Last Updated : 25 Sep, 2016 10:57 AM

 

Published : 25 Sep 2016 10:57 AM
Last Updated : 25 Sep 2016 10:57 AM

நண்பேன்டா: பிசினஸ் கலாட்டா

கொன்னவாயன் டீக்கடை.

நானும் கிளாஸ்மேட்டு வெற்றியும் டெய்லி மீட் பண்ற எடம். சைதாப்பேட்டைலதான் எங்களுக்கு வீடு.

ரெண்டு பேருமே மெட்ராஸ்ல ஒரே காலேஜ்லதான் டிகிரி முடிச்சோம். நான் கெமிஸ்ட்ரி. அவன் இங்லீஷ் லிட்ரேச்சர்.

‘படிச்ச படிப்புக்கு ஏத்த வேலயாத் தேடுங்கப்பா’னு வீட்ல சொன்னத வச்சு கொஞ்ச நா அலஞ்சோம். அப்புறந்தான் தெரிஞ்சது. கெடய்க்கிற வேலயப் பாக்கணும்னு.

எனக்கு ஒரு லேப்ல வேல கிடைச்சது. காலைல 10 மணிக்குப் போய்ட்டு ராத்திரி 7 மணி வரைக்கும் வேல. லேப்ப திறக்கணும். வர்ற பேஷண்ட்கிட்ட யூரின், பிளட் சாம்பிள் வாங்கி வைக்கணும். ஈவ்னிங்ல ரிப்போர்ட் அடிச்சுக் குடுக்கணும். மாசம் 6,000 சம்பளம்.

வெற்றிக்கு டிராவல்ஸ்ல வேல. வெளியூர், வெளிநாட்லர்ந்து வர்றவங்ககூடப் போய் மெட்ராஸ சுத்திக்காட்டணும். ‘திஸ் ஈஸ் மெரினா பீச்.. லாங்கஸ்ட் பீச்.. வீ கேன் டேஸ்ட் சுண்டல்..’னு பேசி சமாளிச்சுட்டு வந்துருவான். (லிட்ரேச்சர் படிச்சிட்டாலே நம்மூர் பசங்க பிரிட்டிஷ்காரன் ரேஞ்சுக்கு பிஹேவ் பண்ணுவானுங்கல்ல.. அவனும் அந்த பில்டப்லதான் பொழப்ப ஓட்டிட்ருந்தான்.)

கொன்னவாயன் கடை டீ ஒரு மடக்கு உள்ள போனதும் மூள அம்புட்டு ஸ்பீடா வேல செய்யும்.

‘டேய்.. நாமளும் எதாச்சும் பிசினஸ் பண்ணணும்டா.. பிசினஸ்லதாண்டா நல்ல காசு.. மாசமானா கெடய்க்கிற பிசாத்துக் காசுல வளர வாய்ப்பே இல்லடா..’

- வேல மேல வெறுப்பு வர்றப்ப லாம் எல்லா மாசச் சம்பளக்காரனோட பொலம்பல்லயும் பூரிக்கிற வார்த்தைங்க இது..

‘ஒரு பொட்டி கட போட்டாக்கூட பொழச்சுக்கலாம். காலங்காத்தால யூரின் பாட்டிலைக் கைல புடிக்கிற பொழப்பு வேணாண்டா..’

‘இங்கனாப்புல என்ன வாழுது.. குந்த்சா இங்லீஷ் பேசி, கூனிக்குறுகித் தான் அன்னாடம் பொழப்பு போகுது’

பத்து நா தொடர்ந்து டீக்குடிக்கிறப்ப பேசுனதுல ரெண்டு பேரும் ஒரு முடிவுக்கு வந்தோம்.

ஏதாச்சும் பிசினஸ் பண்ணியே ஆகணும்..!!

‘குறைந்த முதலீட்டில் கோடீஸ்வர னாவது எப்படி?’ங்கிற 100 ரூபா புத்த கத்த வாங்கி ரெண்டு பேரும் பொரட்டி பொரட்டிப் படிச்சோம். அவன் சொல்ற எந்த பிசினஸயும் செஞ்சுறவே கூடாதுன்னு மட்டும் புரிஞ்சுச்சு..

அப்பத்தான் வாழவந்தான் ஞாபகம் வந்துச்சு..

பத்தோட படிப்ப ஏறக்கட்டுனவன். நாள் கெழமைனு வந்துட்டா அதுக்கேத்த பிசினஸ்ல ஒட்டிக்கிடுவான். வெடி விப் பான், வேட்டியும் விப்பான்.. கரும்பு விப்பான்.. கண்ணாடியும் விப்பான். ஒடம் பெல்லாம் அப்டி ஒரு பிசினஸ் மைண்டு! அவனப் பாத்தா எதாச்சும் வழி கெடய்க்கும்னு தோணுச்சு.. ஒருவழியா அவன பீச் பக்கம் வரவச்சோம்..

