Last Updated : 01 Nov, 2018 09:06 PM

 

Published : 01 Nov 2018 09:06 PM
Last Updated : 01 Nov 2018 09:06 PM

புத்தருடன் ஒரு காலை நடை : 10- தர்மத்தின் பாதையில் நடந்தவர்கள்!

புத்தர் சொல்ல சீடர்கள் கேட்ட கதை:

ஒரு காட்டில் ஒரு தேள் வாடகை தராமல் வசித்தது. காட்டின் நடுவே ஒரு வாய்க்கால். தேளுக்கு, வாய்க்காலின் இக்கரையில் இருந்து அக்கரைக்குப் போக ஆசை. வாய்க்காலில் வசித்த மீன், நண்டு, தவளை போன்றவற்றிடம் சென்று தேள் லிஃப்ட் கேட்டது, கொட்டும் தேளுக்கு யார்தான் உதவி செய்வார்? எல்லா உயிரினங்களும் மறுத்துவிட்டன. அப்போது நீரோடையில் ஓர் ஆமை வந்தது. ஆமையிடம் சென்று ''என்னை அக்கரைக்குச் கொண்டுபோய் விடேன்'' என்று கெஞ்சிக் கேட்டது.

கருணை கொண்ட அந்த ஆமை தனது முதுகில் தேளை ஏற்றிக் கொண்டு ஆமை நீரில் நீந்திச் சென்றது. ஆமையின் முதுகில் ஜம்மென்று சவாரி செய்யும் தேளுக்கு திடீரென்று ஒரு யோசனை. ‘நான் பலரைக கொட்டிம் அவர்கள் வலியால் துடிப்பதை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் ஒரு நாள் கூட ஆமையை நாம் கொட்டியதே இல்லையே... இன்றைக்கு அதையும் செய்து பார்த்துவிடுவோமே...’ என்று காரியத்தில் இறங்கியது.

ஆமையின் முதுகில் கொட்டியது தேள். ஆனால், ஆமை எதுவும் நடக்காதது மாதிரி நீரில் நீந்திபோய்க்கொண்டே இருந்தது. ‘என்னது இது! இந்த ஆமை முதுகில் கொட்டியும் கூட இதுக்கு வலிக்கவே இல்லையே’ என்று யோசித்த தேள்... ஆமையைப் பார்த்து ‘’ஆமை அண்ணே... உனக்கு வலி என்பதே என்னவென்றே தெரியாது போலிருக்கே...’’ என்றது.

தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொண்ட ஆமை,தேளைப் பார்த்துசொன்னது: என்னோட முதுகு கடினமான ஓட்டினால் ஆனது. அதனால எனக்கு வலியே தெரியாது. ஆனா, என்னோட கழுத்துப் பக்கத்துல மென்மையா இருக்கும் . அங்கேதான் வலியோ, காயமோ வரும்’’ என்றது.

'அப்படியா சங்கதி...' என்று தனக்குள்ளேயே சிரித்துக்கொண்ட தேள்... மில்லி மீட்டர் மில்லி மீட்டராக முன்னேறிச் சென்று... ஆமையின் கழுத்துப் பகுதியை அடைந்து... தன் கொடுக்கால் கொட்ட முயற்சித்தது. தன்னுடைய கழுத்துப் பகுதியில் திடீரென்று என்னமோ குத்தியது மாதிரி இருப்பதை உணர்ந்த ஆமை, வெடுக் என்று தனது தலைப் பகுதியை முதுகு ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டது.

அப்புறமென்ன... நயவஞ்சக தேள் நீரோடையில் விழுந்தது. அதன் உயிர் போயே... போயிந்து!

*** **** **** ****

உள்ளம் விழித்தது மெல்ல!

