Published : 27 Mar 2017 10:07 AM
Last Updated : 27 Mar 2017 10:07 AM

தமிழ் இனமும் ஐக்கிய நாடுகள் சபையும்!

ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தீர்மானம் (எண்: 34/1) நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இதன்படி, இலங்கையில் நடைபெறும் புனரமைப்பு/ மறுவாழ்வு நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய இரண்டு ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே 2015 அக்டோபர் 1-ம் தேதி ஐ.நா. சபை நிறைவேற்றிய தீர்மானம் (எண்: 30/4) கூறியபடி செயல்படுத்துவதைத்தான் இப்போது நீட்டித்து இருக்கிறது. இது, அநீதி என்று (நியாயமாக) குரல்கள் எழுந்து உள்ளன.

கால நீட்டிப்பு இருக்கட்டும். அதைவிட அநியாயம், வேறு ஒன்று இருக்கிறதே!

2015-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 30/4, என்ன சொல்கிறது...? இதற்கும் முன்னதாக, எண்:19/2 - 22 மார்ச் 2012; எண்: 22/1 21 - மார்ச் 2013; எண்: 25/1 - 27 மார்ச் 2014 என்று பல தீர்மானங்கள் நிறைவேறி உள்ளன.

இவற்றில் எல்லாம், தமிழர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளதா..? மிக நிச்சயமாக இல்லை. ஐ.நா. சபை நிறைவேற்றி உள்ள அத்தனை தீர்மானங்களிலும், சமீபத்திய ஒன்றையும் சேர்த்து, ஒரு மிகப் பெரிய அநீதி, ஒளிந்து கிடக்கிறது. உண்மை; வெறும் புகார் அல்ல. இவற்றில் எந்தத் தீர்மானத்திலும் எங்கும், ‘தமிழ்', ‘தமிழர்கள்', 'தமிழ் இனம்' என்கிற சொல்லே இல்லை. ஒரே ஒருமுறை கூட, இச்சொல் வராத படிக்கு, பார்த்துப் பார்த்து மிகுந்த கவனத்துடன் இந்தத் தீர்மானங்கள் வரையப்பட்டு உள்ளன.

அடிக்கடி எல்லோராலும் குறிப்பிடப்படுவது - 2015 அக்டோபர் 1-ம்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம். (எண் : 30/1). இலங்கை நாட்டு மக்கள் அனைவரையும் பொதுவாக வைத்து, மனித உரிமைகள் காக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடுகிறது - 20 அம்சங்கள், ஐந்து பக்கங்களுக்கு நீளும் இந்தத் தீர்மானம்.

தமிழ் இன மக்களின் இழப்பு, பாதிப்பு என்றெல்லாம் தப்பித் தவறிக்கூட சொல்லவில்லை. எல்லா மக்களின் உரிமைகள் என்றுதான் ஒவ்வோர் இடத்திலும் கூறப்படுகிறது. தீர்மானம் (எண்: 30/1), இலங்கை யில் சமரசம், பொறுப்புணர்வு மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துதல் (Promoting reconciliation, accountability and human rights in Sri Lanka.) என்றுதான் தலைப்பிடுகிறது.

இலங்கையின் இறையாண்மை, சுதந்திரம், ஒற்றுமை, எல்லைகளின் ஒருமைப்பாட்டை மறுஉறுதி செய்வ தாகத்தான் இத்தீர்மானம் தொடங்கவே செய்கிறது. மனித உரிமைகளை, அடிப்படை சுதந்திரத்தை, மொத்த மக்கள் தொகையும் முழுமையாக அனுபவிப்பதை உறுதி செய்தல், அந்த நாட்டு அரசின் முழுப் பொறுப்பு என்கிறது. இது ஒட்டு மொத்தமாக இலங்கை அரசின் கட்டுப்பாட்டுக்குள் வருகிற விவகாரம்; ஐ.நா.வுக்கோ ‘மற்றவர்களுக்கோ' இதில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதை உரக்கச் சொல்வது போலத்தான் தீர்மானம் தொனிக்கிறது.

அதாவது, ‘உரிமைப் பந்து', இப்போதும், எப்போதும் இலங்கை அரசின் கோட்டுக்குள்தான் இருக்கும் என்று நிறுவுகிறது. இத்துடன் நின்று விடவில்லை. ஒரு நீண்ட பட்டியல் இட்டு இவற்றையெல்லாம் வரவேற்பதாகவும் சொல்கிறது.

அவை என்னென்ன...?

