Published : 08 Mar 2017 03:15 PM
Last Updated : 08 Mar 2017 03:15 PM

எம்.ஜி.ஆர் முதல் ஜி.வி. பிரகாஷ் வரை: இயக்குநர், நடிகர்களுக்கு ஒரு ரசிகையின் மனம் திறந்த மடல்!

தமிழ் சினிமாவின் மாபெரும் படைப்பாளிகளுக்கு வணக்கம்.

உங்கள் படங்களைப் பார்த்து வளர்ந்த ஒரு ரசிகையின் மனம் திறந்த மடல் இது.

தமிழ் சினிமா நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது. அதற்காக முதலில் என் வாழ்த்துகள். நீங்கள் இல்லையேல் இந்த நூறாண்டு சாத்தியம் இல்லை. சினிமாவின் வரலாறு உங்களின் சாகசங்களைச் சொல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சினிமா எல்லா கலைகளையும் விழுங்கும் ஆக்டோபஸ். பிளாஸ்டிக் ஆர்ட் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஏனெனில் இலக்கியங்கள் உள்ளிட்ட எல்லா கலைகளும் பல நூற்றாண்டுகளைக் கடந்து பேசப்படுகின்றன. ஆனால், சமகாலத்தில் தோன்றிய கலையாக சினிமா உள்ளது. என் காலத்தில் தமிழ் சினிமா நூறாண்டு தொட்டிருப்பதை சொல்லிக்கொள்வதில் எனக்குப் பெருமைதான்.

ஆனால், அந்தப் பெருமை அத்தோடு முடிந்து போகிறது. அதற்கு இயக்குநர்கள், நடிகர்களாகிய நீங்கள் தான் காரணம் என்பது நிதர்சனம்.

இது நான் உங்கள் முன் வைக்கும் குற்றச்சாட்டாகக் கருதலாம். உங்கள் பெயருக்கும் புகழுக்கும் குந்தகம் விளைவிக்க முற்படுகிறேன் என்று கருதலாம். ஏன்? அதையும் தாண்டி விளம்பரத்துக்காகவே உங்களை வசைபாடுவதாக சொல்லலாம். ஆனால், இதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதை அடுத்தடுத்த ஆதாரங்களின் மூலம் நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

நான் அதிகம் திரைப்படங்களைப் பார்த்தது இல்லை. ஆனால், நான் பார்த்த படங்களில் வசனங்கள், காட்சிகள், பாடல்கள், பாத்திரங்கள், கதைக் கரு, உத்திகள், நகைச்சுவை எனப் பல்வேறு தளங்களில் பெண் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதை உணர்ந்து அதிர்ந்துபோனேன்.

எம்.ஜி.ஆர் தொடங்கி சிவகார்த்திகேயன் வரை பெண்களை அடக்கி ஒடுக்குவதில், அறிவுரை சொல்வதில், பழி போடுவதில், வசை பாடுவதில் யாரும் விதிவிலக்கில்லை என்பது கசப்பான உண்மை.

அம்மாவிடம் பாசத்தைப் பொழியும், பெரியவர்களைக் கண்டால் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கும், ஊர் மக்கள் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் எம்ஜிஆர் கதாநாயகிகளிடம் மட்டும் ஏன் குறும்பு செய்கிறார்? அந்த குறும்பின் எல்லை நீண்டு கொண்டே போவதை எப்படி அனுமதிக்க முடியும்?

பொண்ணா பொறந்தா ஆம்பளை கிட்ட கழுத்தை நீட்டிக்கணும், அவ ஒண்ணு ரெண்டு மூணு முடிச்சு போட்டா மாட்டிக்கணும் பாடலில் மாங்கா திருடி திங்குற பொண்ணே மாசம் எத்தனையோ, கொஞ்சம் மண்ணும் தாரேன் தின்னடியம்மா மசக்கை தீரலியோ என்கிறார்.

அந்தப் பாடலில் வரும் இன்னும் சில வரிகள் வெளிப்படையான இரட்டை அர்த்தம் கொண்ட எல்லை மீறல்கள்.

கே.ஆர்.விஜயா பேன்ட் - சட்டையில் இருந்து சேலைக்கு மாறியதும் இப்படிதான் இருக்க வேணும் பொம்பளை, இங்கிலீசு படிச்சாலும் இந்தத் தமிழ்நாட்டுல எனப் பாடுகிறார்.