கிப்லா நதிக்கரையோரம். சிலுசிலுக்கும் காற்று. காற்றின் முதுகிலேறி வரும் நெல் வயல்களின் பச்சை வாசனை. ஒரு அரச மரத்தடியில் சித்தார்த்தர்... மகா தியானத் தில் ஆழ்ந்திருந்தார். அவர் அவ்விதம் தியானத்தில் ஆழ்ந்திருப்பது ஒன்றும் புதிதில்லை. இதுபோல எத்தனையோ நாட்கள்... உணவு எதுவும் உட்கொள்ளாமல், நீர் அருந்தாமல் நாள்கணக்கில் தியானம் மேற்கொண்டவர்தான். அப்படிப்பட்ட சித்தார்த்தருக்கு இன்றைக்கு புதிய ஞானம் கிடைத்தது.

கிப்லா நதிக்கரையில் தியானம் செய்துகொண்டிருந்த சித்தார்த்தரை... கடந்து சில வயல் பெண்கள் சென்றனர். அவர்கள் வாயில் இருந்து உதிர்ந்த நடவுப் பாடல்கள்... தியானத்தில் இருந்த சித்தார்த்தரை அசைத்துப் பார்த்தது. வயல் பெண்களின் அந்த கிராமத்து கீர்த்தனைகள் 'உண்மையான மகிழ்ச்சி என்பது என்ன? அந்த மகிழ்ச்சியை மனம் ஏந்திக்கொள்ள தன்னைத் தானே வருத்திக்கொள்வது, உணவு எதுவும் உண்ணாமல் இருப்பது போன்றவை பயனற்றவை...' என்று சித்தார்த்தக்குப் புரியவைத்தது.

உடனடியாக சித்தார்த்தரின் உள்ளம் விழித்தது மெல்ல. அந்த நிமிடமே தியானத்தையும், உண்ணா நோன்பினையும் கைவிட்டார். கிப்லா நதிக்கரையில் கிடைத்த பழங்களை உண்டு பசியாறினார். ‘உடலும், மனமும் எவ்வித வலியும், சித்திரவதையும் இல்லாமல் மகிழ்ச்சியாக இருந்தால் மட்டுமே உள்ளார்ந்த அமைதியை அடைய முடியும்’ என்பதை அந்த நிமிடத்தில் உணர ஆரம்பித்தார் சித்தார்த்தர்!

**** **** *** ****

சொற்களில் நிரம்பிய யதார்த்தம்!

புத்தருடைய உரையாடல் அனைத்தும் எல்லா மக்களுக்கும் போய்ச் சேர வேண்டும் என்கிற அடிப்படைத் தேவையை உணர்ந்து மொழியப்பட்டவையாகும். பகுத்தறிவு கொண்ட புத்தரின் வார்த்தைகளில் எப்போதும் யதார்த்தம் நிரம்பி வழிபவை.

பரம்பொருள் என்பது என்ன... என்று புத்தர் சொன்ன விளக்கத்தைப் போல உலகில் இதுவரையில் வேறு எவரும் எளிமையாக விளக்கவே இல்லை.

உன்னுடைய கண்களால் பார்க்கக் கூடியவை...

உனது காதுகளால் கேட்டுணரக் கூடியவை...

உன்னுடைய நாசியால் நுகரக் கூடியவை...

உன் நாவால் ருசித்து புசிக்கக் கூடியவை...

உன்னுடைய உடலால் தொட்டுத் தொட்டு உணரக் கூடியவையே...

மனிதர்களின் எண்ணங்களுக்கும் அறிவுக்கும் அடிப்படையாகும்.

இவைதான் பரம்பொருள்.

இவை மட்டுமே பரம்பொருள்!

*** ***** ***** *****

# ஒரு மெழுகு வர்த்தியில் இருந்து

ஆயிரக்கணக்கான மெழுகுவர்த்திகளுக்கு

ஒளியூட்ட முடியும். அதன் வாழ்க்கை குறைக்கப்படாது.

பகிர்ந்துகொள்வதன் மூலமாக மகிழ்ச்சி ஒருபோதும்

குறைவதில்லை!

- புத்தர்

*** ***** ***** *****

தர்மத்தின் பாதையில் நடந்தவர்கள்!

