Published : 02 Apr 2017 11:19 AM
Last Updated : 02 Apr 2017 11:19 AM

காலத்தின் வாசனை: அது வேறு காலம்.. அது வேறு காக்கை!

முன்பெல்லாம் விருந்தினர் வருகைக்காக வீடுகள் காத்திருந்தன. வீட்டுக்குள் விருந்தினர் நுழைந்ததுமே நாங்கள் மூச்சை இழுத்துவிட்டு, சுற்றும்முற்றும் பார்ப்போம். வீட்டுக்குள் வழக்கமாக நிலவும் வாசனைக்குப் பதிலாக ஒரு புது வாசனை விருந்தாளியாக வந்து உட்கார்ந்திருக்கும்.

சில குறிப்பிட்ட விருந்தினர்களைக் குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள். எங்கள் வீட்டுக்கு, அறந்தாங்கி மாமா, அடியக்கமங்கலம் பெரியப்பா, திருவையாத்து பெரியம்மா, இவர்கள் வந்துவிட்டால் கொண்டாட்டம்தான். எங்களுக்குப் பிடித்த விசேஷமான தின்பண்டங்கள், பொம்மைகள் அவர்கள் பையில் இருக்கும்.

விருந்தினர் தினம்

அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே சின்னஞ்சிறு சச்சரவுகள் ஏற்பட்டு, இரண்டு பேருமே முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு ஆளுக்கொரு மூலையில் உட்கார்ந்திருக்கும்போது, விருந்தினர் வருகை அவர்களை அந்நியோன்யமான தம்பதியினராக மாற்றிவிடும். அம்மாவின் கெடுபிடியும் அப்பாவின் கீழ்ப்படிதலும் ஆச்சரியமாக இருக்கும். விருந்தாளிகள் அடிக்கடி வர மாட்டார்களா என்று இருக்கும்.

விருந்தினர் தினம் என்பது எப்படி விடியும் தெரியுமா?

காலையிலிருந்தே வீட்டுக்குள்ளிருந்து வாசலுக்கு வந்து வந்து எட்டிப் பார்த்துச் செல்வாள் அம்மா. திண்ணையில் பேப்பர் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பா கேட்பார்.

“என்ன விஷயம்.. இன்னிக்கு யாராவது விருந்தாளி வரப்போறாங்களா என்ன?”

“ஏங்க.. காலையிலேருந்து வேப்பமரத்துல காக்கா விடாமக் கத்திக்கிட்டே இருக்கே பார்க்கலியா? நிச்சயம் யாரோ விருந்தாடி வரப் போறாங்க பாருங்க.”

“அடடே.. ஆமாம்! காக்கா கத்துது. யாரு வரப் போறா? இது பலாப்பழ சீசன் ஆச்சே.. உன் தம்பிதான் வருவான், பலாப்பழத்தைத் தூக்கிக்கிட்டு” - நாங்கள் ஓடிப்போய் தெருவில் பார்ப்போம்.

அப்பா சொன்னதும் சரி, காக்கா கத்தியதும் சரி.

தூரத்தில் தெரு முனையில் அறந்தாங்கி மாமா தலையில் பலாப்பழத்துடன் வந்துகொண்டிருப்பார்.

அம்மாவுக்குக் காக்கை மொழி தெரியும்!

பலாச்சுளை விநியோகம்

திண்ணையில் பலாப்பழத்தை இறக்கி வைப்பார். அதற்குள் நானும் என் தங்கைகளும் அவரைச் சூழ்ந்து கொள்வோம். கைகால் அலம்பிக்கொண்டு வந்தவர், பலாப் பழத்தை கத்தியால் ஒரு கீறு கீறி வெயிலில் போடுவார். அவ்வளவுதான் தெருவெல்லாம் பலாப்பழ வாசனை எகிறும்!

அப்பா குடையை மடக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைவார்.

“அப்பா, இந்தக் குடையை விட மாட்டீங்களா.. வெயிலே இல்லியே!”