இன்பமே உந்தன் பேர் பெண்மையே என்ற பாடலில் பெண் போகப்பொருள்தான் என்பதை அழுத்தமாக சொல்கிறார்.

பாரப்பா பழனியப்பா பாடலில் நாட்டுக்குத்தான் ராணியப்பா, வீட்டுக்கு அவ மனைவியப்பா என்கிறார்.

தனி நிர்வாகத் திறன் கொண்ட, தன்னம்பிக்கை நிறைந்த, சுதந்திரமாக தனக்குப் பிடித்ததை செய்யும் பெண்ணை அடக்கி, 'உங்க காலடியில் இருப்பதே எனக்கான வாழ்க்கை, நான் திருந்திட்டேன், என்னை ஏத்துக்குங்க' என்பதைப் போல வசனம் பேச வைத்து குடும்பத்துப் பெண் என்ற பிம்பத்தை ஏற்படுத்துவதே எம்.ஜி.ஆரின் பாணியாக இருந்திருக்கிறது.

எந்தக் கதாநாயகியும் எம்.ஜி.ஆரைப் பின் தொடர்ந்து காதல் வயப்படுபவர்களாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். ஆனால் எம்.ஜி.ஆர் தான் பெண்களின் பாதுகாவலராக, பெண்களை மதிப்பவராக முன்னிறுத்தப்பட்டுள்ளார். ஏன் பெண்கள்தான் நாயகனைத் தேடிச் சென்று காதலிக்க வேண்டுமா? காதல் வசப்படுவதில் ஆண்களுக்கு பங்கில்லையா என்ற கேள்வி எனக்கு எழுந்தது.

அதற்கு எம்.ஜி.ஆருக்குப் பின் வந்து சினிமாவில் சாதித்த உச்ச நடிகர் ரஜினி பதில் சொல்கிறார். 'பொண்ணுங்களைத் தேடி நாம போகக் கூடாது. நம்மளைத் தேடி பொண்ணுங்க வரணும்?' இது எந்த மாதிரியான சிந்தனை.

'பாட்ஷா' படத்தில் தன் அப்பாவுக்கு ரஜினி மூன்று சத்தியம் செய்து கொடுக்கிறார். தம்பியை போலீஸ் அதிகாரி ஆக்குவேன், ஒரு தங்கையை டாக்டராக்குவேன், இன்னொரு தங்கையை நல்ல குடும்பத்து மருமகளாக்குவேன் என்று.

முதல் இரண்டு சத்தியங்கள் பற்றி எந்த கேள்வியும் எழவில்லை. மூன்றாவது சத்தியத்தைப் பாருங்கள். திருமணம் செய்து வைப்பதே மிகப்பெரிய லட்சியமாகக் கொண்டு ஒரு அண்ணன் செயல்படுகிறார். அந்தப் பெண்ணுக்கு அதைத் தவிர வேறு எண்ணங்கள், ஆசைகள், லட்சியங்கள், எதிர்பார்ப்புகள் இல்லையா அல்லது இருக்கக் கூடாதா?

'மன்னன்' படத்தில் விஜயசாந்தி மிகப்பெரிய கம்பெனியை நிர்வகிக்கும் இயக்குநர். ஆனால், அவர் திமிராக நடந்துகொள்கிறார் என அமைதியாக, அடங்கிப் போகிற குஷ்புவை ரஜினி விரும்புகிறார். கடைசியில், இல்லறக் கடமை என்ற எழுதப்படாத விதியின்படி குடும்பப் பொறுப்புக்குள் விஜயசாந்தி தன்னை ஐக்கியப்படுத்திக்கொள்வதால் ஏற்றுக்கொள்கிறார். அதே போல், 'படையப்பா' படத்தில் சாத்வீகம் என்று சாக்குபோக்கு சொல்லி சவுந்தர்யாவை விரும்புகிறார். ரம்யா கிருஷ்ணனை கண்டு விலகிச் செல்கிறார்.

