Last Updated : 17 Mar, 2017 10:37 AM

 

Published : 17 Mar 2017 10:37 AM
Last Updated : 17 Mar 2017 10:37 AM

மெட்றாஸ் அந்த மெட்ராஸ் 31: வயதான கால்நடைகளை பராமரிக்க ‘பிஞ்ச்ராபோல்’

‘பிஞ்ச்ராபோல்’ என்பது இந்தியவார்த்தை - ஆங்கில உரையாடல்களிலும் எழுத்துகளி லும் கலந்து விட்டிருக்கிறது. அப்படியானால் இது இந்தியாவின் எந்த மொழியாக இருக்கும் என்ற வியப்பு ஏற்பட்டது. ‘மெட்றாஸ் பிஞ்ச்ராபோல்’1908-ல்இருந்து செயல்பட்டது, வயதான கால்நடைகளையும் செயலிழந்த கால்நடைகளையும் அங்கே பராமரித்து வந்தனர். இந்நிலையில் பிஞ்ச்ராபோலுக்கே ஆபத்து வந்தது. மெட்றாஸ் மாநகர நிர்வாகம், நகருக்குள் கால்நடைகள் இருப்பதே பெரிய உபத்திரவம் என்று கருதி சம்பந்தப்பட்டவர் களுக்கு நோட்டீஸ் கொடுத்துக் கொண்டிருந்தது.

மெட்றாஸ் பிஞ்ச்ராபோல் பெரம்பூரில் கொன்னூர் நெடுஞ்சாலையில் இருந்தது. (அது பெரம்பூர் அல்ல, அயனாவரம் என்று எழுத்தாளர் ராண்டார் கை பிறகு எனக்குக் கடிதம்மூலம் விளக்கினார்). பிராணிகளுக்குக் கொடுமைகள் செய்யக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்ட பிராணிநல ஆர்வலர்கள் சங்கம் (எஸ்.பி.சி.ஏ.), மெட்றாஸ் ஹைகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தது.

வேப்பேரியில் உள்ள கால்நடை மருந்தக வளாகத்தில் மூத்த மற்றும் செயலிழந்த கால்நடைகளை வைத்துப் பராமரிக்க இடம் இல்லை, இந்நிலையில் தங்களிடம் வந்து ஒப்படைக்கப்படும் கால்நடைகளை நல்லவிதமாக பராமரிக்க நீதிமன்றம்தான் வழிகாட்ட வேண்டும் என்று மனு கோரியது. மனுவை விசாரித்த நீதிபதி எச்.டியூடர் போடாம், வேப்பேரியில் இடம் இல்லாவிட்டால் வேறு இடத்தில் கால்நடைகளைப் பராமரிக்கலாமே என்று யோசனை தெரிவித்தார்.

ஆனால் யார் இடம் தருவார்கள், செலவுக்கு என்ன செய்வது, எத்தனை பேரைக் கொண்டு பராமரிப்பது என்பது போன்ற கேள்விகளால் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படாமல் தொடர்ந்தது. 20-வது நூற்றாண்டின் முற்பகுதியில்

எஸ்.பி.சி.ஏ. சங்கத்தார், ஜார்ஜ் டவுன் பகுதியில் இதற்காகத் தொடர்ந்து சில கூட்டங்களை நடத்தி வயதான மற்றும் நடக்க முடியாத வாயில்லா ஜீவன்களான கால்நடைகளைப் பாதுகாப்பாக அடைத்து வைத்து உணவு கொடுத்துப் பராமரிக்க யாராவது இடம் தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

அப்போது நகரில் பிரபல வணிகர்களாகத் திகழ்ந்த கிரிதரதாஸ் சதுர்புஜதாஸ், லாட் கோவிந்ததாஸ் என்ற குஜராத்தியர்கள் கொன்னூர் ஹைரோடில் தங்களுக்கிருந்த 12 ஏக்கர் நிலத்தை கோ-சாலைஅமைக்க தானமாகக் கொடுத்தனர். மதோகட் ரேவா பிரதேசத் தைச் சேர்ந்த மகாராணி அந்தஇல்லத்துக்குப் பெரும் பொருளைநன்கொடையாக அளித்தார்.

அதன்பிறகு கொடையாளர்கள் எண்ணிக்கை மளமளவென்று உயர்ந்தது. ஜார்ஜ் டவுனில் அப்போது பிரபல வியாபாரிகளாக இருந்த மார்வாரிகள், சௌராஷ்டி ரர்கள், இதர குஜராத்திய வணிகர்கள் உதவினர். 1908 ஜனவரி 11-ல் பிஞ்ச்ராபோல் முறைப்படி திறந்து வைக்கப்பட்டது.

அடுத்த 36 ஆண்டுகளுக்கு பிஞ்ச்ராபோல், எஸ்.பி.சி.ஏ. சங்கத்தால் நிர்வகிக்கப்பட்டது. நிதி நெருக்கடி ஏற்பட்டதும் எஸ்.பி.சி.ஏ. அதைக் கைவிட்டது. 1915-ல் சவுகார்பேட்டை வியாபாரிகள் அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். ‘மெட்றாஸ் பிஞ்ச்ராபோல் மகாஜன் கமிட்டி’என்ற அமைப்பை இதற்காக உருவாக்கினர்.

1950-ல் பிஞ்ச்ராபோல், ‘மகாஜன் கோஷகா’ என்ற பெயர் பெற்றது. கூட்டுறவு சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் மெட்றாஸ் பிஞ்ச்ராபோல் 1960-ம் ஆண்டு பதிவு பெற்றது. சில ஆண்டுகளுக்கு முன்னால் வரையிலும்கூட 28 கொட்டடிகளில் சுமார் 2,000 கறவை மாடுகள், எருதுகள், காளைகள், காளைக் கன்றுக் குட்டிகள், பால் வற்றிய பசுக்கள், பால் வற்றிய எருமைகள், கண்பார்வை இழந்த கால்நடைகள் அங்கே பராமரிக்கப்பட்டன. இந்தக்கால்நடைகளுடன் சுமார் 2,000 புறாக்களும் வாசம் செய்தன. கால்நடைகளின் சாணம் குறைந்த விலையில் எருவாக விற்கப்பட்டது. கால்நடைகளைப் பார்த்துக்கொண்டு சுமார் 60 குடும்பங்கள் அங்கே வாழ்ந்தன.

கால்நடைகளுக்குத் தீவனம், மருந்துகள், கால்நடைகளைப் பராமரிப்போருக்கான ஊதியம் என்று ஒரு நாளைக்கு ரூ.40,000 தேவைப்பட்டது. சவுகார்பேட்டை வாசிகள் அளித்த நன்கொடையால் பிஞ்ச்ராபோல் மட்டுமல்ல ஒரு கால்நடை மருத்துவமனையும் செயல்பட்டது.

‘பிஞ்ச்ரா’ என்றால் குஜராத்தி மொழியில் கூண்டு என்று அர்த்தமாம். ‘போலா’ என்பது சிவனின் காளையாம். ‘பிஞ்ச்ராபோல்’ என்றால் ‘காளை பராமரிப்பு இல்லம்’ எனப்படும்.

- சரித்திரம் பேசும்..

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x