Last Updated : 24 Jun, 2017 01:42 PM

 

Published : 24 Jun 2017 01:42 PM
Last Updated : 24 Jun 2017 01:42 PM

ஓராண்டுக்குப் பின்... சுவாதியின் மரணம் உணர்த்துவது என்ன?

நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் இன்று சுவாதியின் பெயராலேயே அதிகம் அறியப்படுகிறது.

சுவாதியின் மரணம் நடந்து இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்து இருக்கிறது. ஆனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இன்னும் அதே அளவில்தான் தொடர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.

சுவாதியின் கொலை வழக்கு அவரது மரணம், போலீஸார் விசாரணை, ராம்குமார் கைது, ராம்குமார் தற்கொலை என அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

காதலை மறுத்த காரணத்தால்தான் சுவாதி கொல்லப்பட்டார் என்று போலீஸாரால் கூறப்பட்டாலும் சுவாதி எதற்காக கொல்லப்பட்டார்? என்ற கேள்வி நம்மை கடந்து சென்றுவிட்டது.

ஆனால் சுவாதியின் கொலை நம் முன் இரு கேள்விகளை வைக்கிறது.

முதலாவது காதலை மறுக்கும் உரிமை பெண்களுக்கு இல்லையா?

இரண்டாவது பெண்களின் பாதுகாப்புக்கு குறித்த அரசின் செயல்பாடு?

சுவாதி கொல்லப்பட்டது தலைநகர் சென்னையின் பரப்பரப்பான ரயில் நிலையத்தில். இதனையடுத்து பெண்களின் பாதுகாப்புக்கு அரசு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறியது.

அதனைத் தொடர்ந்து சென்னையின் ரயில் கோட்டத்துக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் 2016 டிசம்பருக்குள் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும் என்றும் அறிவித்தது. ஆனால் இன்று வரை அந்தப் பணிகள் முடிந்தபாடில்லை.

ரயில் நிலையங்கள் மட்டுமல்ல சென்னையின் பிரதான சுரங்கப் பாதைகள் பலவும் அச்சம் தரும் நுழைவாயிலாகவே பார்க்கப்படுகின்றன.

இரவு நேரங்களிலும், அதிகாலைகளில் பாதுகாப்பில்லாத இத்தகைய சுரங்கப் பாதைகளை கடப்பது பெண்களுக்கு பெரும் சவாலாகவே பெண்களுக்கு உள்ளது.

சுவாதியின் கொலையைப் போன்றே பல கொலைகள் கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ளது.அவற்றில் பலவற்றுக்கும் பிண்ணனியாக காதல் கூறப்படுகிறது.

பெண்களுக்கு காதலை மறுக்கும் உரிமை இல்லையா, ஒரு பெண்ணின் காதலை ஆண் மறுக்கும்போது அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பெரும்பாலான பெண்களுக்கு உள்ளது.

ஆனால், ஆண்களைப் பொறுத்தவரை இது சற்று எதிர்மறையாக உள்ளது. ஆண்கள் பெண்ணை எப்போதும் தங்களுக்கு கீழான மனிதியாகவே பார்க்கிறார்கள். தொடர்ந்து சமூகமும் அதைத் தான் அவர்களுக்கு போதித்துக் கொண்டு இருக்கிறது.

இதனால் தன்னை ஏற்றுக் கொள்ள மறுக்கும் உரிமை பெண்களுக்கு இல்லை என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள்.

இத்தைகைய எண்ணங்களின் விளைவுதான் மரணங்களாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆண் பெண் இடையே நிலவும் உறவுமுறை சிக்கல்களுக்கு உலகமயமாக்கல் விளைவுதான் காரணம் என்கிறார் சமூக செயற்பாட்டாளரும், வழக்கறிஞருமான மு. வெற்றிச்செல்வன்.

