Published : 10 Jul 2016 02:37 PM
Last Updated : 10 Jul 2016 02:37 PM

சுட்டது நெட்டளவு

முன்னொரு காலத்தில் சீனாவில் ஒரு பெரிய சீப்பு வியாபாரி இருந்தார். தனக்குப் பின் வியாபாரத்தை தன் மூன்று மகன்களில் யார் வசம் ஒப்படைப்பது என்று தீர்மானிக்க அவர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்.

யார் அதிக அளவு சீப்புகளை புத்த மடாலயத்துக்கு சென்று விற்கிறார்களோ அவன்தான் தன் வியாபாரத்தை நிர்வகிக்கத் தகுதியானவன் என்று அறிவித்தார். மொட்டை அடித்துள்ள புத்த பிக்குகளிடம் சீப்பு வியாபாரமா? என்று மகன்கள் மூவரும் ஆரம்பத்தில் திகைத்தனர். ஒரு சீப்பைக் கூட விற்க முடியாதே என்று நினைத்தனர். ஆனால் பிறகு மூவரும் முயற்சி எடுக்க முடிவெடுத்தனர்.

அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சில நாட்கள் அவகாசம் கேட்டனர். சில நாட்களுக்கு பிறகு மூவரும் வியாபாரத்தை முடித்து தந்தையிடம் வந்தனர். ஒரு மகன் “நான் இரண்டு சீப்புகளை புத்த மடாலயத்துக்கு விற்றேன்” என்றான்.

வியாபாரி எப்படி என்று கேட்டார்.

அதற்கு அவன், “புத்த பிக்குகளிடம் இந்த சீப்பை முதுகு சொறியவும் உபயோகிக்கலாம் என்று சொல்லிப் பார்த்தேன். இரண்டு புத்த பிக்குகளுக்கு அது சரியென்று பட்டது. அதனால் அவர்கள் இருவரும் இரண்டு சீப்புகள் வாங்கினார்கள்” என்றான்.

இரண்டாவது மகன், தான் 10 சீப்புகளை விற்றதாக கூறினான்.

எப்படி என்று வியாபாரி கேட்க, “வழியெல்லாம் காற்று அதிகமாக உள்ளதால் மலை மேல் உள்ள அந்தப் புத்த மடாலயத்துக்கு செல்பவர் களின் தலைமுடியெல்லாம் பெரும்பாலும் கலைந்து விடுகிறது. அப்படிக் கலைந்த தலைமுடியுடன் புத்தரை தரிசிக்க பக்தர்கள் செல்வது புத்தருக்குச் செய்யும் அவமரியாதையாகத் தோன்றுகிறது என்று புத்த மடாலயத்தில் சொன்னேன். ஒரு பெரிய கண்ணாடியும் சில சீப்புகளும் வைத்தால் அவர்கள் தங்கள் தலைமுடியைச் சரி செய்துகொண்டு புத் தரை தரிசிக்க செல்வது நன்றாக இருக்கும் என்று ஆலோசனையும் சொன்னேன். ஒப்புக் கொண்டு 10 சீப்புகளை வாங்கினார்கள்” என்றான்.

வியாபாரி அந்த மகனைப் பாராட்டினார்.

மூன்றாவது மகன், தான் ஆயிரம் சீப்பு களை விற்றதாக கூறினான். வியாபாரியால் நம்பவே முடியவில்லை. எப்படி விற்றாய் என்று கேட்டார்.

“அந்த புத்த மடாலயத்துக்கு ஏராளமானோர் வந்து பொருளுதவி செய்கிறார்கள். அவர்கள் உதவியை மெச்சி புத்தரின் ஆசிகள் அவர்களை வழிநடத்தும் வண்ணம் அவர்களுக்கு ஏதாவது ஒரு நினைவுப் பரிசு வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று புத்த பிக்குகளிடம் சொன்னேன். மேலும் இது பலரையும் புத்த மடாலயத்துக்கு உதவி செய்யத் தூண்டும் என்றேன். அந்த மடாலயத் தலைவர் என்ன நினைவுப் பரிசு தரலாம் என்று என்னை கேட்டார்.

நான் புத்தரின் வாசகங்களைப் பதித்து வைத்திருந்த சில சீப்புகளை நீட்டினேன். அந்த சீப்புகளை தினமும் உபயோகிக்கும் பக்தர்களுக்கு அந்த உபதேசங்களைத் தினமும் காணும் வாய்ப்பும் கிடைக்கும்.

அந்த உபதேசங்கள் அவர்களைத் தினமும் வழிநடத்துபவையாகவும் இருக்கும் என்று தெரிவித்தேன். அது நல்ல யோசனை என்று நினைத்த மடாலயத் தலைவர் உடனடியாக அப்படி புத்தரின் வாசகங்கள் பதித்த ஆயிரம் சீப்புகள் வாங்க ஒப்புக் கொண்டார்” என்றான்

அந்த வியாபாரி மூன்றாவது மகனைப் பாராட்டி அவனிடம் வியாபாரத்தை ஒப்படைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x