Last Updated : 15 Jul, 2016 12:56 PM

 

Published : 15 Jul 2016 12:56 PM
Last Updated : 15 Jul 2016 12:56 PM

செட்லிங் டவுன் - சானியாவின் அசத்தல் பதிலுக்குப் பின் உடனடி மன்னிப்புக் கோரிய ராஜ்தீப்

உங்கள் வாழ்க்கையில் குழந்தை, குடும்பம் அத்தியாயம் எப்போது தொடங்கும் என டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவிடம் மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுப்பிய கேள்வியும், அதன் நீட்சியாக நடந்த உரையாடலும் இணையத்தில் வைரலாகியுள்ளது.

சானியா மிர்சா டென்னிஸ் பந்தை விளாசுவதுபோல் கேள்விகளை விளாசி வெற்றி பெற்றுவிட்டார் என்ற பாராட்டுகளும்; மூத்த பத்திரிகையாளராக இருந்தும் 'ஆன் ஏர்' மன்னிப்பு கோர ஒரு தனிப்பட்ட நேர்மை வேண்டும் என்ற கருத்துகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

அப்படி என்னதான் அந்த உரையாடலில் இருந்தது?

டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா 'ஏஸ் அகைன்ஸ்ட் ஆட்ஸ்' என்ற தனது சுயசரிதையை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து 'இந்திய டுடே' தொலைக்காட்சி சேனல் சார்பில் ராஜ்தீப் சர்தேசாய் சானியாவை தொலைபேசி மூலம் பேட்டி கண்டார்.

ராஜ்தீப் - சானியா இடையேயான உரையாடல்:

ராஜ்தீப்: புகழின் உச்சியில் இருக்கும் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் குழந்தை, குடும்பம் அத்தியாயத்தை எப்போது தொடங்கப்போகிறீர்கள்? அது துபையிலா அல்லது வேறு ஏதாவது நாட்டிலா? உங்கள் புத்தகத்தில் குடும்ப வாழ்க்கை தொடர்பான எந்தப் பதிவும் இல்லையே. இப்போதைக்கு ஓய்வு பெறவோ, செட்டில் டவுன் ஆகவோ விரும்பவில்லை எனத் தோன்றுகிறது?

சானியா: நான் செட்டில் ஆகவில்லை என நினைக்கிறீர்களா?

ராஜ்தீப்: நீங்கள் ஓய்வு குறித்தும், குடும்பம் குழந்தை குறித்தும் ஏதும் பேசவில்லையே? டென்னிஸ் தாண்டி வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது?

சானியா: நான் தாய் ஆவதை தெரிவு செய்யவில்லை என நீங்கள் மிகவும் ஏமாற்றத்தில் இருக்கிறீர்கள் போல. உலகில் நம்பர் 1 என்ற அந்தஸ்த்தில் இத்தருணத்தில் நின்று கொண்டிருக்கிறேன். அது செட்டில் ஆனதற்கு அர்த்தமில்லையா? இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நான் பதிலளிக்கிறேன். ஒரு பெண்ணாக இந்தக் கேள்வியை நான் ஒவ்வொரு முறையும் எதிர்கொள்கிறேன். நான் மட்டுமல்ல பெண்கள் அனைவருமே இதை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

முதலில் திருமணம், அப்புறம் தாய்மை பற்றிய கேள்வி. இவை இரண்டுக்குமான பதில்தான் நாங்கள் வாழ்க்கையில் நல்ல நிலையை அடைந்துவிட்டதாக கருதப்படுகிறது. நாங்கள் எத்தனை விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்றாலும், உலகளவில் டென்னிஸ் தரவரிசையில் நம்பர் 1 இடத்தில் இருந்தாலும் சரி.. அது நாங்கள் செட்டில் ஆனதாக அர்த்தப்படுவதில்லை. இருந்தாலும், நீங்கள் கேட்டது போல் தாய்மை, குடும்பம், ஓய்வு எல்லாமே நடைபெறும். ஆனால், இப்போது இல்லை. அது நடக்கும்போது நானே முன்வந்து எல்லோரிடமும் தெரிவிப்பேன்.

ராஜ்தீப்: நான் மன்னிப்பு கோர வேண்டும். அந்தக் கேள்வியை நான் மிகத் தவறாக வடிவமைத்துவிட்டேன். உறுதியாகச் சொல்கிறேன்.. நீங்கள் பேசியது அத்தனையும் மிகச் சரியானது. ஒரு ஆண் தடகள வீரரிடம் இப்படி ஒரு கேள்வியை நான் வெகு நிச்சயமாக கேட்டிருக்க மாட்டேன்.

சானியா: நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு தேசிய தொலைக்காட்சியில் மன்னிப்பு கோரிய முதல் பத்திரிகையாளர் நீங்களே.

இப்படித்தான் அந்த உரையாடல் இருந்தது.

இந்தியா டுடே யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட வீடியோ:

இந்த வீடியோவில் சரியாக 7-வது நிமிடத்திலிருந்து 10-வது நிமிடம் வரையில் இந்த உரையாடல் இடம் பெற்றுள்ளது.