Published : 08 Jun 2017 10:01 AM
Last Updated : 08 Jun 2017 10:01 AM

ஃபிரான்சிஸ் கிரிக் 10

நோபல் பரிசு பெற்ற இங்கிலாந்து அறிவியலாளர்



இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூலக்கூறு உயிரியலாளரும், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஃபிரான்சிஸ் கிரிக் (Francis Crick) பிறந்த தினம் இன்று (ஜூன் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் நார்த்தாம்டன் நகரில் பிறந்தார் (1916). இவரது முழுப்பெயர், ஃபிரான்சிஸ் ஹாரி கிராம்டன் கிரிக். இளம் பருவத்திலேயே நிறைய அறிவியல் நூல்களைப் படித்தார். 12 வயதுவரை பெற்றோருடன் தேவாலயம் சென்று வழிபட்டு வந்தார்.

* பின்னர், ‘மத நம்பிக்கை தொடர்புடைய கேள்விகளுக்கான அறிவியல் விடைகளைக் கண்டறிந்த பின்தான் வருவேன்’ எனக் கூறி தேவாலயம் செல்ல மறுத்துவிட்டார். இவரது மாமா, தன் வீட்டில் உள்ள கார் ஷெட்டில் வேதியியல் சோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்துகொடுத்தார். லண்டனில் ஒரு பள்ளியில் கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் பயின்றார்.

* 21-வது வயதில் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியில் இயற்பியலில் பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜில் கேவண்டிஷ் சோதனைக்கூடம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், மூலக்கூறு உயிரியியல் ஆய்வுக்கூடம் ஆகியவற்றில் பணியாற்றினார். முனைவர் பட்டத்துக்காக, உயர் வெப்பநிலையில் நீரின் பிசுபிசுப்புத் தன்மையை அளவிடும் ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போரால் படிப்பு தடைபட்டது.

* உலகப்போரில் ரேடார் மற்றும் மின்காந்தச் சுரங்கங்கள் மேம்படுத்தும் பணியில் பங்கேற்றார். போர் முடிவடைந்ததும், ராணுவத்திலிருந்து வெளியேறி படிப்பைத் தொடர்ந்தார். இவரது ஆர்வம் இயற்பியல் மற்றும் வேதியியல் களத்திலிருந்து உயிரியலுக்கு மாறியது.

* எக்ஸ் கதிர்களின் சிதறல் குறித்து ஆராய்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு உயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். ஹாவர்ட் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றினார். பிரிட்டனின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கோட்பாட்டு மூலக்கூறு உயிரியலாளராகப் புகழ்பெற்றார்.

* டி.என்.ஏ.வின் இரட்டை ஹெலிகல் கட்டமைப்பை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முக்கியப் பங்களிப்பை வழங்கினார். இதுகுறித்து ‘நேச்சர்’ என்ற அறிவியல் இதழில் கட்டுரை எழுதினார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்காக, டி.என்.ஏ. வடிவமைப்பு ஆராய்ச்சிகளை ஜேம்ஸ் டி வாட்சனுடன் இணைந்து தொடங்கினார்.

* நியுக்ளிக் அமிலங்களின் மூலக்கூறு கட்டமைப்பு மற்றும் உயிரினத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு இதன் முக்கியத்துவம் குறித்த கண்டுபிடிப்புக்காகவும் வாட்சன், மாரிஸ் வில்கின்சன் ஆகியோருடன் இணைந்து, 1962-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

* கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநராக 1962-ல் நியமிக்கப்பட்டார். ‘லைஃப் இட்செல்ஃப்: இட்ஸ் ஆரிஜின் அன்ட் நேச்சர்’, ‘தி அஸ்டானிஷிங் ஹிப்போதிசிஸ்’ உள்ளிட்ட பல நூல்களை எழுதினார்.

* ராயல் சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனித்துவமான சாதனைக்காக, அமெரிக்க பிலாசிபிகல் சொஸைட்டியின் பெஞ்சமின் பிராங்க்ளின் பதக்கம், லாஸ்கர் ஃபவுன்டேஷன் விருது, கெய்ர்ட்னர் ஃபவுன்டேஷனின் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். மரணப் படுக்கையில்கூட தான் எழுதிய ஒரு அறிவியல் கட்டுரையில் சில திருத்தங்கள் செய்தாராம்.

* இறுதிவரை மருத்துவ மேம்பாட்டு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தவரும், உடலியங்கலியல் துறைக்கு மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியவருமான ஃபிரான்சிஸ் கிரிக் 2004-ம் ஆண்டு 88-வது வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x