Last Updated : 03 Feb, 2017 10:38 AM

 

Published : 03 Feb 2017 10:38 AM
Last Updated : 03 Feb 2017 10:38 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 26: தொழில் நிறுவன வரலாற்றாசிரியர்

நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்களின் துறையிலும் பிறகு இந்திய ரிசர்வ் வங்கியிலும் பணி யாற்றிய ஆர்.கே.சேஷாத்ரி வங்கித் துறைக்கும் நிதி நிறுவனங்களுக்கும் அளப்பரிய பங்களிப்பைச் செய்திருக் கிறார். ‘எ ஸ்வதேசி பேங்க் ஃப்ரம் சவுத் இண்டியா’ என்ற தலைப்பில் இந்தியன் வங்கியின் 75-வது ஆண்டு நிறைவை யொட்டி 1982-ல் அவர் எழுதியதுதான் எனக்குத் தெரிந்து தென்னிந்தியாவின் முதல் தொழில் நிறுவன வரலாறு. அதற் காகவே அவரை நினைவுகூர்கிறேன். இந்தியன் வங்கியின் வரலாறு மட்டும் அவருடைய நோக்கமல்ல. மெட்றாஸில் நவீன பங்குச் சந்தை மூலம் வங்கிகளை வளர்க்க முடிந்தது என்பதையும் அதில் விவரித்திருக்கிறார். அத்துடன் வங்கி நடவடிக்கைகளும் நிதித்துறையும் தென் னிந்தியாவும் எந்தத் திசை வழியில் செல் லும் என்பதையும் ஊகித்திருக்கிறார்.

தொழில்நிறுவனங்கள் பற்றிய வர லாறுகள் மிகச் சிலதான். எனக்கு தெரிந்த வரையில் ஜெரால்டு ஜி.ஹட்சன்ஸ் எழுதிய ‘தாமஸ் பாரி: ஃப்ரீ மெர் செண்ட்’(1938) என்பதே முதல் தொழில் நிறுவன வரலாற்றுப் புத்தகம். அவரை அடியொற்றி ஹில்டன் பிரவுன், ‘பாரீஸ் ஆஃப் மெட்றாஸ்’ என்ற வரலாற்று நூலை 1954-ல் இயற்றினார். ‘ஸ்டோரி ஆஃப் பின்னீஸ்’ என்ற நூலை பிரான் சிஸ் டி சௌசா 1969-ல் எழுதினார். இப்படி 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை தென்னிந் தியாவில் தொழில் நிறுவன வரலாற்று நூல்கள் வந்துகொண்டிருந்தபோது அந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியை ஆர்.கே.சேஷாத்ரி நடுவிலேயே முறித் தார். அதற்குப் பிறகு தொழில் நிறுவனங் களின் வரலாறு பற்றிய நூல்கள் அதிகம் வரத் தொடங்கின.

தென்னிந்திய நூல்களுக்கு மட்டுமல் லாமல் வட இந்திய தொழில் நிறுவன நூல்களுக்கும் ஒரு பெரிய குறை இருந்தது. அதை இந்தியன் வங்கியின் தலைவர் எம்.வி.சுப்பா ராவ் அந்த வங்கியின் பவள விழாவில் அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார். “நம்முடைய சூழலில் நடந்த சம்பவங்கள் தொடர்பான ஆவணங்களைப் பாதுகாத்து வைத் திருக்க வேண்டும். நடப்பு வரலாறு மீது கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நம்முடைய வங்கியின் பெரிய வாடிக்கை யாளர்கள் குறித்த தகவல்களையும் அவர் கள் எப்படி நம்முடைய வங்கியால் வளர்ச்சி பெற்றார்கள் என்பதையும் வங்கியின் வளர்ச்சிக்குப் பாடுபட்ட நம்முடைய முன்னோடிகள் பற்றிய தகவல்களையும் வங்கியின் நிர் வாகக் குழு அவ்வப்போது எடுத்த முடிவுகளையும் சேகரித்து வைத்திருந்து எழுதியிருந்தால் வங்கியின் வரலாறு பற்றிய நூல் முழுமையாகவும் சுவையாகவும் பயனுள்ளதாகவும் இருந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.

