Published : 17 Feb 2019 01:24 PM
Last Updated : 17 Feb 2019 01:24 PM

பாரதத் தாயின் பிள்ளைகள்

  பத்துத் திங்கள் பார்த்துப் பார்த்து வளர்த்து ஊர் புகழ வாழ்ந்திடுவான் தேசத்திற்கே காவல் செய்யும் காவல்காரன் என்று மார்தட்டிக் கொண்ட அன்னையின் தலைமகனோ! கடைமகனோ நீ!

ஒவ்வொரு விடுமுறையிலும் பரிசுகள் பல தந்திட்டான் தன் பிள்ளைகளுக்கும் முறை தவறாமல் தாய்மாமன் சீர்வரிசை செய்திடுவான் என்று காத்திருந்த தங்கையின் அண்ணனோ!

நீ தந்தையாகிவிட்டாய் என்று குழந்தையை உனக்கு பரிசளித்திட நினைத்த நிறைமாத கர்ப்பிணியின் கணவனோ நீ!

மற்ற பிள்ளைகளைப்  போல் தினம் தினம் விளையாடாவிட்டாலும்

வரும் நாளில் உன்னுடன் விளையாடலாம் என்று கனவு கண்ட குழந்தைகளின் அன்புத் தந்தையோ நீ!

தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்று நம்பிக்கையுடன் இருந்த அண்ணணின் அன்புத் தம்பியோ நீ!

தோளுக்கு மேல் வளர்ந்த தோழன் தன் குடும்ப பாரங்களைத் தாங்குவதற்கு

துணையிருப்பான் என்று நேசம் வைத்த தந்தையின் புதல்வனோ நீ!

பட்டாளம் என்று பயம் இருந்தாலும் பேரனின் நாட்டுப்பற்றை

மெச்சிட்ட பாசப் பாட்டியின் அன்புப் பேரனோ நீ!

நித்தம் நித்தம் உன்னை எண்ணி பொட்டு வைத்த புதுமணப்பெண்ணின் மணாளனோ நீ!

சொந்தங்கள் எதுவாக இருந்தாலும் சோகங்கள் ஒன்று தான்.

வீறுநடை போட்ட கால்களும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம்

 செலுத்திய  கைகளும் இன்று சிதறுண்டு கிடக்கின்றன.

அள்ளி அணைத்து அழுதிட கட்டுடல் இங்கில்லையே!

கட்டி முத்தமிட கன்னங்கள் இல்லையே, 

சிதறுண்ட உடலின் நடுவே சிக்கித் தவிக்கின்றன நெஞ்சங்கள் 

மனிதராய்ப் பிறந்த அனைவருக்கும் இறப்பு நிச்சயம் தான்
ஆனால்,  நாட்டுக்காக உதிரம் சிந்திய  உங்களின் இறப்பு உன்னதம். 

உயிர் நீத்த நீங்கள் அனைவரும் எங்கள் உறவே

இந்திய நாட்டின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொருவரும் பாரதத் தாயின் பிள்ளைகளே!.

டி. லாவண்ய சோபனா திருநாவுக்கரசு                                            

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x