Last Updated : 15 Aug, 2018 09:28 AM

 

Published : 15 Aug 2018 09:28 AM
Last Updated : 15 Aug 2018 09:28 AM

2 மினிட்ஸ் ஒன்லி 05: பாதுகாப்பு வளையம்!

எல்லாருக்கும் என்னோட சுதந்திர தின வாழ்த்துகளைக் கூறிக்கிறேன். கடந்த வாரங்களில், ‘வெளியில சந்திக்கிற சக மனிதர்களிடம் உங்க ளோட வேலையைத் தவிர்த்து, அவங்க யாரு? என்ன பண்றாங்கன்னு சின்னதா பேச்சு கொடுங்க. நீங்க மீட் பண்ற 10 பேர்ல குறைந்தது ஒருத்தர்கிட்டயாவது ஏதாவது ஒரு வித்தியாசமான சம்பவம் கிடைக்கும். அதை என்கிட்ட ஷேர் பண்ணுங்க?’னு முடித்திருந்தேன்.

முகநூல், ட்விட்டர், மெசேஜ்னு நிறைய கடிதங்கள் குவிந்தன. அவற்றில் பொதுவான கருத்துகளோட நிறைய கடிதங்கள் இருந்தன. அதில் குறிப்பா ரெண்டு கடிதங்கள் பற்றி இங்கே குறிப்பிடலாம்னு தோணுது.

முதல்ல ஜானகிராமன் என்பவர் எழுதியது. ‘‘நீங்க சொன்ன மாதிரி நானே போய் சிலர்கிட்ட பேச்சுக் கொடுத்தேன். அதில் இளம் வயதினர், ‘அட பெருசு. மொக்கை போட வந்துடுச்சு!’ என்பது போலவே பார்த்தனர். ஒரு நிமிடம்கூட நின்று பேசத் தயாராக இல்லாத மனநிலையிலேயே இருந்தனர். சரி, குழந்தைகளிடம் பேச்சுக் கொடுப்போமே என்று நெருங்கினால், ‘அவர்கள் பிள்ளை பிடிக்கிறவன் போலிருக்கு’ என்பது மாதிரி தெரித்து ஓடினர். இந்த மாதிரியான சூழலை எப்படி எதிர்கொள்வதுன்னு நீங்களே சொல்லுங்க?’’ என்று எழுதியிருந்தார்.

இரண்டாவது ப்ரீத்தா. அவரோட லெட்டர்ல, ‘‘பெரும்பாலான நேரம் கால் டாக்ஸி, ஆட்டோவுல டிராவல் பண்ணுவேன். ஒருமுறைகூட டிரைவர் கிட்ட பேசினதில்ல. அவங்க என்ன நினைப்பாங்களோ? இல்லைன்னா பெங்களூருவுல, நொய்டாவுல கால் டாக்ஸி யில பயணம் செய்தப்போ பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவங்கள் மாதிரி ஏதாவது நடந்துடுமோ? இப்படி உள்ளுக்குள்ள ஒரு பயம். நீங்க சொன்னீங்களேன்னு பேசிப் பார்த்தேன். நல்ல அனுபவம். கடந்த சில நாட்களில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் ஏதோ ஒரு விதத்தில் எனக்குள் நம்பிக்கையை விதைத்தனர். இப்போ சுத்தமா பயம் போய், நல்ல தன்னம்பிக்கை வந்திருக்கு!’’ என குறிப்பிட்டிருந்தார்.

என்னோட பள்ளி நாட்களில் வீட்ல இருந்து எங்கேயாவது வெளியில போகும்போது என்னையும், என்னோட தங்கையையும் அம்மா ஆட்டோவுல அழைச்சுக்கிட்டு போவாங்க. அப்போ, ‘டேய் பாலாஜி. நம்ம போலீஸ் கமிஷனர் அங்கிள் அப்பாவுக்கு நேத்து போன் பண்ணினார்டா. வர்ற வெள்ளிக்கிழமை ஃபேமிலியோட நம்ம வீட்டுக்கு சாப்பிட வர்றாங்களாம்’னு சொல்வாங்க. அதுவும் ஆட்டோ டிரைவருக்கு காதுல விழற மாதிரி சொல்வாங்க. ஏன், எதுக்கு இப்போ சம்பந்தமே இல்லாம பேசுறாங்கன்னு ஆரம்பத்துல எனக்கும், என் தங்கச்சிக்கும் குழப்பமா இருந்தது. அந்த ஆட்டோ டிரைவரால நமக்கு ஏதும் ஆபத்து வந்து டக் கூடாதுங்குறதுக்காகத்தான் அப்படி சொல்றாங்கன்னு ரெண்டு, மூணு தடவை அந்த மாதிரி ஆட்டோவுல போகும்போதுதான் புரிந்தது.

அதுக்கு பிறகு நாங்களே, ‘அம்மா நாளைக்கு கமிஷனர் நம்ம வீட்டுக்கு வர்றார்தானே?’ன்னு சொல்ல ஆரம்பிச் சுட்டோம்.