இதுகுறித்து மு. வெற்றிச்செல்வன். கூறியதாவது, "சுவாதியின் கொலை வழக்கில் அடிப்படையில் உள்ள பிரச்சினை என்னவென்றால் அந்தக் கொலை எந்த காரணத்துக்காக நடத்தப்பட்டது என்பது இன்று சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.

ஒரு பெண்ணை ஒருவன் காதலிக்கிறான் அவள் அந்த காதலை மறுத்ததால் அவளை கொன்றுவிடுகிறான் என்ற பொதுப் பார்வையில் வைத்து இக்கொலையைப் பார்க்கும்போது இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகவே இந்த சமூகத்தில் உள்ளது.

தங்களது காதல் மறுக்கப்படுவதை ஏற்கும் நிலையில் ஆண்கள் இல்லை. ஆண் பெண்ணுக்கு இடையே உள்ள உறவுமுறையிலுள்ள சிக்கல் முறை குறித்தான கல்வி நமக்கு தேவையான ஒன்றாக உள்ளது.

சுவாதியின் வழக்கை எடுத்துக் கொண்டால் நகரத்திலுள்ள பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் எதிர்கொள்ள எப்படி தயாராக இருக்கிறார்கள்? அதற்கான தைரியம் இருக்கிறாதா? என்ற கேள்வி எழுகிறது. ஒப்பீட்டளவில் பார்த்தோம் என்றால் நகரத்திலுள்ள பெண்களைவிட கிராமத்திலுள்ள பெண்கள் தைரியமானவர்களாக உள்ளனர்.

அவர்களுக்கான பிரச்சினையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். அவர்களுக்கான சூழ்நிலையும் மனதளவிலும், உடலளவிலும் அவர்களை வலிமையாக்கியுள்ளது.

மு. வெற்றிச்செல்வன்

நகரப் பெண்களுக்கு சமூக அமைப்பின் காரணமாக கிராமப் பெண்களை போன்ற சூழல் உருவாவதில்லை. நகரம் பொருளாதார ரிதியாக மாற்றம் அடைந்துள்ளதே தவிர சமூக அளவில் மாற்றம் அடையவில்லை.

சட்டத்தை கொண்டு வந்துவிட்டால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறைந்துவிடாது. பண்பாட்டு கலாச்சார ரீதியில் நமக்கு மாற்றம் தேவைப்படுகிறது. இதனை கல்வியில்தான் கொண்டு வர வேண்டும். ஆண் - பெண்களுக்கான புரிதல், தற்காத்துக் கொள்ளக்கூடிய முறையையும் பள்ளியிலிருந்துதான் கற்று தரப்பட வேண்டும். ஆனால் நமது கல்வி முறையில் இதில் எதையும் சொல்லி தரவில்லை.

சமூகத்தில் ஒரு நல்ல குடிமகனாகவும், குடிமகளாகவும் இருபதற்கான நன்நெறி சார்ந்த கல்விமுறை இங்கு இல்லை. நாம் வேலையைச் சார்ந்த கல்விமுறைதான் உள்ளது. எனவே கல்விமுறையில் மாறுதல் கொண்டுவந்தால் மட்டுமே இப்பிரச்சினையில் நிரந்தர தீர்வு காண முடியும்.

பெண் குறித்தான புரிதல் ஆண்களிடம் குறைவாகவே உள்ளது. அதுவும் குறிப்பாக உலகமயமாக்கலுக்கும், பழமையான சமூகத்துக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் நாம் உள்ளோம். மேற்கத்திய கலாச்சரம் நம் மீது தாக்கத்தை ஒரு பக்கம் ஏற்படுத்திக் கொண்டிருக்க அதிலிருந்து நகரவும் முடியாமல் பழமைவாத சமூகத்திடம் நாம் சிக்கி இருக்கிறோம்.

கலாச்சார ரீதியாக ஆண்களும் பெண்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர். பெண்களைவிட ஆண்கள் இன்னும் கூடுதல் குழப்பத்தில் உள்ளனர்.

