Last Updated : 08 Apr, 2017 02:06 PM

 

Published : 08 Apr 2017 02:06 PM
Last Updated : 08 Apr 2017 02:06 PM

நான்லீனியர்: மதிப்புக்குரியதா தேசிய திரைப்பட விருதுகள்?

ஒரு காலத்தில் 'அவார்டு படம்' என்றாலே பொழுதுபோக்கு ரசிகர்கள் அலறக் கூடிய சூழல் இருந்தது. அதற்கு, ஆரம்ப காலகட்டத்தில் தேசிய திரைப்பட விருதுகளின் தெரிவுப் பட்டியல் முக்கியக் காரணங்களுள் ஒன்று.

'ஆர்ட் ஃபிலிம்' என்ற ஒரு பிரிவே வாய்மொழியில் அதிகாரபூர்வமாக உருவாகியிருந்தது. "ரொம்ப ஸ்லோவா இருக்கும்... ஜவ்வு மாதிரி இழுப்பாங்க... பேசிகிட்டே இருப்பாங்க... பேசவே மாட்டாங்க..." - கலைத் தன்மை மிக்க சினிமா படைப்புகள் குறித்து இப்படியெல்லாம் பல வரையறைகள் சாதாரணமாக கிளறிவிடப்பட்டிருந்தது.

இப்போது இந்தப் போக்கு ஓரளவு மறைந்து, தேசிய விருதுகள், சர்வதேச விருதுகள் வெல்வதும் மக்களைத் திரையரங்குக்குக் கொண்டு வருவதற்கான உத்திகளுள் ஒன்றாக மாறியிருப்பது ஆரோக்கியமான ஒன்று.

சமீப ஆண்டுகளாக எல்லா தரப்பு ரசிகர்களுமே விரும்பக் கூடியதும், வணிக ரீதியில் வெற்றி பெற்றதுமான படங்களும் தேசிய விருதுப் பட்டியலில் அதிகம் இடம்பெறுவதை கவனிக்க முடிகிறது. இது, பெரும்பாலான மக்களின் ரசனையை அங்கீகரிப்பதுடன், வணிக நோக்க சினிமாவிலும் மக்கள் ரசனையை மேம்படுத்தக் கூடிய அம்சங்களை கூட்டுவதற்கு இது உந்துதல் தரும் என நம்பலாம்.

ஆனால், பல்வேறு மொழிகளையும் மாநிலங்களையும் பின்புலமாகக் கொண்டு இயங்கிவரும் இந்திய சினிமாவில் தேசிய விருதுகள் ஒட்டுமொத்தமாக முழு மதிப்பைப் பெற்றிருக்கக் கூடிய வகையில் இருக்கிறதா?

இதற்கு, நம்மில் பெரும்பாலானோரும் எளிதில் சொல்லக் கூடிய பதில்: "இல்லை."

ஒவ்வோர் ஆண்டும் சினிமா பின்னணியில் சிறந்து விளங்கியவர்களை உள்ளடக்கிய தெரிவுக் குழுதான் தேசிய விருதுகளை இறுதி செய்கின்றன. ஆனால், மத்தியில் ஆளும் கட்சியின் தலையீடு என்பது சில நேரங்களில் மறைமுகமாகவும், பல நேரங்களில் வெளிப்படையாகவுமே தெரிந்துவிடுகிறது. அத்துடன், மத்தியில் ஆள்வோருடன் நெருக்கமாக உள்ள இந்தி திரையுலகின் 'லாபி'யும் இங்கே முக்கியப் பங்கு வகிக்கிறது.

அதேபோல், தெரிவுக் குழுவின் தலைமையில் இருப்பவரின் 'விருப்பமும்' இங்கே முக்கியப் பங்கு வகிப்பதாகக் கருதும் நிலையை இந்த ஆண்டு அறிவிப்பில் உணர முடிந்தது.

தேசிய விருதுகளில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் பிரிவுகளில் முக்கியமானது சிறந்த நடிகர் விருது. இம்முறை 'ரஸ்டம்' இந்தி திரைப்படத்தில் நடித்த அக்‌ஷய் குமார் சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தெரிவுக் குழுவில் தலைமை வகிக்கும் பிரபல இயக்குநர் பிரியதர்ஷனின் இந்திப் படங்களில் 'கம்பெனி' ஹீரோவாக வலம்வந்தவர் அக்‌ஷய் குமார் என்பது ஏனோ இப்போது நினைவில் வந்து தொலைக்கிறது.

