Published : 20 Aug 2016 10:40 AM
Last Updated : 20 Aug 2016 10:40 AM

கோவை புத்தக கண்காட்சி: வாசகர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஆர்வமிகுதி வாசகர்கள்

முறைப்படி மாலை 5 மணிக்குத்தான் புத்தகத் திருவிழா தொடங்குவதாக இருந்தது. ஆர்வ மிகுதியில் காலையிலேயே வாசகர்கள் வந்துவிட்டதால், பல கடைகளில் முன்கூட்டியே விற்பனை தொடங்கியது. அப்படி வந்தவர்களில் பொள்ளாச்சி ஜெயசித்ரா கூறும்போது, ‘பொதுவா எல்லாப் புத்தகங்களும் படிப்பேன். இப்பவெல்லாம் குழந்தைகளுக்கு உகந்த புத்தகங்களை வாங்குவதே வழக்கமாகிவிட்டது. ஸ்டோரி டெல்லிங் புக்ஸ்தான் பசங்க நிறைய விரும்பறாங்க. நான் புத்தகத் திருவிழாவுக்கு வருவது இதுதான் முதல் முறை! குளத்து மீன் கடலுக்கு வந்தது போல் எனக்கு எல்லாமே பிரமிப்பாக இருக்கிறது’ என்றார். கோவையைச் சேர்ந்த ஸ்மிதா கூறும்போது, ‘ஆன்மிகம், மனோதத்துவ புத்தகங்கள் ரொம்பப் பிடிக்கும். கோவையில் புத்தகக் காட்சி எங்கே நடந்தாலும் போயிடுவேன். சின்ன வயதிலிருந்தே படிக்கிற பழக்கம். கொடீசியாவில் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்கு இப்போதுதான் வருகிறேன்!’ என்றவர் முதல் கடைக்குள் நுழைந்தவுடனே இளங்கோவன் எழுதிய பவுத்தம், இந்தி நூல்கள் உள்ளிட்ட சில புத்தகங்களை வாங்கிவிட்டார்.

உணவுப் பொட்டலமா? பிரசாதமா?

காற்றோட்டம், விஸ்தீரணம், பாதுகாப்பு என்று புத்தகக் காட்சி நடைபெறும் இடத்தில் வசதிகள் சிறப்பாக இருந்தாலும், சில குறைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அரங்குகளில் குடிநீர் வசதி போதுமானதாக இல்லை. சிற்றுண்டிச் சாலையில், உணவு விலை கடுமையாகவும், உணவு அளவு குறைவாகவும் இருக்கிறது. உதாரணமாக ரூ.50-க்கு விற்கப்படும் தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவை கோயில் பிரசாதம் போல கொஞ்சூண்டு தரப்படுகின்றன. சுண்டுவிரல் அளவில் மிளகாய் பஜ்ஜி விற்கிறார்கள். தேநீர், காபியின் அளவையும் குறைத்து விலையை அதிகம் வைத்திருந்தார்கள்.

இதிலுமா காசு பார்ப்பது?

புத்தகக் காட்சியில் அரங்கு அமைத்திருந்த விற்பனை யாளர்கள் வெளியிலிருந்து மேசைகள் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. கொடீசியா அரங்குக்குள்தான் வாடகைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தக்காரரால் கட்டாயப்படுத்தப்பட்டார்கள். ஒரு மேசைக்கு ஒரு நாள் வாடகை ரூ.40 என்றார்கள். 5 டேபிள் எடுத்தால் 10 நாள் வாடகை 2,000 ரூபாய் என்றால், எப்படிக் கட்டுப்படியாகும் என்று தொடக்கத்திலேயே பிரச் சினை. கடைசியில், ஒரு டேபிள் 22 ரூபாய் என்று இறங்கிவந்தார் ஒப்பந்தக் காரர். இருந்தாலும், விற்பனையாளர்களின் அங்கலாய்ப்பு ஓயவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x