ப்ரீத்தா எழுதின அந்தக் கடிதத்தை படித்தபோது எனக்கு எங்க வீட்டுல நடந்த இந்த நிகழ்வுதான் நினைவுக்கு வந்தது. நம்மல சுத்தி இருக்குற எல் லாருமே தப்பானவங்க இல்லை. வழிப் பறி செய்றவங்க இல்லை. அந்த கண் ணோட்டம் நம்மகிட்ட இருந்து விலகணும்.

முதல்ல நான் சொன்ன ஜானகிராமன் கடிதம், வேறொரு கோணத்துல இருந் தாலும், ஆழமா பார்த்தா அதுவும் ஒரு விதத்துல பயத்தோட வெளிப்பாடுதான். ‘யார்கிட்டயும் பேசக் கூடாதுன்னு சொல்லி சொல்லிக் குழந்தைகளைப் பொத்தி பொத்தி நாம வளர்த்ததோடு விளைவு தான், அவரைப் பார்த்து பயந்து ஓட ஆரம்பிச்சிருக்காங்க.

நல்லா கவனிச்சிங்கன்னா, தினமும் இந்த 2 விதமான குழந்தைகளையும் நாம பார்க்க வேண்டியிருக்கும். ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கிற ஒரு குழந்தையை அவங்க அப்பா, அம்மா ஸ்கூலுக்கு விட வரும்போது, குழந்தையோட கைவிரல் தன்னோட பாதுகாப்புல இருந்து கொஞ்சமும் விலகாம அழைத்து வந்து கான்வென்ட் ஸ்கூல் வேன்ல ஏற்றிவிட்டுச் செல்கிறார்கள்.

அதுவே, அந்த குடியிருப்புக்கு அருகே வசிக்கிற 7 வயது பையன், தான் படிக்கிற கார்ப்பரேஷன் பள்ளிக்கு அந்தப் பக்கமா வர்ற 21ஜி பஸ்ஸைப் பார்த் துட்டு திபுதிபுவென ஓடி வந்து ஏறிப் பயணிக் கிறான்.

அப்பா, அம்மாவோட பாதுகாப்பு வளையத்துக்குள்ளே இருந்து வெளியே வந்து வேனில் ஏறி போகிற பையனைவிட ஓடி வந்து பஸ்ல ஏறி பயணிக்கிற அந்த பையனோட நம்பிக்கை லெவல் அதிகமா இருக்கும்.

சின்ன வயதில், அதுவும் 7-வது படிக்கும்போது மாதவரம் பால் பண்ணை கிட்ட இருந்த வீட்டுலேர்ந்து திருவான் மியூருக்கு பஸ்ல தனியா வரு வேன். அம்மா என்னை அப்போ எதுவும் கேட்டதே இல்லை. அதுவே இப்போ என்னோட தம்பி, தங் கையை அம்மா அவங்க பாதுகாப்புலயே கொண்டு வந்து பஸ் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைக்கிறாங்க.

சில வருஷ இடைவெளி யில நடந்த மாற்றம் இது. என்னை அந்த வயசுல அப்படி விட்டதாலத்தான் நான் ப்ளஸ் 2 பரீட்சையில ஃபெயில்ஆனபோதுகூட என்னால அதை இலகுவா, எடுத்துக்குற மனநிலை அப்பவே உருவாச்சு. அதே மனநிலை என்னோட தம்பி, தங்கைக்கு இருக்குமான்னு தெரியல.

இங்கே ஒருபுறம் ஜானகிராமனிடம் பேச பயந்த குழந்தைகள், இன்னொருபுறம் பயந்துகொண்டிருந்த ப்ரீத்தா பேச ஆரம்பிச்சதும் தன் பயம் விலகியது என் பதை புரிய வைத்தது. இவை இரண்டுமே நமக்கு உணர்த்துவது ஒன்றுதான்.

‘அன்பால் ஆன வேலி’ன்னு மூணு வாரத்துக்கு முன்னாடி பேசினோம். ஆனால், அது ‘பயத்தால் ஆன வேலி’ ஆக மாறி டுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சமூகம் மோசமான சமூகம் என்ற பயத்தை குழந்தைகளிடம் விதைத்துவிடக் கூடாது.

குழந்தைகளுக்கு நாம பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய அதே நேரத்தில், அவங்க கீழே விழுந் தால் தாமாகவே எழுந்திருக்கும் மன தைரியத்தை அவர்களிடம் ஏற்படுத்த வேண்டும். அது தான் இங்கு அவசியமும் கூட.

கடந்த சில வாரங்களாக கருத்துசார்ந்த விஷயங் களாக பகிர்ந்து கொண்டி ருக்கிறோம்னு தோணுது. அதுல இருந்து அடுத்த வாரம் ஒரு சின்ன மாற்றம் இருக்கும். அது என்ன?

- நிமிடங்கள் ஓடும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x