அக்‌ஷய் குமார் அற்புதமான நடிகர் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்ப காலகட்டத்தில் அதிரடியையும், இடையில் நகைச்சுவையும் மட்டுமே தன் அடையாளமாகக் கொண்டிருந்த அவர் இப்போது முழுமையான நடிகராக வலம் வருவதைப் பார்க்க முடிகிறது. ஆனால், 'அலிகர்' படத்துக்காக மனோஜ் பாஜ்பாய் பரிசீலிக்கப்பட வேண்டிய சூழலில், அதே காலகட்டத்தில் வெளிவந்த 'ரஸ்டம்' படத்துக்கு முன்னுரிமை கொடுத்திருப்பதுதான் இங்கே சந்தேகத்தை வலுவாக்குகிறது.

அதேபோல், நம் சமூகத்தில் தன்பாலின ஈர்ப்பாளர்களின் நிலையை அப்பட்டமாக காட்டியதுடன், உலக அளவில் திரைப்பட விழாக்களில் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட 'அலிகர்' திரைப்படம், தேசிய விருதுக்கு எந்தப் பிரிவிலும் கண்டுகொள்ளப்படவில்லை என்பது ஆட்சி செய்வோரின் விருப்பம் மட்டும் அல்ல; வெறுப்பும் இங்கே மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை உணர்த்துகிறது.

இதேபோல், சில பல உதாரணங்களுடன், இந்த ஆண்டு தேசிய விருதுகள் மீது அதிருப்தியையும், அபத்தங்களையும் வரிசைப்படுத்தலாம். ஆனால், அதற்கு இணையான எண்ணிக்கையில் நேர்மையுடன் திறமையாளர்களும் இம்முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளதால் விமர்சிக்கவும் பாராட்டவும் முடியாத இக்கட்டான நிலை ஏற்படுகிறது.

பிற்காலத்தில், எவ்வித வெளி அழுத்தங்களும் இல்லாத - அனுபவம் வாய்ந்த துறைசார் திறமையாளர்களைக் கொண்டு தன்னாட்சி அதிகாரத்தை வலுவாகக் கொண்ட தேசிய திரைப்பட விருதுகள் குழு அமைக்கப்பட்டு, இந்திய அளவில் எல்லா மொழி திரைப்படங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே தேசிய திரைப்பட விருதுகள் முழு மதிப்பைப் பெற வாய்ப்புண்டு.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, சிறந்த தமிழ்ப் படமாக 'ஜோக்கர்' தேர்வு செய்யப்பட்டது. இந்தப் படத்தில் ஜாஸ்மீன் பாடலை பாடிய சுந்தரா ஐயருக்கு சிறந்த பின்னணி பாடகர் விருது அறிவிக்கப்பட்டது. தர்மதுரை படத்தில் இடம்பெற்ற 'எந்தப் பக்கம்' பாடலுக்காக கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியர் விருதுக்கு தேர்வானார். விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான '24' படத்துக்கு சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருது அறிவிக்கப்பட்டது. இதே படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதை திரு பெறுகிறார். சிறந்த திரைப்பட விமர்சகர் விருது தனஞ்ஜெயனுக்கு வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக தமிழ் சினிமாவுக்கு 6 விருதுகள் என மகிழலாம்.

இவற்றில் கட்டாயம் தரப்பட வேண்டிய சிறந்த மாநில மொழி திரைப்பட விருதையும், திரைப்படம் சார்ந்த எழுத்துக்கு தரப்படும் விருதையும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இம்முறை தமிழ் சினிமாவுக்கு கிடைத்துள்ள தேசிய விருதுகளின் எண்ணிக்கை வெறும் 4 மட்டுமே.

"100 கோடி பட்ஜெட்... 200 கோடி வசூல்" போன்ற நம்பர்கள் மீது கவனம் செலுத்தும் தமிழ் சினிமா, இந்தப் பெருமித எண்ணிக்கையையும் கருத்தில்கொண்டால் இன்னும் மகிழ்வுக்குரியது.

- சரா சுப்ரமணியம், தொடர்புக்கு siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x