'மாப்பிள்ளை' படத்தில் மாமியாருக்குப் 'புத்தி' புகட்டுகிறார். 'சிவாஜி' படத்தில் அங்கவை, சங்கவை என்று கருப்பான பெண்களை கலாய்க்க ரஜினி எப்படி அனுமதித்தார்?

அது இயக்குநரின் விருப்பம் என்றால் என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா, என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா என்று பாடியதும் இயக்குநரின் விருப்பம்தானா?

'கோச்சடையான்' இசை வெளியீட்டு விழாவில் 'தன் மகள் சவுந்தர்யா விரைவில் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும். அதுவே என் விருப்பம்' என்று மேடையில் பெருமை பொங்கக் கூறினார்.

தான் என்ன செய்ய வேண்டும் என்பதையும், எது விருப்பம் என்பதையும் உச்ச நடிகரின் மகள் கூட தீர்மானிக்க முடியாதா? அப்படி என்றால் என்னைப் போன்ற பெண்களுக்கு எவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கும்? என்பதைப் பட்டியலிட்டுதான் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமா?

'விக்ரம்' படத்தில் வெயில் அதிகமா இருந்தா சட்டையைக் கழட்டிட்டு ஹாயா இருப்போம். உங்களால் முடியுமா? என்று கமல் லிசியிடம் கேட்பார். இதற்கெல்லாம் கடுமையான கண்டனங்கள் எழவில்லை அப்போது.

ஆண்கள் பிடித்த பெண்ணைக் காதலிக்க பகிரங்க பிரயத்தனம் செய்கிறார்கள். துரத்தி துரத்திக் காதலிக்கிறார்கள். கடைசியில் காதல் கைகூடாமல் போனால் கூட பைத்திய நிலைக்குச் சென்றாலும் இன்னொரு பெண்ணால் மீட்டெடுக்கப்பட்டு வேலை, குடும்பம் என்று மீண்டும் இயல்பு வாழ்க்கைக்குள் வந்துவிடுகிறார்கள்.

ஆனால், காதல் தோல்வியில் பாதிக்கப்படும் பெண் தற்கொலை செய்து கொள்கிறாள் அல்லது பேயாகிவிடுகிறாள். இறந்த பிறகும் கூட மறுமணம் செய்த நாயகனிடம், மன்னவனே அழலாமா? இன்னொருத்தி வடிவினில் வந்திருப்பது நானல்லவா என்கிறார். இப்படித்தானே பெண்கள் குறித்து நீங்கள் காட்சிப்படுத்துகிறீர்கள்?

'ஆட்டோகிராப்' படத்தில் 2 காதலை சந்தித்த சேரனுக்கு சினேகாவின் நட்பு கிடைக்கிறது. இறுதியில் கனிகாவை கைபிடிக்கிறார். 'அழகி'யில் ஒரு திருமணத்தில் தோல்வி கண்ட நந்திதா தாஸ் அத்தோடு வாழ்க்கை முடிந்துபோனதாகவே கருதுகிறார்.

காதலில் தோல்வி என்றால் ஒரு பெண் வாழ்க்கையில் ஜெயிக்க முடியாதா? ஒன்று தற்கொலை இன்னொன்று சமூக சேவை, இந்த இரண்டும்தான் தீர்வுகளா? இதிலிருந்து இன்னொரு புது வழியை எங்களுக்குக் காட்ட நீங்கள் தயங்குகிறீர்களா? அல்லது இப்படித்தான் நாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?

பாவாடை பஞ்சவர்ணம் ஒரு பட்டாசு வீசிப் போகுதே என்று பாடும் அஜித் தான், 'வரலாறு' படத்தில் 'ஆடத் தெரியாதுன்னு சொல்லியிருந்தா ஆடிக் காட்டியிருப்பேன், பாடத் தெரியாதுன்னு சொன்னா பாடிக் காட்டியிருப்பேன், ஆம்பளையான்னு கேட்டா. அதான் ஆம்பளைன்னு நிரூபிச்சேன்' என்று கனிகாவை பலாத்காரம் செய்துவிட்டு சொன்னதை பஞ்ச் வசனம் என்று புகழாரம் சூட்டி கைதட்ட வைத்ததுதான் உங்கள் குறிக்கோளா? அதில் பெண்களை கேவலப்படுத்துகிறோம் என்ற குற்ற உணர்வு இல்லையா?

