Published : 21 Jul 2016 11:04 AM
Last Updated : 21 Jul 2016 11:04 AM

உமாசங்கர் ஜோஷி 10

உமாசங்கர் ஜோஷி - சுதந்திரப் போராட்ட வீரர், இலக்கியவாதி

சுதந்திரப் போராட்ட வீரரும் குஜராத் இலக்கியக் களத்தில் முக்கிய படைப்பாளியும் ஞானபீட விருது வென்றவருமான உமாசங்கர் ஜோஷி (Umashankar Joshi) பிறந்த தினம் இன்று (ஜூலை 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* குஜராத் மாநிலம், சாபர்கண்ட் மாவட்டத்தின் பாம்னா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர் (1911). தந்தை எஸ்டேட் நிர்வாகி. அகமதா பாத் மேல்நிலைப் பள்ளியில் பயின்றார். குஜராத் கல்லூரியில் பொருளாதாரம் மற்றும் வரலாற்றில் பட்டம் பெற்றார்.

* காந்தியடிகளின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார். 1930-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்ட இவர், தன் படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.

* விடுதலை இயக்கப் போராட்டங்களில் கலந்துகொண்டதால், 8 மாதங்கள் சபர்மதி மற்றும் வைசாபுர் சிறைகளில் அடைக்கப்பட்டார். கோக்லிபாய் உயர்நிலைப் பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பம்பாய் பல்கலைக்கழகத்தில் பயின்று குஜராத்தி மற்றும் சமஸ்கிருதத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றார்.

* சிறுவயது முதலே வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கிராமத்து இயற்கை காட்சிகள், கோயில் விழாக்கள் முதலான கலாச்சார நிகழ்வுகள் இவரது படைப்பாற்றலுக்கு உந்து சக்தியாக அமைந்தன. 1931-ல் வெளிவந்த 'விஷ்வசாந்தி' என்ற காவியம் இவரை இலக்கிய உலகில் முக்கியப் படைப்பாளியாக உயர்த்தியது.

* 'கங்கோத்ரி', 'நிஷீத்', 'ப்ராசீனா', 'ஆதித்ய', 'வசந்த் வர்ஷ்', 'மஹாபிரஸ்தான்' (காவியம்) 'அபிக்ஞ' (ஓரங்க நாடகம்), 'சாப்னாபரா', 'ஷஹீத்', 'ஸ்ராவணி மேணோ', 'விஸாமோ', 'கோஷ்டீ', 'உகாடிபாரி', 'க்ளாந்த்கவி', 'ஹவேலி' உள்ளிட்ட இவரது படைப்புகள் குஜராத் இலக்கியத்துக்கு வளம் சேர்த்தன

* காளிதாசனின் 'சாகுந்தலம்', பாவபூதியின் 'உத்தர் ராம்சரித்', 'ஈஷாவாஸ்யா உபநிடதம்' உள்ளிட்ட பல படைப்புகளை குஜராத்தியில் மொழிபெயர்த்துள்ளார். கல்வி, அரசியல், தற்கால சமூகப் பிரச்சினைகள் ஆகியவை இவரது படைப்புகளின் கருவாக விளங்கின.

* 1948-ல் இவரை குஜராத் பாடநூல் கமிட்டித் தலைவராக குஜராத் அரசு நியமனம் செய்தது. குஜராத் சாகித்ய பரிஷத் மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய அமைப்புகளில் தலைமை பொறுப்பில் பணியாற்றியுள்ளார். 1956-ல் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளில் 'பொதுக் கல்வி' நிலவரம் குறித்து ஆராய்வதற்காக அரசு சார்பில் அனுப்பி வைக்கப்பட்டார்.

* குஜராத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் இலக்கியத் துறைத் தலைவராகவும், 1970-ல் துணைவேந்தராகவும் செயல்பட்டார். 1979-ல் சாந்திநிகேதன் பல்கலைக்கழக வேந்தராகவும் பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 'நிஷீத்' என்ற காவியத்துக்காக 1967-ல் ஞானபீட விருது பெற்றார். மேலும் ரஞ்சித்ராம் சுவர்ண சந்திரக், நர்மத் சுவர்ண சந்திரக் பரிசுகள், சோவியத் நேரு விருது, தில்லி சாகித்ய அகாடமி விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். 'சன்ஸ்கிதி' என்ற இதழை நடத்தி, அதில் கட்டுரைகள் எழுதிவந்தார்.

* 'குஜராத் மொழியில் எழுதும் இந்திய எழுத்தாளர்' என்று தன்னைக் கூறிக்கொள்ளவே இவர் விரும்பினார். கவிஞர், கதாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், பத்திரிகையாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்டவரும் குஜராத் இலக்கிய வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்தவருமான உமாசங்கர் ஜோஷி 1988-ம் ஆண்டு, 77-வது வயதில் காலமானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x