மாருதி கார்ல வந்து எறங்குனான். அவன் போட்ருந்த சட்டைலயும் குட்டிக் குட்டியா கார் படம். கொஞ்சம் செழிப்பாத்தான் தெரிஞ்சான்.

‘டேய் மச்சி’னு ஓடிவந்து மொதல்ல என்னையத்தான் கட்டிப்புடிச்சான்.

‘எப்டிடா இருக்கீங்க?’னு கேட்டதுமே, பொல பொலனு பொலம்பிட்டோம்.

‘டேய்.. ரெண்டு பேரும் டிகிரி படிச்சிருக்கீங்க.. சடக்குனு ரோட்டுக்கு வர யோசிப்பீங்களேடா.. ஒங்களுக்கு ஏத்த மாதிரி எதுனா பண்ண வேண்டியதுதான..?’

‘அதுதாண்டா ஒங்கிட்ட ஐடியா கேக்கலாம்னு வந்தோம்’

‘காளான் வளக்கலாம்.. கோழி வளக் கலாம்.. டிபன் செண்டரு வெக்கலாம்.. டேட்டா செண்டரு நடத்தலாம்..’

‘காளானும் கோழியும் வளந்துரும். நாங்க வளரணுமேடா? நாள்பட்ட ஐடியாவா இல்லாம டிரெண்டியா சொல்லேண்டா..’

‘சட்டுபுட்டுனு பெரியாளாகணும்.. அம்புட்டுதான.. ஆப்ரிக்கா போய் வரணும்.. முடியுமா?’

‘பேரிக்கா வாங்கணும்கிற மாதிரி அசால்ட்டா சொல்ற.. மொட்டையா பேசாம வெளக்கிச் சொல்லுப்பா..’

‘நீயே பாயிண்ட்டுக்கு வந்துட்ட.. மொட்டத் தலைக்கு முடி விக்கணும். நம்ம ஊரு முடிக்கு ஆப்ரிக்காவுல ஆலாப் பறக்குறான். செம பிசினஸ்.. எனக்கு வந்த சான்ஸ ஒங்களுக்காக பண்ணித் தரேன்’

‘ஆப்ரிக்கான்னா. அமேசான் காடு இருக்குற ஏரியாவா..?’

‘அதெல்லாம் தேவையில்லாத விஷயம். ஓகேவா? இல்லையா?’

என்ன பிசினஸ்டா பண்றீங்கன்னு யாராச்சும் கேட்டாக்கூட பதில் சொல்ல முடியாது போலருக்கே?

ஒடனே முடிவு எடுக்க முடியாம, நானும் வெற்றியும் கொஞ்சம் மண்ட காஞ்சுட்டோம்.

சில பல டீக்களை குடிச்சோம். அப்புறமா, ‘வந்தா மல.. போனா ஹேரு..’னுட்டு பிசினசுக்கு ஓ.கே சொல்லிட்டோம்..

நாந்தான் மொதல்ல போய் லேப்பு வேலய்க்கு குட்பை சொன்னேன்.

‘சார்.. ஐ யம் லீவிங் திஸ் கண்ட்ரி’னு பெருசா பேசிட்டு வெற்றியும் வேலைய தூக்கிப் போட்டுட்டான்.

கோர முடி, சுருளு, செம்பட்ட, பஞ்சு கணக்கா இருக்குற முடியப் பத்தியெல் லாம் பாடம் எடுத்தான் வா.வ. கோயில்ல இருந்துதான் முடி வாங்கணும்னான். சுருண்டுக்காம நீட்டமா நிக்கும்; கலரும் நேச்சரா இருக்கும்கிறதால அதுக்குத் தான் ஆப்ரிக்கால மவுசு அதிகம்னான். வெளிநாட்டுல நம்மூரூ முடிக்கு அறுநூறு கோடிக்கு மேல பிசினஸ் இருக்கு. நீங்க எடுத்த எடுப்புலயே எகிற முடியாது. ஆறு லட்சத்துக்கு பண்ணிட்டு வாங்க.. அப்புறமா அடிச்சு வெளயாடலாம்..

வா.வ. எடுத்த கிளாஸ்ல நாங்க மெய்யாலுமே கெறங்கிப் போய்ட்டம்.

எவன் மண்டயப் பாத்தாலும், ‘முடி செமயா வச்சுருக்கான்ல..’னு வெற்றி சொல்ல ஆரமிச்சான். ரோட்டுல பாக்குற பொம்பளைங்க சடையெல்லாம் எனக்கு ரூபா நோட்டு மாலைகணக்காத் தெரிஞ்சுது..

‘ரெண்டு பேரு கண்ணுலயும் இப்பத் தாண்டா பிசினஸ் சூடு தெரியுது.. டிக்கெட்ட போட்டுறலாம்.. ஆளுக்கு ஒரு லட்சம் ரெடி பண்ணுங்கடா’

எங்களவிட வா.வ. சுறுசுறுப்பா இருந்தான்.

கோயிலுங்கள்ல கெடச்ச முடிய பர்ச்சேஸ் பண்ணினோம். அதுக்கு ஆயில் தேச்சு மெருகூட்டி ரகவாரியாப் பிரிச்சு பாக்ஸ் போட்டாச்சு..