நிறுவனங்களுக்கு வரலாற்று உணர்வு இல்லாததும், நன்கு பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் போதாமையும் ஒவ்வொரு தொழில் நிறுவன வரலாற்றாசிரியருக் கும் ஏற்பட்ட சாபக்கேடுகள். அரசின் ஆவணக் காப்பகங்களால் ஓரளவுக்குத் தான் தகவல்களைத் தர முடிகிறது. இவையெல்லாம் வரலாற்றுக்கு உதவும் என்ற உணர்வு நமக்கு எதிர்காலத் திலாவது ஏற்படுமா என்று சந்தேகப் படுகிறேன்.

ஆர்.கே.சேஷாத்ரியின் புத்தகம் 2007-ல் வங்கித் துறை எப்படி இருக்கும் என்று ஊகிப்பதுடன் முடிகிறது. 2007-ல் தான் இந்தியன் வங்கிக்கு 100-வது ஆண்டு. “இந்தியாவின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 3 சதவீதம் முதல் 3.5 சதவீதம் வரையில் இருப்பது எதிர்காலத்தில் உயரும். இந்தியாவின் மின்னணுவியல் தொழில்துறை வளர்ச்சி அடைந்து குடிசைத் தொழில்போல மாறிவிடும். உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தாவிட்டால் சுழற்சியில் உள்ள ரூபாய் நோட்டுகளின் மொத்த எண்ணிக்கை 2,500 கோடியாக உயர்ந்துவிடும்.

2007-ல் வங்கிகளில் போடப்படும் டெபாசிட்டுகளின் மதிப்பு மொத்த தேசிய வருவாயில் பாதியாக இருக்கும். சுமார் ரூ.3,50,000 கோடியாக இருக்கக்கூடும். 100 கோடி என்ற மதிப்பைக் குறிப்பிடும் ‘அப்ஜா’ என்ற வார்த்தை மீண்டும் புழக்கத்துக்கு வந்தாலும் வரும். அப்படிப் பார்த்தால் 3,500 அப்ஜா நோட்டுக் கற்றைகளை 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் கையாள நேரும். அவற்றில் பெரும்பாலானவை கிராமப்புறங்களில் இருக்கும். 50 கோடி முதல் 80 கோடி வரையிலான காசோலைகளை வங்கிகள் கையாள நேரும். வங்கியில் போடப்பட்டுள்ள டெபாசிட்டுகளின் மதிப்பைப் போல 6 மடங்குக்கு இந்தக் காசோலைத் தொகையின் மொத்த மதிப்பு இருக்கும். இந்த அளவுக்கு ரூபாய் நோட்டுப் புழக்கம் கிராமப்புறங்களில் இருந் தால் தனியார் லேவா-தேவிகளுக்கு தொழில் வாய்ப்பு குறைந்துவிடும். எல்லோரும் வங்கிகள் மூலமே கடன் பெறுவர். இந்த அளவுக்குப் பணப் புழக்கம் வரும் என்பதால் வங்கித் துறையில் மின்னணு சாதனங்களின் பயன்பாட்டை கணிசமான அளவு அதிகரித்தாக வேண்டும். அப்படிச் செய்ய இந்தியாவில் கணினிமயத்துக்கு அனுமதிப்பார்களா என்றும் பார்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார் சேஷாத்ரி.

வங்கித் துறை எதிர்காலத்தில் எப்படி விரிவடையும்? அதனால் என்ன விளைவுகள் ஏற்படும்? அந்த விரிவாக்கத்துக்கு என்ன தேவைப்படும் என்பதையெல்லாம் முன்கூட்டியே ஊகித்திருக்கிறார் என்பது வியப் பையே தருகிறது. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டபோது அதற்கான மசோதாவைத் தயாரித்தவர்களில் அவரும் ஒருவர் என்பதும், தென்னிந் தியாவுக்கு வங்கி ஊழியர் தேர் வாணையத்தை நிறுவியவரும் அவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x