Last Updated : 03 Mar, 2017 10:27 AM

 

Published : 03 Mar 2017 10:27 AM
Last Updated : 03 Mar 2017 10:27 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 29: எஸ்பிளனேடா? என்ன அது?

என்னுடைய (2002-ம் ஆண்டு) கட்டுரையில் எஸ்பிளனேடு என்ற இடத்தைப் பற்றி எழுதியிருந்ததைப் படித்த இளைஞர் ஒருவர் என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு, "எஸ்பிளனேடா, என்ன அது?" என்று கேட்டார்.

மெட்றாஸ் நகரில் எஸ்பிளனேடு என்ற பகுதி இருக்கிறது, ஒரு காலத்தில் அது முந்தைய தலைமுறைக்கு நன்கு தெரிந்திருந்தது, அடுத்துவந்த 2 தலைமுறைகள் அந்தப் பெயரையே கேள்விப்பட்டிருக்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

எஸ்பிளனேடு சாலை இப்போது என்.எஸ்.சி.போஸ் சாலை என்று அழைக் கப்படுகிறது. இந்திய விடுதலைக்காக இந்தியாவில் இருந்தபடியே போராடிய மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு போன்ற தலைவர்களின் பெயர்கள் மெட்றாஸ் மாநகர வீதிகளுக்குச் சுதந்திரம் கிடைத்த பிறகுதான் சூட்டப் பட்டன. வெளிநாட்டில் இருந்துகொண்டு சுதந்திரத்துக்காகப் போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பெயர், நாடு விடுதலை அடையும் முன்னரே சூட்டப்பட்டது. மகாத்மா காந்தி சாலையும் நேரு சாலையும் மக்களால் அடிக்கடி உச்சரிக்கும்படியான இடங்களுக்குச் சூட்டப்படவில்லை. ஜார்ஜ் டவுன் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட நகரின் மையப்பகுதிக்கு அருகில் இருந்த பெரிய வீதிக்கு என்.எஸ்.சி. போஸ் சாலை என்று பெயர் சூட்டப் பட்டது வியப்புக்குரியது! இந்த சாலைக்கு சைனா பஜார் சாலை என்ற பெயரும் பிரதானமாக ஒருகாலத்தில் வழங்கப்பட்டது.

எப்போது முதல் இப்படி அழைக் கப்பட்டது? அதிகாரப்பூர்வமாக எப் போது மாற்றப்பட்டது என்பது ஆராயப்பட வேண்டும். மெட்றாஸ் மாநகரில் பர்மா பஜார், ஃப்ளவர் பஜார், ரட்டன் பஜார், பாண்டி பஜார், ஈவினிங் பஜார், சைனா பஜார், மூர் மார்க்கெட், ஆதம் மார்க்கெட் என்று கடைவீதிகள் அழைக் கப்பட்டன.

எஸ்பிளனேடு என்ற இடத்துக்கு மீண்டும் வருவோம். பிரெஞ்சுக்காரர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை 1746 முதல் 1749 வரையில் தங்களுடைய ஆளுகையில் வைத்திருந்தனர். 1759-ல் பிரிட்டிஷ்காரர்கள் பிரெஞ்சுக் காரர்களை வென்று கோட்டையை மீட்டனர். பிறகு முதல் வேலையாக கோட்டைக்கு வெளியில் இருந்த இந்தியக் குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கினர். பிரெஞ்சுக்காரர்கள் மீண்டும் சண்டைக்கு வந்தால் அவர் களுக்குத் தகுந்த பதிலடி கொடுப் பதற்காக அந்த இடத்தைப் பெரிய திறந்தவெளியாக்கி அங்கே பீரங்கிகளை நிரந்தரமாக வைத்தனர். அந்த இடம் தான் எஸ்பிளனேட் என்று அழைக்கப்பட்டது. இப்போது அப்படிப்பட்ட இடங்களை ராணுவ ரீதியில் அல்லாமல், மக்கள் கூடியிருந்து பொழுது போக்கும் இடம் அல்லது விளை யாட்டுத் திடல் என்ற பொருளில் அழைக்கின்றனர்.

எஸ்பிளனேடுக்கு வடக்கில் ஜார்ஜ் டவுன் 1760-களில் வளரத் தொடங் கியது. எஸ்பிளனேடையும் ஜார்ஜ் டவுனையும் பிரிக்கும் சாலையே எஸ்பிளனேட் சாலை என்று அழைக் கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் சட்டக் கல்லூரி வளாகத்துக்கு மேற்கிலிருந்து தொடங்கும் பகுதியே சைனா பஜார் என்று அழைக்கப் படலாயிற்று.

1890-களில் எஸ்பிளனேடின் வடக்குப் பாதியில் மதறாஸபட்டணம் என்ற முதல் இந்திய நகரமான சென்னப் பட்டணம் உருவாயிற்று. இந்த வளாகத்துக்கும் ஜார்ஜ் கோட்டைக்கும் இடையில் (இப்போது ரிசர்வ் பேங்க் இருக்குமிடம்) நகரின் கடைவீதி வளர ஆரம்பித்தது. இதையும் கூட சைனா பஜார் என்று சில காலம் அழைத்திருக்கிறார்கள். எஸ்பிளனேடு விரிவடையத் தொடங் கியது. எஸ்பிளனேடின் எல்லைகள் முன்னதாகவே 1773 ஜனவரி 1 முதல் 6 பெரிய தூண்களால் அடையாளப் படுத்தப்பட்டது. அந்தத் தூண்களுக்கு வடக்கில் உள்ள பகுதி பிளாக் டவுன் என்று அழைக்கப்பட்டது. அந்த ஆறு தூண்களில் ஒன்று மட்டுமே டேர் ஹவுஸின் தென்மேற்கு மூலையில், பாரி நிறுவனத்தாரால் இன்னமும் பராமரிக்கப்படுகிறது. மாநகரில் ஒரு சில வரலாற்றுச் சின்னங்கள் மட்டுமே இத்தகைய பராமரிப்பில் இருக்கின்றன. பத்ரையன் செட்டி தெரு, ஸ்டிரிங்கர் தெரு, பொபாம்ஸ் பிராட்வே, கொண்டிச் செட்டி தெரு - லிங்கிச் செட்டி தெரு எஸ்பிளனேடுடன் சந்திக்கும் இடம் ஆகியவற்றில் இத்தகைய தூண்கள் நிறுவப்பட்டிருந்தன. பத்ரையன் தெரு சந்திப்பிலிருந்து மூலையோரக் கட்டிடத்தை 1996-ல் இடித்த போது இந்தத் தூண் தென்பட்டது. அந்தத் தூணை இடிக்க வேண்டாம் என்று கட்டிட உரிமையாளரைச் சந்தித்து வேண்டுகோள் விடுப்பதற்கு முன்னதாகவே அது இடித்துத் தள்ளப்பட்டுவிட்டது.

- சரித்திரம் பேசும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x