Last Updated : 14 Jan, 2017 10:48 AM

 

Published : 14 Jan 2017 10:48 AM
Last Updated : 14 Jan 2017 10:48 AM

என்னருமை தோழி..!- 12: எம்.ஜி.ஆருக்கு அளித்த உற்சாகம்!

எம்.ஜி.ஆர். சுடப்பட்டார்... ஆபத்தான நிலையில் ராயப்பேட்டை மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் என்கிற செய்தி தெரிந்ததும், உடனே நீங்கள் மருத்துவமனைக்கு பதைபதைப்புடன் புறப்பட்டீர்கள். தி.நகர் வீட்டிலிருந்து ராயப் பேட்டைக்கு பறந்த உங்கள் காரை, ஆயிரம் விளக்கு பகுதி அருகே போலீஸார் வழிமறித்தனர்.

‘‘சென்னை நகரம் முழுவதுமே பதற்றத்தில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு எந்த நேரத்திலும் வரக்கூடும். எம்.ஆர்.ராதா வீடு சூறையாடப்பட்டது. ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வாயிலில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் கொந்தளித்தபடி நிற்கின்றனர். உங்களுடன் அவர் நடித்த படம் நாளை வெளியாக உள்ள நிலையில், அவர் சுடப்பட்டது அவர்கள் ஆத்திரத்தை கிளப்பியுள்ளது. இப்போது நீங்கள் அங்கே சென்றால் வேண்டாத பரபரப்புகள் எழுந்துவிடும். தயவு செய்து வீடு திரும்புங்கள்..’’ என்று போலீசார் கேட்டு கொள்ள... வேறு வழியின்றி வீடு திரும்பினீர்கள். அவ்வப்போது சின்னவரின் அண்ணன் சக்ரபாணியிடம் விவரங்களை கேட்டுக் கொள்ள மட்டுமே உங்களால் முடிந்தது.

அன்றிரவு பதினொரு மணிக்கு, ஊர் அடங்கிய பிறகு எம்.ஜி.ஆரும், எம்.ஆர். ராதாவும் அரசுப் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அன்றிரவே இருவருக்கும் அறுவை சிகிச்சை நடந்தது. எம்.ஜி.ஆரைச் சுட்டபின் தற்கொலைக்கு முயன்ற ராதாவின் மண்டையோட்டில் பதிந்திருந்த தோட்டாக்கள் அகற்றப்பட்டன... ஆனால், எம்.ஜி.ஆரின் தொண்டையில் பாய்ந்திருந்த தோட்டாவை நீக்க முயன்றால், அவர் உயிருக்கு ஆபத்து விளையக் கூடும் என்பதை உணர்ந்த மருத்துவர்கள் அந்த முயற்சியை கைவிட்டனர்.

மறுநாள் காலை... திட்டமிட்டபடி கிரிக்கெட் மேட்சுக்கு போக தோன்றாமல், எம்.ஜி.ஆர். பற்றிய நல்ல செய்திக்காக காத்திருந்தீர்கள். அந்த செய்தியும் வந்தது. காலை பதினொரு மணிக்கு எம்.ஜி.ஆர். கண் விழித்து விட்டார் என்றதும்தான், உங்களுக்கு நிம்மதி. இருவரும் நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படம் ரிலீஸ் ஆகுமா என்கிற கவலையில் இருந்த தயாரிப்பாளர் சின்னப்பா தேவரின் வயிற்றில் பால் வார்த்தது இந்த செய்தி!

‘எம்.ஜி.ஆர். மீண்டுவிட்டார்; நலமாக உள்ளார்’ என்கிற ஸ்லைடுகளை தியேட்டர் களில் படம் தொடங்குவதற்கு முன்பாக காட்டுவதற்கு ஏற்பாடு செய்தார், படத்தின் இயக்குநர் எம்.ஏ.திருமுகம். எம்.ஜி.ஆர். சுடப்பட்டதால் அதிர்ந்து போய் ரசிகர்கள் உணர்ச்சிப் பிழம்புகளாய் படத்தினைக் காண வந்திருந்தனர்.

கதையின்படி, எம்.ஜி.ஆர். அண்ணன் மகள் கீதா என்கிற குழந்தை, ‘‘சித்தப்பா! எனக்கு துப்பாக்கி வாங்கி வா’’ என்று ஒரு காட்சியில் வசனம் பேச, ‘‘ஐயோ... தலைவரே... வேண்டாம்’’ என்கிற கதறல்கள் கூரையைப் பிளந்தன. எம்.ஜி.ஆரும் நீங்களும் தோன்றிய காட்சிகளில் எல்லாம், ‘‘அம்மு...சின்னவரை பத்திரமா பார்த்துக்க...’’ என்று கோரிக்கைகளும் எழுந்தன. எம்.ஜி.ஆருக்கு நாடெங்கும் அனுதாப அலை... தமிழகத்தில் முதன் முதலாக எழுந்த மிகப் பெரிய அனுதாப அலை அதுதான் என்று நினைக்கிறேன்.

