri) பிறந்த தினம் இன்று (ஜூலை 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கொல்லிமலைப் பகுதியில் உள்ள பாலகிருஷ்ணன்பட்டியில் பிறந்தார் (1890). தந்தை புரோகிதர். நேஷனல் ஹை ஸ்கூலில் கல்வி பயின்றார். திருச்சி, பிஷப் ஹீபர் கல்லூரியில் கணிதத்தில் பட்டம் பெற்றார்.

l இலக்கணத்திலும் தத்துவ சாஸ்திரங்களி லும் நிபுணரான நீலகண்ட சாஸ்திரியிடம் சமஸ்கிருதம் பயின்றார். பிரசிடென்சி கல்லூரி பேராசிரியர் எஸ்.குப்புசாமி சாஸ்திரியிடம் அலங்கார சாஸ்திரங்களையும், காசி இந்துப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சின்னசாமியிடம் மீமாம்சமும் பயின்றார். சமஸ்கிருதத்தில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.

l திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதத் துறை தலைவராகவும் பணியாற்றினார். வித்தியாரத்தினம், வித்யாநிதி, வித்யாபூஷணம் ஆகிய பட்டங்கள் பெற்றார். ‘மகாமகிமோ பாத்தியாய’ என்ற பட்டத்தை சாகித்ய அகாடமி இவருக்குச் சூட்டியது.

l சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் முனைவராக பட்டம் பெற்றவர். ‘தமிழ் இலக்கணக் கோட்பாடுகளின் வரலாறும் சமஸ்கிருத இலக்கியத்தோடு அவற்றுக்கான தொடர்பும்’ என்ற ஆய்வுக்காக, 1930-ல் இந்தப் பெருமை கிடைத்தது. தொல்காப்பியம் முழுவதையும் ஆராய்ந்து, தமிழிலும் ஆங்கிலத்திலும் அதற்கு உரை எழுதியவர்.

l விளக்கமுறை இலக்கணம், வரலாற்று இலக்கணம், ஒப்பீட்டு இலக்கணம் என மூவகை இலக்கணத்தையும் எழுதியர் இவர் ஒருவரே. புறநானூற்றை ஆய்வு செய்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். வடமொழி இலக்கிய வரலாறு, வடமொழி வரலாறு என்ற நூல்களை எழுதினார்.

l ‘அன் என்கொயரி இன் டு தி ரிலேஷன்ஷிப் ஆஃப் தமிழ் அன்ட் சான்ஸ்கிரிட்’, ‘ஹிஸ்ட்ரி ஆஃப் கிராமாடிகல் தியரீஸ் இன் தமிழ்’, ‘கம்பாரிடிவ் கிராமர் ஆஃப் தமிழ் லாங்குவேஜ்’, ‘சங்க நூல்களும், வைதிக மார்க்கமும்’ உள்ளிட்ட நூல்களைப் படைத்தார். இக்காலத் தமிழ் இலக்கணம், இந்துமத வினா-விடை, ‘எ கிரிட்டிகல் ஸ்டடி ஆஃப் வால்மீகி ராமாயணா’, ‘சினாப்சிஸ் ஆஃப் இந்தியன் சிஸ்டம்ஸ் ஆஃப் ஃபிலாசஃபி’, ‘கைர்வாணி கிராந்தானு சரிதம்’ உள்ளிட்ட இவரது நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

l பாணினியை முழுமையாக அறியும் அபார சமஸ்கிருதப் புலமையும் பெற்றிருந்தார். காஞ்சி மகா பெரியவர் கூறியதை ஏற்று, பாணினிக்கு பதஞ்சலி எழுதிய உரையான மகாபாஷ்யத்தை ஆங்கிலத்தில் ‘லெக்சர்ஸ் ஆன் பதஞ்சலிஸ் மகாபாஷ்யா’ என 4000 பக்கங்களில் 14 பகுதிகள் கொண்ட மாபெரும் நூலாக மொழிபெயர்த்தார்.

l இதற்காக காஞ்சி மகா பெரியவர், ‘வாணி த்ரிவேதி ப்ரயாக்’ என்ற பட்டம் வழங்கிப் பாராட்டினார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள இவர் அதில் பல அதிகாரங்களை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்துள்ளார்.

l ‘அமெரிக்க மொழியியலின் தந்தை’ எனப் போற்றப்படும் லெனார்ட் ப்ளூம்ஃபீல்ட், ‘தொல்காப்பியத்தின் பெருமை சாஸ்திரியின் ஆங்கில மொழிபெயர்ப்பு மூலம் உலகம் முழுவதும் பரவியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார். உ.வே.சா, வையாபுரி பிள்ளை, சி.பி.ராமசாமி அய்யர், ரா.ராகவையங்கார் உள்ளிட்ட நம் நாட்டு அறிஞர்களும் ஸ்டெங்கனோ, ஹோல்கர் பெடர்சன் கீத் உள்ளிட்ட பல வெளிநாட்டு அறிஞர்களும் இவரது புலமையைப் பாராட்டியுள்ளனர்.

l வாழ்நாள் முழுவதையும் தமிழ்மொழி ஆராய்ச்சிகளுக்கே செலவிட் டார், இவர். டென்னிஸ் ஆட்டத்திலும் வல்லவர். இலக்கண இலக்கிய வல்லுநரும், தமிழ் ஆய்வை தனது வாழ்க்கையாகக் கொண்டிருந்த வருமான சுப்பிரமணிய சாஸ்திரி 1978-ம் ஆண்டு மறைந்தார்.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x