ஏனென்றால் உலகமயமாக்கலின் விளைவு ஆண்களுக்கு ஓடிஓடி சம்பாதிப்பதற்ககான திறமையை வளர்ந்துக் கொள்வதை சொல்லித் தருகிறதே தவிர, பெண்ணை புரிந்து கொள்வதற்கான புரிதலை ஆண்களுக்கு வழங்குவதில்லை. வெற்றிகரமான ஆண் என்பதற்கான அர்த்தமே இந்த உலகமயமாக்கலில் மாற்றப்பட்டுள்ள விளைவுதான் இவை எல்லாம். இவற்றை நாம்தான் உடைக்க வேண்டும்” என்றார்.

தொடர்ச்சியான உரையாடல் பிரச்சாரம் தேவை

சமூக செயற்பாட்டாளர் வழக்கறிஞருமான அருள்மொழி கூறும்போது, "சுவாதி கொலை ஏற்படுத்திய அதிர்ச்சி சமூகத்தில் பரவலாக இருந்தது. ராம்குமார் மரணம் வரைக்கும் சுவாதி பேசப்பட்டார். அதன்பிறகு ராம்குமாரின் மரணம் இயற்கையானதுதானா? அல்லது கொலையா? விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டியதா? இல்லையா? என்ற கேள்விகளோடு மொத்த விசாரணைக்கும் முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

குறிப்பாக இந்த ஒரு வழக்கில் மட்டுமே கேட்கப்பட வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கின்றன. ஆனால் அவை கேட்கப்படாமலே முடித்து வைக்கப்பட்டன. இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர் இருவரின் சாதி, பணம், அரசியல் செல்வாக்கு ஆகியவைகளைக் கொண்டு குற்ற வழக்குகள் நீதியை பெறுவதோ, மண் மூடிப் போவதோ நடக்கிறது. இதில் பெண்கள் பாதிக்கப்படும் வழக்குகள் இன்னும் நுட்பமாக இந்த அரசியலுக்குள்தான் பார்க்கப்படுகின்றன. இத்தைகய அரசியல் சமூகப் பின்னணியில் பொதுவாக பெண்களுக்கு பாதுகாப்பு எப்படி இருக்க முடியும்?

அருள்மொழி

ஒவ்வொரு பெரிய வன்முறையும் நிகழ்ந்த பிறகு அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பதை பேசிப்பேசி இந்த குற்றங்கள் நடப்பதற்கு காரணமாகவும் அடிப்படையாகவும் இருக்கும் நமது சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் குற்றவுணர்ச்சியை நாம் புறகணித்து விடுகிறோம். அந்த குற்ற எண்ணங்கள் மீது கவனம் செலுத்தி நம்முடைய வாழ்கையிலிருந்தும் சமூக பழக்கவழக்களிலிருந்தும் பெண்களை பாலியல் பொருளாகவும், ஆண்களை அவர்களை வேட்டையாடும் மிருகங்களாகவும் வளர்ந்துவிடும் நமது குடும்ப அமைப்பை திருத்தாதவரை இந்தக் குற்றங்களிலிருந்து பெண்களுக்கு முழுமையான விடுதலை இல்லை. இதை மக்களிடம் மீண்டும் மீண்டும் பேசி பெண்ணும் ஆண் போல சக மனிதப் பிறவி வெறும் அழகு, நளினம், ஆணை கவர்தல் மட்டுமே வாழ்க்கையில் அவளது நோக்கம் அல்ல.