ரெண்டு லட்சத்த வாங்கி பைல போட்டுக்கிட்டு, தோள சிலுப்பிகிட்டே வா.வ. சொன்னான்..

‘நீங்க நல்லா வருவீங்கடா!!’

அன்னிக்கு ராத்திரியே செமயா ஒரு கனாக் கண்டேன்..

நானும் வெற்றியும் ஏசி ரூம்ல ஒக் காந்துருக்கோம். போன் மேல போன்.. ஆப்ரிக்காக்காரனோட வெற்றி பேசுறான். அமெரிக்காக்காரன்கிட்ட நான் ஆர்டரு எடுக்குறேன்.. இங்லீஷ்லாம் தானா வருது.. அப்டியே குஷன் சேர்ல சுத்திக்கிட்டே.. ‘நம்பிக்கை.. நாணயம்.. செம காசு’னு சொல்லிப் பாத்தேன்..

‘ஏண்டா.. இப்டி ஒதையுற?’னு எங் கம்மா கத்துனப்பறந்தான் சுதாரிச்சேன்.

ஒருவழியா அந்த தேதியும் வந்துருச்சு..

ஏர்போட்டுக்கு வந்துருந்தான் வா.வ. எங்க ரெண்டு வீட்டுக் குடும்பமும் வரிச கட்டி வந்து நின்னுச்சு. முப்பது நாள்ல பிசினஸ முடிச்சுட்டு வந்துறப் போறாங்க.. அதுக்கு ஏம்மா கண்ண கசக்குறீங்கன்னு எங்கம்மாகிட்ட வா.வ. ஆறுதலாப் பேசுனான்.

எல்லாருக்கும் டாட்டா காட்டிட்டு பிளேன் ஏறப்போனப்ப.. எங்களுக்கும் கண்ணு கலங்கிருச்சு..

ஒரே மாசம்.. ஓகோன்னு வாழ்க்கை.. ஆப்ரிக்கா ரிட்டர்ன்ல இந்த ஊரு நம்மள பிசினஸ் மேக்னட்டா பாக்கப் போகு துன்னு நெனச்சுக்கிட்டே சீட்ல ஒக்காந்தேன்..

அடுத்தடுத்து நடந்த சம்பவத்துல அந்த நெனப்பு மொத்தத்துலயும் இடி விழுந்துருச்சு..

வாக்கி டாக்கியோட வந்த அஞ்சாறு பாதுகாப்பு போலீசுகாரங்க, என்னயும் வெற்றியையும் பிளேன விட்டு எறக்கிட்டாங்க..

‘ஏம்ப்பா.. முடி பாக்ஸ் லக்கேஜ் ஒங்க ளோடதுதான?’ன்னு கேட்டுட்டு விறு விறுன்னு எங்கள இழுத்துட்டு போய் ஏர்போர்ட் போலீசுகிட்ட குடுத்துட்டாங்க..

ம்ஹூம்.. ரெண்டு பேரையும் குத்த வெக்கச் சொல்லி எங்க முன்னாடி முடி பாக்ஸ வெச்சாங்க.. திமுதிமுன்னு எங்கர்ந்தோ ஓடிவந்த ஒரு போலீசு கூட்டம் வெறப்பா எங்க பின்னாடி நின்னுக்கிச்சு. பளிச்சு பளிச்னு போட்டோ எடுத்துக்கிட்டாங்க..

மறுநா பேப்பர்ல.. ‘ஆப்ரிக்காவுக்கு முடி கடத்திய இருவர் கைது’னு நியூஸ போட்டு அந்த ‘கவுரவமான’ போட்டோவயும் போட்டுட்டாய்ங்க..

எல்லாத்துக்கும் காரணமான வா.வ. தான் ரெண்டு வக்கீலக் கூட்டியாந்து எங்கள பெயில்ல எடுத்தான்.

‘அய்யா சாமி.. கெடய்க்கிற காச வச்சு கஞ்சி குடிச்சுக்கிறோம்டா.. இனிமே பிசினசுன்னு நாங்க வாயத் தொறந்தா பிஞ்சத வெச்சு அடி..’

கொலவெறில இருந்த எங்கள திரும் பவும் வா.வ. பிசினசுக்கு இழுத்தான் -

‘இதாண்டா இண்டியன்ஸ்ட்ட இருக் குற பிரச்னையே.. ஒங்களுக்கு நான் குடுத் தது டிரெய்னிங்.. அதுல ஒங்களுக்கு கெடச்ச எக்ஸ்பீரியன்ஸ வச்சுதான் இனி நிஜ கேமே இருக்கு.. அதுக்குள்ள அத்துக் கிட்டு ஓட நெனச்சா.. ஒங்க வளர்ச்சிய நீங்களே ஒடிச்சிக்கிட்ட மாதிரி’

இவன் வாழவந்தானா.. எங்க வாழ்க்கையில வெளயாட வந்தானா..!!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x