ஜனவரி, ஆகஸ்ட் 2015-ல் நடைபெற்ற ‘வரலாற்று சிறப்பு மிக்க' சுதந்திரமான நேர்மையான தேர்தல்கள் மூலம் இலங்கையில் நடைபெற்ற ஜனநாயக முறையிலான அரசியல் மாற்றத்தை; முன்னர், மோதல் (conflict) காரணமாக பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பகுதிகளில், சிவில் நிர்வாகத்தை வலுப்படுத்த எடுத்து வரும் முயற்சிகளை; உட்கட்டமைப்பு வசதிகளை மறு நிர்மாணம் செய்வதில் இலங்கை அரசு கண்டுள்ள முன்னேற்றத்தை; உள்நாட்டில் இருப்பிடம் இழந்த (displaced) ஆட்கள்; (கவனிக்கவும் - தமிழர்கள் அல்ல) மற்றும் உள் நாட்டில் இவ்வாறு உள்ள ‘எல்லா' மக்களுக்கும் உதவ வேண்டி உலக நாடுகளுக்கு இலங்கை அரசு விடுத்த அழைப்பை... மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சரியானதாகத் தோன்றும் இந்த ‘வரவேற்பு'

மொழிகள், உண்மையில் இலங்கை அரசின் எல்லா நடவடிக் கைகளுக்கும் ஒட்டு மொத்த ஆதர வைத் தெரிவிப்பதாகத்தான் உள்ளதே தவிர, மிக மோசமாக பாதிக்கப்பட்ட ஓர் இன மக்களுக்கு ஆறுதல் தருவதாக இல்லை. இதிலே இன்னொரு வேடிக்கை. லஞ்சம், ஊழல், மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் இலங்கை அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறது தீர்மானத்தின் ஓர் அம்சம்.

2015 பிப்ரவரி 4-ம்தேதி ஒரு பிரகடனத்தில், இனம், மத வன் முறையால் இறந்தோர், பாதிக்கப் பட்டோருக்கான அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டது. இத னையும் ஐ.நா. வரவேற்கிறது. சூட்சுமம் புரிகிறதா..? இது முழுக்க வும் இன வன்முறை அல்ல; மத அடிப்படையிலும் வன்முறை என்று கூறுகிறது இலங்கை அரசு. இதனைத் தான் வரவேற்கிறது ஐ.நா.சபை.

இந்தத் தீர்மானம்தான் என்று இல்லை. 2014 ஏப்ரல் 9-ம்தேதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் எண் 25/1 இதையேதான் கூறுகிறது. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ சமுதாய மக்களுக்கு எதிரான தாக்குதல்களில், ஐ.நா. சபை (alarmed) துணுக்குறு கிறதாம். கோயில், மசூதி, சர்ச் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைப் புலனாய்வு செய்ய வலியுறுத்துகிறது தீர்மானத்தின் நான்காவது அம்சம்.

‘இரு தரப்பும்' செய்த மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்களைப் புலனாய்வு செய்யக் கேட்கிறது அம்சம் 10(b). நன்றாக திட்டமிட்டு தீர்மானத்தில் எங்கும் ஒருமுறையும் 'தமிழ்' என்கிற சொல் வராமல் மிகுந்த கவனத்துடன் இலங்கை அரசு சொற்படி, ஐ.நா. இதனை வரைந்தாற்போல் தெரிகிறது.

இல்லை இல்லை. ஒரே ஒரு இடத்தில் ‘தமிழ்' வருகிறது. தீர்மானத் தின் அம்சம் 5 பக்கம் 3-ல், ஒரு போராளி அமைப்பின் ‘மீறல்கள்' காரண மாக எழுந்த இழப்புகளை ஈடு செய்வது குறித்து சொல்லப்படுகிறது. அவ் வமைப்பின் பெயரிலேயே தமிழ் இருப்ப தால் (The Liberation Tigers of Tamil Eelam) 'வேறு வழி இன்றி' தீர்மானத் திலும், ‘தமிழ்' இடம் பெற்று விடுகிறது!

இனப் போர், இனப் படுகொலை என்கிற கோணம் வராதபடியேதான் ஐ.நா. சபையின் அணுகுமுறை ஆரம்பத் தில் முதலே இருந்து வந்துள்ளது. மத அடிப்படையிலும் மோதல்கள் நிகழ்ந்ததாகவும், இலங்கையின் எல்லா மக்களும் பாதிக்கப்பட்டதாகவும், ஒட்டு மொத்த நாடுமே மறு நிர்மாணம் செய்யப்பட வேண்டும் என்பதாகவும் இலங்கை அரசு, போலியான ஒரு காட்சியை உருவகப்படுத்துகிறது; இதற்கு, ஐ.நா. சபை முற்றிலுமாகத் துணை போய் இருக்கிறது என்கிற தோற்றம் ஏற்படுவதைத் தடுக்க முடியவில்லை.

அடித்தவரை சகட்டு மேனிக்குப் பாராட்டுகிறது; அடிபட்டவர்களின் அடையாளத்தைக்கூட அங்கீகரிக்க மறுக்கிறது; இன அழிவு குறித்து எல்லாம் கவலையே இல்லை என்று, அனைவருக்கும் பொதுவான, ஓர் உலக அமைப்பு செயல்பட முடியுமா...? இலங்கை அரசு உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாக வாழ்த்துப் பத்திரம் வாசிக்கும் ஐ.நா. சபை,

‘இனம்', மொழி' ஆகிய மனித இனத்தின் ஆதி அடையாளங்களை, அகராதியில் இருந்தே அகற்றிவிட்டதோ...?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x