Published : 24 Sep 2014 11:24 AM
Last Updated : 24 Sep 2014 11:24 AM

குருதி ஆட்டம் 2 - அஞ்சு தலை நாகம்

அரியநாச்சியின் மூடிய கண்களுக்குள் கப்பல் ஓடியது. தனுஷ்கோடி தீவிலிருந்து பினாங்கு தீவுக்கு நாடு கடத்தி வந்த கப்பல். மலேசியக் கரை இறங்கி இருபது வருடங்களாகியும் தனுஷ்கோடி தீவுக் குறுமணல், கண்களை மூட விடாமல் உறுத்தியது.

காய்ந்த இலைச் சருகாய் நீண்டு கிடக்கும் தனுஷ்கோடித் தீவின் பெண் கடலும் ஆண் கடலும் சந்திக்கும் முட்டுக் கடலுக்குள் நங்கூரம் பாய்ச்சி நின்றது ‘நாடு கடத்திக் கப்பல்’.

உடுப்பு அணிந்த துப்பாக்கிகளின் நடுவே நின்றாள் அரியநாச்சி. புட்டம் மறைத்து தொங்கும் அரியநாச்சியின் தலைமுடியை இடது கையால் இறுக் கிப் பிடித்திருந்தான் டி.எஸ்.பி. ஸ்காட். அத்தை அரியநாச்சியின் தோளில் சாய்ந்துகிடந்த ஊமைச் சிறுவன் துரை சிங்கம், மலங்க மலங்க விழித்தான்.

அரைக்கண் பார்வையில் அரிய நாச்சியைக் கோதிய ஸ்காட், வலது பக்கம் திரும்பி வங்காள விரிகுடாவைப் பார்த்தான்.

நான்கு நாட்களுக்கு முந்தைய அமாவாசை இரவில் ரணசிங்கம் வைத்த குண்டு வெடித்துச் சிதறடித்த ‘கிரேட் பிரிட்டன்’ கப்பல், அலையாடிக் கொண்டிருந்தது. வெள்ளை சாம்ராஜ்ஜியமே ஊதிப் பெருத்த பிணமாய் மிதப்பது போல் உணர்ந்தான் ஸ்காட். இடது கைப்பிடி முடி இன்னும் இறுகியது. வெள்ளிப் பூண் போட்ட பிரம்பால் அரியநாச்சியின் புட்டத்தில் ஓங்கி அடித்தான். விரிகுடாவைக் கைகாட்டி கத்தினான்.

“பாருடி… அங்கே பாரு. வெடித்துச் சிதறி மிதப்பது… கப்பல் அல்ல. பக்கிங்ஹாம் பேலஸ்!”

பிரம்படி மறுபடியும் விழுந்தது. அரியநாச்சி அசையலே. அத்தையின் கன்னங்களை உள்ளங்கையால் வருடினான் துரைசிங்கம்.

ஸ்காட்டின் முகச் சதை ஆடியது. கோபம் உச்சிக் கொம்பேறியது. வருடிய பிஞ்சுக் கையை வெள்ளிப் பூண் கைப்பிரம்பால் விலக்கினான். திரும்பி பார்த்த ஊமைச் சிறுவனின் வாய்க்குள் பிரம்பை நுழைத்தான்.

“குட்டிப் பாம்பே! உங்க அப்பன் ஒரு அஞ்சு தலை நாகம். நூற்றுக்கணக்கான போலீஸுகளைக் கொத்தினான். அதிகாரி களைக் கொன்றான். கச்சேரிகளைக் கொளுத்தினான். அவனை அடிச்சுக் கொன்னு, பால் ஊத்தி மண்ணுக்குள்ளே பொதைச்சிட்டோம்.’’

அரியநாச்சி, கண்களைச் சுழற்றி ஸ்காட்டைப் பார்த்தாள்.

“அந்தப் பாம்புக்குப் பிறந்த உன்னை உயிரோடுவிட்டால்… நீ, பத்து தலை நாகமாகி எத்தனைப் பேரை கொல் வாயோ? எத்தனைப் பிணம் தின்பாயோ? ஆனாலும் ஒரு குட்டிப் பாம்பைக் கொல்ல பிரிட்டிஷ் சட்டம் என்னை அனுமதிக்கவில்லை.’’

பிரம்பை மேலும் கீழும் ஆட்டினான்.

“உங்க அப்பன் மண்ணுக்குள்ளே போயிட்டான். நீயும் உன் அத்தைக்காரியும் மலேசியக் காட்டுக்குப் போங்க. அவன் கேட்ட சுதந்தரம், இங்கே கிடைக்காது. மலேசியக் காட்டிலேதான் கிடைக்கும்.’’

‘பா… ம்ம்… ங்… ங்…’ புறப்பட ஆயத்தமான நாடு கடத்திக் கப்பல், கடலுக்குள் இருந்து கூவியது. ஒரு படகு, கரையோரம் அணைந்து நின்றது.