போலீஸா இருந்தாலும் நீ ஒரு பொம்பளை என்றும், அடக்க ஒடுக்கமா பொம்பளையா நடந்துக்க என்று எத்தனை நாயகிகளிடம் விஜய் சொல்கிறார். செந்தமிழ்நாட்டு தமிழச்சி சேலைதான் கட்ட வேண்டுமா? ஜீன்ஸ் போடக்கூடாதா?

டாடி மம்மி வீட்டில் இல்லை, தடை போட யாரும் இல்லை விளையாடலாம் வா பாடல், என் செல்லப்பேரு ஆப்பிள் என்னை சைஸா கடிச்சிக்கோ என்று விஜய் படப் பாடல்கள் பல் இளிக்கின்றன. அதே விஜய்தானே ரசிகர்களுக்கு அன்பால் அறிவுரை சொல்கிறார். ரசிகைகளுக்கு அவர் எதுவும் சொல்ல மாட்டாரா?

தனுஷும் இதற்கு விதிவிலக்கல்ல. ஒய் திஸ் கொலை வெறி, அடிடா அவளை, வெட்றா அவளை என்று தப்பாட்டம் ஆடுகிறார். அதுவும் திருடா திருடி படத்தில் பஸ் பாடலில், 'உனக்கு எய்ட்ஸ் வந்துடும்டா' என்று சாயாசிங் சொல்ல, 'உன்னை கற்பழிக்கப் போறேன்டி' என்கிறார்.

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப் போலாமா? ஓடிப் போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா?, பொம்பளைங்க காதலைத்தான் நம்பிவிடாதே என்று பாடல்களில் கூட எங்களை டேமேஜ் செய்வதுதான் உங்கள் இலக்கா?

திருட்டு ராஸ்கல் திருட்டு ராஸ்கல் திருட வாயேன்டா திருடும் பொருளே திருடச் சொல்லுது திருடிப் போயேன்டா என்று எங்களையே பாட வைப்பது உங்களுக்கு சாமர்த்தியமாகத் தெரிகிறது. எங்களுக்குதான் கண்ணீர் தளும்புகிறது.

இன்னும் எத்தனை படங்களில்தான் உடலை வைத்து, உருவத்தை வைத்து, முரண் கதாபாத்திரத்தை வடிவமைத்து எங்களை சிதைக்கப் போகிறீர்கள்?

ஜல்லிக்கட்டுக்காக போராடிய இசையமைப்பாளர், பாரதியின் பாடல்களை நேசிக்கும் முற்போக்கு முகம் கொண்ட ஹிப் ஹாப் தமிழா ஆதி கூட கிளப்புல மப்புல திரியுற பொம்பள என்று கண்ணியம் மீறுகிறார். அவரை எப்படி கலாச்சார காவலனாக ஏற்றுக்கொள்ள முடியும்?

எவன் டி உன்னைப் பெத்தான், கையில கிடைச்சா செத்தான் என பாடும்போதே சிம்புவை கண்டிக்காததால்தான் பீப் சாங் மூலம் எங்களை அவமதிப்பு செய்கிறார்.

குழந்தைகளுக்குப் பிடித்த சிவகார்த்திகேயன் கூட தப்பெல்லாம் அவர் செய்துவிட்டு எங்கள் மீது பழிபோடும் தாராள மனம் கொண்டவராகவே இருக்கிறார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தில் பிந்துமாதவியை காதலித்துவிட்டு, ஸ்ரீதிவ்யாவை தாவணியில் பார்த்ததும் மனம் மாறி ஊதா கலரு ரிப்பன் என்று பாடல் பாடுகிறார். பின் தொடர்கிறார். ஆனால் அவரே இந்தப் பொண்ணுங்களே இப்படிதான் புரிந்துபோச்சுடா என்று பாடுகிறார். இது எப்படி சரியாகும்?