மறுபிறவி எடுத்தபின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர். கழுத்தில் கட்டுடன் அமர்ந்திருக்கும் படங்கள் அச்சிட்ட சுவரொட்டிகள் பட்டி தொட்டியெங்கும் விளம்பரப்படுத்தப்பட்டன. காங்கிரஸ் கட்சி கவலையில் ஆழ்ந்தது. எம்.ஜி.ஆர். சுடப்பட்டதே காங்கிரஸ் கட்சியை வீழ்த்த திராவிட தலைவர்கள் அரங்கேற்றிய நாடகம் என்றுகூட சிலர் இரக்கமின்றி பிரச்சாரம் செய்தனர். தமிழ் திரையுலகம் அரசியல் ரீதியாக இரண்டுபட்டது. சிவாஜி கணேசன் தலைமையில் காமராஜை சந்தித்து ஆதரவு தெரிவித்தது திரைப்படத் துறையை சேர்ந்த ஒரு அணி!

சிவாஜி கணேசன், பத்மினி, ஜெமினி எஸ்.எஸ்.வாசன், தர், சித்ராலயா கோபு, சோவின் தந்தை ஆத்தூர் னிவாச அய்யர் போன்றவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். தரும் கோபுவும் ஓ.வி.அளகேசனுக்கு ஆதரவாகக் களம் இறங்கிப் பிரச்சாரம் செய்தனர். உங்கள் தாயார் சிவாஜி பக்கம் நிற்க, நீங்களோ உங்கள் ஆசான் எம்.ஜி.ஆர். பக்கம்!

அப்போதுதான் காங்கிரசுக்கு ஒரு யோசனை தோன்றியது. ஜெமினி பட அதிபர் எஸ்.எஸ். வாசனை அணுகி, தங்களுக்கு ஒரு பிரச்சார படத்தினைத் தயாரிக்கும்படி வேண்டிக்கொண்டார்கள். பிப்ரவரி மாதம் தேர்தல் என்பதால், ஜனவரியில் அவசரமாக ஜெமினி அந்தப் படத்தினைத் தயாரித்தது. சிவாஜியும் பத்மினியும் இரவு பகலாக படத்தில் நடித்துக் கொடுத்தனர். படத்தின் பெயர், ‘வாழ்க நம் தாயகம்’. இந்த படத்தின் கலைஞர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சிக்கு சற்று நம்பிக்கை வந்தது.

தேர்தலுக்கு முன்பாக காமராஜருக்கு சிறு விபத்து. படுக்கையில் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் கூற, வேறு வழியின்றி படுக்கையில் இருந்து அறிக்கை ஒன்றை விட்டார். ‘‘நான் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன்...’’ என்கிற புகழ்பெற்ற வாசகத்தை அப்போதுதான் அறிவித்தார்.

தேர்தல் களம் சூடு பிடித்த வேளையில், நீங்கள் மருத்துவமனை சென்று எம்.ஜி.ஆரை பார்த்தீர்கள். ‘‘தேர்தலில் திமுகவின் முதல் வெற்றி உறுதியாகிவிட்டது. அது நீங்கள் போட்டியிடும் பரங்கிமலைத் தொகுதி’’ என்று எம்.ஜி.ஆருக்கு உற்சாகம் அளித்தீர்கள்!

அந்த நேரத்தில், ‘எம்.ஜி.ஆர். காமராஜருக்கு எதிராக ஏதோ சதி செய்தார். எனவேதான் எம்.ஆர். ராதா அவரை சுட நேர்ந்தது’ என்கிற புதிய கதையும் கோடம்பாக்கத்தில் பரவியது. ‘எம்.ஜி.ஆருக்கும், ராதாவுக்கும் பணத் தகராறுதான் காரணம்’ என்று மற்றொரு கதையும் பேசப்பட்டது.

உண்மையோ வெவ்வேறான சில சம்பவங் களின் தொடர் விளைவு...!

எம்.ஜி.ஆர், சரோஜாதேவி மற்றும் எம்.ஆர்.ராதா நடித்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, எம்.ஜி.ஆரும் நீங்களும் இணைந்து நடித்த ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்பு மற்றொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. ‘பெற்றால்தான் பிள்ளையா’ யூனிட்டில் ஷூட்டிங் முடித்து விட்டு, ‘தாய்க்குத் தலைமகன்’ படப்பிடிப்புக்கு எம்.ஜி.ஆர். வருவார். ஒருநாள் அப்படி அவர் வந்தார்... ஏற்கெனவே சிவந்த அவர் முகம் கோபத்தில் ரத்த நிறமாய் மாறியிருந்தது....!.

- வரும் செவ்வாய்க்கிழமை தொடர்வேன்...

தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x