அரியநாச்சியின் மீது ஸ்காட்டின் கடைசிக் கோபம் கொப்பளித்தது. முன்னும் பின்னும் மாறி மாறி விழுந்த அடியில் கைப்பிரம்பு தெறித்தது.

ம்… ஹூம். அரியநாச்சி அலுங்கலே. அத்தையின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் துரைசிங்கம்.

கப்பலேறிய அரியநாச்சி, கரையில் நின்ற ஸ்காட்டைப் பார்த்து, “துப்பாக்கிப் போலீஸுகளைத் துணைக்கு வெச்சுக்கிட்டு ஒரு பொட்டச்சியை அடிக்கிற வெள்ளைக்கார நாயே! எத்தனைக் கடல் தாண்டி அனுப்புனாலும் திரும்பி வருவோம்டா... வந்து பழி தீப்போம்டா!” துரைசிங்கத்தின் கன்னம் திருப்பி,

“நேத்து வரை வாய் பேசுன இந்தப் பச்சப் பாலகனை ஊமையாக்கி அனுப்புறீங்களே… உங்களையும் உங்களுக்குத் துணை போன உள்ளூர் துரோகிகளையும், இவனே வந்து அழிப்பான்டா!” கரை கேட்க கத்தினாள்.

கப்பல் கிளம்பியது.

பத்தாம் நாள் மலேசியக் கரை இறங்கினாள். அலைக்கழிந்த கடல் பயணத்தில் அத்தையின் மடியிலேயே கிடந்தான் ஊமைச் சிறுவன்.



வெள்ளையம்மாள் கிழவி எழுபதைத் தாண்டியவள். ஒற்றை ரோமம் கூட உதிராத தலை, பஞ்சாய் நரைத்திருந் தது. உளி உளியாய் கண்ணும் மூக்கும். எப்போதாவது மூடித் திறக்கும் இமைகள். குவிந்த உதடுகளுக்கு மேல் அரும்பி மினுங்கும் பூனை ரோமம். பசுவின் நெய் நிறம். ஆப்பநாட்டு சனங்களுக்கு அருந்தலாய் வாய்க்கும் நிறம். வயதாக… வயதாக… அரண் மனைக் களை ஏறிய மேனி. இரண்டு கைகளையும் புறங்கட்டி நடக்கும் நடை. கிழட்டு ராணியின் தோற்றம். ஐம்பதாவது வயதில் சென்னைப் பட்டணம் வந்தவள்.

காடு, கழனி, கண்மாய், ஊரணி என சகதிப் பிசுக்கோடு ‘காட்டுக் காத்து’ குடித்தவளுக்கு பட்டண வாசம் ஒப்பவில்லை. பிறந்து ஆறு மாதமே ஆன பேரக் குழந்தையை அள்ளிக் கொண்டு ஊரை விட்டு வெளியேறிய வைராக்கியம், நாளுக்கு நாள் இறுக்கியது. ‘பெத்தவன் மூச்சுக் காத்தே… இவன் மேலே படக்கூடாது’ என்கிற வைராக்கியம். வந்ததோடு சரி. ஊர் இருக்கும் திசைப் பக்கம் திரும்பலே. நாளாக நாளாக பட்டண வாசம் பழகிப் போனது.

பேரன் கஜேந்திரனுக்கு இருபது வயது. பெத்துப் போட்டதும் செத்துப் போன தாயின் முகம் பார்க்காதவன். ஆறு மாதக் குழந்தையாய் ஊரை விட்டு வெளியேறியவனுக்கு அப்பன் முகம் தெரியாது.

கணக்குப்பிள்ளை ரத்னாபிஷேகம், ஊரிலிருந்து எப்போதாவது சென்னைப் பட்டணத்துக்கு வந்து போவார். ஒருநாள் தங்கி ஊர் சேதிகளைப் பேசிவிட்டு கிளம்பிவிடுவார். ரத்னா பிஷேகம்பிள்ளை கஜேந்திரனுடன் பேச ஆசைப்படுவார். கிழவி பேச விடமாட்டாள். பேரழகன் கஜேந்திரனைக் கண்கள் அகல, எட்ட நின்றே வேடிக்கை பார்ப்பார்.

‘வெகுநாட்களாய்… பிள்ளைவாள் பட்டணத்துப் பக்கம் வரக் காணோம்’

புறங்கைகளைக் கட்டியவாறு நடுக் கூடத்தில் உலாத்திக் கொண்டிருந்தாள் வெள்ளையம்மாள்.



அரியநாச்சியின் கண்களை மூட விடாமல் தனுஷ்கோடி குறு மணல் உறுத்திக் கொண்டே இருந்தது. வான் முட்டும் மரங்கள் அடர்ந்த மலேசியக் காட்டுக்குள், ஒரு சிறு பாறை மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்தாள்.

வெறிகொண்டு கட்டிப் புரளும் இரண்டு மிருகங்களின் உறுமலும் அலறலும் காட்டை அலைக்கழித்தது. இமை ஆடாமல் பார்த்துக் கொண்டிருந் தாள்.

வனக்காற்று சிலுசிலுத்தது.

- குருதி பெருகும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x