'ரஜினிமுருகன்', 'ரெமோ' படங்களிலும் அந்த 'நல்ல' கொள்கையை விடாப்பிடியாக பின்பற்றுகிறார். 'ரெமோ'வில் கீர்த்தி சுரேஷை விடாப்பிடியாக விரட்டி விரட்டி காதலித்துவிட்டு, 'பசங்களை அழ வைக்குறதுதான் பொண்ணுங்களோட ஃபுல்டைம் ஜாப்', 'பொண்ணுங்களை கன்ட்ரோல் பண்றதுதான் கஷ்டம். கன்ஃபியூஸ் பண்றது ஈஸி', 'ஆம்பளைங்க அழக்கூடாதுதான். ஆனா, அவங்களை அழ வைக்கக்கூடாதுன்னு பொண்ணுங்ககிட்ட சொல்லுங்க', 'பார்த்தா லூஸு மாதிரி தெரியலை. ஆனா, பேசினா தெரியுது' என பெண்களை நோக்கி வார்த்தை அம்புகளை வீசுகிறார்.

சும்மா இருக்கும் எங்களைப் போன்ற பெண்களை சீண்டிப் பார்த்துவிட்டு, எங்கள் மீதே பழி சுமத்துவது தான் நாயக பிம்பத்தை தூக்கி நிறுத்தும் அம்சமா?

ஜி.வி.பிரகாஷ் ஹீரோ ஆக நாங்கள்தான் பலிகடா ஆக்கப்படுகிறோம். 'வெர்ஜின் பசங்க சாபம் சும்மா விடாது' 'நான் உனக்கு பேய்ப்படம்.. நீ எனக்கு பிட்டு படம்' என்று இளைஞர்களைக் கவர வணிக வெற்றியைப் பெற நாங்கள் தவறான பண்டமாக விநியோகிக்கப்படுகிறோம்.

வெர்ஜின் பொண்ணுங்க டைனோசர் காலத்துலயே இல்லை என சொல்லும் விடிவி கணேஷ், 'போடா போடி' படத்தில் தம்பி…ஒரு கொழந்தைய குடு.வேற எதுலயுமே அவங்க கவனம் திரும்பாது என சிம்புவுக்கு அட்வைஸ் செய்கிறார். பெண் என்றால் குழந்தை பெற்றெடுக்கும் எந்திரம் மட்டுமே என்பதை இனிவரும் சந்ததிகளுக்கும் கற்றுக்கொடுக்கும் அவரது கற்பிதம் கடுமையான கோபத்தை எங்களுக்கு உண்டாக்குகிறது.

இதையெல்லாம் தவிர்த்து எங்களைப் பற்றி நல்லது சொல்ல மாட்டீர்களா என்று தேடிக்கொண்டும், ஏங்கிக் கொண்டே இருக்கிறோம். அப்படி ஏங்க வைப்பதே எவ்வளவு பெரிய தவறு என்று தெரியுமா உங்களுக்கு?

'திருநாள்' படத்தில் திட்டாதே திட்டாதே என்று ஒரு பாடல். பெணகளை திட்டாதே என்று ஒரு பாடலா என்று ஆச்சர்யப்பட்டு கேட்டால் என்ன வார்த்தை வேண்டுமானாலும் திட்டு. ஆனால் அந்த ஒரு வார்த்தை சொல்லி திட்டாதே என்கிறது வரிகள். அந்த ஒற்றை வார்த்தை தவிர மற்ற எல்லா வார்த்தைகளிலும் பெண்களைத் திட்டலாம் என பாடல் நியாயப்படுத்துவது சரியா?

சந்தானத்தையும், இரட்டை அர்த்த வசனங்களையும் பிரிக்கவே முடியாதுதான். 'என்றென்றும் புன்னகை' படத்தில் 5.10க்கு போறேன் என ஒரு பெண் சொல்வார். ஏன் நல்லாதானே இருக்கே.500, 1000க்கு கூட போலமே என்பார். பெண் சொன்னது நேரத்தை. சந்தானம் சொல்வது என்ன? அது குறித்து சர்ச்சை எழுந்ததால் அந்தக் காட்சியை நீக்கியது தனிக்கதை. ஆனால், அந்த பொறுப்பு அவர்களுக்கு இருக்க வேண்டாமா? நாங்கள் கொந்தளித்து, வெகுண்டெழுந்து கருத்து சொன்ன பிறகுதான் தவறை உணர்வார்களா?