“அதுதான் என்னை விட மாட்டேங்குது” - அப்பா சிரிப்பார்.

இரண்டு நாள் கழித்து பலாப் பழத்தை அறுக்கும் வைபவம் நடக்கும். ஒரு கிண்ணத்தில் எண்ணெய், ஒரு சிறு துணி, கத்தி, பலாப் பழத்தின் வயிற்றைக் கீறி பலாச் சுளைகளை வெளியே எடுத்துத் தட்டில் அவர் வைப்பதே தனி அழகு!

அப்படியே பலாச் சுளைகள் தங்க நிறத்தில் தகதகக்கும். எதிர் வீடு, பக்கத்து வீடு என்று ஒரு தட்டில் வைத்து பலாச் சுளை விநியோகம் அமர்க்களமாக நடக்கும்.

பெரியப்பாவும் பிரிட்டானியா பிஸ்கட்டும்!

அடியக்கமங்கலம் பெரியப்பா ஒரு பெரிய பிரிட்டானியா பிஸ்கட் டின்னுடன் வந்துசேருவார். அப்போதெல்லாம் பிஸ்கட் டின்களில்தான் வரும். பெரியப்பா என்றால் பிரிட்டானியா பிஸ்கட்தான்!

வீட்டுக்குள் நுழைந்ததும் அவர் செய்கிற காரியம்தான் விசித்திரமானது!

அப்படியே எங்களைக் கட்டிக்கொண்டு கண்ணீர் விடுவார். கண்கள் சிவந்து, உருண்டையாகப் பெரிய விழிகளில் அப்படியே வியர்வையும், கண்ணீரும் துடிக்கும் கன்னங்களில் வழிய.. உதடுகள் கோண எதற்காக அழுகிறார் என்று தெரியாது.

அம்மாதான் சொல்வார்.. பார்த்து ரொம்ப நாளாச்சுல்ல, அதான்!

அப்பாவிடம் இப்படித்தான், ‘என்னடா ரங்கராஜா எப்படி இருக்கே?’ என்று கேட்கும்போதே உடைந்துவிடுவார். பெரிய உடம்பு அவருக்கு, அழுகையில் அது குலுங்குவது தெரியும்.

இந்த சோகமெல்லாம் சில நிமிடங்களே நீடிக்கும்.

அதற்குப் பின் பெரியப்பாவும் அப்பாவும் திண்ணையில் உட்கார்ந்து சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டுக்கு வந்த வேதாளம்

திருவையாத்துப் பெரியம்மா வரும்போது, பட்டி விக்கிரமாதித்தன் சேனைப் பரிவாரங்களுடன் வருவதுபோல இருக்கும். இரவு அவர் சொல்லப்போகும் விக்கிரமாதித்தன் - வேதாளம் கதைகளுக்காக அவர்களை அழைத்துவந்திருப்பது போல இருக்கும்.

இரவில் எதிர் வீட்டுக் கிழவரின் இருமல்கூட குதிரை கனைப்பதுபோல இருக்கும். பெரியம்மாவின் கதை சொல்லும் விசேஷம் அப்படி!

பாட்டியின் கொட்டுக்கூடையிலிருந்து வெளிப்படும் ஆச்சரியங்கள் கொஞ்சமல்ல. உதடுகளை ஒட்டிக்கொள்ள வைக்கும் பழங்கள், வெள்ளை முறுக்கு, மரப்பாச்சி சொப்புச் சாமான்கள்...

இப்படியாக அப்பா வழியிலும், அம்மா வழியிலும் விருந்தினர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். காக்கை கத்திக்கொண்டே இருக்கும்.

ஒரு தலைமுறைச் சக்கரம் உருண்டுவிட்டது.

இப்போதும் காக்கை கத்தவே செய்கிறது.. ஆனால் விருந்தினர் யாரும் வருவது இல்லை. வருகிறார்களா என்று எட்டிப் பார்க்கும் அம்மாக்களும் இல்லை.

அது வேறு காலம்.. அது வேறு காக்கை!

- தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x