Last Updated : 24 Mar, 2017 11:19 AM

 

Published : 24 Mar 2017 11:19 AM
Last Updated : 24 Mar 2017 11:19 AM

ரிப்பிட்டவரை உள்ளளவும் நினை!

ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் எனப்படும் போக்குகள் பின்னால் ஓடும் போக்கு என்பது பெரிய போதை. நமக்கு சிறிதும் தொடர்பு இல்லாதவையாக இருந்தாலும், பலரும் பேசுகிறார்கள் என்பதாலேயே சம்பந்தப்பட்ட பேசுபொருள் மீது பேசிவிடுதல் என்பதும் தவிர்க்க முடியாதது ஆகிவிட்டது.

அந்த வகையில், நம்மில் பெரும்பாலானோருக்கும் அறிந்த பிரபலமோ, மேதையோ மறைந்துவிட்டால், உடனடியாக RIP - Rest in Peace எனும் ஹேஷ்டேகின் ஆதிக்கம் நிறைவதை சமூக வலைதளங்களில் காண முடிகிறது.

#RIP தாங்கிவரும் குறும் / பெரும் பதிவுகளில் பெரும்பாலானவை:

* இறப்புச் செய்தியை மட்டும் பகிர்தல்

* இழப்பின் வலியைப் பகிர்தல்

* இறந்தவரின் ஆளுமையைப் பறைசாற்றுதல்

* இறந்தவரின் மேன்மைகளை அடுக்குதல்

* இறந்தவருக்கும் தனக்கும் இடையிலான உறவை நினைவுகூர்தல்

* இறந்தவரின் திறமைகளைப் பட்டியலிடுதல்

* இறந்தவர் படைப்பாளி எனில் அவரது படைப்புகளைப் பட்டியலிடுதல்

* இறந்தவருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிடுதல்

* இறந்தவருடன் சமீபத்தில் எடுத்துக்கொண்ட செல்ஃபியை பகிர்தல்

* இறந்தவரின் மேற்கோள்களை மேற்கோள் காட்டுதல்

* இறந்தவர் தொடர்பான இணைய இணைப்புகளைப் பகிர்தல்

* இறந்தவரின் படத்தை சமூக வலைதளங்களில் புரொஃபைல் படமாக வைத்தல்

இப்படி பற்பல வடிவங்களில், இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய இணையதளவாசிகள் பிரார்த்தனை செய்வதைக் காணமுடிகிறது.

நம் சமூகத்துக்கு ஏதோ ஒரு வகையில் முக்கியப் பங்காற்றியவர் இறந்த அடுத்த நொடியே இதுபோல் நினைவுகூர்தல் மெச்சத்தக்கது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், 'முந்தித் தருதல்' என்ற வெற்றுப் பெருமிதத்துக்காக மூச்சு நிற்கும் முன் மறைவுச் செய்தியை உலகுக்குச் சொல்லும் சில ஊடகங்களின் தகவலை உறுதி செய்யாமல் உடனடியாக 'ரிப்'பிட்டு (RIP) அதிர்ச்சி பகிர்வது அபத்தம். பின்னர், அந்தப் பிரபலத்தின் மூச்சு நிற்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டு, ஏற்கெனவே இட்ட பதிவை மறைத்துவிட்டு, அவர் மறையும் வரை காத்திருந்து மீண்டும் அப்பதிவை வெளிக்கொணர்வது அபத்தத்தின் உச்சம்.

மறைந்தவரின் மாண்புகள் குறித்து அறிய கூகுளிடாமல் கூட, நண்பர்களின் பதிவுகளை அப்படியே எடுத்தாண்டு போட்டு, அன்னாரது ஆன்மா சாந்தியடைய விழைவதும் நடக்கிறது. நம் நட்பு வட்டத்தில் எல்லாரும் இடுகிறார்கள் என்பதற்காக, தனக்குத் தானே கட்டாயத்தை உருவாக்கிக்கொண்டு, புகைப்படத்தில் கூட கண்டிராத ஆளுமையின் இழப்பை வார்த்தைகளின் விவரிக்கும் போலி இரங்கல்களைக் கண்டு இரக்கப்படாமல் இருக்க முடியவில்லை.

புகைப்படத்துடன் கூடிய பகிர்வுக்கு நல்ல வரவேற்பு உண்டு என்ற அல்கரிதம் அறிந்தவர்கள், மறைந்துபோன நபரின் பெயரைக் குறிப்பிட்டு கூகுளில் தேடி, அவர் பெயருடன் வாழும் இன்னொரு பிரபலத்தின் புகைப்படத்தை எடுத்துப் பகிர்ந்து அஞ்சலி செலுத்தி பின்னர் அப்படத்தை அகற்றுவதை கடக்கும் கொடுமையும் நிகழ்கிறது.