'பொண்ணுங்க புடவை மாத்தத்தான் லேட் பண்றாங்க. டக் டக்-னு பையனை ஈசியா மாத்திடறாங்க', 'வேற ஒருத்தன் உஷார் பண்ணின பொண்ணுங்களைக் கூட கரெக்ட் பண்ணிடலாம். ஆனா எப்பவும் உஷாரா இருக்கும் பொண்ணை கரெக்ட் பண்றது ரொம்ப கஷ்டம்' என்ற சந்தானத்தின் வசனங்கள் எங்கள் இனத்தையே பதம் பார்க்கின்றன.

'கத்திசண்டை'யில் தமன்னாவை அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக நடிக்க வைத்தது ரசிகர்களுக்காகத்தான். ரசிகர்கள் அதைத்தான் விரும்புகிறார்கள் என்று சொன்ன இயக்குநர் சுராஜ் பகிரங்க மன்னிப்பு கேட்டதை அறிவோம். ஆனால், அது அந்த ஒரு இயக்குநரின் எண்ணம் மட்டும்தானா? என்றால் இல்லை என்றே என்னைப் போன்ற பெண்களால் சொல்ல முடியும்.

'ரிதம்', 'ஆனந்தபூங்காற்றே' படத்தில் கூட குழந்தையில்லாத பெண்களை இன்னொரு ஆண் ஏற்றுக்கொள்வதாக கதை இருக்கும். ஆனால், கௌதம் மேனன் மட்டும் இதில் விதிவிலக்கு. 'வேட்டையாடு விளையாடு', 'என்னை அறிந்தால்' படங்களின் மூலம் கணவன் கைவிட்ட, கணவனை இழந்த பெண்ணுக்கு மறுமணம் குறித்த வலியுறுத்தலை ஏற்படுத்திருக்கிறார்.

செல்வராகவன் அடிடா அவளை என்று பாட்டு போட்டு அதற்குப் பரிகாரமாக சிதைந்த நிலையில் இருக்கும் ஆணை மீட்டெடுக்கிறார். இப்படி சில நல்ல விஷயங்கள் சினிமாவில் உள்ளன.

'மன்மதன்', 'நான் அவனில்லை', 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என பெண்களை இழிவுபடுத்தும் படங்களின் பட்டியல்தான் பெரிதாக உள்ளது. 'சிறை', 'பூ' என்று பெண்ணின் உணர்வை பிரதிபலிக்கும் படங்கள் குறைவாகவே உள்ளன. எங்களுக்கு அது போதுமானதாக இல்லை என்பதை உங்களால் உணர முடிகிறதா?

இன்னும் எத்தனை படங்களில் ஜெனிலியா, லைலா என்ற நாயகிகளின் குறியீடாக கிறுக்குத்தனமான சேட்டைகள் செய்யும் பெண்ணாகவே பதிவு செய்யப் போகிறீர்கள்? எங்களுக்கு சுய அறிவும், சிந்தனையும் இல்லையென்று தீர்மானத்துடன் உங்களால் இயங்கமுடிகிறது என்பதே எங்களுக்கெல்லாம் தொட்டால் நோகும் தழும்பாக வலிக்கிறது.

மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா, பெண்கள் சக்தியின் பிறப்பிடம், அதனால்தான் நதிகள், நாட்டுக்கு கூட பெண்கள் பெயரை வைத்திருக்கிறோம். பெண்களை தெய்வமாக வழிபடுகிறோம். கொண்டாடுகிறோம்.

பெண்கள் வானத்தின் பாதியைத் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்கிறோமே? இது வெறும் மேற்கோள்களுக்காகவா? மேடையில் சொல்ல மட்டுமா? அதை குறிக்கோள்களாக மாற்றிக் கொள்ளுங்கள் இயக்குநர்களே.. நடிகர்களே...

சொல்லுகிற இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். கேட்டுக்கொள்கிற இடத்தில் நாங்கள் இருக்கிறோம். இனி ஒரு முறை நாங்கள் சொல்லி, நீங்கள் கேட்கிற நிலையை ஏற்படுத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

ஆண்மையின் இலக்கணம் பெண்ணைப் பாதுகாப்பதுதான். இனியாவது அந்தப் பாதுகாப்பு நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் எங்களுடன் இயங்க இருக்கும் உங்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்.

இப்படிக்கு

சினிமாவை நேசிக்கும் ரசிகை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x