அறிவு திறமை உழைப்பு, தன்னம்பிக்கை இவற்றோடு வாழும் பெருமை ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமை உண்டு என்பதையும் ஆண்கள் என்பவர்கள் அன்பும், பண்பும் கொண்ட மனிதப் பிறவிகள். ஆனால் சமூகம்தான் அவர்களை கொம்பு சீவி நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாம். உனக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தவறான எண்ணத்தை ஊட்டி வளர்ப்பதையும் திருத்தாதவரை ஆண்களும் பெண்களும் அன்போடு வாழ இவ்வுலகில் இடமில்லை. எனவே தொடர்ச்சியான உரையாடல் பிரச்சாரத்தின் மூலம்தான் முழுமையாக இந்த குற்ற மனப்பான்மையை சமூகத்திடமிருந்து நாம் களைய முடியும். அதை செய்வதற்கான பொறுப்பு நாம் ஒவ்வொருக்கும் உண்டு” என்று தெரிவித்தார்.

பெண்ணுக்கு காதலை மறுக்கும் உரிமை உண்டு

பெண்கள் தங்களுக்கு எதிரான தொந்தரவுகளை எப்படி எதிர் கொள்வது. இதில் ஆண்களின் பொறுப்பு என்ன என்பது பற்றி உளவியல் நிபுணர் பிருந்தா ஜெயராமன் கூறியதாவது,

சுவாதியின் கொலை தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் பெண்கள் அனைவரும் சமூக வலைதளஙகளில் தங்களது புகைப்படங்களை போடுவதில் தயக்கப்பட ஆரம்பித்தார்கள். மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டுள்ளார்கள்.

பிருந்தா ஜெயராமன்

ஆண் பெண் சரிசமமாக வேலை செய்கிற சமூதாயத்தில். இளம் பிராயத்தில் காதல் வயப்படுவது தற்போது சகஜமாகியுள்ளது. இந்தக் காலக்கட்டத்திலுள்ள இளைஞர்களின் மனநிலைதான் 30 வருடங்களுக்கு முன்பு இளைஞர்களின் மனநிலையும் இருந்தது. இதில் வித்தியாசம் என்னவென்றால் காதல் வயப்படுவது கல்லூரி நாட்கள் மற்றும் பள்ளி நாட்களில் தப்பில்லை என்ற மனப்பான்மை வந்துவிட்டது.

இரண்டாவது சமூக ஊடகங்கள் எளிதாக இருப்பதால் ஒருவரைக் கொருவர் தொடர்பு கொள்வது சாத்தியமாக இருக்கிறது. இதனால் ஆணோ, பெண்ணோ அவர்களது உணர்வுகளை கட்டுபடுத்துவது அவசியம் இல்லை என்ற உணர்வு தற்போதுள்ள சமூதாயத்தில் வளர்ந்துள்ளது. இவை எல்லாம் தொழில்நுட்பத்தால் வந்த எதிர்மறையான விளைவுகள். இதில் அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள்தான் இதில் ராம்குமார் போன்றவர்கள் விதி விலக்கானாவர்கள் ஆனால் பல ஆண்கள் இதிலிருந்து தப்பித்துக் கொள்கிறார்கள்.

சமுதாயமும் அவர்கள் விஷயத்தை மறத்து விடுகிறது. ஆனால் பெண்களை பொறுத்தவரை இது எதிர்மறையாக உள்ளது. பாதிக்கப்படும் பெண்களுக்கான களங்கம் மட்டும் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். பெண்கள் இதனை எதிர்கொள்ள தங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டும்.

எனவே பெண்கள் தங்களை யாராவது தொடர்ந்து பின் தொடர்ந்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ உடனே நான் போலீஸிடம் போவேன் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் எப்போதுமே போலீஸார் அவர்களுடன் இருக்கப் போவதில்லை. போலீஸ் இல்லாத சூழ்நிலையில் தனிமையிலுள்ள பெண்களைத் தாக்குவது மிகவும் சுலபம்.

தங்கள் காதலை மறுக்கும் பெண்கள் மீதான அந்த இளைஞர்களின் கோபம் ஆக்ரோஷமாக ஒரு கட்டத்தில் மாறும். எனவே போலீஸாரிடம் கூறுவேன் என்று கூறுவது, அடியாட்களைக் கொண்டு தாக்குவது போன்றவற்றை தங்களது பாதுகாப்பை கவனத்தில் கொண்டு பெண்கள் தவிர்க்க வேண்டும்.