ஒரு நபரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கலாம், அந்த நபரை இழந்து வாடுவோருக்கு இரங்கல் தெரிவிக்கலாம். ஆனால் அஞ்சலி செலுத்த முற்பட்டு, இறந்தவருக்கே இரங்கல் தெரிவிப்பதை அவசரப் பிழை என்பதா?

இறந்தவர் சார்ந்த துறையில் தனது மேதமையைக் காட்டுவதற்காக, ஒப்பாரிக்குள் தன் ஆற்றல்களை ஒளித்துவைப்போரில் பலரும் இணையத்தில் பிரபலங்களாக இருப்பது தனிச்சிறப்பு.

ஒருவேளை இறந்தவர் கொள்கைப் பின்னணி கொண்டவர் எனில், அதன் எதிர்க் கொள்கைகளைப் பின்பற்றுவோர், இறந்தவருக்கு இரங்கற்பாக எழுதாமல் கடந்து போய்விடுவதும் நடக்கும். அது இயல்பு. ஆனால், கொள்கை ரீதியில் எதிரணியில் இருப்பவர் என்ற ஒரே காரணத்துக்காக, இறந்தவரின் நெகட்டிவ் பக்கங்களைப் பெயர்த்து எடுத்து, வெளிப்படையாகவோ மறைமுகமாக பதிவுகள் மூலம் பிம்பத் துகிலுரிப்பதையும் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

எல்லாவற்றுக்கும் மேலாக, அபத்தங்களுக்கு எல்லாம் அபத்தங்களாக ஓர் அம்சத்தைக் கண்டுகொள்ள முடிகிறது. அதை ஜீரணித்துக்கொள்ளத்தான் இன்னமும் இயலாமல் போகிறது. சமூக வலைதளத்தில் ஓர் அஞ்சலிப் பதிவோ அல்லது இரங்கல் பதிவோ இட்ட பின், அது நண்பர்கள் - பின் தொடர்பாளர்களின் பார்வைக்குப் போய்ச் சேரும் முன் கலாய்ப்புப் பதிவுகளையோ, மீம்களையோ பகிர்ந்து துக்கத்தை துக்கப்பட்ட அடுத்த நொடியே தூக்கிப் போட்டுவிடும் இனம்புரியாத உளவியலை எதிர்கொள்வது எப்படி என்றே தெரியவில்லை.

இவை அனைத்தையும் தாண்டி, 'ரிப்' (RIP) பதிவுகளை நாம் வரவேற்றுதான் ஆக வேண்டும். ஆம், மகத்துவம் மிக்க ஒருவரை அவர் வாழும்போது கொண்டாட முன்வராமல், அவர் செத்த பிறகு சீர்தூக்கிப் பார்க்கும் போக்கு கொண்டதுதான் நாம் பிழைக்கும் சமூகம். இது சமூக வலைதளங்களிலும் இப்போது தொடர்கிறது. இறந்துபோனவரின் உடல் இந்த உலகத்தில் இருக்கும்போதே அவர் குறித்த புகழாரங்கள் நிறைவது ஒரு முக்கிய ஆறுதல்.

அதேபோல், ஒருவர் மண்ணை விட்டுச் செல்லும்போது பலருக்கும் அவர் குறித்த அறிமுகம் கிடைக்கிறது. அந்தப் பலரில் சிலர் அவரை உண்மையாகவே தேடிச் சென்று அறிகின்றனர். அவர்களில் சிலர் ஆழமாக அவரை உள்வாங்கத் தொடங்குகிறார்கள். இப்படியாக, நம் சமூகத்துக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை அளித்த ஒருவர் குறித்து பலரும் தெரிந்துகொண்டு, அவர்களை நாடுவதற்கு வித்திடுவது என்பதாலேயே எந்த வகை #RIP பகிர்வுகளையும் மனமுவந்து வரவேற்கக் கடமைப்பட்டுள்ளோம்.

என் நண்பர்கள் இட்ட 'ரிப்' பதிவுகள் மூலமாக அறிந்துகொண்ட ஆளுமைகளில் பலரும் என் வாழ்க்கையில் இப்போது மிகவும் நெருக்கமானவர்களாக மனதில் குடிகொண்டிருக்கிறார்கள். எனவே, 'ரிப்'பிட்டவர்களை உள்ளளவும் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.

- சரா சுப்ரமணியம் | தொடர்புக்கு: siravanan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x