Last Updated : 15 Jan, 2017 05:30 PM

 

Published : 15 Jan 2017 05:30 PM
Last Updated : 15 Jan 2017 05:30 PM

கர்னாடக சங்கீதத்தில் ஒரு பொறம்போக்கு புரட்சி!

கர்னாடக சங்கீத ரசிகருக்கும் கர்னாடக சங்கீதத்தை மேட்டுக்குடி சங்கதியாகக் கருதி அந்நியமாகப் பார்ப்பவர்களுக்கும் ஒருசேர அதிர்ச்சி தந்திருக்கிறார் கர்னாடக இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா. அவர் ஏற்கெனவே நிறைய அதிர்ச்சிகளைத் தந்திருப்பவர் என்றாலும் இது சற்றும் எதிர்பாராதது. அப்படி என்ன புரட்சி செய்திருக்கிறார் டி.எம். கிருஷ்ணா? | வீடியோ இணைப்பு - கீழே |

இதுவரை கர்னாடக சங்கீதத்தில் இடம்பெற்றிராத, இடம்பெறும் என்று நாம் நினைத்தே பார்த்திராத ஒரு சொல்லைக் கொண்டே இந்தப் புரட்சியை நிகழ்த்தியிருக்கிறார் டி.எம்.கே. 'பொறம்போக்கு'… ஆம் 'பொறம்போக்கு'தான் அந்தச் சொல். கர்னாடக சங்கீதத்தில் முதன்முறையாக ஒரு 'பொறம்போக்கு' வீடியோ பாடலைப் பாடியிருக்கிறார் டி.எம்.கே.

ஒரு எச்சரிக்கை, இந்த வீடியோ பாடலின் பிரதான நோக்கம் 'பொறம்போக்கு' என்ற சொல்லை கர்னாடக சங்கீதத்தில் நுழைப்பது இல்லை; 'பொறம்போக்கு' என்ற கருத்தாக்கம் நம் வாழ்வில் எப்படி மாறியிருக்கிறது என்பதைப் பற்றித்தான்; அதாவது மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்சினை பற்றி இந்தப் பாடல் பேசுகிறது.

வீடியோவின் தொடக்கத்தில் ஓர் ஆங்கில அகராதியில் உள்ளதைப் போல 'பொறம்போக்கு' என்ற சொல்லும் அதன் உச்சரிப்பும் விளக்கங்களும் இப்படி இடம்பெறுகின்றன:

Poromboke [n.]

/por-um-pokku/

1. places reserved for shared communal uses (water bodies, grazing lands…)

2 a pejorative intended to demean and devalue a person or place.

எழுத்துத் தமிழில் 'புறம்போக்கு' என்று சொல்லப்படும் 'பொறம்போக்கு' என்ற சொல்லின் அடிப்படை அர்த்தம், 'பொதுப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்கள் போன்ற இடங்கள்' என்பதே. அது காலப்போக்கில் இந்த அர்த்தம் வலுவிழந்து 'சாவு கிராக்கி', 'ஊட்ல சொல்லிக்கினு வந்துட்டியா' என்ற வசவுகளின் வரிசையில் சேர்ந்துவிட்டது. இந்தப் பொருள் மாற்றமே சமூகத்துக்கும் இயற்கைக்கும் இடையில் எவ்வளவு இடைவெளி விழுந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.

'பொறம்போக்கு உனக்கு இல்லை;

பொறம்போக்கு எனக்கு இல்லை

பொறம்போக்கு ஊருக்கு

பொறம்போக்கு பூமிக்கு' என்று தொடங்கும் இந்த வீடியோ பாடல் முழுக்க எண்ணூர் கழிமுகத்தையும் அதைச் சுற்றியுள்ள இடங்களையும் பின்னணியாகக் கொண்டு ஒளி/ஒலிப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. காற்று முகமூடி அணிந்துகொண்டு டி.எம். கிருஷ்ணா பாட, அவருக்குப் பின்னால் பக்க வாத்தியக்காரகளும் அப்படியே காற்று முகமூடி அணிந்திருக்கிறார்கள். பின்னால் கழிமுகத்தை பொக்லைன் இயந்திரம் தோண்டிக்கொண்டிருக்கிறது. கடலில் சாம்பல் முதலான கழிவுகள் கலக்கும் காட்சிகளும் ஆங்காங்கே பின்னணியில் வருகின்றன. இசைக்கு இணையாக ஒளிப்பதிவும் அமைந்திருப்பது அருமையான விஷயம்.

ஏரிகள், சதுப்பு நிலங்கள் ரியல் எஸ்டேட்காரர்களால் சூறையாடப்படுவதையும் அரசாங்கம் இந்த 'பொறம்போக்கு' நிலங்களைத் தனியாருக்குத் தாரைவார்த்தல், அனல் மின்நிலையங்கள் உள்ளிட்டவற்றைக் கட்டுதல் முதலான செயல்களில் ஈடுபடுவதையும் பாடல் சாடுகிறது. 'எண்ணூருல செஞ்சத/ உன்னூருல செய்ய வருவான்/ கேள்வி கேட்டா/ மேக் இன் இந்தியான்னு/ வட சுடுவான்' என்ற வரிகளைக் கேட்கும்போது எழும் சந்தோஷம் சொல்லில் அடங்காது. ம.க.இ.க. பிரச்சாரங்களில் மட்டுமே கேட்கக் கூடியது போன்ற ஒரு பாடலை கர்னாடக சங்கீதத்தில் நுழைத்திருப்பது பெரும் புரட்சிதானே!

பாடிய டி.எம். கிருஷ்ணா மட்டுமல்ல, இந்தப் பாடலை எழுதிய கபேர் வாசுகி, இசையமையத்த ஸ்ரீராம்குமார், அற்புதமாக ஒளிப்பதிவு செய்த கார்த்திக் நல்லமுத்து, கருத்துருவாக்கிய நித்தியானந்த் ஜெயராமன், இயக்கிய ரதீந்திரன் ஆர்.பிரசாத் என எல்லோருமே சர்வநிச்சயமாக ஒரு புரட்சியை செய்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

சென்ற ஆண்டு 'கொடைக்கானல் வோண்ட்' என்றால் இந்த ஆண்டு 'பொறம்போக்கு' பாடல். இந்தப் பாடல் மத்திய, மாநில அரசுகளைக் கடுப்பேற்றும் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும்; கர்னாடக சங்கீத ஆசாரத்தின் காவலர்கள் இந்தப் பாடலைக் கேட்டு என்ன சொல்லப்போகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கத் தோன்றுகிறது. அவர்கள் 'நாராசம்' என்று இந்தப் பாடலைச் சொல்வார்கள் என்றால் இந்தப் பாடல் மறுக்க முடியாத வெற்றியை அடைந்திருக்கிறது என்றே அர்த்தமாகும்!

கர்னாடக சங்கீதத்தில் இடம்பெறாத சொல், இடம்பெறாத விஷயம் (சுற்றுச்சூழல்) என்று இரண்டு விஷயங்களை ஒன்றாகச் செய்திருக்கும் டி.எம். கிருஷ்ணா குழுவினருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்! 'பீப்' பாடல்களும், 'ஒய் திஸ் கொலவெறி'யும் அடைந்த 'வெற்றி'யை (?) தாண்டி 'பொறம்போக்கு' பாடல் வெற்றி பெற வேண்டும்!

பாடல் வீடியோவைக் காண..