அவள் பெயர் அம்பா பாலிகா. எல்லோரும் அவளை ஆம்ர பாலி என்றுதான் செல்லமாக அழைப்பார்கள். வைசாலி தேசத்தின் பேரழகிகள் பட்டியலை எடுத்தால்... அதில் முதல் இருக்கை இவளுக்குத்தான். திறமைகளின் வானவில்லாக இருந்தாள் அவள். புத்திசாலித்தனம் அவளிடத்தில் தனது மூக்கை நீட்டிக்கொண்டே இருக்கும்.

இவ்வளவு தித்திப்பான இவளை அடைய யாருக்குத்தான் ஆசை வராது. வந்தது மகா பிரபுக்களுக்கும்... மகா மந்திரிகளுக்கும்.... செல்வந்தர்களுக்கும். அவளை விரும்புகிறவர்களுக்கெல்லாம் அவளை விருந்து வைக்க அவள் என்ன பாயசமா? அழகின் புதையல் அல்லவா? எனவே... அவளை எவரும் கவர்ந்திழுத்துச் சென்றிடக் கூடாதென்று நினைத்த வைசாலி தேசத்து மன்னன். ஒரு திட்டம் வகுத்தான். அதன்படி ஆம்ர பாலியை வைசாலி தேசத்து அரசவை நடனக் கலைஞராக்கிட முனைந்தான். அப்படியே செய்தான்.

ஆம்ர பாலி அந்த தேசத்துக் கலைகளின் ராணியானாள்.

ஆனாலும் என்ன... அவளுடைய அழகு யாரைத்தான் அமைதியாக இருக்க வைக்கும்? அடுத்த தேசத்து மன்னன் பிம்பசாரன். ஆம்ர பாலியுடைய அழகின் கடலில் எப்போதும் மையம் கொண்டே இருந்தது பிம்பசாரனின் காற்றழுத்த தாழ்வு மண்டலம். அவளுக்காக அவன் தனது நெஞ்சத்தில் புயல்கூண்டு ஏற்றி வைத்திருந்தான்.

வைசாலி தேசத்து மீது படையெடுத்து வந்தான் பிம்பசாரன். வைசாலி தேசத்தை வென்றான்... ஆம்ர பாலியைக் கைத்தலம் பற்றினான்.

பிம்பசாரனுக்கும் - ஆம்ர பாலிக்கும் விமல்கொண்டனன் என்கிற ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் - புத்தருக்கு ஆம்ர பாலி விருந்து வைக்க விரும்பினாள். அதற்காக ஆசை ஆசையாக புத்தரை தனது இல்லத்துக்கு ஒருநாள் அழைத்திருந்தாள். அதே நாளில் விச்சாலி தேசத்து மன்னன் ஜகமுண்டனும் புத்தருக்கு விருந்து வைக்க ஆசைகொண்டு அழைத்திருந்தான்.

புத்தர் யோசிக்கவே இல்லை. அதிகாரத்தின் உச்சாணிக்கொம்பில் உட்கார்ந்திருந்த ஜகமுண்டனின் அழைப்பையும் மீறி ஆம்ர பாலியின் இல்லத்துக்கு விருந்துண்ணச் சென்றார் புத்தர்.

பல வகையான பதார்த்தங்களும் பழங்களும் பானங்களும் பரிமாறப்பட்ட அந்த விருந்தில்... ஒரே ஒரு குவளை பழரசத்தை மட்டும் கேட்டு வாங்கி அருந்திய புத்தர்... விருந்துக்குப் பிறகு புத்த தர்மத்தை ஆம்ர பாலிக்கும் அவளுடைய மகன் விமல்கொண்டனனுக்கும் கற்பித்தார். இருவரும் மனமொன்றி அதை மனசுக்குள் ஏந்திக்கொண்டனர்.

தன்னுடைய ஆயுளின் அந்தி வரையில் தாங்கள் போகுமிடங்களில் எல்லாம் ஆம்ர பாலியும்... விமல்கொண்டனனும் புத்தரின் தர்ம சிந்தனைகளை முழு ஈடுபாட்டுடன் பரப்புரை செய்தனர் என்பது கடந்த கால வரலாறு!

- இன்னும் நடப்போம்...

மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x