Published : 02 Jan 2017 10:20 AM
Last Updated : 02 Jan 2017 10:20 AM

ஜைனேந்திர குமார் 10

இந்தி இலக்கியப் படைப்பாளி

இந்தி இலக்கியத்தின் தலைசிறந்த படைப்பாளியும், மனித உளவியல் பகுப்பாய்வு பாணி எழுத்தாளர்களில் முன்னோடியுமான ஜைனேந்திர குமார் (Jainendra Kumar) பிறந்த தினம் இன்று (ஜனவரி 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* உத்தரப் பிரதேச மாநிலம் அலிகட் அருகே கவுடியாகஞ்ச் கிராமத்தில் (1905) பிறந்தார். இயற்பெயர் ஆனந்திலால். இவரது 2-வது வயதில் தந்தை இறந்தார். அதன் பிறகு, அம்மா, தாய் மாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார். ஹஸ்தினாபுரத்தில் மாமா நடத்திய ‘ரிஷப பிரம்மச்சார்யாஸ்ரம்’ என்ற குருகுலப் பள்ளியில் ஆரம்பக்கல்வி பயின்றார்.

* பஞ்சாப்புக்கு 1912-ல் சென்றவர், அங்கு மெட்ரிக் தேறினார். உயர் கல்விக்காக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்க அறைகூவலால் படிப்பை பாதி யிலேயே நிறுத்தினார். சிறிது காலம் திலக் ஸ்கூல் ஆஃப் பாலிடிக்ஸ் கல்லூரியில் பயின்றார். ஆனால், படிப்பை பூர்த்தி செய்யவில்லை.

* அம்மாவுடன் சேர்ந்து கல்கத்தாவில் வியாபார முயற்சி மேற்கொண்டார் அதில் ஓரளவு வெற்றி கிடைத்தது. ஆனால், அதில் இவரது மனம் லயிக்கவில்லை. பின்னர் நாக்பூர் சென்று அரசியல் இதழ் ஒன்றில் நிருபராகப் பணியாற்றினார்.

* லாகூரில் பிரேம்சந்துடன் இணைந்து ‘ஹிந்துஸ்தானி சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினார். அதில் டாக்டர் ஜாகிர் உசேன், ஜோஷ் மலிஹாபாத் ஆகியோர் முக்கிய உறுப்பினர்களாக செயல்பட்டனர். காந்திஜி தலைமையில் பிரேம்சந்துடன் இணைந்து ‘பாரதிய சாகித்ய பரிஷத்’ என்ற அமைப்பை நிறுவினார்.

* மீண்டும் கல்கத்தா வந்து வியாபாரத்தைத் தொடர்ந்தார். ஆனால், அது தனக்குச் சரிபட்டுவராது என்பதை உணர்ந்து, அதை விட்டுவிட் டார். எழுதுவதில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். 1926-ல் எழுதத் தொடங்கினார். 1930-ல் ‘ஃபான்சி’ என்ற இவரது கதைத் தொகுப்பு வெளிவந்தது. இது நல்ல வரவேற்பைப் பெற்று, இந்தி இலக்கியக் களத்தில் புகழ்பெற்ற கதாசிரியராக இவரை நிலைநாட்டியது.

* பல நாவல்கள், ஏராளமான கதைத் தொகுப்புகள், கட்டுரைத் தொகுப்புகளை எழுதினார். டால்ஸ்டாயின் நாடகங்கள், கதைகள் உள்ளிட்ட உலகப் புகழ்பெற்ற நூல்களை இந்தியில் மொழிபெயர்த்தார். பிரேம்சந்தை மதித்துப் போற்றிய இவர், படைப்பில் அவரது எதார்த்தப் பாணியைப் பின்பற்றவில்லை. தனக்கென்று தனித்துவம் வாய்ந்த பாணியை பின்பற்றினார்.

* எழுதுவதில் மனித உளவியல் பகுப்பாய்வு (Psychoanalytical) பாணியை கையாண்டார். உளவியல் பகுப்பாய்வு பாணியின் முன்னோடிப் படைப்பாளி என்ற பெயர் பெற்றார். இவரது படைப்புகளில் பெண்கள் பிரதான கதாபாத்திரங்களாக இருப்பர். முக்கியக் கதாபாத்திரங்கள் புரட்சியின் ஆற்றலில் நம்பிக்கை கொண்டவையாக இருக்கும்.

* பிரேம்சந்துடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றார். கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பிரேம்சந்த் மறைவுக்குப் பிறகு, அவரது ‘ஹன்ஸ்’ பத்திரிகையின் ஆசிரியராகச் செயல்பட்டார்.

* காந்தி, வினோபா, தாகூர் உள்ளிட்ட தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர். இந்துஸ்தானி அகாடமி விருது, ‘முக்திபோத்’ நாவலுக்காக 1966-ல் சாகித்ய அகாடமி விருது, 1971-ல் ‘பத்மபூஷண்’, 1979-ல் சாகித்ய அகாடமி ஃபெலோஷிப் என பல்வேறு விருதுகள், கவுரவங்கள் பெற்றவர்.

* சாகித்ய அகாடமியின் முதன்மை உறுப்பினர், ராஷ்ட்ரிய யுனெஸ்கோ அமைப்பின் உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார். இந்தி இலக்கியத்தின் புகழ்பெற்ற கதாசிரியர், நாவலாசிரியர், கட்டுரையாளர், மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட ஜைனேந்திர குமார் 83-வது வயதில் (1988) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x