Published : 08 Apr 2017 10:52 AM
Last Updated : 08 Apr 2017 10:52 AM

‘கிருஷ்ணன் - பஞ்சு’ ஆவணப்படம் வெளியீடு

கிருஷ்ணன் - பஞ்சுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. நடிகர்கள் சிவகுமார், சூர்யா ஆகியோர் இதை வெளியிட தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் பெற்றுக்கொண்டார். இயக்குநர்கள் விக்ரமன், பி.வாசு, பாக்கியராஜ் உள்ளிட்டோர் அருகில் உள்ளனர்.

திரைப்பட இயக்குநர்கள் கிருஷ்ணன் பஞ்சுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஆவணப்பட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பழம்பெரும் தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்த இயக்குநர் இணை கிருஷ்ணன் பஞ்சு. இவர்கள் இருவரது வாழ்க்கை வரலாற்றை ‘கிருஷ்ணன் பஞ்சு: புதுமைகளின் முன்னோடிகள்’ என்ற தலைப்பில் 2 மணிநேர ஆவணப்படமாக இயக்கியுள்ளார் பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான கோ.தனஞ்செயன்.

இந்த ஆவணப்படத்தை திரையிடும் விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடந்தது. ஆவணப்படத்தை திரையிடப்பட்ட பின்னர், இந்த ஆவணப்படத்தை நடிகர் சிவகுமார், சூர்யா இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் ஏவிஎம் குமரன் பெற்றுக்கொண்டார்.

சிவகுமார் பேசும்போது, ‘‘40 ஆண்டுகளாக 4 தலைமுறையினரை வைத்து கிருஷ்ணன் -பஞ்சு இருவரும் தமிழில் 41 படங்கள், இந்தியில் 11, தெலுங்கில் 3, கன்னடத்தில் 1 என மொத்தம் 56 படங்கள் இயக்கியுள்ளனர். 5 முறை தேசிய விருது பெற்ற தனிப்பெரும் சாதனையாளர்களான அவர்களைப் பற்றி 2 மணி நேரத்தில் அழகாகக் கொடுத்துள்ள இயக்குநர் தனஞ்செயனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்’’ என்றார்.

இயக்குநர் விக்ரமன் பேசும்போது, ‘‘கிருஷ்ணன் - பஞ்சு இருவரால் தமிழ் சினிமாவுக்கே பெருமை. புராணப் படங்கள் வந்துகொண்டிருந்த காலகட்டத்தில் ‘பராசக்தி’ போன்ற புரட்சிகரமான படத்தை துணிவுடன் இயக்கிச் சாதனை படைத்தனர். இயக்குநர் என்றாலே கட்டாயம் ஈகோ இருக்கும். இயக்குநராக இருந்தும், வெட்கப்படாமல் இதைச் சொல்கிறேன். அப்படியிருக்க, இருவரும் இத்தனை ஆண்டுகாலம் ஒற்றுமையாக இருந்து தமிழ் சினிமாவுக்கு வைர கிரீடம் சூட்டியிருக்கின்றனர்’’ என்றார்.

ஆவணப்படத்தை இயக்கியுள்ள கோ.தனஞ்செயன் கூறும்போது, ‘‘இப்படம் எடுப்பதுபற்றி பஞ்சுவின் 3-வது மகன் அபிமன்யு முதலில் என்னிடம் பேசினார். இப்படத்தை முடித்த பிறகு, இன்னும் பல சாதனையாளர்களின் வாழ்க்கையை ஆவணப்படமாக இயக்க ஆவலாக இருப்பதாகத் தெரிவித்தார்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x