ஒரு ஆண் தனக்கு தொந்தரவாக இருக்கும் சூழ்நிலையில் அவரை சந்திப்பதை அந்தப் பெண் தவிர்க்க வேண்டும்.வீட்டில் சொல்லி இடம் மாற்றம் அல்லது தொழில் மாற்றம் செய்யலாம். இது அவர்களுக்கு நிம்மதியை அளிக்கலாம். இது எல்லாருக்கும் பொதுவான தீர்வை தரும் என்று சொல்ல முடியாது.

சில பெண்கள் துணிச்சலாக பேசி விடுவார்கள். ஆனால் தங்களுக்கு தொந்தரவு செய்யும் ஆண்களை விட்டு ஒதுங்குவதே நல்லது. ஏனெனில் இத்தகைய செயல்கள் அவர்களை மிகவும் கோபப்படுத்தும். முடிந்தவரை பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் போது தனியாக செல்லாமல் நண்பர்களுடன் செல்வது கூட்டமாக இருக்கும் இடத்தில் நிற்பது நல்லது.

அத்துடன் இக்காலத்தில் பெண்களை வளர்க்கும் பெற்றோர்கள் அவர்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவது மிக அவசியம். எதையும் தைரியமாக தன்னப்பிக்கையுடன் ஏதிர்கொண்டு சுயமாக தீர்க்க பெண்களுக்கு கற்றுத் தர வேண்டும். அதனை சிறுவயதிலிருந்தே அவர்களிடம் வளர்க்க வேண்டும்.

ஆண்களும் தங்களது பொறுப்புணர்வை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் ஆண் குழந்தைகளிடம் சமூகத்தில் ஆணும், பெண்ணும் சமம் என்று சொல்லி வளர்க்க வேண்டும். பெண்னை போகப் பொருளாக பார்க்காமல் பெண்ணை சக மனிதியாக பார்த்து வழி நடத்திச் சென்றால் நல்லது அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

ஒரு பெண் தன் காதலை மறுத்தால் பல இளைஞர்கள் அதனை அவர்களது காதல் தோல்வியாக பார்க்கிறார்கள். ஏனெனில் அந்தப் பெண்ணை நினைத்து பல கனவுகளை அந்த இளைஞர் வளர்ந்துக் கொள்கிறார். அதனால் அந்த பெண்ணின் மறுப்பை அவரால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அந்த இளைஞருக்கு எப்படி ஒரு பெண்ணை காதலிக்க உரிமை உள்ளதோ அதே அளவு அந்த உரிமை அவரின் காதலை மறுப்பதற்கு அந்த பெண்ணுக்கு உள்ளது என்பதை அந்த ஆண் உணர வேண்டும்.

காதல் தோல்வியடைந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய மனப்பக்குவம் ஆண்களுக்கு இருக்க வேண்டும்.

அப்பெண்ணின் கருத்துக்கு மரியாதை கொடுக்க வேண்டும். இது அப்பெண்ணின் மனதில் ஒருவேளை மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் தொடர்ந்து துரத்திக் கொண்டே செல்வது அப்பெண்ணுக்கு எரிச்சலைத்தான் ஏற்படுத்தும். அந்த ஆண் எதிர்பார்க்கிற மாற்றம் அப்பெண்ணுக்குள் வராது.

திரைப்படங்கள் காண்பிப்பதுபோல நிஜ வாழ்க்கையில் நடக்காது என்பதை ஆண்கள் கட்டாயம் உணர வேண்டும். அந்தப் பெண்ணை தொந்தரவுப்படுத்தாமல் ஒதுங்கி விட்டார்கள் என்றால் அந்த ஆணின் மீது அப்பெண்ணுக்கு மரியாதை ஏற்பட வாய்ப்புகள் உண்டு" என்றார்.

தொடர்புக்கு > indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x